Thursday, March 24, 2016

வீடு திரும்புவோம்

நாளை பெரிய வெள்ளி.

நம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூறுகின்றோம்.

என் பங்கில் ரொம்ப ஆக்டிவ்வாக இருந்த, 90 வயது (ஓய்வுபெற்ற) பேராசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இன்று அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளைச் சந்தித்து ஆறுதல் சொல்ல அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

'மருத்துவமனைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவேயில்லை' என்று கண்ணீர் வடித்தார் அவரின் துணைவியார்.

கணவன்-மனைவி என இருவரும் இணைந்தே ஆலயத்திற்கு வருவார்கள். எங்கள் பங்கின் இளவல்களுக்கு ஆங்கிலம், இஸ்பானியம், கிரேக்கம் பயிற்றுவித்தார்கள். அவர் ஒரு பாடகர். நடிகர். கவிஞர். ஓவியர். எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர்.

'பிறரன்பு' என்றால் அவரின் பெயரைச் சொல்லிவிடலாம்.

'இறப்பு' என்பதன் புதிய அர்த்தம் இன்று நான் கண்டேன்.

ஆம். 'வீடு திரும்பாததுதான்' இறப்பு.

இறப்பு நம்மை நம் வீட்டுக்குத் திரும்ப அனுப்புவதில்லை.

இயேசு, யூதாசு, பேதுரு - இந்த மூன்று பேரையும் சிந்தனைக்கு எடுப்போம்.

கல்வாரிக்குச் செல்லும் இயேசு இனி வீடு திரும்ப மாட்டார். இனி அவரைத் தொழுகைக்கூடத்தில் பார்க்க முடியாது. அவரின் உதடுகளில் தொங்கிக் கொண்டிருந்து, அவரின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை அவர் காண முடியாது. கலிலேயக் கடலில் நடக்க முடியாது. பெத்தானியாவின் தன் நெஞ்சுக்கு நெருக்கமான மார்த்தா-மரியா-லாசர் வீட்டுக்குச் செல்ல முடியாது. இனி தன் அம்மாவையும், அப்பாவையும் காண முடியாது. தன் அன்புச் சீடர்களின் முகத்தைப் பார்க்க முடியாது.

இறப்பு எவ்வளவு கொடியது. அது எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.

இயேசுவுக்கும்!

யூதாசு - பேதுரு

இருவருமே இயேசுவோடு மூன்று வருடங்கள் இருந்தவர்கள். அவரின் இன்ப, துன்பங்களில் பங்கேற்றவர்கள்.

யூதாசு காட்டிக் கொடுக்கின்றார்.

பேதுரு மறுதலிக்கின்றார்.

'இவர்தான் இயேசு' என சொல்லக் கூடாத இடத்தில் சொல்லிவிட்டார் யூதாசு.

'இவர்தான் இயேசு' என சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத் தவறிவிட்டார் பேதுரு.

பேதுரு இன்றும் திருஅவையின் முதல் திருத்தூதராக இருக்கின்றார்.

ஆனால் யூதாசுக்கு இயேசுவின் உயிர்ப்பைப் பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

எதற்காக யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்? யோவான் நற்செய்தியாளர் யூதாசை, பண ஆசை பிடித்தவன், திருடன், சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவன் என சித்தரிக்கின்றார். மத்தேயுவும் வஞ்சப்புகழ்ச்சியில் 'நண்பா' என்கிறார். லூக்கா கொஞ்சம் கரிசணையோடு இருக்கின்றார். யூதாசைப் பற்றி அதிகம் எழுதுபவர் லூக்காதான். யூதாசின் வலுவின்மையை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறார்.

யூதாசும், பேதுருவும் இரண்டு வலுவின்மைகள்.

பேதுரு வீடு திரும்பினார்.

யூதாசு திரும்பவில்லை.

எப்படி?

தான் இயேசுவை மறுதலித்தவுடன், தன் தவற்றால் குத்தப்பட்டு, தன்னுள்ளே தன்னைப் புதைக்காமால் இயேசுவின் முகம் பார்க்கின்றார் பேதுரு.

ஆனால், இயேசுவை காட்டிக் கொடுத்தவுடன், தனக்குள்ளே பார்க்கின்றார் யூதாசு.

இயேசு தன் மண்ணக வீடு திரும்பவில்லையென்றாலும்,

தன் வானகத் தந்தையின் வான் வீடு திரும்புகின்றார்.

கல்லறை அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது.

'நாமும் வீடு திரும்புவோம்!' என்ற நம்பிக்கை தருகிறது இயேசுவின் இறப்பும், உயிர்ப்பும்.

2 comments:

  1. கால நேரத்திற்கேற்ற கருத்தான பதிவு! எப்படி தங்களால் இவ்வாறெல்லாம் சிந்நிக்க முடிகிறது என அடிக்கடி எனக்கு வரும் ஆச்சரியம் இன்றும் என்னை விடவில்லை.பேராசிரியரின் இறப்பில் ஆரம்பித்து ' வீடு திரும்ப இயலாமல் போவதுதான் இறப்பு' என்று கூறி இவ்வார்த்தைகள் இயேசு,யூதாசு,பேதுரு இவர்களின் வாழ்க்கையோடு எப்படி இணைந்துள்ளன என்பதை சிந்தித்திருக்கும் விதம் என் போன்றவர்களுக்கு சற்று வித்தியாசமானது; விநோதமானதும் கூட.இவர் தான் 'இயேசு' என சொல்லக்கூடாத இடத்தில் சொல்லி விட்டார் யூதாசு", இவர்தான் ' இயேசு' என்று சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத் தவறி விட்டார் பேதுரு". எத்தனை உண்மையான,ஆனால் முன்னுக்குப் பின் முரணான செயல்கள்!ஆனாலும் பேதுரு,யூதாசு இருவரையுமே 'வலுவின்மைகள்' என விவரிக்கிறார் தந்தை.தான் தவறு செய்த நிலையிலும் அதை மன்னிக்கும் இறைவனின் வல்லமை அறிந்து இயேசுவின் முகம் நோக்கும் பேதுருவும், தனக்கு எல்லாமாய் இருந்தவரைக் காட்டிக் கொடுத்த குற்ற உணர்ச்சியால் தன் இயலாமையை மட்டுமே பார்த்த யூதாசும் எத்தனை வேறுபட்டு நிற்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.வானக வீடு திரும்பும் இயேசுவின் பாதையில் 'நாமும் கூட ஒருநாள் வீடு திரும்புவோம்!' என்ற நம்பிக்கையை விதைக்கும் இயேசுவின் இறப்புக்கும்,உயிர்ப்புக்கும் மாத்திரமல்ல.... புத்துணர்ச்சி தரும் தந்தையின் வார்த்தைகளுக்கும் சேர்த்தே உவகை கொள்வோம். நேர்மறை விஷயங்கள் தெறிக்கும் வார்த்தைகளுக்காக தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. We return to Him now and now and now... Thank you for the message of returning on the holy good friday...our hopes are set in returning one day...forever and ever.

    ReplyDelete