Thursday, March 10, 2016

முடிவுரை

யூதித்து நூலின் இறுதி பிரிவு (16) அவரை சிறந்த குருவாகவும், நீதித்தலைவியாகவும், குடும்பப் பெண்ணாகவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

1. யூதித்து என்னும் குரு

இஸ்ரயேலருக்கும், அசீரியருக்கும் இடையேயான போரில் யூதித்து படைக்கலன்கள் தாங்கி போராடவில்லை. ஆனால், இந்தப் போரின், வெற்றியின் கிரியா ஊக்கியாக இவர் செயல்படுகின்றார். வெற்றி பெற்று திரும்பியவுடன் அவர் செய்கின்ற முதல் வேலை இறைவனைப் புகழ்வது. அவர் புகழ, அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த மக்களும் புகழ்கின்றனர்.

புகழ்ப்பா

இந்தப் புகழ்ப்பா 'இடைநில் பாடல்' என்னும் இலக்கிய வகைiயைச் சார்ந்ததே. ஏனெனில், இந்தப் பாடலின் முன்னும், பின்னும் உரைநடைப் பகுதி இருக்கின்றது. பிற்காலத்தில் எழுதப்பட்டு இந்நூலுடன் சேர்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் இந்தப் பாடல் இஸ்ரயேலர் இந்தப் போரிலும், பிற்காலத்தில் நடைபெற்ற போரிலும் பெற்ற வெற்றிகளை ஒன்றாக சேர்த்துச் சொல்கிறது.

இந்தப் பாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது:

அ. நடந்து முடிந்தது (16:1-12)
ஆ. நடக்கப் போவது (16:13-17)

முதற் பகுதியில் தன் வழியாக இறைவன் தந்த வெற்றியை, வலுவின்மையின் வழியாக இறைவன் தன் வல்லமையை வெளிப்படுத்தியதை யூதித்து எடுத்தியம்புகிறார்.

பிற்பகுதியில் இந்த வெற்றியின் வழியாக இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இனி கடவுளுக்குப் பயந்து நடப்பர், கடவுள்தாமே அவர்களின் தலைவராக இருப்பார் என்ற செய்தியை யூதித்து மற்றவர்களுக்குச் சொல்கின்றார்.

இந்தப் பாடலிலிருந்து அக்காலத்து போர்முறையை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. தன் எதிரி நாட்டை அழிக்கும் அரசன் ஐந்து காரியங்களைச் செய்கிறான்:

அ. 'எல்லைகளைத் தீக்கிரையாக்குகிறான்.' அதாவது, எல்லா வீடுகள், வயல்களையும் நெருப்பிலிடுகிறான்.
ஆ. 'இளைஞர்களை வாளுக்கிரையாக்குகிறான்.'
இ. 'குழந்தைகளைத் தரையில் அடித்துக் கொள்கிறான்.' அதாவது, எதிர்கால சமூகம் இல்லாமல் செய்கிறான். அத்தோடு 'தரையில் அடித்துக்கொள்வதன்' வழியாக தன் இஷ்டதெய்வங்களுக்கு குழந்தைகளைக் பலி கொடுக்கிறான் எனவும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் பண்டைக்கால வழிபாட்டுத் தலங்களைக் கண்டுபிடித்துள்ள தொல்லியல் நிபுணர்கள், அத்தலங்களுக்கு அருகே குழந்தைகளின் மண்டை ஓடுகளையும், எலும்புத் துண்டுகளையும் எடுத்துள்ளனர்.
ஈ. 'சிறுவர்களைக் கவர்ந்து செல்கிறான்.' சிறுவர்களைக் கவர்ந்து சென்று தம்மவர் போல் வளர்த்துக்கொள்வர்.
உ. 'கன்னிப்பெண்களைக் கொள்ளைப் பொருளாகக் கொண்டு போகிறான்.' இவர்கள் அந்தப்புரத்திற்கும், சமையற்கட்டிற்கும் 'பயன்படுத்தப்'படுவர்.

இந்த ஐந்து காரியங்களை எதிரி செய்கிறான்.

எதிரியை அழிக்கச் செல்கின்ற யூதித்தும் ஐந்து காரியங்கள் செய்கின்றார்:

அ. 'கைம்பெண்ணுக்குரிய ஆடையைக் களைந்தார்.'
ஆ. 'முகத்தில் நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்'
இ. 'தலையை வாரி முடித்து மணிமுடியைச் சூடிக்கொண்டார்.'
ஈ. 'மெல்லிய உடையை அணிந்து கொண்டார்.'
உ. 'கண்ணைக் கவரும் காலணியை அணிந்தார்.'

இந்த ஐந்து செயல்களும் பலி செலுத்தச் சொல்லும் குருவுக்கும் பொருந்தும்.

இவ்வாறாக, யூதித்து ஒரு குருவைப்போல செல்கின்றார். குருவின் வார்த்தைகளில் இறைவன் மயங்குவதுபோல, இவரின் வார்த்தைகளில் எதிரி மயங்குகிறான். குருவைப்போலவே வெற்றிப்பாடல் இசைத்து மக்களை உற்சாகப்படுத்துகின்றார்.

2. யூதித்து என்னும் நீதித்தலைவி

யூதித்து அக்கால சமூகத்தின் நல்ல தலைவியாக இருந்தார் என்பதற்கு இரண்டு சான்றுகளை தருகிறது இந்நூல்:

அ. 'மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒலோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்.'

யூதித்து நினைத்திருந்தால் இந்த வெற்றிச்சூழலைப் பயன்படுத்தி ஒரு அரசியல்வாதியாக உருவாகியிருந்திருக்கலாம். நான் கவர்ந்து கொண்டு வந்த அனைத்தும் எனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. தனக்கு அன்பளிப்பு என மக்கள் கொடுத்ததையும் கடவுளுக்கு உரிமையாக்கிவிடுகின்றார்.

இந்தப் பண்பு எப்படி வந்திருக்கும் அவரிடம்? 'மனநிறைவு' கொண்ட ஒருவருக்கே இந்தக் குணம் வரும். 'போதாது என்றால் எதுவுமே போதாதுதான். போதும் என்றால் இதுவே போதும்!' என்பதுதான் யூதித்தின் மனநிறைவின் மந்திரமாக இருந்திருக்கும்.

ஆ. 'யூதித்தின் வாழ்நாளின்போது வேறு எந்த அச்சுறுத்தலும் இஸ்ரயேல் மக்களுக்கு இல்லை.'

தலைவன் சரியாக இருந்தால் அந்த ஊருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. உதாரணத்திற்கு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நம் பக்கத்து மாநிலம் நமக்கு அச்சுறுத்தலாக இருக்கக் காரணம் நம் தலைமை சரியில்லாமல் இருப்பதால்தானே.

3. யூதித்து என்னும் குடும்பப் பெண்

நல்ல குடும்பப் பெண்ணிற்கான நான்கு பண்புகளையும் யூதித்து கொண்டிருக்கின்றார். (இக்காலத்திற்கு இது பொருந்துமா என்பது கேள்விக்குறி!)

அ. 'தன் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்.' வேறு யார் பொருளுக்கும் ஆசைப்படவில்லை. எளிதில் வரும் பொருள் யாவும் எளிதில் சென்றுவிடும் என்பதை அறிந்தவர் அவர்.

ஆ. 'பலர் தன்னை மணக்க நினைத்தாலும் தான் யாரையும் மணக்கவில்லை.' ஒரே கணவன் மனாசே. அவன் இருந்தாலும், இறந்தாலும் அவன் மட்டுமே என் கணவன் என வாழ்கிறார்.

இ. 'பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுக்கிறார்.' யாரும் எனக்கு அடிமையாக இருக்க தேவையில்லை என்று நினைத்தவர், அவளுக்கு உரிய உரிமையைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார்.

ஈ. 'தம் உடைமையைப் பகிர்ந்து கொடுக்கின்றார்.' தான் இருக்கும்போதே தன் சொத்துக்களை பகிர்ந்து கொடுத்துவிட்டு, தன் வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து முடிக்கின்றார்.

வளைக்கரங்கள் வலுவான கரங்களை எதிர்த்து நின்றதற்கான சான்றுகள் வரலாற்றில் நிறைய இருக்கின்றன:

ஜோன் ஆஃப் ஆர்க் (15ஆம் நூற்றாண்டு) இராணி மங்கம்மாள் (17ஆம் நூற்றாண்டின் இறுதி), வேலு நாச்சியார் (18ஆம் நூற்றாண்டு), ஜான்சி ராணி லக்குமிபாய் (1858).

வளைக்கரங்களுக்கு வாழ்த்துக்கள்!

நிறைவுற்றது யூதித்து நூல்.


1 comment:

  1. அழகானதொரு முடிவுரை. ஒலோபெரினை வெற்றிகண்ட யூதித்தைப் பல கோணங்களில் .....நீதித் தலைவியாகவும்,குருவாகவும்,குடும்பப் பெண்ணாகவும் வைத்து அழகு பார்க்கிறார் ' யூதித்து ' நூலின் ஆசிரியர்.' நன்றி மறப்பது நன்றன்று' எனும் வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப தனக்கு வெற்றிக்கனியைக் கொடுத்த இறைவனுக்குப் பல விதங்களில் தன் நன்றியைச் செலுத்துகிறார்.இவரிடமிருந்த தாராள குணம், போதுமென்ற மனம்,எந்த இக்கட்டான சூழ்நிலையையும் கையாளும் திறன்,தனக்குக் கீழ் உள்ளவர்களையும் தனக்கு நிகராக மதிக்கும் பரந்த உள்ளம், எல்லாவற்றிற்கும் மேலாக தன் மக்களுக்கு நல்வழிகாட்டும் தலைமைப்பண்பு....இவை யாவும் ஒரு நிறைவான வாழ்வு வாழத்துடிக்கும் எந்தப் பெண்ணும் பின் பற்றக்கூடியவை மட்டுமல்ல; பின்பற்ற வேண்டியவையும் கூட.வளைக்கரங்கள் வலுவான கரங்களை எதிர்த்து நின்றதற்கான சான்றுகளாக ஜோன் ஆஃப் ஆர்க்,இராணி மங்கம்மாள்,வேலு நாச்சியார்,ஜான்சிராணி இலக்குமிபாய் இவர்களைப் பட்டியலிடுகிறார் தந்தை.இப்பட்டியலின் அடுத்த பெயராக ஏன் நீங்களும் ,நானும் இருக்கக்கூடாது? நினைவே இனிக்கிறதல்லவா? முயல்வோம்; நம்மிடம் உள்ள தடைகளைத் தகர்த்தெறிவோம். வளைக்கரங்களுக்கு வாழ்த்து சொல்லும் தந்தைக்கும் வாழ்த்துக்களும்,நன்றிகளும்!!!

    ReplyDelete