Thursday, March 17, 2016

அழகான கள்ளி

எஸ்தர் நூல் (கி) 2:5-18, எஸ்தர் அரசி ஆவதை விவிரிக்கிறது.

1. சித்தப்பா மகள்

எஸ்தர் அம்மினதாபின் மகள். அம்மினதாபு மற்றும் அவர் சகோதரர் மொர்தெக்காய் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர்கள். பென்யமின் குலத்தில் பிறந்த சவுல்தான் இஸ்ரயேலின் முதல் அரசனாக மகுடம் சூடுகின்றார். ஆக, எஸ்தர் தன் இரத்தத்திலேயே அரச ஜீன்களைக் கொண்டிருக்கிறார். எஸ்தரின் பெற்றோர் இறந்துவிட, அவரை தன் வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொள்கின்றார் மொர்தெக்காய். அவரை வளர்த்து, பின் தானே அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார் மொர்தெக்காய். எஸ்தர் மொர்தெக்காயின் சகோதரின் மகள் என்றால், அவர் அவளுக்கு சித்தப்பா முறை வேண்டும். எஸ்தர் அவளுக்கு மகள் முறை. மகளையே எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்ற கேள்வி தேவையில்லை. முதல் ஏற்பாட்டில் 'சகோதரன்' என்பது எல்லா இரத்த உறவுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. 'அவள் அழகில் சிறந்த பெண்மணி' என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாக எஸ்தரை வர்ணிக்கிறார் ஆசிரியர். ஆக, மொர்தெக்காயும், எஸ்தரும் சூசா நகரில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நேரத்தில்தான் அரசிக்கான நேர்காணல் பற்றிய அறிவிப்பு வருகிறது. எஸ்தரின் வயது 14 முதல் 16க்குள்தான் இருக்க வேண்டும்.

2. கண்களில் தயவு கிடைத்தது

நேர்காணல் அழைப்பு மட்டும் அல்ல. அது கண்டிப்பான கடமையாக இருக்கின்றது. அதாவது, எல்லா இளம் பெண்களும் கண்டிப்பாக இதில் பங்கேற்க வேண்டும். சூசா நகரின் எல்லாப் பெண்களும் கொண்டு வரப்பட்டு, பொறுப்பாளர் காயுவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். காயுவுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள்மேல் அவர் பரிவு காட்டுகிறார். அவளுக்கு வேண்டிய ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உணவை உடனே கொடுக்கின்றார். மேலும் அவளுக்குப் பணி செய்ய ஏழு பணிப்பெண்களையும் கொடுத்து, அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்.

'கண்களில் தயவு கிடைத்தல்' என்பது முதல் ஏற்பாட்டில் முக்கியமான சொல்லாடல். ஆபிரகாமுக்கு எகிப்திய பாரவோனின் கண்களில் தயவும், யாக்கோபுக்கு ஏசாவின் கண்களில் தயவும், யோசேப்புக்கு போத்திபாரின் கண்களில் தயவும், தாவீதுக்கு சவுலின் கண்களில் தயவும் கிடைக்கிறது. அதாவது, ஒருவர் முன்பின் தெரியாத ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, அவர் என்னதான் கெட்டிக்காரராக, ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், அங்கிருப்பவரின் தயவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கண்களில் தயவு கிடைப்பது மிக முக்கியமான ஒன்று. அப்படி நமக்கு கிடைக்கும் தயவு நம்மையே புதிய மனிதராக மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பக்கத்திலிருந்து பார்த்தால், நம் எல்லாருக்கும் யாராவது ஒருவரை பார்த்தவுடன் பிடித்துவிடும் அனுபவம் இருக்கும். அவர் மேல் நமக்கு தயவு இருக்கும். அவர் என்ன செய்தாலும் சரி என்று தோன்றும். அவர்மேலேயே நம் கண்கள் இருக்கும்.

அப்படித்தான் இருக்கிறது காயுவுக்கு. எஸ்தரைப் பார்த்தவுடன் காயுவுக்கு பிடித்துவிடுகிறது. இதில் கடவுளின் கரம் அல்லது சப்கான்சியஸ் லெவலின் பொருத்தமும் இருக்கிறது.

3. பெயர் சொல்லி அழைத்தல்

(எஸ்தர் தான் ஒரு யூதப்பெண் என்பதை வெளிப்படுத்தவில்லை. மேலும் அப்படி வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெக்காய் அவருக்கு கட்டளையிட்டிருக்கிறார். எஸ்தரை அந்தப்புரத்தில் விட்டாலும், அவர்மேல் தன் கண்களை பதித்து காவல் காக்கிறார் மொர்தெக்காய்)

நேர்காணலுக்கான தயாரிப்பு பன்னிரண்டு மாதங்கள் நடக்கின்றது. ஆறுமாதம் வெள்ளைப் போளம் பூசியும், ஆறுமாதம் நறுமணப் பொருட்கள் பூசியும் தங்களையே தயாரிக்கின்றனர் பெண்கள். அதன்பின் ஒவ்வொருவரும் அரசனின் அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அரசனோடு இரவைக் கழித்த பெண், அடுத்த நாள் வேறு அந்தப்புரத்திற்கு மாற்றப்படுவர். ஆக, அரசனோடு இருக்கும் வாய்ப்பு ஒருமுறை தான் கொடுக்கப்படுகிறது. மேலும், நேர்காணல் முடித்தவர்களை, முடிக்காதவர்களிடமிருந்து பிரிக்க இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர்.

அரசனுக்கு ஒருத்தியைப் பிடித்திருக்கிறது என்றால், அவளை 'பெயர் சொல்லி அழைப்பார்.' அப்படி பெயர் சொல்லி அழைக்கப்பட்டால், அவள் மீண்டும் அரசனிடம் செல்லலாம். நேர்காணலில் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும், எப்படி நடந்திருக்கும் என்று எதுவும் தெரியவில்லையென்றாலும், மாலையில் போய் காலையில் வருவார்கள் என்ற சொல்லாடலைப் பார்க்கும்போது நம் உதட்டோரம் சின்ன புன்னகை வந்து போகிறது!

அரசன் தன்னிடம் வரும் எல்லாப் பெண்களின் பெயர்களைக் கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தனக்குப் பிடித்தவளின் பெயரை மட்டுமே கேட்கின்றான். கேட்பதோடல்லாமல் அவளை திரும்ப அழைப்பதற்காக தன் நினைவிலும் பதித்துக்கொள்கிறான். ஆக, அரசனின் நினைவில் இருக்கும் அளவுக்கு ஒருத்தி முக்கியத்துவம் பெற்றாள்தான் அவள் திரும்ப அழைக்கப்படுவாள்.

'கடவுள் என்னைப் பெயர்சொல்லி அழைத்தார்' என்று இறைவாக்கினர்கள் எசாயா, எரேமியா தங்களைப் பற்றிச் சொல்கின்றனர். இதன் பொருள் இப்போதுதான் புரிகிறது. இவர்கள் கடவுளின் நினைவில் நின்றவர்கள். அது பெரிய பாக்கியமே!

4. கண்டதும் காதல்

ஏழாம் ஆண்டில், பன்னிரண்டாம் மாதத்தில் அரசனிடம் செல்கின்றாள் எஸ்தர். ஒருவர் எவ்வளவுதான் நல்லவராக, அழகானவராக இருந்தாலும், நேரமும், காலமும் கூடி வந்தால்தான் அவர் வெற்றி பெற முடியும் என்பது முதல் ஏற்பாட்டு கால நம்பிக்கை. 'ஏழு', 'பன்னிரண்டு' என நிறைவு கூடிவரும் நேரத்தில் எஸ்தர் அந்தப்புரம் செல்கின்றாள். அவளின் அழகில் அரசன் மயங்குகிறான். கண்டதும் காதல் கொள்கின்றான். அரசனுக்கு வயது 30 முதல் 35 இருக்கலாம். 'மற்ற எல்லாப் பெண்களையும்விட எஸ்தரை மிகவும் விரும்பியதால், அவளை அரசியாக்குகிறான்' அரசன்.

