Monday, March 14, 2016

சோளக்காட்டு பொம்மை

பாரூக்கு நூலில் வரும் எரேமியாவின் மடல் (6:1-72) கொண்டிருக்கும் சில கலர்ஃபுல்லான பகுதிகளை இன்று காண்போம்.

1. 'பெண்கள் தங்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, சாலையோரங்களில் அமர்ந்து, சாம்பிராணிக்கு மாறாக உமியை எரித்துக்கொண்டிருப்பார்கள். வழிப்போக்கர் ஒருவர் அவர்களுள் ஒருத்தியை அழைத்துக்கொண்டுபோய் அவளைப் புணர்ந்தால் அவள் தன் அருகே இருப்பவளை ஏளனம் செய்கிறாள். இவள் தன்னைப் போல் அழகு உள்ளவளாக மதிக்கப்படவில்லை என்றும், இவளது இடுப்பில் கட்டப்பட்ட கயிறு இன்னும் அறுபடவில்லை என்றும் எள்ளி நகையாடுகிறாள்.' (6:42-43)

பாபிலோனிய நாட்டில் விளங்கிய ஒரு வகை தேவதாசி முறையை (cult or temple prostitution) இந்த வசனங்கள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. பண்டைக்கால சமயங்களில், 'ஆலய விலைமகள்' என்பது 'ஆலய குரு'வைப் போல முக்கியமான வேலை. பாலியல் என்பது ஆன்மீகமாக பார்க்கப்பட்டது. இந்த விலைமகள்களோடு உறவு கொள்வதன் வழியாக கடவுளைத் திருப்திப்படுத்த முடியும் எனவும் நம்பினர் அக்காலத்து மக்கள். 'ஆலய விலைமகன்கள்' இருந்ததற்கான குறிப்பும் அக்காடிய சமய இலக்கியங்களில் இருக்கின்றன.

'இடுப்பில் கயிறு' - இது ஓர் அடையாளம். அதாவது ஒரு பெண் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டவுடன் அந்தக் கயிறு அறுக்கப்பட்டுவிடும்.

'சாம்பிராணிக்கு மாறாக உமியை எரிப்பார்கள்' - தான் ஒரு விலைமகள் என்பதை உணர்த்துவதற்கான சங்கேத மொழியாக இது இருக்கலாம்.

உறவு கொண்டுவிட்டு திரும்பும் ஒருத்தி, மற்றவளைப் பார்த்து, 'நீ அந்த விஷயத்துக்கு தகுதியவற்றவள்' அல்லது 'நான் உன்னைவிட அழகுவாய்ந்தவள்' என்று எண்ணிக்கொள்வாளாம்!

எரேமியா இதன் வழியாக சொல்ல வருவது என்ன? அதாவது, தாங்கள் வெட்கத்துக்குரிய செயலைச் செய்கிறோம் என்றாலும், அந்த வெட்கத்திலும் பெருமை கொள்கிறார்களாம் பாபிலோனியர்கள்.

2. 'மரத்தால் செய்யப்பட்டு, பொன், வெள்ளியால் வேயப்பட்ட சிலைகளால் கள்வரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் தங்களையே காத்துக் கொள்ள இயலாது. அவற்றின் பொன்னையும் வெள்ளியையும் அவை அணிந்திருக்கும் உடைகளையும் வலியோர் கவர்ந்து செல்லும்போது அவற்றால் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாது!' (6:57)

இந்தக் கருத்து பாபிலோனிய தெய்வங்களுக்கு மட்டுமல்ல, நம் தெய்வங்களுக்கும், புனிதர்களுக்கும் கூட பொருந்தும். நான் மதுரை ஞானஒளிவுபுரம் ஆயத்த பாசறையில் பயின்றுகொண்டிருந்த போது, அங்கிருந்த ஆலயத்தின் நற்கருணைப் பேழை உடைக்கப்பட்டு நற்கருணை வெளியே கொட்டப்பட்டிருந்தது. (இம்மாதிரி நிகழ்வு இங்கே இரண்டு, மூன்று முறை நடந்திருக்கின்றது.) காவலர்கள் ஒருபுறம் கைரேகைகளைத் தேடிக்கொண்டிருந்தனர். அந்நேரம் இருந்த பேராயர் அங்கு வந்து 'பரிகாரத் திருப்பலி' நடத்தினார். 'நற்கருணையில் இருக்கும் இயேசு ஏன் அவரையே காப்பாற்றிக்கொள்ளவில்லை?' என்று நான் என் குருமட அதிபரிடம் கேட்டுவிட, நான் அதன்பின் கொஞ்ச நாட்கள் 'நாத்திகனாகவே' பார்க்கப்பட்டேன். நாம் தெருக்களில் வைத்திருக்கும் நம் புனிதர்களின் சுரூபங்கள் உடைக்கப்படும்போது, மாதா சுரூபத்தின் கிரீடம், அணிகலன் திருடப்படும்போதும் நம்மிடம் எழும் கேள்வியும் இதுதான். (இவை வெறும் அடையாளமே தவிர அவை உண்மையான மாதாவோ, அந்தோணியாரோ அல்ல எனலாம் நாம்! அவைகள் வெறும் அடையாளம் என்றால் அவைகள் தாக்கப்படும்போது நம் கவலைப்படவும் தேவையில்லையே!)

மனிதர்கள்முன் கடவுளர்கள் சில நேரங்களில் வலுவிழந்துதான் போய்விடுகிறார்கள்.

நான் சுரூபங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என நினைக்க வேண்டாம். என் மேசையிலும் சுரூபங்கள் இருக்கின்றன.

