Saturday, March 26, 2016

அவர் இங்கு இல்லை!

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்திருக்கின்றனர்.

லூக்காவின் பதிவில் உள்ள முக்கியக்கூறைக் காண்போம்:

மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அப்பெண்களை நோக்கி, 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? ... அவர் இங்கே இல்லை' என்றார்கள்.

அதாவது, 'அங்கே' இருப்பவரை 'இங்கே' தேடுவதேன்!

இயேசு அவரின் வாழ்நாள் முழுவதும் தேடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

'ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடுகின்றான்.'

'இயேசுவின் பெற்றோர் காணாமல்போன இயேசுவை விருந்தினர்களின் கூட்டத்தில் தேடுகின்றனர்.'

'காடு, மேடெல்லாம் இயேசுவைத் தேடிச் செல்கின்றனர் அவரின் சீடர்கள்.'

இயேசுவின் அறிகுறிகளைக் கண்ட அவரின் எதிரிகள் அவரைக் கொல்லத் தேடுகின்றனர்.

கெத்சமேனித் தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்தவர்களை நோக்கி, 'யாரைத் தேடுகிறீர்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு.

இந்த எந்த நிகழ்விலும், இயேசு அவர்களின் கண்களில் படவேயில்லை.

ஏனெனில், அவர்கள் 'அங்கே' தேடுவதற்குப் பதிலாக அவரை 'இங்கே' தேடினார்கள்.

தேட வேண்டும் என்றால் கண்கள் திறந்திருக்க வேண்டும். நாம் தேடும் ஒரு பொருள் நம் கண்களில் பட்டுவிட்டது என்றால், நம் தேடல் முடிந்துவிடுகிறது.

ஆக, தேடுதலில் நம் புலன்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

ஆனால், புலன்களால் தேடினால் இயேசு கிடைப்பதில்லை.

காணாமற்போன தன் குழந்தை இயேசுவை விருந்தினர்கள் கூட்டத்;தில் தேடிக்கொண்டிருந்த மரியாளுக்கு டக்கென்று வானதூதரின் சொற்கள் நினைவிற்கு வந்திருக்கும். பிறக்கும் போகும் குழந்தை இறைமகன் என நமக்குச் சொல்லப்பட்டதே. இறைமகனை இறைவனின் வீட்டில்தானே தேட வேண்டும் என எருசலேம் நோக்கிச் செல்கிறார். இயேசுவைக் கண்டுகொள்கின்றார்.

புலன்களுக்கு எட்டாத இயேசு, மரியாளுக்கு வானதூதரின் வார்த்தைகள்மேலிருந்த நம்பிக்கையில் எட்டுகின்றார்.

இன்று நாம் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற வேண்டுமென்றால் இயேசுவை 'இங்கே' தேடுவதற்குப் பதிலாக, 'அங்கே' தேட வேண்டும்.

கண்கள் திறந்திருந்தால் நாம் 'இங்கே' தேடலாம்.

கண்கள் மூடியிருந்தால் மட்டுமே நாம் 'அங்கே' தேட முடியும்.

இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தை யோவான் நற்செய்தியாளரும், '(அவர்) கண்டார், நம்பினார்' என பதிவு செய்கின்றார்.

மனித புலன்களையும் தாண்டிச் செல்லும் ஆற்றல் பெற்ற ஒருவருக்கே உயிர்ப்பு அனுபவம் சாத்தியமாகும்.

புலன்களோடு தேடினால், நம் தேடலும் புலன்களோடு முடிந்துவிடுகிறது. முடிந்துவிடும் எதுவும் இறந்துவிடக் கூடியது. நம் கண்களுக்குத் தெரியும் எதுவும் மறைந்துவிடக் கூடியது.

ஆனால், கண்களுக்கு எட்டாதது, காலங்காலமாக நிலைக்கக்கூடியது.

