Friday, March 4, 2016

எழில் மிக்கவர்

பெத்தூலியா முற்றுகையிடப்பட்டுவிட்டது.

மக்கள் தாகத்தால் வாடுவதைக் கவனித்த நகரத்தின் ஆளுநர்களும், 'இனி ஐந்து நாள் பார்ப்போம். ஆண்டவர் ஒன்றும் செய்யவில்லையென்றால், நாம் ஒலோபெரினிடம் சரணடைவோம்!' என ஆறுதல் சொல்கின்றனர்.

அ. ஆண்டவரின் செயலுக்கு கெடு அல்லது நிபந்தனை விதிப்பதா?

ஆ. ஆண்டவராகிய இறைவனை வணங்குவதை விடுத்து நெபுகத்னேசரை வணங்குவதா?

இந்த இரண்டும்தான் கதையின் பிரச்சினை.

இந்த பிரச்சினைகளை இஸ்ரயேல் மக்கள் எப்படி வெல்வார்கள்? என்று வாசகர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, யூதித்தை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர்.

1. தலைமுறை அட்டவணை (யூதி 8:1)

விவிலியத்தில் தலைமுறை அட்டவணைகள் - அதாவது, அவருக்கு இவர் பிறந்தார், இவருக்கு அவர் பிறந்தார் - ஆண்களுக்குதான் வழங்கப்படுகின்றன. ஆனால் இங்கே யூதித்துக்கு தரப்படுகிறது. மேலும், யூதித்தின் தலைமுறை மேலே இஸ்ரயேல் (யாக்கோபு) வரை நீள்கிறது. ஒருவரின் தலைமுறையை ஆசிரியர் சொல்வதன் மூலம், யூதித்தின் மேன்மையை முன்வைக்கின்றார். அதாவது, யூதித்து சாதாரணமானவர் அல்லர். எல்லாராலும் அறியப்பெற்றவர்.

2. யூதித்தின் சோகமும், வளமும் (8:2-8)

வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் தன் கணவனை இழக்கின்றார் யூதித்து. அதாவது, அவரது பொருளாதாரம் செழிப்பாயிருக்கின்ற வேளையில் அவரது கணவர் இறக்கின்றார். வாழ்வில் வளமும், வெறுமையும் சில நேரங்களில் கைகோர்த்துக்கொண்டே நுழைகின்றன.

தன் கைம்மைக் கோலத்தைக் கண்டு வருந்தாமால், அதை அப்படியே செப வாழ்வாக மாற்றிக்கொள்கிறார் யூதித்து.

யூதித்து பார்வைக்கு அழகானவர், எழில்மிக்கவர், நிறைய செல்வம் படைத்தவர். ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். யாருடைய பழிச்சொல்லுக்கும் ஆளாகாதவர்.

நம் வாழ்வில் சில நேரங்களில் நமக்குத் துன்பம் வரும்போது நாம் கடவுளோடு கோபப்படுவோம். 'என் கணவரே போய்விட்டார்! நான் எதற்கு கோவிலுக்கு வரணும்! நான் எதுக்கு கடவுளை நம்பணும்? நான் எதற்கு நற்செயல்கள் செய்யணும்?' என தன் செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளவில்லை யூதித்து. 'கடவுளின் செயல்களை யார்தாம் அறிவார்? கடவுள் என்ன செய்தாலும் நான் நல்லவளாக இருப்பேன்' என்று தனக்குத்தானே வாக்குறுதி கொடுத்துக்கொள்ளும் யூதித்து அதை கடைப்பிடிக்கவும் செய்கிறார்.

3. 'நீங்க அப்படி சொல்லியிருக்கக் கூடாது!' (8:9-35)

தன் பணிப்பெண்ணை அனுப்பி தன் நகரின் ஆளுநரையும், மூப்பர்களையும் தன் வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருக்கின்றார் யூதித்து.

அவர்கள் வந்ததும், வராததும், 'நீங்க மக்களிடம் அப்படி சொல்லியிருக்கக் கூடாது!' என அவர்களைக் கடிந்து கொள்ளத் தொடங்குகின்றார்.

யூதித்து தலைவர்களிடம் பேசிய அறிவுரைப் பகுதியில் பின்வரும் வசனங்கள் யூதித்தின் நம்பிக்கைiயும், துணிவையும் நமக்குச் சொல்கின்றன:

அ. 'மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காணமுடியாது. மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியது. அப்படியிருக்க, கடவுளை எவ்வாறு உங்களால் அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?' (8:13-14)

ஆ. 'நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள். ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோல கடவுளை அச்சுறுத்த முடியாது. மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல ஆண்டவரை மாற்ற முடியாது.' (8:16)

இந்த இரண்டு வசனங்களும் கடவுள் யார் என்ற புதிய புரிதலை நமக்குத் தருகின்றன. இன்று நாம் செபிக்கும் செபங்களும், கடவுளின் மனத்தை மாற்றும் நிபந்தனைகளாக இருத்தல் கூடாது என்பதையும் யூதித்து நமக்குக் கற்றுத் தருகின்றார்.

4. 'சகோதரர்களே,' 'உடன்பிறப்புக்களே' (8:14, 24)

இந்த இரண்டு வார்த்தைகளால்தாம் தலைவர்களை அழைக்கின்றார் யூதித்து. இது சகோதர பாசத்தை காட்டுவதுபோல, யூதித்து தன் இனத்தின்மேல் கொண்டிருந்த பற்றுணர்வையும் காட்டுகிறது.

5. 'நீ இறைவேண்டல் செய்!' (8:31)

'நீ இறைவேண்டல் செய்! அப்படி செய்தால் ஆண்டவர் மழைபெய்யச் செய்வார்!' என்கின்றனர் தலைவர்கள். இதில் ஒரு நக்கல் இருக்கிறது! அதாவது, இப்போது மக்கள் தாகத்தால் மடியக் காரணம் பஞ்சம் அல்லது தாகம் அல்ல. எதிரியின் அசு;சுறுத்தலே. அதுதான் முக்கிய பிரச்சினை. மழைபெய்தால் மக்களின் தாகம் தீரும். தாகம் தற்காலிகமாகத்தான் நீங்கப்பெறும். எதிரிகள் அழிய மாட்டார்கள். 'பெண்ணாகிய நீ என்ன செய்துவிட முடியும்? செபம்தான் செய்ய முடியும்! அதைச் செய்!' எனச் சொல்லாமல் சொல்கிறார்கள் யூதித்தைச் சந்திக்க வந்த பெரியோர்கள்.

ஆனால், யூதித்து மனம் தளரவில்லை. 'நான் செபிக்கும் ஆள் அல்ல. செயல்படும் ஆள். என்ன செய்யப்போகிறேன் என கேட்காதீர்கள்! நான் சொல்ல மாட்டேன்!' என்று அவர்களை அனுப்பிவைக்கின்றார்.

'நலமே சென்றுவா! ஆண்டவர் உன்னை வழிநடத்தட்டும்!' (8:35) என்று வாழ்த்தி வழிநடக்கின்றனர் பெரியோர்கள்.

2 comments:

  1. 'யூதித்து'.... அப்பட்டமாகத் தெரிகிறது இவரின் அழகு.புற அழகு மட்டுமின்றி அக அழகிலும் இவர் எவரையும் மிஞ்சி நின்றார் எனச் சொல்கின்றனத் தந்தையின் வரிகள்.ஒருவரின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவரிடம் உள்ள கம்பீரமும்,எதையும் மேற்கொள்ள வல்ல மனத்தைரியமும் தான் என்பது இன்றையப் பதிவின் வரிகள் அனைத்திலும் கோடிட்டுக் காட்டப்படுகிறது.நம்மிடம் 'செப வாழ்வு' என்ற ஒன்று இருக்குமேயானால் எத்தகைய இடர்களையும்,எந்த மனிதரையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ளலாம் என்பதற்கு யூதித்தின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.'கைம்பெண்' ஆனால் என்ன? 'என் கணவனை விடப் பெரியவர் என்னோடிருக்கிறார்' என்ற இறுமாப்பு அவளை ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழச்செய்கிறது.உண்மையும்,துணிவும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நிற்கையில் நாம் யாரையும் கேள்வி கேட்கலாம் எனும் பாடத்தை நமக்குக் கற்றுத்தெரிகிறார் இந்தத் துணிச்சல்காரி.' பெண் தானே இவள்! என்ன செய்துவிட முடியும்?' என நினைத்த ஆளுநர் வர்க்கத்துக்கு இவள் ஒரு சவுக்கடி. இறைவனைப் பற்றிக்கொண்டவர் அவரில் மட்டுமே நம்பிக்கை வைத்தால் போதும்; 'இவரா இல்லை அவரா' என்ற எந்த மாற்றுக்கருத்தும் தேவையில்லை என்பதையும்,நம் சக மனிதர்களின் மன ஆழத்தையே அறிந்து கொள்ள இயலாத நம்மால் இறைவனை...அவரது எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள முற்படுவது வீண் என்பது போன்ற கருத்துக்களையும் யூதித்தின் வாயிலிருந்து வரும் கருத்துக்களாக எடுத்து வைத்துள்ளார் தந்தை.ஆக மொத்தம் இன்றையத் தலைமுறைப் பெண்களுக்கு ஒரு 'ரோல் மாடல்' இந்த யூதித்து.இம்மாதிரி கதாபாத்திரங்களை அதிலும் பெண்ணினத்திற்குப் பெருமை சேர்ப்பவர்களை எம்மிடம் கொண்டு சேர்க்கும் தந்தையின் பெரு முயற்சிக்கு நன்றிகள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,You have explained well "எழில் மிக்கவர்".
    'நான் செபிக்கும் ஆள் அல்ல. செயல்படும் ஆள். என்ன செய்யப்போகிறேன் என கேட்காதீர்கள்! நான் சொல்ல மாட்டேன்!' என்று அவர்களை அனுப்பிவைக்கின்றார்.

    Congrats.

    ReplyDelete