Wednesday, March 30, 2016

ஓ கிறிஸ்துவின் சிலுவையே


திருச்சிலுவையை நோக்கி நம் திருத்தந்தையின் மன்றாட்டு

25 மார்ச் 2016, புனித வெள்ளி, கொலோசியம், உரோமை

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இறையன்பின் மனித அநீதியின் சின்னமே, அன்பிற்கான மேன்மையான பலியின், மடமையாய் மாறிய அளவுகடந்த தன்னலத்தின் சித்திரமே, இறப்பின் கருவியே, வாழ்வின் வழியே, கீழ்ப்படிதல் மற்றும் துரோகத்தின் அடையாளமே, துன்புறுத்துதலின் தூக்குமேடையே, வெற்றியின் கொடியே!

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, எழுந்து நிற்கும் உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - கோழைத்தனமான (எங்கள்) மௌனத்தின் நடுவில் கொல்லப்படும், உயிரோடு எரிக்கப்படும், காட்டுமிராண்டித்தனமான கத்திகளால் தொண்டை அறுக்கப்படும், கழுத்து வெட்டப்படும் எங்கள் சகோதரிகள், சகோதரர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - போர் மற்றும் வன்முறைக்குப் பயந்து, இறப்பை மட்டுமே இனி தங்கள் கதி எனக் கொண்டு, பல பிலாத்துக்கள் தங்கள் கைகளைக் கழுவி ஒதுங்கிக் கொள்ள, சோர்வுற்று, பயந்து நிற்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாந்தர்களின் முகங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்கள் மூளையை ஆவியால் நிரப்பாமல், அறிவால் நிரப்பிக் கொண்டு, வாழ்வின் ஆசிரியர்களாய் இல்லாமல், இறப்பின் ஆசிரியர்களாய் இருந்து கொண்டு, இரக்கத்தையும் வாழ்வையும் போதிக்காமல், தண்டனை மற்றும் இறப்பால் நேர்மையாளர்களைத் தீர்ப்பிடும் அறிவார்ந்தவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் வீணான தன்னார்வங்களைக் களையாமல், அப்பாவி மற்றும் மாசற்றவர்களின் மாண்பைக் களையும், பிரமாணிக்கமற்ற அருட்பணியாளர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் பாவங்களையும், தவறுகளையும் பற்றிய அக்கறையின்றி, அடுத்தவர்கள்மேல் கல்லெறியவும் துணிந்தவர்களாய் கடினமான உள்ளம் கொண்டு, மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - சில மதங்களைப் பின்பற்றுபவர்கள், இறைவனின் தூய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, கடவுளின் புனிதப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வன்முறையை நியாயப்படுத்தி, நிகழ்த்தும் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயல்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - நீர்தாமே எங்களுக்குக் கற்றுக் கொடுத்த சமத்துவத்தையும், மதச்சார்பற்ற தன்மை என்ற வேற்று மதத்தையும் முன்வைத்து, பொதுவிடங்களில் உன்னை அப்புறப்படுத்தவும், பொதுவாழ்விலிருந்து உன்னை அகற்றவும் ஆர்வம் காட்டுபவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - போர் என்ற அடுப்பை அப்பாவிகளான தங்கள் சகோதரர்களின் இரத்தத்தால் எரித்து, தங்கள் பிள்ளைகள் உண்பதற்கு ரொட்டியை இரத்தத்தில் தோய்த்துக் கொடுக்கும் வல்லரசுகள் மற்றும் ஆயுதவிபாரிகளில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - முப்பது வெள்ளிக்காசுகளுக்காக யாரையும் காட்டிக் கொடுக்கும், விலைபேசும், இறப்பிற்கு கையளிக்கும் துரோகிகளில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - பொதுநலத்தையும், அறநெறியையும் காப்பாளர்களாக இருக்கத் தவறி, ஒழுக்கக்கேடு என்னும் சந்தையில் தங்களையே மிகக் கீழான விலைக்கு விற்கும், பெருந்திருடர்கள் மற்றும் ஊழல் செய்வோரில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - அழியக் கூடிய