Saturday, March 19, 2016

ஆன்மீகம் மட்டுமே

தங்கள் எல்கைக்குட்பட்ட எல்லா நகரங்களில் வாழும் யூதர்களை அழித்துவிட ஆணையிட்டுவிட்டு, அரசனும், ஆமானும் குடிமயக்கத்தில் இருக்கின்றனர். மக்களோ குழப்பத்தில் இருக்கின்றனர்.

அரசாணை அறிவிக்கப்பட்டவுடன் யூதர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் அவர்களின் உணர்வுகள் எப்படி இருந்தன என்றும் பதிவு செய்கின்றது எஸ்தர் (கி) 4:1-17.

அரசானையைக் கேட்ட மொர்தெக்காய் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, தன்மேல் சாம்பல் பூசிக்கொள்கின்றார்.

'உன் சித்தப்பா சாக்கு உடை அணிந்திருக்கிறார்!' என எஸ்தர்க்கு சொல்லப்படுகிறது.

'அதைக் கழற்றி விட்டு இந்த புதிய ஆடைகளை அணிந்துகொள்ளச் சொல்லுங்கள்!' என்று புதிய ஆடைகளைக் கொடுத்துவிடுகிறார்.

எதற்காக சித்தப்பா ஆடைகளைக் கிழித்துக் கொண்டார் என்பது எஸ்தர்க்கு தெரியவில்லை. அதாவது, அரசன் செய்யும் எதுவும் அரசிக்குத் தெரியவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா?

அப்படித்தான் அரசியர் வைக்கப்பட்டனர். ஒரு நாட்டின் பாதுகாப்பு இரகசியம் காப்பதில்தான் இருக்கின்றது. பெண்களுக்கு தெரிந்து விட்டால் அது எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக அரசின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடங்களில் பெண்களை அனுமதிக்கவில்லை அக்கால அரசர்கள். மேலும், அரசியாகவே இருந்தாலும் அரசன் தனக்கென்ற இரகசியங்களை தானே வைத்துக்கொண்டான். மேலும், அந்தப்புரம் என்பது ஒரு இரும்புச்சுவர். வெளியுலகின் நடப்புக்கள் தெரிய வாய்ப்பில்லை. அரண்மனையே அப்படித்தான் இருந்தது. ஆகையால்தான், 'மாதம் மும்மாரி பெய்கின்றதா?' எனக் கேட்கின்றான் அரசன். நாட்டில் மழை விழுவது கூட அரசனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதை தெரிந்து கொள்ள அவனுக்கு நேரமுமில்லை.

தான் அரசல் புரசலாகக் கேட்ட அரசாணை பற்றி உறுதி செய்து கொள்ள மொர்தெக்காயிடம் தூது அனுப்புகின்றார் எஸ்தர். உறுதி செய்வதற்காக கடிதத்தின் ஒரு பிரதியை அனுப்புகின்றார் மெர்தெக்காய். மேலும், எஸ்தர் எப்படியாவது முயற்சி செய்து காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்கின்றார்.

எஸ்தர் பயந்து சாகின்றாள். 'அரசன்முன் எப்படி செல்வது? நானே அவரைப் பார்த்து 30 நாட்கள் ஆகிவிட்டன!' என்கிறார். எஸ்தர் பின்வாங்குகிறாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட மொர்தெக்காயுக்கு கோபம் வருகிறது.

'நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ண வேண்டாம்!' என எச்சரிக்கின்றார். மேலும், 'நீ இந்த நேரத்தில் வாளாவிருந்தாலும், ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டாலும் வேறு வழியாக பாதுகாப்பு யூதர்களுக்கு வரும்!' என்கிறார்.

மொர்தெக்காயின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, 'எஸ்தர் ஒரு சந்தர்ப்பவாதி, பிழைக்கத் தெரிந்தவள்!!' என எண்ணத் தோன்றுகிறது. அதாவது தனக்குக் கிடைப்பது கிடைத்துவிட்டால் போதும். அடுத்தவர்களைப் பற்றி அவருக்குக் கவலையில்லை.

ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அல்லர்.

'எனக்காக செபியுங்கள்' என்று சொல்லிவிட்டு, தானும் செபிக்கத் தொடங்குகின்றார்.

... ... ...
... ... ...

'எனவே ஆண்டவரிடம் மன்றாடு.
பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு.
நம்மைச் சாவினின்று காப்பாற்று!'

மொர்தெக்காய் இப்படித்தான் முதலில் தூதுவிடுகின்றார்.

எஸ்தர் செய்ய வேண்டிய செயல்கள் மூன்று:

அ. மன்றாட வேண்டும்
ஆ. பரிந்து பேச வேண்டும்
இ. சாவினின்று காப்பாற்ற வேண்டும்

'செபம் பண்ணுங்க போதும்!' என்று விட்டுவிடவில்லை. 'பரிந்து பேச வேண்டும்!' என்றும் சொல்கின்றார்.

அதாவது, ஆன்மீகம் மட்டுமே உதவாது.

என்னதான், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்!' என்று செபம் செய்தாலும், வீட்டுல அடுப்பை நாமதான் பத்த வைக்கணும்!



1 comment:

  1. அழகான,செயலுடன் கூடிய ஆன்மீகத்தைப் புரிய வைக்கும் ஒரு பதிவு.தன் இன மக்களுக்கு அரசனால் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி ஒன்றும் தெரியாத அரசி எஸ்தர், அது பற்றித் தெரிய வரும்போது அரசனிடம் தன் 'அரசி' எனும் அஸ்திரத்தைப் பயன்படுத்தி தன் மக்களைக் காப்பாற்றும் நிலையிலிருந்தாலும் பயத்தின் காரணமாகப் பின் வாங்குகிறாள்.இது பற்றித் தெரிந்து கொண்ட மொர்தெக்காயின் கோபத்தின் காரணமாக செபத்தின் வழியேனும் தன் மக்களைக் காப்பாற்றி விடலாம் என நம்பி அதற்குத் தன்னைத் தயார்படுத்துகிறாள்.'செபம்' என்பது கோழைகளின் ஆயுதம் என பலர் நினைத்திடினும் ' செபம் என்பது வெறும் வாய்வழிப்பிதற்றல் அல்ல' என்பதையும்,அந்த ஒற்றைச் சொல்லின் பின்னே ஒளிந்துள்ள 'மன்றாடுதல்','பரிந்து பேசுதல்',' சாவினின்று காப்பாற்றுதல்' போன்ற செயல்கள் ஒளிந்துள்ளதையும் தனக்கே உரித்தான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் தந்தை. ஆமாம் ஃபாதர்! சரியாகச் சொன்னீர்கள்....உணவு வேண்டும் என்று கேட்டால் பத்தாது; அடுப்பை நாம்தான் பத்தவைக்கணும்! உண்மைதான்.செயலுடன் கூடிய ஆன்மீகத்தின் பெருமையைப் புரிய வைக்கும் நல்லதொரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் 'குருத்தோலை ஞாயிறுக்கான' வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete