Thursday, March 3, 2016

ஜான்சிராணி

1. 'இவர்களைத் தாக்காது விட்டுவிடும். இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கு ஆளாவோம்!' (யூதித்து 5:21)

அக்கியோர் ஒலோபெரினின் முன் சொன்ன கடைசி வார்த்தைகள் இவைதாம்.

இஸ்ரயேலர் ஒன்றுமில்லாதவர் போலத் தோன்றினாலும், அவர்கள் சார்பாக கடவுள் இருக்கிறார் என்றும், அவர்களை எதிர்த்துப் போரிடுவது கடவுளையே எதிர்ப்பது போலாகும் என்றும் எச்சரிக்கின்றார்.

அக்கியோரின் இந்த வார்த்தைகள் இரண்டாம் ஏற்பாட்டு திருத்தூதர் பணிகள் நூலில் நாம் காணும் கமாலியேலை நினைவுபடுத்துகின்றன. திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும் எருசலேம் தலைமைச் சங்கத்தில் நிறுத்தப்பட்ட விசாரிக்கப்படும்போது குறுக்கிடுகின்ற சட்ட வல்லுநர் கமாலியேல், '...இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடமிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' (திப 5:38) என்கிறார்.

கடவுள் மனிதர்கள் நடுவில் செயலாற்றும் விதம் கண்களுக்குப் புலப்படாதது. அக்கியோரின் மனக்கண்களுக்குத் தெரிந்த இந்த கடவுளின் செயல்பாடு, ஒலோபெரினின் புறக்கண்களுக்குத் தெரியவில்லை.

2. 'நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ?' (யூதி 6:2)

பண்டைக்காலத்தில் அரசர்கள் கடவுளர்களின் அவதாரங்கள் எனக் கருதப்பட்டனர். நிறைய பாரவோன் மன்னர்கள், 'கடவுளின் மகன்' என அழைக்கப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. இந்த அடிப்படையில்தான் ஒலோபெரின் நெபுகத்னேசரை 'கடவுள்' அல்லது 'தெய்வம்' என அழைத்திருக்க வேண்டும். அப்படி அழைப்பது தவறில்லை. ஆனால், தன் தெய்வம்தான் எல்லாருக்கும் தெய்வம் என நினைப்பது தவறு.

நாம் வணங்கும் கடவுளைத் தவிர வேறு கடவுளர்கள் இல்லை என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? 'எனக்கு கடவுளாக இருக்கும் கடவுள் உனக்கும் கடவுளாக இருக்க வேண்டும்!' என்று என்னால் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா? இப்படி மனிதர்கள் சொல்ல முயற்சித்ததால்தானே, உலகெங்கும் காலனிகள் தோன்றின. அந்நியர்கள் பூர்வீகக் குடிகளின் மொழிகளையும், கடவுளர்களையும், கலாச்சாரத்தையும் அழித்தனர்.

3. 'பகைவர்களின் இறுமாப்பு' (யூதி 6:19)

'இறுமாப்பு' அல்லது 'பெருமை' என்பது ஒருவர் தன்னையே கடவுளுக்கு நிகராக்கிக் கொள்வது. இத்தாலியில் மெட்ரோவில் நன்றாகக் கவனித்தால், ஆண்களும், பெண்களும் தங்கள் தலையை நிமிர்;த்தி வைத்திருப்பார்கள். குறிப்பாக மற்ற நாட்டு மனிதர்களைக் கண்டார்கள் இன்னும் ஒரு இஞ்ச் தூக்கிக்கொள்வார்கள். 'இவர்களுக்கெல்லாம் கழுத்து வலிக்காதா?' எனத் தோன்றும். ஆனால், பின்னால் படித்த 'பாடி லாங்வேஜ்' புத்தகத்தில் நான் ஒன்று தெரிந்து கொண்டேன். மேல்நோக்கி கழுத்தை தூக்கி வைத்தல் நமக்கு 'பெருமை' உணர்வைக் கொடுக்குமாம்! (இதை 'தனி ஒருவன்' திரைப்படத்திலும் சொல்லக் கேட்கலாம்!). அரசர்களும் தங்கள் 'பெருமை' அல்லது 'இறுமாப்பு' உணர்வால் கழுத்தை மேலே தூக்குவார்கள் என்று சொல்லி, அதை சமன்படுத்தத்தான் 'கிரீடம்' உருவானதோ? (இந்த இடத்தில் நீங்கள் திருச்சபையின் ஆயர்கள் அணியும் தொப்பியை 'கிரீடமாக' நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது!)

'பெருமை' வந்துவிட்டால் சீக்கிரம் அழிவும் வந்துவிடும் என்பது விவிலியத்தில் மேலோங்கி நிற்கும் ஒரு கருத்தியல்.

4. 'நீரூற்றுக்கள் முற்றுகை' (7:7)

புறநானூற்றில் சொல்லப்படும் போர் நடைமுறைகளும், யூதித்து நூலில் சொல்லப்பட்டுள்ள போர் நடைமுறைகளும் நிறைய ஒத்திருக்கின்றன.

போரின் முதல் விதிமுறை: 'எதிரியின் வாழ்வாதாரத்தை அழிப்பது'

புறநானூற்றில் இந்த விதிமுறை 'ஆநிரை கவர்தல்' என அழைக்கப்படுகிறது. 'ஆ' என்றால் 'பசு.' (அப்போ, ஆவின் பால் என்றால் பசுவின் பால் என்று அர்த்தம்!). 'நிரை' என்றால் 'வரிசை' அல்லது 'கூட்டம்.' எதிராளியின் பசுமாடுகளை ஓட்டிச் சென்றுவிட்டால், அவர்கள் பால் கிடைக்காமல் வாடி விடுவர். மேலும், பசுக்கள்தாம் விவசாயத்திலும் பயன்படுத்தப்பட்டன. அந்தக் காலத்து பசுக்கள் ஏர் ஓட்டும் திறன் பெற்றவை. இன்று நாம் வைத்திருக்கும் அமெரிக்க-இத்தாலிய ஜெர்ஸி பசுக்கள் பார்க்கத்தான் முரடாக இருக்கின்றனவே தவிர, வலுவற்றவைகள் அவை. ஆக, பசுக்களை ஓட்டிச் சென்றால் மக்களின் தொழில், வாழ்வாதாரம், வாழ்க்கை முறை பாதிக்கும். தங்கள் நிரைகளை ஓட்டிச் சென்றவர்களைத் தேடி இவர்கள் போருக்குச் செல்வர். இப்படித்தான் தொடங்கும் போர்.

ஒலோபெரின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த நீரூற்றுக்களை அடைக்கின்றான். நீரூற்றுக்களை அடைத்தால் தாகத்தால் மக்கள் இறந்துவிடுவர். தாகம் தணிக்க தப்பிக்க நினைக்கும் மக்களையும் வாளுக்கு இரையாக்கலாம். ஆக, ஒருவரின் வலுவை முதலில் அழித்து, பின் அந்த நபரை அழிப்பது.

இன்று பன்னாட்டு குளிர்பானங்கள் நம் நாட்டு நீராதாரங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. நாம் அன்றாடம் குடித்து மகிழும் ஒவ்வொரு கோக்-பெப்சி பாட்டில் வழியாக, நம் பிள்ளைகளின் பிள்ளைகள் வாழ்வாதாரத்தை விலைபேசிக்கொண்டிருக்கிறோம். தண்ணீரை வாங்கித்தான் குடிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டால், நம் நீரூற்றுக்களும் இன்று ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன என்றுதானே அர்த்தம்.

5. 'அணிவகுப்பு முறை' (7:11)

இது அடுத்த டெக்னிக். இந்த டெக்னிக் அப்பாவி மக்கள் உள்ளத்தில் பயத்தை விதைக்கும்.

படைவீரர்களையும், குதிரை மற்றும் தேர்ப்படைகளையும் ஊருக்கு நடுவே அணிவகுப்பு செய்ய வைப்பது. இப்படி செய்ய வைத்தால் சாதாரண அப்பாவி மக்கள் பயந்து போவார்கள். பயம் ஒரு தொற்றுவியாதி. எனக்கு பயம் வந்துவிட்டால் எனக்கு அருகில் இருப்பவரையும் அது ஒட்டிக்கொள்ளும். அல்லது நானே ஒட்டவைத்துவிடுவேன்.

நம் ஊரிலும் தேர்தலுக்கு முந்தைய நாள் மிலிட்டரி மற்றும் பேராமிலிட்டரியின் 'அடையாள அணிவகுப்பு' நடக்கும். மறைமுகமாக இது சொல்வது என்ன? 'நாளைக்கு தேர்தல். யாரும் வன்முறையில் ஈடுபடாதீங்க. அப்படி ஈடுபட்டால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்!'

இன்று தீவிரவாத அமைப்புகள் செய்யும் வேலையும் இதுதான். மக்களைப் பயத்திலேயே வைத்திருப்பது. மக்கள் பயந்தால்தான் இவர்களுக்கு சோறு இறங்கும்.

நீரூற்றுக்களை அடைத்து மக்களை உடல் அளவிலும்,

அணிவகுப்பை நிகழ்த்தி அவர்களை உள்ளத்து அளவிலும் சோர்வடைய வைத்துவிட்டான் ஒலோபெரின்.

ஆனால், ஒருத்தியை மட்டும் அவனால் சோர்வடைய வைக்க முடியவில்லை.

அவள்தான் நம் ஜான்சிராணி யூதித்து.


1 comment:

  1. வாழ்வுக்கு ஆதாரமான,நிறைய விஷயங்களை உள்ளடக்கியதொரு பதிவு.நம் வாழ்க்கைப்பாதையிலும் கூட நாம் சறுக்கும் வேளைகளில் நம்மை நெறிப்படுத்த எத்தனையோ அக்கியோர்களை இறைவன் நம்கண்களில் காட்டத்தான் செய்கிறார்..நாம் தான் இன்றையப்பதிவில் வரும் ஒலோபெரினின் மனநிலையோடு கண்ணிருந்தும் குருடராய்,காதிருந்தும் செவிடராய் செயல்படுகிறோம்.பல நேரங்களில் வலியோராய் உள்ள நாம், நமக்குக்கீழேயுள்ள
    எளியோரைக் குறைத்து மதிப்பிடுகிறோம்; அவர்களை செல்லாக்காசாக நினைக்கிறோம்.அந்நேரங்களில் அவர்களது ஆண்டவர் அவர்களின் சார்பாக இருந்து செயல்படுகிறார் என்பதையும்,அவர்களுக்கு நாம் செய்யும் அநியாயங்கள் அனைத்தும் இறைவனுக்கெதிராக செய்யப்படுபவைக்கொப்பாகும் என்பதையும் அக்கியோருக்கொத்த நம் மனசாட்சி இடித்துரைக்கையில் அதற்கு செவிமடுப்பது விவேகமாகும்.ஒருவனை நாம் வேரறுக்க வேண்டும் எனும் எண்ணம் நமக்கு வந்துவிடில் நம் இறுமாப்பு நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை ' யூதித்து' நூலைப் புறநானூறுடனும்,மற்றும் நமது இன்றைய வாழ்க்கை முறையுடனும் அழகாக ஒப்பிட்டுக்காட்டுகிறார் தந்தை..எத்தனையோ கொடுமைகளுக்கு இஸ்ரயேலரை ஒலோபெரின் உட்படுத்திடினும் எப்படி அவனால் நம் ' யூதித்தை' மனத்தளவிலும்,உடலளவிலும் சோர்வடையச் செய்ய இயலவில்லையோ அதே போன்றுதான் நம்மைச் சோர்விற்கு ஆளாக்க நினைப்பவர்களைப் பார்த்து " இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்; அவர்களுக்குத் துன்பம் இழைப்பது கடவுளையே அவமதிப்பதற்குச்சமம்" என்று நம் சார்பில் எடுத்துரைக்கப் பல அக்கியோர்களையும்,கமாலியேல்களையும் இறைவன் அனுப்புவார் எனும் நம்பிக்கை நமக்குத் தூணாய் நிற்க வேண்டும்.வாழ்வின் சாரமான பல விஷயங்களைத் தனக்கே உரித்தான விதத்தில் எடுத்துரைத்துள்ள தந்தைக்கு நன்றியும்,பாராட்டும்!!!

    ReplyDelete