Wednesday, March 16, 2016

ஒப்பனைப் பொருட்கள்

1. கடந்த வருடம் என்னுடன் பங்குப் பணியாற்றிய கொலம்பிய நாட்டு அருட்பணியாளர், தன் நாட்டின் இளவல் இருத்தி 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றதையும், அவரின் ஃபோட்டோவையும் பலரிடம் காட்டிக் கொண்டிருந்தார். 'என் நாட்டு பெண்கள்தாம் அழகிகள்!' என்று மார்தட்டிக்கொண்டார். 'இந்தியா மிஸ் யுனிவர்ஸ்' வாங்கியிருக்கா? - எனக் கேட்டார். 'ஆம், வாங்கியிருக்கிறது. ஆனால், இனி அந்தப் பட்டம் தேவையில்லை' என்றேன். உலக அழகிப் போட்டி என்பது ஒரு வியாபாரத் தந்திரம். Olay, Avon, L'Oréal, Neutrogena, Nivea, Lancôme, Dove, Estee Lauder, Bioré, Shiseido போன்ற நிறுவனங்கள்தாம் இந்தப் போட்டியை ஸ்பான்சர் செய்பவை. அழகு என்பது எது என்பதை இவர்கள் நிர்ணயிப்பார்கள். தங்கள் சந்தை எந்த நாட்டில் விரிக்கப்பட வேண்டுமோ அந்த நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஒரு இளவலை 'உலக அழகி' என அறிவிப்பார்கள். பின் அந்த நாட்டில் உள்ள எல்லா இளவல்களும், இந்த 'உலக அழகி' போல உடுத்த, அழகுசெய்ய ஆசைப்படுவார்கள். இவர்களும் அங்கே போய் கடை விரிப்பார்கள். ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா என நம்ம ஊர் அழகிகள் அறிவிக்கப்பட்டபோது வேகமாக நம் ஊருக்குள் நுழைந்த இந்த வியாபாரிகள் நம் வீட்டுப் பெண்களின் குளியலறைக்குள் இருந்த மஞ்சள், சந்தனம் போன்றவற்றை வேகமாக வெளியேற்றிவிட்டு, தங்களின் ரோஸ் பவுடர், க்ரீம்களால் நிறைத்தனர். அன்று முகத்தில் வளரும் முடியைக் குறைக்க மஞ்சள் பூசிக் குளித்த பெண்கள் எல்லாம் இன்று ஆவோன், ஓலே ரோல் ஓவர் க்ரீம் பூசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு நாட்டில் தங்கள் சந்தை ஸ்டெடி ஆனதும் அடுத்த நாட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களின் விலை எல்லா நாட்டிலும் ஒரே விலை. அமெரிக்காவில் மணிக்கு 10 டாலர் என உழைக்கும் இளவல் ஒருத்தி 7 டாலர் கொடுத்து, Avon Skin So Soft வாங்குவது அவளுக்கு பெரிய இழப்பல்ல. ஆனால், நம்ம ஊரில் மாதம் 3000க்கு வேலை பார்க்கும் ஒரு சராசரி இளவல் இதே க்ரீமுக்காக 550 ரூபாய் (வருமானத்தில் 6ல் ஒரு பங்கு) செலவழிக்க வேண்டும். இது ஒரு முறை பயன்படுத்தி முடித்துக்கொள்ளும் பொருள் அல்ல. முடி வளர வளர வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வெறும் 5 ரூபாய் கோபுரம் பூசு மஞ்சள்தூளில் முடிகின்ற சமாச்சாரத்தை எப்படி மாற்றிவிட்டார்கள் இவர்கள்! மதுரையின் ஒப்பனைக்காரர் தெரு கூட இன்று வெளிநாட்டு க்ரீம்களை விற்கும் கடைகளால் நிரம்பிவிட்டதுதான் காலக்கொடுமை.

2. கடந்த மாதம் L'Oréal (பிரெஞ்சு காஸ்மெடிக் நிறுவனம்) இணையதளத்தின் முதல் பக்கத்தில் ஆப்பிரிக்க கண்டத்து இளவல் ஒருத்தியின் படத்தைப் போட்டு, 'கறுப்பும் அழகே!' என தலைப்பிட்டிருந்தார்கள். இதைப் பார்த்தவுடன், 'என்னே இந்த நிறுவனத்தின் பரந்த மனது!' என நினைத்தேன். ஆனால், கொஞ்சம் யோசித்தபின்தான் தெரிந்தது, 'இவர்களின் அடுத்த வலை ஆப்பிரிக்காவுக்கு என்று!' 'வெள்ளைநிறம்தான் அழகு' என்ற மாயையை இவர்களே உருவாக்கி, அதை மற்றவர்களையும் நம்ப வைக்கிறார்கள். வெள்ளைநிறத்தின்மேல் உள்ள மோகம் நமக்கு முகலாயர்களின் காலத்திலிருந்தே இருக்கின்றது.ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் நம் நாட்டை ஆண்ட பலரில் இவர்களும் ஒருவர். இவர்களின் நிறம் வெள்ளை-சிவப்பு. தொடர்ந்து வந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர்களும் வெள்ளையாக இருந்ததால், இவர்களைப் பார்த்துப் பழகிய மூளை தானாகவே, 'வெள்ளை என்றால் ஆளும் நிறம்! கறுப்பு அல்லது பிரவுன் என்றால் ஆளப்படும் நிறம்!' என நினைத்துக்கொண்டது. 'வெள்ளை நிறம்தான் அழகு!' என்பது விளம்பரங்கள் வழியாகவும், திரைப்படங்கள் வழியாகவும் நம்மேல் திணிக்கப்பட்டு, சாப்பாட்டில் வெள்ளை, பார்க்கும் பெண்ணில் வெள்ளை என எல்லாவற்றிலும் நாம் வெள்ளையை விரும்பத் தொடங்கிவிட்டோம்.