(சில கோயில்களில் பல வருடங்களாக உள்ள சுரூபங்கள், அற்புதமான சுரூபங்கள், தீயிலிருந்து தப்பிய சுரூபங்கள், மாதாவும், இயேசுவும் தாங்களே தலையைச் சாய்த்து தங்கள் கிரீடத்தை தேவையிலிருப்பவர்களுக்கு கொடுத்த சுரூபங்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கி நிறைய அற்புதங்கள் செய்த சுரூபங்கள் என்ற லிஸ்டும் இருக்கிறது! அதைப்பற்றியெல்லாம் நாம் பேசக்கூடாது.)

3. 'வெள்ளரித் தோட்டத்தில் வைக்கப்படும் பொம்மை காவல்புரிவதில்லை' (6:69)
சோளக்காட்டு பொம்மை பார்த்திருப்போம். அவைகள் யாருக்கு பயத்தைத் தருகின்றன? பறவைகளுக்கு. அதாவது, காற்றில் ஆடும் பொம்மை மனித உருவ அசைவைக் காட்டுவதுபோல இருக்க, அதைக் கண்டு பறவைகள் பயப்படுகின்றன. ஆக, பயம் என்ற ஒன்று இருக்கும்வரைதான் சோளக்காட்டு பொம்மையின் பயன் இருக்கிறது. பறவைகள் பயப்பட மறுத்துவிட்டால் பொம்மைகளால் பயன் இல்லை. மேலும் இந்த பொம்மைகளுக்கு மனிதர்கள் பயப்படுவதில்லை. அவைகளைக் கண்டு நாம் ஓடுவதில்லை. இந்த பொம்மைகள் எந்த வேலையையும் செய்வதில்லை.

இதை அப்படியே நம் கடவுளர்களுக்குப் பொருத்திப் பார்ப்போம். அவைகள் வெறும் பொம்மைகள். அவைகள் ஒரு வேலையும் செய்வதில்லை. அவைகளைப் பார்த்துப் பயப்படும் பறவைகள் நாம். அந்த பொம்மைகள் அசைவதை நாமாக கடவுள் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டு, அவைகளுக்குப் பயப்படுகிறோம். அவைகள் மனம் கோணாமல் நாம் நடந்து கொள்கிறோம். அவைகளைத் திருப்திப்படுத்துகிறோம். அவைகள் சந்தோஷமாக இருந்தால், நமக்கும் சந்தோஷம் கிடைக்கும் என்றும், அவைள் கோபப்பட்டால் நமக்கும் கஷ்டம் வரும் என்றும் நினைக்கிறோம்.

எரேமியாவின் மடல் பாபிலோனிய கடவுளர்களை மட்டம் தட்டினாலும், நம் கடவுளர்களையும், ஏன் கடவுளின் இருப்பையே மறு ஆய்வு செய்து பார்க்கவும் நம்மைத் தூண்டுகிறது.

கடவுள் இருக்கிறாரா? அல்லது இல்லையா?

'இல்லை என்று சொல்வதை விட, இருக்கிறார் என்றே சொல்வோம்.
ஏனெனில் நாம் இறந்து, அவர் இல்லை என்று தெரிந்தால் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை...
ஆனால், அவர் இருந்தாரென்றால் இழப்பு நமக்கு அதிகமாக இருக்கும்!'

இதை நான் சொல்லல...விஞ்ஞானி ப்ளெய்ஸ் பாஸ்கல் சொல்றார்.

நிறைவுற்றது பாரூக்கு.


2 comments:

  1. Dear Father,congratulations.

    Very inspirational.

    ReplyDelete
  2. இன்றையப்பதிவு?? சற்றுக் குழப்பமாகவும் ஏன் சிறிது கோபமாகவும் கூட இருந்தது.என்ன சொல்ல வருகிறார் தந்தை? விளங்கியும்,விளங்காத ஒரு நிலை.யாருக்கும் ஞானோபதேசம் சொல்லித்தரும் தகுதி எனக்கில்லை தான்.ஆனால் ஒன்று சொல்லலாமென நினைக்கிறேன்.சில சமயங்களில் நம் குடும்பங்களில் நாம் பார்த்திருப்போம்....சில அப்பாக்கள் தங்கள் மகனுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதை.அதில் பாதி நேரம்...ஏன் எப்பொழுதுமே அப்பாதான் தோற்றுப்போவார்.இந்தத் தோல்வி தந்தையின் 'இயலாமையினாலா' இல்லை அவர் தன் மகன் மேல் வைத்த 'பாசத்தினாலா?' பதில் நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.அப்படித்தான்.....கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் கேள்வியைத்தாண்டி " நாம் வெற்றி பெறுவதற்காக அவர் தோற்றுப்போகிறார்( அப்படி ஒரு தோற்றம் தருகிறார்); நாம் எழ வேண்டுமென்பதற்காக அவர் விழுகிறார்.பல நேரங்களில் நாம் குழந்தைகளாகவே இருக்கிறோம்.உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.சில சமயங்களில் முரண்பாடாகப் பேசிப் பேசியே அடுத்திருப்பவனுக்கு உண்மையைத் தெளிய வைப்பது சிலரின் சாமர்த்தியம்.தந்தையும் அதைத்தான் செய்கிறாரோ எனத்தோன்றுகிறது.இறைவன் நம்மையும்,நம் விசுவாசத்தையும் காப்பாராக! தந்தையின் சாமர்த்தியத்திற்குப்(??!!) பாராட்டுக்கள்!!!

    ReplyDelete