Friday, March 11, 2016

சகோதரர் எழுவர்

இரண்டாம் மக்கபேயர் நூலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து முதல் மற்றும் இரண்டாம் மக்கபேயர் நூல்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்வோம்.

'மக்கபே' என்றால் கத்தி அல்லது சம்மட்டி என்பது பொருள். செலூக்கியர்களின் ஆட்சியில் நடந்த கொடுமையை எதிர்க்க யூதா என்பவரின் கீழ் ஒன்றுசேர்ந்தவர்களே 'மக்கபேயர்கள்.' முதல் மற்றும் இரண்டாம் மக்கபேயர் நூல்கள் ஒன்று மற்றதன் தொடர்ச்சி அன்று. இரண்டும் வேறு வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்கின்றன.

நாம் இன்று சிந்திக்கும் நிகழ்வு 2 மக்கபேயர் பிரிவு 7.

அந்தியோக்கு எபிபானு - இவரை அந்தியோக்கு எபிமானு என்றும் அழைப்பர், 'எபிமானு' என்றால் 'மூளை குழம்பியவன்' என்று அர்த்தம் - என்ற செலூக்கிய அரசன் யூதர்களை சிறைப்பிடித்து பல்வேறு துன்பங்களை அவர்களுக்குக் கொடுக்கிறான். யூதர்கள் தங்களையே தூய இனம் என்று கருதியதும், தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று நினைத்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. யூதர்களின் அறுவறுப்பாக இருந்த பன்றிக்கறியை தின்னுமாறு அவன் ஒரு குடும்பத்தாரை வறுத்தெடுக்கும் நிகழ்வையே இந்த இறைவாக்குப் பகுதி நமக்குச் சொல்கின்றது.

ஒரு அம்மா. அவருக்கு ஏழு மகன்கள். அப்பா என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த தாயும், அவரது மகன்களும் அரசன்முன் அழைத்துவரப்படுகின்றனர். ஒருவர் பின் ஒருவராக மறுக்க ஏழு மகன்களையும் அந்தத் தாயின் முன் பல்வேறு சித்திரவதைகள் செய்து கொல்கிறான் மன்னன். இறுதியில் தாயும் கொல்லப்படுகிறார்.

ஒருவனின் நாக்கு வெட்டப்படுகிறது. மற்றவன் கொதிக்கின்ற எண்ணெயில் போடப்படுகிறான். இன்னொருவன் உயிரோடு தோலுரிக்கப்படுகிறான். மற்றவனின் உடல் கண்டம்துண்டமாக வெட்டப்படுகிறது.

இதை வாசிக்கும்போது விவிலியத்தில் இவ்வளவு வன்முறை இருக்கின்றதா என்று நமக்கு நெருடலாக இருக்கின்றது.

இந்த நிகழ்வும், இந்த நூலும் நமக்குச் சொல்லும் முக்கியான இறையியல் சிந்தனைகள் எவை?

1. தாய். இந்நிகழ்வில் வரும் தாய் வீரம் மிக்கவள். எந்த நிலையும் தன் உறுதிப்பாட்டை இழக்காத திடம் கொண்டவள். தன் மகன்களை இழப்பது தனக்கு வருத்தம் தந்தாலும், மறுவாழ்வில் அவர்கள் மீண்டும் தமக்குரியவராவார்கள் என்ற நம்பிக்கையிலும், எதிர்நோக்கிலும் அவர்களை உற்சாகப்படுத்துகின்றார். இந்த வீரத்தாய் இரண்டாம் ஏற்பாட்டின் அன்னை மரியாளை முன்குறித்து நிற்கிறாள். மரியாளும் தன் மகனின் இறப்பின்போது உடனிருந்து அவரை உற்சாகப்படுத்தியவர்தானே.

2. திருச்சட்டம். தாயும் அவரின் ஏழு மகன்களும் மோசேயின் திருச்சட்டத்தை அறிந்தவர்களாக இருக்கின்றனர். தங்களுக்கு போதிக்கப்பட்டதை அப்படியே நம்புகின்றனர். தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை சரியே என்ற மனவுறுதியோடு இருக்கின்றனர். 'திருச்சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடப்போருக்கு கடவுள் கைம்மாறு அளிப்பார்' என்பதே இந்நிகழ்வின் மையக்கருத்து.

3. மறுவாழ்வு. தாங்கள் இவ்வுலகில் இறந்தாலும், மறுவுலகில் பிறப்போம் என்பதை மகன்களின் சொற்கள் வெளிப்படுத்துகின்றன. மறுவாழ்வு பற்றிய நம்பிக்கை பிறந்தது மக்கபேயரின் காலத்தில்தான்.

4. மறைசாட்சி இறப்பின் சிறப்பு. அதாவது, தங்களின் உயிரைவிட உயர்ந்த ஒன்றிக்காக அந்த உயிரையே இழக்கலாம் என்ற கருதுகோள் உருவாவதும் இந்நூலின் காலத்தில்தான்.

5. இறந்தவருக்காக மன்றாடல். இந்த நிகழ்வில் இச்சிந்தனை இல்லையென்றாலும், 12:39-46 ஆகிய வசனங்களில் நாம் இதைப் பார்க்கின்றோம். இறந்தவர்களை நோக்கி நாம் மன்றாடலாம், இறந்தவர்களுக்காக மன்றாடலாம் என்ற இரண்டு பரிமாணங்கள் இங்கே ஒளிந்திருக்கின்றன.