செல்வங்களுக்கு சேமிப்பு அறைகள் கட்டி, தங்கள் இல்லங்களின் வாசல்களில் லாசரை பசியால் வாடி இறப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மூடர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் தன்னலத்தால் அடுத்த தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்க, எங்களின் 'பொது இல்லத்தை' அழிப்பவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - எங்களின் தன்மையமான வெளிவேட சமூகத்தில், தங்களின் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட வயதானவர்கள், உடல்திறன் அற்றவர்கள், மற்றும் ஊட்டம் பெறாத குழந்தைகளில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - எங்களின் சுரணையற்ற மற்றும் போதையிலிருக்கும் மனச்சான்றின் காணொளியாய், எத்தனை உடல்களைக் தின்றாலும் பசி அடங்காத பிணக்குழிகளாய் இருக்கும் மத்தியதரை மற்றும் ஏஜியன் கடல்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, முடிவற்ற அன்பின் வடிவமே, உயிர்ப்பின் வழியே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - மற்றவர்களின் கைதட்டல்களையும், பாராட்டுக்களையும் தேடாமல் நல்லதை செய்யும் நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களையே மற்றவர்களுக்காக தாரை வார்த்து அழிக்கும் மெழுகுதிரிகளாய், கடையவர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும், எங்கள் வாழ்வின் இருளகற்றும், பிரமாணிக்கமான, தாழ்ச்சி உள்ளம் கொண்ட அருள்பணியாளர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - நற்செய்திக்கான அமைதியில், ஏழ்மை மற்றும் அநீதியின் காயங்களைக் கட்டுவதற்காக, எல்லாவற்றையும் துறந்து நிற்கும் நல்ல சமாரியர்கள், தங்களையே உமக்கு அர்ப்பணம் செய்த அருள்சகோதரிகள் மற்றும் துறவியரின் முகங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - நீதி மற்றும் நம்பிக்கையின் இலக்கணத்தை இரக்கத்தில் காணும் இரக்கமுடையோரில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் நம்பிக்கையை அன்றாட வாழ்க்கை எதார்த்தங்களில் மகிழ்வாக வாழ்ந்து, பிள்ளைக்குரிய கீழ்ப்படிதலுடன் கட்டளைகளைப் பின்பற்றும் எளிய மனிதர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் பாவத்தின் வலியின் ஆழத்திலிருந்து, 'ஆண்டவரே, உன் அரசில் என்னை நினைவுகூறும்' என்று கதறவதற்குக் கற்றிருக்கும், குற்றமுணர்ந்த உள்ளங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - உன் மௌனத்தின் பொருளைப் புரிந்து கொண்டவர்கள் போல நடிக்காமல், தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல், நம்பிக்கை என்னும் இரவின் இருளைக் கடந்த பேறுபெற்றவர்கள் மற்றும் புனிதர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் பிரமாணிக்கத்தால் அணி செய்து, திருமணம் என்னும் அழைப்பால் கனி தரும் குடும்பங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தேவையில் மற்றும் கீழ்நிலையில் இருப்பவர்களை நோக்கி தாராளமாக ஓடிச் செல்லும் தன்னார்வத் தொண்டர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் துன்பங்கள் வழியாக இயேசுவுக்கும் அவரின் நற்செய்திக்கும் நேரிய சான்று பகர, (அவர்மேல் கொண்ட) நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்படுவோரில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் கனவுகள் கண்டு, இவ்வுலகை இன்னும் இனிமையாக, மனிதத்தன்மை கொண்டதாக, நீதியுடையதாக மாற்ற முயற்சிகள் எடுக்கும் இனியவர்களில்.

