Saturday, March 5, 2016

யூதித்தின் பயணம்

யூதித்து நூல் 10ஆம் பிரிவு யூதித்தின் வீட்டிலிருந்து அவர் புறப்பட்டு, பயணம் செய்து, பெத்தூலியாவிற்கு அருகே கூடாரம் அமைத்திருந்த ஒலோபெரினை சந்திப்பது வரை நடந்த அனைத்தையும் வர்ணிக்கிறது.

1. பயணத் தயாரிப்பு

உடல், உணவு என இரண்டு வகை தயாரிப்புக்களில் மும்முரமாயிருக்கின்றார் யூதித்து. தன் கணவர் உயிரோடு இருந்ததுபோல அணிந்த உடைகள், அணிகலன்கள் அனைத்தையும் அணிகிறார். தன் கணவரை விட மேலான கடவுள் உயிரோடு இருக்கிறார் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் நேரமாக இது இருந்ததால், அதற்கான தயாரிப்பில் எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல் ஈடுபடுகின்றார்.

கணவனை இழந்த பெண்கள் வெள்ளை ஆடை அணிய வேண்டும், பொட்டு வைக்கக் கூடாது, தலைமுடியை சின்னதாக அல்லது மொத்தமாக வெட்டிவிட வேண்டும் என்று நம் மண்ணிலும் மரபு இருந்தது. இந்த மரபை மேலோட்டமாக நோக்கினால் பெண்ணுக்கு தீங்கிழைக்கும் ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், இதன் பின்புலத்தில் பெண்ணின் பாதுகாப்பே முக்கியமாக இருக்கிறது. அதாவது, ஆண் இல்லாத பெண்ணை நோக்கி மற்ற ஆண்கள் வரலாம் என்பதற்காக, பெண்ணின் கவர்ச்சியை குறைத்துக்காட்ட நம் முன்னோர் எடுத்த தற்காப்பு முயற்சிகளே இவை.

எபிரேய சமூகத்திலும் இந்த மரபுதான் இருந்திருக்கிறது.

தன் மக்களின் மீட்புக்காக மரபை மீறுகின்றார் யூதித்து. சிலம்பு, வளையல், மிதியடி, மோதிரம், காதணி என எல்லாவற்றையும் அணிந்துகொள்கின்றார்.

மேலும், தான் மூன்று நாட்கள் சென்று தங்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அந்நியர்களின் உணவை உண்டு தன்னைத் தீட்டுப்படுத்திவிடக்கூடாது என்று, தானே உணவும் கொண்டு செல்கின்றார் யூதித்து.

2. பணிப்பெண்

பணிப்பெண் யூதித்துடன் செல்வது எதற்காக? சாட்சிக்காக. 'இருவரின் சாட்சியம் மட்டுமே செல்லும்!' என்பது மோசேயின் சட்டம். மேலும், இருவர் செல்வதாக ஆசிரியர் குறிப்பிடக் காரணம், பகைவர்களால் ஏற்படும் தீங்கை எதிர்கொள்வதற்காகவும் இருக்கலாம். மேலும், யூதித்து பகைவரின் இல்லத்திற்குப் போனாலும், கறைபடாமல் திரும்பி வந்தாள் என்று சாட்சி சொல்வதற்குத்தான் பணிப்பெண் உடன் செல்கிறாள். பணிப்பெண் பயணத்திற்கு துணையாகவும், யூதித்தின் கற்புக்குச் சான்றாகவும் இருக்கிறாள்.

3. வழிவிடுங்க!

யூதித்தின் நகர வாயில்கள் திறந்துவிடப்படுகின்றன. அங்கே நின்றவர்கள் அவரை வாழ்த்தி வழியனுப்புகின்றனர். பகைவரின் வாயில்களையும் தன் வாய்ஜாலத்தால் திறக்க வைக்கின்றார் யூதித்து. மேலும் நகர வாயில்களில் நின்றவர்கள், 'ஆ' என வாய்பிளக்கின்றனர் யூதித்தின் அழகில்.

4. பொய்யா?

யூதித்து பகைவர்களின் வாயில் நுழைவதற்கு சொல்லும் காரணம்: '...நான் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டும்...அவருக்கு வழியைக் காட்டுவேன்...அவருடைய வீரர்கள் யாரும் உயிரிழக்க மாட்டார்கள்...'

இது யூதித்து சொன்ன பொய்யா? இல்லை.

ஒலோபெரினைப் பார்க்கத்தான் போகின்றார் யூதித்து. மேலும், ஒலோபெரினின் தலையைக் கொய்து தன் வீடு திரும்பும்போது, அவர் அவனுக்கு 'மலைப்பாதையின் வழியைக் காட்டுவார்.' 'அவனுடைய வீரர்கள் யாரும் உயிரிழக்க மாட்டார்கள்!' - ஏனெனில், பயந்துகொண்டு தப்பித்து ஓடி விடுவர். போரிட்டால்தானே உயிரிழக்க!

ஆக, பொய் சொல்வது போல தெரிந்தாலும் யூதித்து சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.

5. அழகில் மயங்குதல்

யூதித்தைக் கண்ட பாளையத்து ஆண்கள் அவரின் அழகில் மயங்குகின்றனர். பாளையத்து ஆண்களின் வாய்ச்சொல்லாக, யூதப் பெண்களின் அழகையும், யூத ஆண்களின் பெருமையையும் சொல்லி மகிழ்கின்றார் ஆசிரியர்.

விளக்குகள் அணிவகுக்க யூதித்தைக் காண வருகின்றான் ஒலோபெரின்.

தன் அழகை அவன் முழுமையாகக் கண்டுவிடக் கூடாது என்று அவன்முன் குப்புற விழுகின்றார் யூதித்து.


2 comments:

  1. யூதித்தின் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு பகுதி/ பதிவு.இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள கொலுசு அலங்கரிக்கும் அந்த ஒரு ஒரு காலை மட்டும் பார்த்தாலே அவளின் உறுதிமிக்க உடல்வாகும், யௌவனமும் நாம் யூகித்துக்கொள்ளக் கூடியதொன்றாக உள்ளது.( ஆனால் இது யூதித்தின் கால்தானா...தந்தை தான் பதில் சொல்ல வேண்டும்) தன் எதிரி ஒலோபெரினைக் காணச் செல்லும் இவர் அணியும் ஆடை, அணிகலன்களில் பகட்டை விடப் பாதுகாப்பு உணர்வே மேலோங்கி நிற்கிறது.தான் கைம்பெண்தான் என்றாலும் தன் கணவனைவிட மேலானவர் தன்னுடன் இருக்கிறார் எனும் உணர்வு தந்த மன தைரியத்தால் நன் முறையிலேயே தன்னை அலங்கரிக்கிறார்.நாளை யாரும் உண்மை நிகழ்வை மாற்றித் திரித்துவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் தன் பணிப்பெண்ணையும் கூடவே அழைத்துச்செல்கிறார்.ஒலோபெரினிடம் தான் செல்லும் நோக்கம் நடந்ததை எடுத்துச்சொல்ல வேண்டும் என்பதுவே அல்லாமல் வேறொன்றுமில்லை எனக் கூறுகிறார்.அவனைக்கண்ட பின்னும் கூட தன் அழகு அவனைத் தப்பிழைக்க வழிவிடக்கூடாதென்பதற்காக முகம் குப்புற விழுவதாக்க் குறிப்பிடுகிறார் தந்தை.இன்றையப் பதிவின் நிகழ்வுகள் அனைத்தும் வெகு இயல்பாக நடந்த விஷயங்கள் போல் தோன்றிடினும் தன் இறைவனை வழிகாட்டியாக,பாதுகாப்பாக,ஏன் எல்லாமாக ஏற்கும் ஒரு பெண்ணுக்கு அவர் ' 'கேடயமாக' நின்று கைகொடுக்கிறார் என்பதே நமக்குச் சொல்லப்படும் செய்தி.தெருவில் இறங்கி நடந்தாலே திரும்ப பத்திரமாக வீடு திரும்புவோமா? எனும் ஐயப்பாடு கூடவே நம்மில் எழும் காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ' யூதித்து' ஒரு வழிகாட்டியாக முன்னிறுத்தப்படுகிறார்.தந்தையின் அழகானதொரு பதிவிற்கு நன்றிகள்.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete