Sunday, March 13, 2016

பாரூக்கு

இறைவாக்கினர் எரேமியாவின் செயலர் பாரூக்கு. முதல் ஏற்பாட்டு கால அரசர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அதுக்கெல்லாம் எங்க டைம் இருக்கு பாஸ்? நாமதான் படிக்கணுமான என்ன? படிச்ச ஒரு ஆளை வேலைக்கு வச்சிகிட்டா போகுது! அந்த அடிப்படையில் எரேமியாவின் உடனிருந்தவர்தான் பாரூக்கு.

பாரூக்கு நூல் இரண்டு நீண்ட மடல்களைக் கொண்டிருக்கிறது. இதில் 'எரேமியாவின் மடல்' என வழங்கப்படும் இரண்டாம் மடலை நாம் பார்ப்போம்.

72 வசனங்கள் கொண்டிருக்கும் இந்த மடல் யூதாவின் மக்களுக்கு எரேமியா எழுதுவது. பாபிலோனிய மன்னனால் நாடுகடத்தப்படுத்துவதற்கு முன்பே, நாடுகடத்திப்படும் செல்லும் நாட்டில் அவர்கள் சந்திக்கவிருக்கும் சிலைகள் குறித்து எச்சரிக்கை செய்கின்றார்.

மடல் முழுவதும் அடிமைத்தனத்தின் வேறு எந்தக்கூறு பற்றியும் இல்லை.

யூதாவின் மக்கள் தங்கள் கடவுளான யாவே இறைவனை விடுத்து வேறு ஒரு இறைவனை மனதாலும் நினைத்துவிடக்கூடாது என மெனக்கெடுகின்றார் எரேமியா.

கண்ணீரும், செந்நீரும் நிறைந்திருக்கும் அடிமைத்தனத்தின் நேரத்தில் உடல்நலம் பற்றியோ, உள்ள நலம் பற்றியோ, அங்குள்ள மக்கள் பற்றியோ அவர்களுக்கு அறிவுறுத்தாமல் இறைவனைப் பற்றி எழுதக் காரணம் என்ன? நம் வாழ்வில் இழப்பு நேரங்களில் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாம் இறைநம்பிக்கை அழிந்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் புதியவைகள் கண்களுக்கு கவர்ச்சியாய் இருக்கக் கூடியவை. 'இந்தக் கடவுளைவிட அந்தக் கடவுள் நல்லா இருக்கிறாரே!' என்று அடுத்த கடவுளின்பின் செல்லும் வாய்ப்பு அதிகம். ஆகவேதான், எந்த நிலையிலும் தங்கள் இறைவனை விட்டுவிடக்கூடாது என்கிறார் எரேமியா.

எரேமியாவின் மடலில் வரும் கடவுளர்களின் வர்ணனை நம்ம ஊரில் நாம் பார்க்கும் கருப்பசாமி, அம்மன் கோவில்களை நினைவூட்டுகின்றன:

'அவற்றுக்கு முன்னும் பின்னும் மக்கள் திரளாகச் சென்று...'

'தங்கள் வலக்கையில் கத்தியும் கோடரியும் வைத்துள்ளன...'

'அர்ச்சகர்கள் கோவில் கதவுகளைத் தாழிட்டுப் பாதுகாக்கிறார்கள்...'

'கோவிலில் எழும் புகையினால் அவற்றின் முகங்கள் கறுத்துவிடுகின்றன. அவற்றின் உடல்மீதும் தலைமீதும் வெளவால்களும் குருவிகளும் மற்ற பறவைகளும் உட்காருகின்றன...'

'காலில்லாத இத்தெய்வச் சிலைகளை மனிதர் தோளில் சுமந்து செல்கின்றனர்...'

மற்ற கடவுளர்கள் மனிதர்களின் கைவேலைப்பாடுகள் எனவும், அவர்களால் தங்களையே காத்துக்கொள்ள முடியாதபோது மற்றவர்களை எப்படி காத்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி கேட்கின்றார் எரேமியா.

ஆனால் எரேமியாவின் இந்த சொற்களை வைத்து அவர் முன்வைக்கும் யாவே இறைவனும்கூட பொய் என்று சொல்லிவிடலாம்.

உதாரணத்திற்கு, 'பாபிலோனிய கடவுளர்களின் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை, கடவுளர்கள் உண்பதில்லை. மாறாக அர்ச்சகர்களே உண்கின்றனர்' என்கிறார் எரேமியா. யாவே இறைவனுக்குப் படைக்கப்பட்டவற்றiயும் அவர் உண்பதில்லையே. அவரின் குருக்கள்தாமே உண்கின்றனர்.

கடவுளர்கள் எப்படி உருவாகிறார்கள்?

ஒரு சிற்பியின் கூடாரத்தில் நிறைய கற்கள் கிடக்கின்றன. சில கற்களை அவன் கடவுளர்களாக, சில கற்களை மண்டபச் சிலைகளாக, சில கற்களை வாசற்படிகளாக உருவாக்குகின்றான். வாசற்படியும் கல்தான். அம்மன் சிலையும் கல்தான். ஆனால் வாசற்படியின்மேல் ஏறி நிற்கும் நாம், அம்மன் சிலையைக் கண்டால் மட்டும் ஏன் விழுந்து கும்பிடுகின்றோம்?

