Monday, March 28, 2016

ஆண்டவரைக் கண்டேன்!

இயேசுவின் உயிர்ப்பை பற்றி பதிவு செய்யும்போது, நாம் மறக்க முடியாத ஒரு இளவல் மகதலா நாட்டு மரியாள்.

இந்த இளவலுக்கு வயது 16 முதல் 18 இருந்திருக்க வேண்டும்.

ரொம்பவே தைரியசாலி இவள்.

ஏறக்குறைய அதிகாலை 3 முதல் 6 மணிக்குள், இரவாய் இருந்தபோதே, இயேசுவின் கல்லறையைத் தேடி வருகிறாள் இந்த ஜான்சி ராணி.

கல்லறை வாசலின் கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டதும், கண்டிப்பாக அவள் மகிழ்ச்சி அடைந்திருப்பாள். 'இயேசுவின் உயிரற்ற உடலையாவது ஒருமுறை தொட்டுவிடலாம்!' என துள்ளிக் குதித்திருப்பாள். ஆனால், அருகில் சென்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த ஆடைகள் மட்டுமே கிடக்கின்றன.

அப்படியே ஓடியவள், பேதுருவை மற்றும் யோவானைக் கண்டுபிடிக்கிறாள்.

'ஆண்டவரைக் காணோம்!' என்கிறாள்.

இங்கே நற்செய்தியாளர் யோவானின் இலக்கியத்திறத்தை பாராட்ட வேண்டும். 'இயேசுவின் உடலைக் காணோம்!' அல்லது 'சடலத்தைக் காணோம்!' அல்லது 'இயேசுவைக் காணோம்!' என்று சொல்வதற்குப் பதிலாக 'ஆண்டவரை' என்கிறார். எபிரேயத்தில் பெண்கள் தங்கள் கணவரை, 'பால்' அல்லது 'அதோனாய்' என அழைப்பார்கள். இதன் பொருள் 'ஆண்டவர்' என்பது. 'என் கணவரைக் காணோம்!' என்று மரியாள் சொல்கிறாள். (பயந்துடாதீங்க! முழு பதிவையும் படிங்க!)

யோவான் நற்செய்தியாளர் தன் நற்செய்தி முழுவதிலும் இயேசுவை மணமகனாகவே முன்வைக்கிறார். திருமுழுக்கு யோவான் இயேசுவை மணமகன் என்று அழைக்கிறார். காலனிகளைக் கழற்றி மனைவியை உரிமையாக்கிக்கொள்ள அவரால் மட்டுமே முடியும் என்கிறார். இயேசுவின் முதல் அறிகுறி திருமண நிகழ்வில் நடந்தேறுகிறது. சமாரியப்பெண்ணுடன் இயேசு உறவாடும்போதும், மணமகன்-மணமகள் போலவே உரையாடல் நடக்கிறது. இந்த உருவகத்தை தொடர்ந்து கையாளும் யோவான், இயேசுவை மணமகனாக உயிர்ப்பு நிகழ்விலும் உருவகப்படுத்துகிறார்.

பேதுருவும், யோவானும் கல்லறையைப் பார்த்துவிட்டுப் போனதும், மரியாள் மட்டும் இன்னும் அதே இடத்தில் நின்று அழுதுகொண்டிருக்கிறாள் (காண். யோவா யோவா 20:11). அவள் ரொம்ப சிம்ப்பிள் கேர்ள். எதார்த்தவாதி. அவளுக்கு உயிர்ப்பு, மறுபிறப்பு இப்படியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியவில்லை. அவளுக்கு அழ மட்டுமே தெரிகின்றது. இன்றும் நம்ம பொண்ணுங்க புரியாத எதார்த்தத்தின் முன் கண்ணீர் மட்டுமே வடிக்கின்றனர்.

