Monday, March 21, 2016

உனக்கு என்ன வேண்டும்?

'என் இக்கட்டான நிலையை நீர் அறிவீர்.
பொதுவில் தோன்றும்போது தலைமீது அணிந்து கொள்ளும்
என் உயர்நிலையின் அடையாளத்தை
நான் அருவருக்கிறேன். தீட்டுத் துணிபோல் வெறுக்கிறேன்.
தனியாக இருக்கும்போது நான் அதை அணிவதில்லை'
(எஸ்தர் (கி) 4:17)

மொர்தெக்காயின் மன்றாட்டைத் தொடர்ந்து, எஸ்தரின் மன்றாட்டையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். மன்றாட்டின் இறுதியில் வரும் மேற்காணும் வசனம், எஸ்தரின் எளிய உள்ளத்தைக் காட்டுகிறது. எஸ்தர் தானாக அரசி பதவிக்கு ஆசைப்பட்டவர் இல்லை என்பதையும், அரசிக்குரிய கிரீடத்தையும் தான் வெறுப்பதாகவும் சொல்கின்றார்.

தன் நோன்பு மற்றும் மன்றாட்டுக்களை முடித்துக் கொள்கின்ற எஸ்தர் எழுந்து மன்னனிடம் செல்கின்றார்.

மன்னன் அழைத்தாலொழிய யாரும் அவனிடம் செல்ல முடியாது என்பதால், உடல்நிலை சரியில்லாதவள்போல் தன் பணிப்பெண் மேல் சரிந்து கொண்டே செல்கின்றார். மன்னனின் இரக்கத்தையும், கருணையையும் பெரும் வழி இது.

மன்னனின் பிரசன்னத்தில் எஸ்தர் மயங்கி விழ, அரசன் அவரைத் தேற்றுகிறான்.

'எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் விருப்பம் யாது? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன்' என்கிறான் அரசன்.

தன் பிறந்தநாள் அன்று தன் முன் நடனமாடி தன்னையும், விருந்தினர்களையும் மகிழ்வித்த சலோமியிடமும், ஏரோது இதே வார்த்தைகளையே சொல்கிறான். 'அரசை வைத்து அரசி என்ன செய்வாள்?' என்ற தைரியத்தில்தான் அரசர்கள் இப்படிக் கேட்டார்களோ என்னவோ!

அரசன் கேட்ட இந்தக் கேள்வியிலேயே புத்தகத்தின் முடிவு தெரிந்துவிடுகிறது. அரசன் மனமிரங்கிவிட்டான். எஸ்தரும் தான் நினைத்தை சாதித்துவிடுவாள்.

இப்போ எஸ்தருக்கு இருக்கும் பிரச்சினைகள் இரண்டு:

அ. தன் இனத்தின்மேல் வெறுப்பு கொண்டிருக்கும் ஆமான் அழிய வேண்டும்.
ஆ. தன் இனத்தை அழிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்.

இரண்டு பிரச்சினைகள் என்பதால், இரண்டு விருந்துகள் கொடுக்கின்றார் எஸ்தர். இரண்டு விருந்திலும், மன்னனும், ஆமானும் மட்டுமே அழைக்கப்பெறுகின்றனர்.


1 comment:

  1. தூரத்துப்பார்வைக்கு ' ஜொலிப்பாகத்' தெரிந்த மணிமுடி தன் சிரசை அலங்கரிக்க ஆரம்பித்தவுடன் ' முள்முடியாக' மாறி விடுவதை உணருகிறார் எஸ்தர்.தன் உடல்,பொருள்,ஆவி அத்தனையும் தன் இனம் காப்பாற்றப்படுவதற்கென்றே துடித்துக்கொண்டிருப்பதை உணர்கிறார்.எப்படியோ சாகசமாக மன்னனைப் பார்க்கச் சென்றவள் அவனிடம் தன் கோரிக்கைகளை வைக்கும் விஷயத்தில் தன் வித்தைகளைக் காட்டுகிறார்.' ' மன்னனின் பார்வையில் இது நல்லதெனப் பட்டால்", மன்னனரின் கண்களில் எனக்கு தயவு கிடைத்தால்" போன்ற வார்த்தைகளில் மன்னனின் மனம் கரைய எஸ்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற சம்மதம் தருகிறார்.அரசனும்,ஆமானும் அவள் வைக்கப்போகும் விருந்திற்கு வருவதாக சம்மதம் தெரிவிக்கிறார். ஆமாம் அன்று சலோமி ஏரோதிடம் கேட்ட வரம்....ஒரு நல்லவரின் தலையைக் கொய்ய; ஆனால் இன்று எஸ்தர் அரசனிடம் வரம் கேட்பது ஒரு தீயவனை வேரறுக்க.இருவருக்குள்ளும் எத்தனை வேறுபாடு! "எப்படியோ பெண்கள் நினைத்திடின் தூணும் அவர்களுக்குத் துரும்புதான்" என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் நம் எஸ்தர்... விருந்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம் தந்தையோடு சேர்ந்து!!!

    ReplyDelete