இன்று கடவுளின் பெயரால் நடத்தப்படும் வன்முறை, இனவழிப்பு சரியா? என்றால் நம் பதில், 'இல்லை' என்றே இருக்கும்.

நாம் கடவுளுக்காக இறக்கிறோம் என இறந்து, இறந்தபின், 'கடவுள் இல்லை' என்று தெரிந்தால், மீண்டும் நம்மால் பிறக்கவா முடியும்?

ஒட்டுமொத்த மனித வரலாற்றில் பசி, பஞ்சம், நோய், விபத்து, இயற்கைச் சீற்றம் என அழிந்தவர்களை விட, 'உன் கடவுள் பெரியவரா? என் கடவுள் பெரியவரா?' என்ற சண்டையால் இறந்தவர்களே அதிகம்.

கடவுளைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு,
நாம் ஒருவர் மற்றவரைக் காப்பாற்ற முயற்சி எடுத்தால் போதும்.

இந்த வாழ்வை நன்றாக வாழ்ந்தால் போதாதா?

இறப்பிற்குப் பின்னும் வாழ வேண்டுமா?

'நான் வாழ வேண்டும், நான் மட்டுமே வாழவேண்டும்!' என்ற சுயநலத்தில்
மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட மாயையே (illusion)
'இறப்பிற்குப் பின் வாழ்வு!'



2 comments:

  1. " மக்கபேயர்" இந்த நூலின் பெயரையும்,மறையுரைகளில் கேட்ட சில விஷயங்களையும் தவிர இவர்களைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் அறியவாய்ப்பில்லை. யூதர்கள் தங்களைத் தூய இனம் எனவும்,தங்கள் கடவுள் தான் உயர்ந்தவர் எனவும் நினைத்ததற்குத் தண்டனையாக ஒரு அபலைத்தாயையும்,அவளது ஏழு மகன்களையும் கொடூரமான முறையில் கொன்று குவிக்கிறான் மன்னன்.அன்னை மரியாளோடு ஒப்பிடப்படும் இந்த வீரத்தாய் மறுவாழ்வில் அவர்கள் மீண்டும் தமக்குரியவர்கள் ஆவார்கள் என்ற நம்பிக்கையிலும்,எதிர்பார்ப்பிலும் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.இந்த அன்னையின் எதிர்பார்பப்பு சரியா? மறுவாழ்வு என்ற ஒன்றுள்ளதா எனும் சந்தேகம் பலருக்கு எழுவது இன்றையச் சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்." மறு வாழ்வு" என்ற ஒன்றைப்பற்றிக் கருத்து சொல்ல எந்தத் தகுதியும் எனக்கில்லை என்று எனக்குத்தெரியும்.ஆனால் நான் மட்டுமல்ல...என்னைப்போன்ற நிறையப்பேர் " திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போருக்குக் கடவுள் கைமாறு தருவார்" என்று நம்பிய அந்த ஏழு சகோதரர்களின் வழி வந்தவர்கள்.நாமே நமக்காக வரையறுத்துக் கொள்ள வேண்டிய சிலநெறிமுறைகள் நம் வாழ்க்கையை நாம் சீராக வாழ உதவும் என்ற கோணத்தில் பார்த்தால் ஒரு தாய் உண்ண மறுக்கும் தன் குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறூட்டுவது போல, நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் " நீ கேட்டதை வாங்கித் தருவேன் " என மகனுக்கு ஊக்கமூட்டும் ஒரு தந்தையைப்போல,அடங்க மறுக்கும் மாணாக்கனைத் தண்டனை எனும் பெயரால்
    பயமுறுத்தும் ஒரு ஆசிரியரைப்போல மதங்களும் சில விஷயங்களைச்சொல்லி நம்மை சரி கட்ட முயல்கின்றன.இதில் சில மதவாதிகள் "வன்முறை,இனவழிப்பு" என்ற நிலைக்குச் செல்கிறார்களெனில் அதற்குக் காரணம் கடவுளோ,மதமோ அல்ல,அந்தக்கடவுளையும்,மதங்களையும் மனிதரிடம் நன்முறையில் கொண்டு சேர்க்காத மத்த்தலைவர்கள்தாம் காரணம்.இன்று ஒரு அருட்தந்தையிடமிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு துணுக்கு வந்தது.அது ஒரு இறைபக்தனுக்கும், இறைவனுக்குமிடையே நிகழும் உரையாடல். அதில பக்தன் இறைவனைப்பார்த்து " என்னுடைய பல கேள்விகளுக்கு நீர் பதில் தருவதில்லையே!" என்கிறார். அதற்கு இறைவன் " நீ விளக்கங்களைச் சார்ந்தல்ல; விசுவாசத்தைச் சார்ந்து வாழ்வதற்காக" என்று பதில் அளிக்கிறார்.ஆம் இப்படிப்பட்ட விசுவாசத்திற்கு சிலர் தரும் பெயர் " குருட்டு விசுவாசம்." இருக்கட்டுமே! குழப்பமான விசுவாசத்தைவிட குருட்டு விசுவாசம் மேலானது என்றே நினைக்கிறேன்.குட்டையைக் குழப்பி அதில் மீன் பிடிக்க வைப்பதில் தந்தை என்றுமே வல்லவர்.இப்படியா இல்லை அப்படியா என நம்மைக் குழம்ப வைத்து உண்மையை நம்மை நாமே கண்டு பிடிக்கத் தூண்டுகோலாயிருக்கும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!


    ReplyDelete