மரியாள் அழுது கொண்டே திரும்பிப் பார்க்கிறாள். அங்கே இயேசு நின்றுகொண்டிருக்கிறார். ஆக, மரியாள் முதலில் கல்லறையை நோக்கி நின்று அழுதிருக்க வேண்டும். 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என அந்த உருவம் கேட்டபோது, அவளுக்கு அவர் ஒரு தோட்டக்காரராகவே தெரிகின்றார். வழக்கமாக, நாம் ஒருவரை ரொம்ப அன்பு செய்யும்போது, யாரைப் பார்த்தாலும், நமக்கு நம் அன்புக்குரியவரைப் பார்ப்பதுபோல இருக்கும். ஆனால், இங்கே அன்புக்குரியவரே தோட்டக்காரர் போலத் தெரிகின்றார். அங்கேதான் டுவிஸ்ட் வைக்கிறார் யோவான். இயேசுவுக்கும், மரியாளுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்ட இருவரையும் செயற்கையாக அந்நியப்படுத்துகிறார்.

'நீர் அவரை தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துக்கொள்வேன்' (20:15) என்கிறாள் மரியாள். துணிச்சல்காரி மட்டும் அல்ல. பலசாலியும் கூட அவள்.

'மரியா!' என்கிறார் அந்த நபர்.

'இரபூனி!' என திரும்பிப் பார்க்கிறார் மரியாள்.

அதான் ஏற்கனவே திரும்பிவிட்டாள்தானே. மறுபடியும் எப்படி திரும்புகிறாள். யூதப் பெண்கள் பொதுவில் ஆண்களுடன் நேருக்கு நேர் பேசுதல் கூடாது. ஆக, மரியா, அவருக்குத் தன் முதுகைக் காட்டித்தான் பேசியிருந்திருப்பாள். அதனால்தான் மீண்டும் திரும்புகிறாள்.

'என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே!' என்கிறார் இயேசு.

ஆக, 'இரபூனி' என்று மரியாள் அழைத்துக்கொண்டே, இயேசுவை ரொம்ப இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாள்.

இந்தக் கட்டிப்பிடித்தலில் அவளின் எண்ண ஓட்டங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கும்?

'உங்கள ரொம்ப அடிச்சுட்டாங்களாடாமா!'

'ரொம்ப வலிச்சதாடாமா!'

'எங்கடாமா போனீங்க இந்த மூன்று நாள்!'

'இனி என்கூடவே இருந்திடுங்கடாமா! உங்கள நான் பத்திரமா பாத்துக்குவேன்!'

என அன்பை அள்ளி இரைத்திருப்பாள் மரியாள்.

இயேசு-மரியாள் சந்திப்பு, முதல் ஏற்பாட்டு, ஈசாக்கு-ரெபேக்கா சந்திப்பு போலவே இருக்கிறது.

அங்கே, அவர்கள் வயலில் சந்திக்கின்றனர்.

இங்கே, இவர்கள் தோட்டத்தில் சந்திக்கின்றனர்.

அங்கே, ரெபேக்கா முக்காடிட்டு இருந்ததால் ஈசாக்கை முழுவதும் பார்க்க முடியவில்லை.

இங்கே, மரியாளின் பார்வை மறைக்கப்பட்டு இருந்ததால் இயேசுவை அடையாளம் காண முடியவில்லை.

'ரெபேக்கா ஈசாக்குக்கு மனைவியானார்' என நிறைவடைகிறது அங்கே (தொநூ 24:67).

'நான் ஆண்டவரை (என் கணவனைக்) கண்டேன்' என நிறைவடைகிறது இங்கே (யோவான் 20:18).

இதுதான் மரியாள் பேசும் கடைசி வார்த்தை.

மரியாள் நம் ஒவ்வொருவரின் உருவகம். நாம் உயிர்த்த ஆண்டவரைத் தேடி அலைகின்றோம். அந்தத் தேடலின் இறுதியில் நாமும் இந்த வார்த்தைகளைகத் தான் கூற வேண்டும்:

'நான் ஆண்டவரைக் கண்டேன்!'