3. 'ஆறே வாரங்களில் சிகப்பழகு!' என நம்ம ஊர் ஃபேர் அன் லவ்லி சொல்லிக்கொண்டிருந்தது. நானும் சிகப்பாகணும் என்ற நினைப்பில் இதைக் கொஞ்ச நாள் மாஞ்சி மாஞ்சி பூசிக்கொண்டிருந்தேன். ஆண்களுக்கான சிறப்பு பேக் ஒன்றும் இருக்கிறது. ஆனால் இந்த க்ரீமின் பெயரே ஒரு அபத்தத்தைக் கொண்டிருக்கிறது என்று கடந்த வாரம்தான் உணர்ந்தேன். கடந்த வாரம் நம் சென்னை இளவல்கள் சிலர் இணைந்து உருவாக்கிய 'ப்ளாக் அன் லவ்லி' என்னும் ஹாஷ்டேக் டுவிட்டரில் வைரல் ஆனது. இந்தப் பெயரில் குறும்படம் ஒன்றும் வந்தது. இந்தப் பெண்கள் தங்கள் இயல்பான நிறமே தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும், எந்தவொரு (ஏமாற்று) நிறுவனத்தின் பொருளும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் அடித்துச் சொல்கின்றனர்.

ஏன் இப்படி க்ரீம் பூசிக்கொண்டிருக்கிறீர்கள்? - எனக் கேட்கிறீர்களா?

எஸ்தர் (கி) 2:3 ஒப்பனைப் பொருட்கள் பற்றித்தான் பேசுகின்றது.

ஆஸ்தின் அரசி 'சாப்பிட வர' மறுத்துவிட்டதால், அரசன் வேறு ஒரு அரசியை நியமிக்க முடிவு செய்துவிடுகின்றான். 'எப்படி புதிய அரசியை தேர்வு செய்வது?' என்று குழம்பிக் கொண்டிருந்த மன்னனுக்கு ஆலோசனை சொல்கிறது அமைச்சர் பட்டாளம்.

'அரசே! எல்லா இளம்பெண்களையும் வைத்து ஒரு இண்டர்வியு வைத்துவிடுங்களேன்!' என்ற யோசனை சொல்லப்படுகிறது.

இந்தப் பெண்கள் எப்படி இருக்க வேண்டுமாம்?

'இளமையும், அழகும், கன்னித்தன்மையும்' கொண்டிருக்க வேண்டும் (2:3)

இந்தப் பெண்களைத் தெரிவு செய்யும் பணி அரசு அண்ணகர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தெளிவாகத்தான் இருக்கிறான் அரசன். ஆண்களிடம் ஒப்படைத்தால் எசகுபிசகாகிவிடும் என்று திருநங்கைகளிடம் ஒப்படைக்கின்றான் பணியை.

இந்த அண்ணகர்கள் என்ன செய்ய வேண்டுமாம்?

'இண்டர்வியூவிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு ஒப்பனைப் பொருட்களையும், மற்றும் தேவையான அனைத்தையும் கொடுக்க வேண்டுமாம்!' (2:3)

இந்த ஆலோசனை மன்னருக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

இந்த இண்டர்வியூவிற்கு வரும் ஓர் இளவல்தான் நம் எஸ்தர்.

தேடல் தொடரும்.


1 comment:

  1. எதற்காகத் தந்தை இப்படி உலக அழகிகளுக்கும், பன்னாட்டு அழகு சாதனங்களுக்கும் பூசோ,பூசென்று விளம்பரங்களை அள்ளித் தெளிக்கிறார் என்று பார்த்தால் இறுதியில் அது எஸ்தர் கலந்து கொள்ளவிருக்கும் ஒரு இன்டெர்வியூவில் முடிகிறது.ஆஸ்தின் அரசியின் இடத்திற்கு மாற்றுத் தேடும் முயற்சி இது.ஒரே கல்லில் இரு மாங்காய்கள்..தன் சொல் கேளாத அரசியைத் தண்டிக்கவும், அதே சமயத்தில் புது அரசி ஒருவருக்கு அஸ்திவாரமிடவும் உதவுகிறது இந்த இன்டெர்வியூ.இவர்களைத் தெரிவு செய்யப்போகிறவர்கள் அண்ணகர்கள். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அரசியின் எலிஜிபிலிட்டி...' அவர்கள்இளமையும்,அழகும்,கன்னித்தன்மையும்' கொண்டிருக்க வேண்டும்.இதில் இளமை, கன்னித்தன்மை சரி.ஆனால் அழகின் அளவு கோலாக எதை வைப்பார்கள்? எஸ்தர் வரட்டும்; இன்டர்வியூ தொடங்கட்டும்,பொறுத்திருந்து பார்ப்போம்.நம்மவர்களுக்கு ஒரு டிப்ஸ்....இந்த ஒப்பனை விஷயங்கள் எதுவுமின்றி முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவித் துடைத்து ஒரு சிறிய திலகமிட்டாலே போதும்.....துலக்கிய குத்துவிளக்காக ஜொலிக்குமாம் முகம்! காற்றுவாக்கில் வந்த செய்தி. காசா,பணமா... முயன்றுதான் பார்ப்போமே! "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்று சொல்லாமல் சொல்லிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete