Tuesday, January 19, 2016

கவனின் பெயரால்

போர் மற்றும் சண்டைக் காட்சிகளை வர்ணிப்பதில் விவிலிய ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள். போர் மற்றும் சண்டை நடப்பதற்கு முன் அது பற்றி நிறைய பில்ட்-அப் இருக்கும். ஆனால், போர் அல்லது சண்டை சப்பென்று முடிந்துவிடும்.

நாளைய முதல்வாசகத்தில் (1 சாமு 17:32-33, 37, 40-50) இப்படியொரு சண்டையைத்தான் வாசிக்கின்றோம். தாவீது கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெரும் நிகழ்வே நாளைய இறைவாக்கு பகுதி.

வாளோடு வானாளவ உயர்ந்து நின்றவனை, ஒரு கவன் மற்றும் கைத்தடியோடு எதிர்கொள்கிறார் இளவல் தாவீது.

'நீயோ வாளோடும், ஈட்டியோடும், எறிவேலோடும் வருகின்றாய்.
நானோ ஆண்டவர் பெயரால் வருகிறேன்!'

இதுதான் பஞ்ச் லைன்.

இது எனக்கு மகாபாரத நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்துகிறது.

பாரதப்போரில் பகவான் கண்ணன் (கிறிஷ்ணன்) யார்பக்கம் இருக்கிறார் என்று கேட்பதற்காக துரியோதனனும், தருமனும் கண்ணனின் வீட்டிற்கு செல்வர். கண்ணன் ஒய்யாரமாக தூங்கிக் கொண்டிருப்பார். துரியோதனன் வேகமாய் போய் கண்ணனின் தலைமாட்டில் அமர்ந்து கொள்வான். தருமன் கண்ணனின் காலடியருகில் அமர்ந்திருப்பான். தூக்கம் விழிக்கும் கண்ணனின் பார்வையில் தருமன்தான் படுவான். 'என்ன விடயம் தருமா?' என்று கேட்க, துரியோதனும், தருமனும் சேர்ந்து, 'நீர் போரில் யார் பக்கம்?' எனக் கேட்பர். கண்ணனோ, 'நீங்களே முடிவெடுங்கள். என் படைபலம், படைக்கலம் அனைத்தும் ஒரு பக்கம். நிராயுதபாணியாய் நான் மறுபக்கம். உங்களுக்கு எது வேண்டும்?' துரியோதணன் உடனே, 'உம் படைபலமும், படைக்கலங்களும் எனக்கு!' என்பான். தருமனுக்கு நிராயுதபாணியான கண்ணனைத் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை. இருந்தாலும் மகிழ்வோடு வீடு திரும்புவான். போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தாவீது செய்யும் ஒரு விடயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

நீரோடையிலிருந்து, வழுவழுப்பான, ஐந்து கூழாங்கற்களை எடுத்துக்கொள்கிறான் தாவீது.

ஆனால், தாவீது பயன்படுத்துவது ஒரே ஒரு கல்லைத்தான்.

இங்கேதான் கடவுளின் வெற்றி மிக அழகாக சித்தரிக்கப்படுகிறது.

சின்ன வயதில் கவன் பயன்படுத்தி அணில் மற்றும் பறவைகளை அடித்து விளையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்:

அ. கவனில் வைக்கப்படும் கல் ஈரமாக இருக்கக் கூடாது. ஈரப்பசை இருந்தால் காற்றின் பதம் படுவதால் வேகம் குறையும். மேலும் கவனோடு கல் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஆ. கவனில் வைக்கப்படும் கல் ஒரு பக்கம் கூர்மையாகவும், மற்ற பக்கம் தட்டையாகவும் இருக்க வேண்டும். கூர்மையான பகுதி முன்னோக்கி இருக்க வேண்டும். (விமானம் மற்றும் ராக்கெட் அறிவியிலில் இதே டெக்னாலஜிதான் பயன்படுத்தப்படுகிறது. முன்பகுதி கூர்மையாக இருந்தால்தான் வேகம் கிடைக்கும். காற்றை எதிர்த்துச் செல்ல முடியும்.)

இ. ஒரே நேரத்தில் ஒரு கல்தான் கவனில் ஏற்ற முடியும். ஆர்வக் கோளாறில் இரண்டு கற்களை வைத்து அடித்தால், கற்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு எதிரெதிர் திசைகளில் சென்றுவிடும்.

இப்போது தாவீது செய்ததைப் பார்ப்போம்.

அ. நீரோடையிலிருந்து எடுத்த கல் கண்டிப்பாக ஈரமாக இருந்திருக்கும்.

ஆ. வழுவழுப்பான கற்களை தாவீது எடுத்துக்கொள்கிறார்.

இ. ஐந்து கற்களை ஒரே நேரத்தில் வீசினால் ஏதாவது ஒன்றாவது கோலியாத்து மீது படும் என நினைக்கிறார். அதாவது, குருட்டாம் போக்கில் எறிய நினைக்கிறார்.

ஆனால், என்ன ஆச்சர்யம்?

பேசிக் கவன் டெக்னாலஜி பிழைத்தாலும், கடவுள் வெற்றி தருகின்றார்.

ஏனெனில் தாவீது தன் கவனின் பெயரால் வரவில்லை. மாறாக, கடவுளின் பெயரால் வருகின்றார்.

இன்று நான் வருவது கவனின் பெயராலா அல்லது கடவுளின் பெயராலா?


2 comments:

  1. சிறு பிள்ளைகளுக்கு சொல்லப்படுவது போன்றதொரு சீரான விளக்கம்.இந்த இளவல் 'தாவீதை'ப் படங்களில் சித்தரிக்கப்படும் அழகுக்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும்.' பொதுவாக ஒருவன் சண்டைக்குப் போகும்போது எதிராளியின் பலமறிந்து போகவேண்டும் என்பார்கள்.ஆனால் இங்கு 'வாளோடு,வானளாவ உயர்ந்து நின்றவனை' என்று தந்தைக் குறிப்பிடும் சொற்கள் கோலியாத்தின் உடல் பலத்தை எதிர்கொள்ள தாவீது சிறிதும் இலாயக்கற்றவன் என்பதைச் சொல்கின்றன. தந்தை குறிப்பிடும் 'கவன் டெக்னாலஜிக்கெல்லாம்' அப்பாற்பட்டு அவன் எடுக்கும் முயற்சிகள் அவனுக்கு கைகொடுக்கின்றன.....அவன் கவனை நம்பாமல் கடவுளை மட்டுமே நம்பி வந்ததால்.நம் வாழ்விலும் தினம்,தினம் எத்தனையோ கோலியாத்துகளை சந்திக்கிறோம்.அவர்களை வீழ்த்த நாம் பயன்படுத்தும் கவன்கள் நம் பலத்தினால் வருவதா இல்லை இறைவன் தரும் பலத்தினால்( செபத்தினால்) வருவதா? யோசிப்போம். தான் சொல்ல வந்த விஷயத்திற்கு வலு சேர்க்கத் தந்தை துணைக்கழைத்திருக்கும் மகாபாரத்த்தின் வரிகள் அருமை.மேலும் கவன் விளையாட்டை வர்ணித்திருக்கும் விதம் என் போன்றவர்களக் கூட 'பழைய நெனப்புடா பேராண்டி' என சொல்ல வைக்கிறது.தந்தைக்குப் பரிசாக என்ன கொடுக்கலாம்? இப்போதைக்கு ஒரு 'சபாஷ்' கொடுக்கலாமே!!!

    ReplyDelete
  2. Dear Father,Very powerful words on "கவனின் பெயரால்".Congrats.May God inspire you more and more.

    ReplyDelete