Friday, March 18, 2016

நாங்கள் vs. அவர்கள்

நம் மனித மனம் மனிதர்களை இரண்டு குழுக்களுக்குள் அடக்குகிறது: ஒன்று, 'நாங்கள்' ('We' / 'Us'). மற்றது, 'அவர்கள்' ('They' / 'Them') 'நாங்கள்' என்பது 'எங்களின் நாடு, எங்களின் மக்கள், எங்களின் கடவுள்,' என்று நாம் உரிமை கொண்டாடுவது. 'அவர்கள்' என்பது 'அவர்களின் நாடு, அவர்களின் மக்கள், அவர்களின் கடவுள்,' என்று தள்ளி வைப்பது. இந்த இரண்டும் மனித கலாச்சாரம் சொல்லிக் கொடுத்த பகுப்புகள். நாம் பிறந்து, வளர்ந்தபோதே, நாம் யாரோடு பேச வேண்டும், என்ன படிக்க வேண்டும், யாரை வழிபட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், யாரை திருமணம் முடிக்க வேண்டும் என 'நாங்கள்' சார்ந்த எல்லாவற்றையும் கற்பித்துவிடுகிறது நம் குடும்பம். இந்த 'நாங்கள்' என்ற எல்கையைத் தாண்டுபவர்கள் எல்லாம் குற்றவாளிகள். கடந்த வாரம் உடுமலைப்பேட்டையில் நடந்த சங்கர் படுகொலைக்கு இதுதான் காரணம். 'கௌசல்யா' 'நாங்கள்' குழுவையும், 'சங்கர்' 'அவர்கள்' குழுவையும் சார்ந்தவர்கள் (குழுவின் பெயரை மாற்றியும் எழுதிக்கொள்ளலாம்). சங்கர் என்பவர்கள் தன் குழு எல்கையை மீறி அடுத்தவர் குழுவுக்குள் நுழைந்தது குற்றம் எனக் கருதப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்.இது சரியா? தவறா? என்றெல்லாம் நம்மால் ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியாது. அந்தந்த குழுவைப் பொறுத்தே நன்மை-தீமை நிர்ணயிக்கப்படுகிறது.

என் எல்லையைத் தாண்டி நானும் வரமாட்டேன், உன் எல்லையைத் தாண்டி நீயும் வரக்கூடாது என்ற எழுதாத சட்டத்தை இது கொண்டிருக்கிறது. 'நாங்கள்,' 'அவர்கள்' என்ற இரண்டு குழுக்களுக்கு இடையே இருக்கும், உரசல், மோதல், இறுக்கம்தான் வரலாற்றை நகர்த்துகிறது என்கின்றனர் சமூகவியல் அறிஞர்கள்.

எஸ்தர் 2:19 - 3:15ல் 'நாங்கள்,' 'அவர்கள்' என்ற இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள போராட்டத்தைத்தான் பார்க்கின்றோம்.

இங்கே 'நாங்கள்' என்பவர்கள் பாரசீகர்கள். 'அவர்கள்' என்பவர்கள் யூதர்கள்.

'நாங்கள்' என்ற குழுவில் அரசன் அர்த்தக்சஸ்தா, அரசி ஆஸ்தின், அரசனுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஆமான் ஆகியோரும், 'அவர்கள்' என்ற குழுவில் அரசி எஸ்தர், அவரின் சித்தப்பா மொர்தெக்காய் ஆகியோர் இருக்கின்றனர்.

யூதப் பெண் எஸ்தர் பாரசீக மன்னனின் அரசியாகிவிட்டார்.

மொர்தெக்காய் அரசனை பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியதால் அரண்மனையின் முக்கியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுவிட்டார்.

எல்லாம் நல்லா போனால் கதை எப்படி தொடரும்?

மொர்தெக்காயின் வில்லனாக வருகின்றான் ஆமான்.

'எல்லாரும் எனக்கு குட்மார்னிங் சொல்றாங்க! ஆனா, இந்த மொர்தெக்காய் மட்டும் சொல்ல மாட்றான்! அவன் யூதன் என்பதால் திமிர்!' என்று நினைக்கின்ற ஆமான், மொர்தெக்காயை அழிக்க நினைத்து, ஒட்டுமொத்த யூதர்களையும் அழித்துவிட திட்டமிடுகிறான்.

வரலாற்றில் நடந்த பெரிய படுகொலைகளுக்கெல்லாம் காரணம் இப்படிப்பட்ட சின்ன விஷயங்கள்தாம்.

இந்த திட்டத்தை வேகமாக நிறைவேற்ற வேண்டுமென்றால், அரசாணை தான் வழி என எண்ணுகின்ற ஆமான் அரசனின் மண்டையைக் கழுவி, அவனையும் சம்மதிக்க வைத்துவிடுகிறான்.

பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில் ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு அரசன் அனுப்பிய ஆணை, 27 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

இந்த மடலின் முக்கியத்துவம் என்னவென்றால், இம்மடல் 'இந்தியா' என தொடங்குகிறது. இது நம்ம இந்தியாதான் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது, பாரசீகர்களின் ஆட்சி இந்தியாவின் பஞ்சாப் வரை பரவியிருந்தது. மேலும், இந்தியாவில் அன்றுதொட்டு இன்றுவரை யூதர்கள் இருக்கின்றார்கள். விவிலியத்தில் குறிப்பிடப்பட்ட பெயருடன் இன்று வரை உயிரோடு இருக்கும், வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இப்போதுதான் கதையின் இறுக்கம் அதிகமாகிறது:

'எல்லா யூதர்களும் அழிக்கப்படுவார்களா?

அரசவையில் அரசியாக இருக்கும் எஸ்தர் யூதர்களைக் காப்பாற்றுவாரா?

தன்னை யூதர் என்று அரசனிடம் வெளிப்படுத்துவாரா?

அப்படி அவர் வெளிப்படுத்தினால் அரசி பட்டம் பறிக்கப்படுமா?

அப்படி அவர் வெளிப்படுத்தாமற்போனால் யார் காப்பாற்றுவார்?'

என கேள்விகள் மின்னி மறைகின்றன நம் மனதில்.

எஸ்தர் (கி) 3ஆம் பிரிவு மிக அழகான வசனத்துடன் முடிகிறது:

'(இவ்வாணை அறிவிக்கப்பட்டபின்) மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்.
நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது!'

'நாங்கள்' என்ற பாரசீகர்களுக்குள்ளும் இப்போது, 'ஆள்வோர்' (அரசன், ஆமான்) என்ற 'நாங்களும்,' 'ஆளப்படுவோர்' (மக்கள்) என்ற 'அவர்களும்' உருவாகிவிடுகின்றனர்.

சென்னையில் வெள்ளம் வந்து மக்களையும், உடைமைகளையும் வாரிக்கொண்டு சென்றபோது, நம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தூக்கம் வந்திருக்குமா? என்று நினைத்தேன்!

அந்தக் கேள்விக்கு விடை இன்று கிடைத்தது:

பிரச்சனை என்ற ஒன்று வந்தால்...ஆள்வோர் குடிமயக்கத்தில் இருப்பர், ஆளப்படுவோர் குழப்பத்தில் இருப்பர்.

சாதி, மதம், இனம், மொழி - இவற்றால் எழும் பிரச்சினைகள்தாம் ஆள்வோரின் பலம். இவைகள் இருந்தால்தான் அவர்களின் இருப்பும் இருக்கும். பிரச்சினைகளைத் தக்க வைக்க தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்துவிட்டு, நன்றாகத் தூங்குவர்.

தேடல் தொடரும்.


1 comment:

  1. உடுமலைப்பேட்டையில் சங்கர்- கௌசல்யா ஜோடிக்கு நடந்த கொடுமையை முன்வைத்தே இந்த மனித இனத்தின் இரு முக்கிய குழுக்களான ' நாங்கள்' மற்றும் 'அவர்கள' என்ற காய்களை நகர்த்தி இருப்பது தந்தையின் சாதுரியம்.யூதன் மொர்தெக்காய் மேல் கொண்ட அழுக்காறு காரணமாக பாரசீகன் நாமான் அரசனின் உதவியுடன் அனைத்து யூதர்களையும் ஒழித்துக்கட்ட சதி செய்கிறான்.இதில் யூத அரசி எஸ்தரின் பங்கு என்ன என்று புரியவில்லை.மொர்தெக்காய் யூதன் என்று தெரிந்த அரசனுக்கு எஸ்தரும் அதே யூத குலத்தைச் சேர்ந்த பெண்ணே என்று எப்படித்தெரியாமல் போனது? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.பாரசீகர்கள் அதிலும் அரசனும்,நாமானும் கொண்டிருந்த உச்ச கட்ட குழப்ப நிலையை சென்னை வெள்ளத்தின் போது ' ஜெயல்லிதாவின் மனநிலையோடு தந்தை ஒப்பிட நினைத்திருப்பது சரிதான்.ஆனால் ' மனது' என்று இருப்பவர்களுக்குத்தானே மனக்கஷ்டம் எல்லாம்! மரக்கட்டைகளுக்கு மக்களைப்பற்றி என்ன கவலை?" பிரச்சனைகள் மட்டுமே ஆள்வோரின் பலம் .அந்தப் பிரச்சனைகளைக் கட்டவிழ்த்து விட்டு அவர்கள் நிம்மதியாகத் தூங்குவர்".. மக்களைத் தட்டி எழுப்பும் வார்த்தைகள்.மக்கள் விழித்துக்கொண்டால் சரி.இன்றைய அரசியலின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டிய தந்தை பாராட்டுக்குரியவரே!

    ReplyDelete