இயேசுவே புதிய மணமகன். நாம் அவரின் மணவாட்டிகள்.


3 comments:

  1. உயிர்த்த இயேசுவுக்கும்,மகதலா நாட்டு மரியாளுக்குமான உறவை ஒரு எதார்த்தமான கண்ணோட்டத்தில் முன் வைத்துள்ளார தந்தை. 16 அல்லது 18 வயதே நிரம்பிய இந்த இளவல் ஒரு தைரியசாலிதான்; பலசாலிதான்.இவள் கவலை எல்லாம் இயேசுவைப் பற்றி மட்டுமே! அதிகாலையின் இருளுக்கான பயமோ, இல்லை அவரைக்கொன்றவர்கள் தன்னைப்பார்த்துவிடக்கூடும் என்ற நினைப்போ அவளுக்கு சிறிதும் இல்லை.விடிய,விடிய இயேசுவின் இழப்பை நினைத்து அழுது புரண்டிருக்க வேண்டும்,இயேசுவின் சடலத்தைத் தேடி வந்தவர் 'சடலத்தைக்காணோம்' என்பதற்குப் பதில் 'ஆண்டவரைக் காணோம்' என்று சொல்வதில் தொடங்கி பின் தோட்டக்காரர் உருவில் அவரைப்பார்த்தது,அவர் இவளைப்பெயர் சொல்லி அழைத்ததும் அவரிடம் நெருக்கம் காட்டத் துடிப்பது....எல்லாவற்றிலும் ஒரு எதார்த்தத்தை உணர முடிகிறது." யார் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன? எனக்கு வேண்டியது என் இயேசு மட்டுமே! என் இரபூனி மட்டுமே!" என்ற எண்ணத்தின் பின்னோட்டம் அவளது ஒவ்வொரு செயலிலும் மேலோங்கி நிற்கிறது. இயேசு- மரியா இவர்களுக்கிடையேயான உறவை ஒரு மணமகன்- மணமகள் உறவோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது .......இந்த வரிகளுக்குள் நுழைந்து பார்த்தால் இது உறவின் உண்மையையும்,எதார்த்தத்தையுமே குறிப்பதாகப் படுகிறது. திருச்சபை கூட இயேசுவின் மணவாட்டி என்று தானே உருவகப்படுத்தப்படுகிறது! பல நேரங்களில் உடல் சார்ந்த உறவுகளை விட உணர்வு சார்ந்த உறவுகளே காலத்தை வென்று நிற்கின்றன. இன்று பெற்றவர்கள் பிள்ளைகளையும்,பிள்ளைகள் பெற்றவர்களையும் விட்டு விலகி நிற்பதற்குக் காரணம் கூட உடல் சார்ந்த, தொப்புள்கொடி உறவிருந்தும் அங்கே உணர்வுகள் மதிக்கப்படாமல் மிதிக்கப்படுவது தான்.நாமும் கூட நம் தேடலில்.....நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் " ஆண்டவரை" ... நம் " மணமகனைக்" காணலாம்... காண முயற்சியாவது செய்யலாம். ஒருவிஷயத்தை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.இயேசுவைக்கண்ட மரியாள் அவரைக் கட்டிப்பிடித்த போது அவளின் எண்ண ஓட்டங்கள் என்னவாக இருந்திருக்கும்??!! தந்தையின் கற்பனையின் உச்சம்.அழகான,எதாரத்தத்தைப் பிரதிபலிக்கும் வரிகளுக்காகத் தந்தையைப் பாராட்டலாம்!!!

    ReplyDelete
  2. What an interesting and lovely dialogue between mary and Jesus. Though imaginary, this could have been a realistic conversation as well...

    ReplyDelete
  3. What an interesting and lovely dialogue between mary and Jesus. Though imaginary, this could have been a realistic conversation as well...

    ReplyDelete