5. விருந்தும், வரிவிலக்கும்

விருந்துக்கு வர மறுத்த தன் முன்னாள் மனைவி ஆஸ்தினைக் கடுப்பேற்றுவதற்காக, புதிய அரசி தேர்வானதை விருந்து வைத்து அறிவிக்கின்றான் அரசன். அதுவும் ஏழுநாள் நடக்கிறது. அடுத்து அரசன் செய்யும் செயல் மிக முக்கியமானது: 'தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு அளிக்கின்றான்' (2:18). வரி தான் ஒரு அரசின் முதுகெலும்பு. வரி இல்லாவிட்டால் ஓர் அரசு முடங்கிவிடும். அதையே வேண்டாம் என்று அரசன் ஏன் சொல்கிறான் என்றால், அந்த அளவுக்கு அவன் மயங்கிவிட்டான். 'எனக்கு எஸ்தர் கிடைத்துவிட்டதால், வாழ்வில் எல்லாம் கிடைத்துவிட்டது, இனி வரியும் வேண்டாம், காசும் வேண்டாம்!' என சொல்லும் அளவுக்குப் பிடித்துவிடுகிறது எஸ்தரை.

எஸ்தர் - ஓர் அழகான கள்ளி!

தேடல் தொடரும்.



1 comment:

  1. இந்த முதல் ஏற்பாட்டில் எல்லாமே விநோதம் தான்.மொர்தெக்காய் என்பவர் தன் அண்ணன் மகள் எஸ்தரையே மணம் முடிப்பதும்,பின் அவளை அரசியாக்கும் நோக்குடன் அரசனின் அந்தப்புரத்தில் கொண்டு விடுவதும்....இதில் மனைவியை அந்தப்புரத்தில் விட்டாலும்,அவர்மேல் கண்களைப்பதித்து காவல் காக்கிறாராம் மொர்தெக்காய்.அவரின் கண் பார்வையிலேயே இல்லாத ஒருத்தியை அவள் எப்படி காவல் காக்க இயலும்?ஏழாம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதத்தில் 'நேரமும் காலமும் கூடி வந்தது' அரசனுக்கு வேண்டுமெனில் நல்ல விஷயமாக இருக்கலாம்.ஆனால் மொர்தெக்காய்க்கும்,எஸ்தருக்கும் அது எப்படி நல்ல விஷயமாக இருந்திருக்க முடியும்? புரியவில்லை.எசாயா,எரேமியா போன்ற இறைவாக்கினர்கள் தங்களை இறைவன் பெயர் சொல்லி அழைத்ததை இன்றையப்பதிவில் அரசன் எஸ்தரைப் பெயர் சொல்லி அழைத்ததோடு ஒப்பிடுகிறார் தந்தை.ஒருவேளை "ஆண்டவரே! நீரே என்னை மயக்கி விட்டீர்! நானும் மயங்கிப்போனேன்" எனும் எரேமியாவின் வரிகளுக்கும் கூட இந்நிகழ்வுகள் தான் மூலமோ? வாழ்வில் தனக்கு எஸ்தர் கிடைத்ததால் தனக்கு எல்லாமே கிடைத்ததாக உவகை அடைகிறான் அரசன்.நம் வாழ்வில் நமக்கு ' எல்லாமே' கிடைத்து விட்டதாக நாம் திருப்தி அடைவது எப்போது? யோசிக்க வேண்டிய தருணம்.தனது தேடலில் எஸ்தரை " ஓர் அழகான கள்ளி!" எனக்கண்டு பிடித்த தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete