Friday, March 25, 2016

நடுவுல கொஞ்சம்

வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே உள்ள சனிக்கிழமை என்ன நடந்தது என்பது பற்றி,

இயேசுவின் இறப்புக்கும், உயிர்ப்புக்கும் இடையே என்ன நடந்தது என்பது பற்றி நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டு எதுவும் எழுதவில்லை.

சனிக்கிழமை யூதர்களின் ஓய்வுநாள் என்பதால் அவர்கள் எந்த வேலையும் செய்திருக்க வாய்ப்பில்லை என நினைத்தாலும், இந்த சனிக்கிழமையில் நிறைய செயல்கள் நடந்தேறத்தான் செய்தன:

இந்த நாளில்தான்...

'மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டேன்!' வாயில் சிக்கிய முள்போல, விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், தலைமைச் சங்கம் கொடுத்த காசுகளை அவர்கள்முன்னேயே வீசி எறிந்துவிட்டு, யூதாசு இறந்திருப்பார்...

பேதுரு தான் மறுதலித்ததை மரியாளிடம் மற்ற சீடர்களிடம் சொல்லி அழுதிருப்பார். 'என்னிடம் யாரும் வராதீங்க! நான் பாவி! ஐயோ! அவரை நான் மறுதலிச்சுட்டேனே!' என புலம்பியிருப்பார்.

இயேசுவின் ஆடையின் மேல் சீட்டுப்போட்டு, அது தனக்கு விழுந்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அந்த படைவீரன் எல்லாரிடமும் அதைக் காட்டி மகிழ்ந்திருப்பார்.

'அவனைக் கொன்றாயிற்று! எல்லாம் முடிந்தது!' என ஓய்ந்திருக்க முடியாமல், 'ஒருவேளை சொன்னது மாதிரி உயிர்த்துவிடுவானோ!' என்ற தலைமைக்குருக்களும், மற்ற தலைவர்களும், கல்லறைக்கு காவல் போடுவது பற்றி முடிவெடுத்து, ஓய்வுநாளில் ஆள்கிடைக்காதததால், கையில காலுல விழுந்து, காவலுக்கு ஆள் பிடித்திருப்பர்.

'பாஸ்கா கொண்டாடும் நல்ல நாள் அதுவுமா, நம்ம ஆலயத்தின் திரைச்சீலை கிழிஞ்சுடுச்சே!' என நல்ல சகுனம்-கெட்ட சகுனம் பார்த்துக்கொண்டிருந்திருப்பர் ஆலயத்தின் பணியாளர்கள்.

'என்னை எதுக்கு பிடிச்சாங்க?' 'என்னை எதுக்கு விட்டாங்க?' என்று யோசித்துக்கொண்டே குழம்பிப் போயிருப்பார் பரபா.

'மூன்றாம் நாள் காரியம் செய்யணும்!' என எண்ணிக்கொண்டிருந்த இயேசுவின் இளவல்கள், அவரின் இறந்த உடலுக்குப் பூசுவதற்கு, நறுமணத் தைலம் தயாரிக்க ஒன்றாகக் கூடி வந்திருப்பர்.

'அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்' என்று நான் சொல்லியும், நீ கேட்காமல் அவரைக் கொல்வதற்குக் கையளித்துவிட்டாய், என பிலாத்தின் மனைவி, பிலாத்துவிடம் சண்டை போட்டு, பேசாமல் இருந்திருப்பார்.

இயேசுவின் இறப்பால் நண்பர்களான பிலாத்துவும், ஏரோதுவும், ஒன்றுகூடி வந்து, 'நாம எப்படி இருந்தோம்!' என்று தங்கள் நட்பின் பழைய நினைவுகளை அசைபோட்டிருந்திருப்பர்.

இப்படி நிறைய நடந்திருக்கும்.

ஆனால், நாளைய நாள் நமக்குச் சொல்வது ஒற்றைவார்த்தை: 'மௌனம்'

கல்லறையின் மௌனத்தைக் காட்டத்தான் நற்செய்தியாளர்கள், நடுவுல கொஞ்சம் பக்கத்தை, அப்படியே வெறுமையாக விடுகிறார்கள்.