புனிதமான சிலுவையே, உன்னில் நாங்கள் பார்க்கிறோம் - இறுதி வரை அன்பு செய்யும் கடவுளையும், ஒளிக்குப் பதிலாக இருளை விரும்புவோரின் இதயங்கள் மற்றும் மனங்களின் பார்வை இழக்கச் செய்து மேலோங்கி நிற்கும் பகைமையையும்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, மனிதத்தை பாவ வெள்ளத்திலிருந்து மீட்ட நோவா பெட்டகமே, தீமை மற்றும் தீயவனிடமிருந்து எங்களை மீட்டருள்வாய்! ஓ தாவீதின் அரியணையே, இறைவனின் முடிவற்ற உடன்படிக்கையின் முத்திரையே, வீண்மையின் மயக்கங்களிலிருந்து எங்களைத் தட்டி எழுப்புவாய்! ஓ அன்பின் ஓலமே, இறைவன், நன்மை மற்றும் ஒளி மீதுள்ள ஆசையால் எங்களை நிரப்புவாய்!


ஓ கிறிஸ்துவின் சிலுவையே, பகலவனின் வருகை படர்ந்திருக்கும் இரவைவிட வலிமையானது என எங்களுக்குக் கற்றுத்தருவாய்! ஓ கிறிஸ்துவின் சிலுவையே, மாயைபோல் தெரியும் தீமையின் வெற்றி, வெற்றுக் கல்லறை, உயிர்ப்பின் உறுதி மற்றும் எவற்றாலும் தோற்கடிக்க, மங்கலாக்க, வலுவிழக்க முடியாத இறைவனின் அன்பிற்கு முன் தகர்ந்து போம் என்றும் கற்றுத்தருவாய்! ஆமென்.

1 comment:

  1. பெருமைப்படுவதற்கும்,போற்றுவதற்கும் உரியதொரு பதிவு.அவமானத்தின் சின்னமாய் விளங்கிய சிலுவையைத் தன் அமரத்துவத்தினால் வெற்றியின் சின்னமாய் புனிதப்படுத்தியவர் இயேசு. புனித வெள்ளியன்று " திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது; உலகத்தின் இரட்சணியம்" எனக் குருவானவர் திருச்சிலுவையைக்கையிலேந்தி குரலுயர்த்திப் பாடுகையில் சிலிர்க்காத உடம்பும்,உள்ளமும் இருக்க முடியாது.அப்பேற்பட்ட " சிலுவையின் வடிவை எப்பேர்ப்பட்ட மனிதர்களில்,நிகழ்வுகளில் காணமுடிகிறது என்பதை நேர்மறையாகவும்,எதிர்மறையாகவும் எடுத்து வைத்துள்ளார் தந்தை. இதில் எல்லாமே இரசிக்கும்படி இருப்பினும் என் மனத்தைத் தொட்ட இரு பாராக்கள்..." "தங்களின் நம்பிக்கையை அன்றாட எதார்த்தங்களில் மகிழ்வாக வாழ்ந்து பிள்ளைக்குரிய கீழ்ப்படிதலுடன் கட்டளைகளைப் பின்பற்றும் எளிய மனிதர்களில்" மற்றும் " தங்கள் பாவத்தின் வலியின் ஆழத்திலிருந்து ' ஆண்டவரே உன் அரசில் என்னை நினைவு கூறும்' என்று கதறுவதற்குக் கற்றிருக்கும் குற்றமுணர்ந்த உள்ளங்களில்".... இவைகளை வாழ்வாக்கினாலே போதும்...." 'சிலுவை' க்கு சீடர்களாகி விடுவோம் என சொல்லத் துடிக்கிறது மனது.முயன்றுதான் பார்ப்போமே! தந்தையின் பெரும் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள்!!! கண்டிப்பாக இத்தகையொரு பதிவைப் படைத்த தங்களை திருச்சிலுவை இறுதிவரை அணைத்துக்கொள்ளும்......

    ReplyDelete