ஒரு டெய்லரின் வீட்டில் நிறைய துணிகள் கிடக்கின்றன. சிலவற்றை அவன் ஆடைகளாகத் தைக்கிறான். சில துணிகளை அவன் கால்மிதியாகத் தைக்கிறான். மற்றும் சில துணிகளை தேசியக் கொடிகளாக தைக்கிறான். கால்மிதியின்மேல் ஏறி நிற்கும் நாம், தேசியக்கொடிக்கு மட்டும் ஏன் சல்யூட் அடிக்கின்றோம்?

சிம்பிளான கான்செப்ட்தான்.

ஒரு பொருள் ஒட்டு மொத்த சமூகம் ஒன்று கூடி உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுவிட்டால் அது அந்த உயர்ந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும்.

இன்றுமுதல் அது புதிய அர்த்தம் பெற்றுவிடுகிறது. நேற்று வரை சிற்பியின் கூடாரத்தில் கிடந்த அம்மன் சிலை என்னும் கல் இன்று காலை நடந்த பிரதிஷ்டை சடங்கினால் ஆலயத்தின் கருவறைக்குள் வைக்கப்பட்டுவிட்டால் அது கடவுளாகிவிடுகிறது. 'அது என் கல்,' 'அந்த அம்மன் நான் செய்தது' என சிற்பி அதன் அருகில் செல்ல முடியாது. சிலை கடவுளாகிவிட்டது.

ஆக, சிலைகள் கடவுளர்கள் ஆவது மனித சமூகத்தின் ஒட்டுமொத்த கற்பனையில்தான்.

இந்த கற்பனை அடுத்தடுத்த தலைமுறைக்கு அப்படியே உட்புகுத்தப்படுகிறது. இந்தக் கற்பனை அழிந்துவிட்டால் கடவுளும் அழிந்துவிடுவார்.

நாம் அனைவரும் பங்கெடுக்கும் இந்த கற்பனை ஒரு மாய வலை. இந்த வலையிலிருந்து நாம் தப்ப முடியாது. ஒரு கடவுள் இல்லையென்றால், நான் கண்டிப்பாக அடுத்த கடவுள் இருக்கிறார் என்ற வலைக்குள் விழுந்துதான் ஆகவேண்டும்.

தேடல் தொடரும்.

2 comments:

  1. Dear Father,Congrats!

    Very meaningful reflection.Keep writing excellently.May God bless you.

    ReplyDelete
  2. " யார் பெரியவர்? உன் கடவுளா இல்லை என் கடவுளா?"..... பட்டிமன்றம் முடிவதாயில்லை.அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது.அது இன்றையப் பதிவிலும் நிழலாடுவது தெரிகிறது.யூதாவின் மக்கள் தங்கள் கடவுளான யாவேயைத்தவிர வேறு தெய்வங்களை மனதாலும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக எரேமியா மெனக்கெடுவதாகச் சொல்கிறது இன்றையப்பதிவு.ஒரு தாயோ,தகப்பனோ தான் வணங்கும் தெய்வத்தைத் தன் குழந்தைகளும் வழிபடவேண்டும் என்று நினைப்பதில் தப்பில்லை.ஆனால் தன்னைத்தவிர மற்றவர் எல்லாம் வணங்குவது கல்லோ,மண்ணோ என்று நினைக்கும் நினைப்பில் தான் தவறு. எந்த ஒரு பொருளுமே அது இருக்கும் இடத்தைப் பொறுத்தே அது மதிப்பு அடைகிறது என்பதைத் தந்தை ஒரு சிற்பியின் கூடாரத்திலிருக்கும் கற்களையும்,ஒரு தையல்காரரின் கடையில் உள்ள துணிகளையும் வைத்தே அழகாக விளக்கம் தந்துள்ளார். ஏதோ ஒரு படத்தில் கேட்ட வசனம்....2000 ரூபாய் கொடுத்து வாங்கும் செருப்பைக் காலில் தான் அணிகிறோம்.ஆனால் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கும் குங்குமத்தை நெற்றியிலிடுகிறோம்.ஆக இந்த சிலை வழிபாடு என்பது இருக்கும் வரை இந்தப் பூசல்களும் இருந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் நம் உள்ளத்தில் உறையும் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்துப் பார்ப்பது ஆரம்ப காலத்தில் தான்.நாம் வளர,வளர 'அவர்' தூணிலும்,துரும்பிலும் கூட இருக்கிறார் என்ற நினைப்பும் நம்மோடு சேர்ந்து வளர்ந்தால் இந்த உருவ வழிபாடு பிரச்சனையை நீக்கி விடலாம்.ஆனால் யார்? எப்படி? ஆனால் உருவம் கொடுக்க முடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்பதையோ,ஒரு கடவுள் இல்லை என்றால் அடுத்த கடவுள் இருக்கிறார் என்ற வலைக்குள் விழுந்துதான் ஆக வேண்டும் எனும் கருத்தையோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள இயலாது. இறைவன் ஒரு 'பொருள்' அல்ல.....ஒரு ஆழமான, அசைக்கமுடியா நம்பிக்கையின் வெளிப்பாடு.தந்தையுடன் நேருக்கு நேர் மோத வேண்டும் போல் உள்ளது.அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். தந்தையின் முயற்சிக்கு நன்றியும்,பாராட்டும்! இந்த வாரம் அனைவருக்கும் இனிய வாரமாகட்டும்!!!

    ReplyDelete