இறப்பிற்கும், உயிர்ப்பிற்கும் கடந்து செல்வதற்கு,

இறப்பையும், உயிர்ப்பையும் புரிந்து கொள்வதற்கு மிகவும் தேவையானது மௌனம்.

இந்த மௌனத்தின் ஆற்றலை அற்புதமாக உணர்ந்தவர் இயேசுவின் தாய் மரியாள்.

தன் வயிற்றில் மௌனமாய் இருந்த இயேசு பத்து மாதங்கள் கழித்து புதிய உயிராகப் பிறந்ததுபோல, பூமித்தாயின் வயிற்றில் மூன்று நாட்கள் மௌனமாய் இருக்கும் இயேசு, உயிர்ப்பார் என நம்பினார்.

சனிக்கிழமையின் மௌனத்தை மரியாள் அறிந்ததால்தான் என்னவோ, இன்றும் நாம் மரியாளை சனிக்கிழமை நினைவுகூறுகின்றோமோ?

ஒரு வார்த்தைக்கும், அடுத்த வார்த்தைக்கும் நடுவுல இருக்கும் மௌனமே உரையாடல்.

ஒரு ஓசைக்கும், அடுத்த ஓசைக்கும் நடுவுல இருக்கும் மௌனமே இசை.

இயேசுவின் இறப்புக்கும், உயிர்ப்புக்கும் நடுவுல இருக்கும் மௌனமே வார்த்தை.

வார்த்தை மனுவுருவானார். இன்று மனிதனின் இறுதி உருவாம் மண்ணில் அடக்கத்தை அனுபவித்தார்.

மௌனமும் வார்த்தை என்பதால்,

இயேசுவே வார்த்தை என்பதால்,

நடுவுல எல்லா பக்கமும் இருக்கு!



3 comments:

  1. வித்தியாசமானதொரு சிந்தனை... வித்தியாசமான வார்த்தைகளின் வெளிப்பாடு.ஆம்! கண்டிப்பாகத் தந்தையின் பட்டியலில் உள்ளது போல் இயேசுவின் இறப்பில் சம்பந்தப்பட்ட அனைவருமே அவரவர் போக்கில் அவரவர் காரியங்களைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள்தான். பொதுவாக நாம் 'மௌனத்திற்கு' பெரிய அளவில் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை எனினும் இங்கு இயேசுவின் இறப்பிற்கும்,உயிர்ப்பிற்கும் இடையே உள்ள மௌனம் ஆற்றல் மிக்க தொன்றாகி விடுகிறது அன்னை மரியாள் ஈடுபட்டிருப்பதால். சனிக்கிழமை மௌனத்தை மரியாள் அறிந்த காரணத்தினால் தானோ என்னவோ சனிக்கிழமை என்பது அன்னை மரியாளுக்கென்று ஒதுக்கப்பட்ட நாளாக உள்ளது..!? தந்தையின் யூகம் நியாயமானதாகக் கூட இருக்கலாம்.இயேசுவின் இறப்பிற்கும்,உயிர்ப்பிற்கும் இடையே உள்ள மௌனமே வார்த்தை என்பதால்,அந்த வார்த்தையே இயேசு என்பதால் எந்தப் பக்கமும் நடுவில் வெறுமையாய் இல்லை...எல்லா பக்கமும் இருக்கு...அவை நிறைவாகவும் இருக்கு.கொஞ்சம் நிதானமான யோசித்தலுக்குப்பிறகே புரியும் ஒரு மேட்டர்.என்னைப் போலக் கொஞ்சம் அதிகம் பேசுபவர்களுக்கு ' 'மௌனத்தையும்' நேசிக்கப் பழகலாமே என்ற தாக்கத்தை ஏற்படுத்திய தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. In silence do we experience the power of resurrection...Your words of reflection for the holy Saturday is a sure way of getting still more closer in understanding the mystery of the Lord's death and resurrection...during this waiting period of 24 hours..m

    ReplyDelete
  3. Dear Father,Congrats Very meaningful reflection on Silence.

    ReplyDelete