உயிர்ப்பு என்பது கண்களை மூடிக்கொண்டு பார்க்கும் ஓர் அனுபவம்.

உதாரணத்திற்கு, என் அன்பிற்கினிய ஒருவரிடம் நான் பேசுகிறேன். சிரிக்கிறேன். அவரின் ஆடைகளை இரசிக்கிறேன். அவரைத் தொடுகிறேன். அடுத்த நாள் அவர் என்னைவிட்டு தூரமாய் போய்விடுகிறார். முந்தின நாள் போல நான் அவரிடம் பேச, சிரிக்க, இரசிக்க, அவரை தொட முடியவில்லையென்றாலும், முந்தின நாள் போலவே அவர் என்னுடன் இருப்பதாக ஓர் உணர்வு வருகிறது. இனி அவரிடம் பேச, சிரிக்க, இரசிக்க, அவரை தொட முடியாமல் போனாலும், அவர் என்னில் ஓர் அனுபவமாகப் பதிந்துவிடுகிறார். அந்த அனுபவம் என்னை இன்னும் முன்நோக்கி நடக்க திடம் அளிக்கிறது.

சீடர்களோடு உண்டு, உறங்கி, உறவாடி, வழிநடந்த இயேசு, இனி அப்படி எதுவும் செய்ய மாட்டார். ஆனால், அந்த அனுபவம் சீடர்களை முன்நோக்கித் தள்ள வேண்டும்.

சீடர்கள் முன்நோக்கி தள்ளப்பட்டனர் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் நீங்களும், நானும்.

சீடர்கள் பெற்ற அதே அனுபவத்தை காலத்தால், இடத்தால் அப்பாற்பட்ட நாமும் பெற முடிகிறது என்றால் எப்படி?

கண்களுக்கு எட்டாதது, காலங்காலமாக நிலைக்க வல்லது.

அதுதான் உயிர்ப்பு.

2 comments:

  1. "இயேசுவின் உயிர்ப்பு" என்பதே கிறித்துவத்தின் ஒரு அழகான விஷயம்.அந்த அழகிற்கு இன்னும் மெருகூட்டியுள்ளார் தந்தை தன் கவித்துவமான பதிவின் மூலம். தேடல் அனுபவத்தின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளுதலில் சில சிரமங்கள் இருப்பினும் அதை அறிந்தவனுக்குத்தான் தேடல் அர்த்தமுள்ளதாகும் எனப் புரிகிறது." மனித புலன்களையும் தாண்டிச் செல்லும் ஆற்றல் பெற்ற ஒருவருக்கே உயிர்ப்பு அனுபவம் சாத்தியமாகும்." 'அவரின்' ஆணியறைந்த காயங்கள் எத்தனை உண்மையோ, அத்தனை உண்மையான வார்த்தைகள். சீடர்கள் இயேசுவோடு இருந்த அனுபவத்தை காலத்தால்,இடத்தால் நாமும் பெற முடியும் என்பது தான் இந்த 'உயிர்ப்பு' நமக்கு கொண்டு வரும் செய்தி என உணர முடிகிறது. " கண்களுக்கு எட்டாதது,காலங்காலமாக நிலைக்க வல்லது.அதுதான் உயிர்ப்பு" பதிவிற்குப் பாராட்டு சேர்க்கும் வார்த்தைகள்! கல்லறையிலிருந்து வெளிவந்த தேவகுமாரன் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் குடியேற வேண்டுவோம்.தந்தைக்கும், மற்ற அனைவருக்கும் 'உயிர்ப்பு' பெருநாளின் வாழ்த்துக்கள்! தேடவேண்டியவரைத் தேட வேண்டிய இடத்தில் தேட இறைவன் நம் புலன்களுக்கு சக்தி தருவாராக!!!


    ReplyDelete
  2. Wish you a happy Easter Father...Thank you for your writings...
    May your gift of reflections on word of God be a resurrection event for multitudes in days to come...

    ReplyDelete