Wednesday, March 23, 2016

அருள்பணியாளர்களின் திருநாள்

நாளை பெரிய வியாழன். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில், ஒவ்வொரு ஆண்டும் திருத்தைலத் திருப்பலியைக் கொண்டாடும் தாய்த் திருச்சபை, இந்த நாளை குருத்துவத்தின் ஆண்டுவிழாவாக நினைவுகூர்ந்து, தன் அருள்பணியாளர்களின் குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்க அழைக்கிறது.

ஆக, நாளை அருள்பணியாளர்களின் திருநாள்.

அருள்பணியாளர்கள் ('presbyter,' or 'priest') என்றால் 'மறைமாவட்ட அருள்பணியாளர்கள்.' துறவற சபை குருக்களை துறவிகள் ('religious') என்றுதான் திருச்சபை அழைக்கிறதே தவிர, அவர்களை 'அருள்பணியாளர்கள்' என அழைப்பதில்லை. (மறைமாவட்ட அருள்பணியாளர்கள் கொஞ்சம் காலரைத் தூக்கிவிட்டுக்கோங்கப்பா!)

திருவழிபாட்டு அறிவுரைப்படி இந்த திருத்தைல திருப்பலி நிகழ்வு பெரிய வியாழன் அன்றுதான் நடைபெற வேண்டும் என்றாலும், தங்கள் தலத்திருஅவையின் தேவை கருதி ஆயர்கள் இதை புனித வாரத்தின் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் கொண்டாடலாம். மதுரை உயர்மறைமாவட்டத்தில் இந்த திங்களன்று இது கொண்டாடப்பட்டது.

அருள்பணியாளர்கள் வாக்குறுதிகள் புதுப்பிக்கும் சடங்கில் ஆயர் அவர்கள் அருள்பணியாளர்களைப் பார்த்துக் கேட்கும் மூன்று கேள்விகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். தமிழ் திருப்பலி புத்தகத்தில் உள்ள மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை. மூல மொழியாம் இலத்தீனிலும், அதை மிக ஒட்டிய இத்தாலியனிலும் வாசிக்கும்போது இவ்வாக்குறுதிகள் ஆச்சர்யமாக இருக்கின்றன. இத்தாலியன் மொழிபெயர்ப்பை நான் இங்கே தமிழாக்கம் செய்கிறேன்:

கேள்வி 1:

ஆயர்: அன்பிற்கினிய அருள்பணியாளர்களே,
இயேசு கிறிஸ்து தன் குருத்துவத்தை திருத்தூதர்களுக்கும், நமக்கும் பங்கிட்டுக்கொடுத்த நாளின் ஆண்டு நினைவை புனித திருச்சபை கொண்டாடுகிறது. (இந்நாளில்) நீங்கள் உங்கள் திருநிலைப்பாட்டு நிகழ்வின்போது உங்கள் ஆயர் முன்னிலையிலும், இறைவனின் புனித மக்கள் முன்னிலையிலும் கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிக்க விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கே மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. ஓர் அருள்பணியாளர் இயேசுவின் குருத்துவத்தில் பங்கேற்கிறார். இது ஒரு புதிய புரிதல். ஏனெனில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் வரை, 'ஒரு அருள்பணியாளர் தலத்திருச்சபையின் ஆயரின் குருத்துவத்தில் பங்கேற்கிறார்' என்ற புரிதலே இருந்தது. இந்தப் புதிய புரிதலில், எல்லா அருள்பணியாளர்களையும் இணைப்பவர் கிறிஸ்துதான் என்பதும், அருள்பணியாளர்கள் மனித இயல்பில் அல்ல, மாறாக, இறை இயல்பிலேயே பங்கேற்கிறார்கள் என்பதும், அருள்பணி நிலையில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் இல்லை என்பதும் அடிக்கோடிடப்படுகிறது.

ஆ. அருள்பணியாளர்கள் தருவது 'வாக்குறுதி' ('promise') இதை துறவிகளின் 'பொருத்தனை' ('vow')-யிலிருந்து வேறுபடுத்த வேண்டும். 'பொருத்தனை' என்பது நாம் ஆலயத்தில் இறைவனுக்குச் செலுத்தும் நேர்ச்சை ('votive') போன்றது. 'பொருத்தனையை' விட 'வாக்குறுதி' அதிக நம்பகத்தன்மையை உள்ளடக்கியது.

இ. அருள்பணியாளர்கள் தங்கள் வாக்குறுதியை ஆயர் முன்னிலையில், இறைமக்கள் முன்னிலையில் தங்கள் இறைவனுக்கே நேரிடையாகத் தருகின்றனர். ஆனால், துறவியர் தங்கள் 'பொருத்தனைகளை' தங்கள் மாநில முதல்வரிடம்தான் ('provincial' or his / her representative) கொடுக்கின்றனர். மேலும், இங்கே ஆயரும், இறைமக்களும் நான் கொடுக்கும் வாக்குறுதிக்கு சாட்சிகளாய் ('witnesses') இருக்கிறார்கள்.

கேள்வி 2:

ஆயர்: நீங்கள் உங்களையே மறுத்தும், கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்பெற்று எவ்வித வற்புறுத்தலுமின்றி நீங்களே விரும்பி, அவரின் திருச்சபைக்காக ஏற்றுக்கொண்ட தூய பொறுப்புக்களை நிறைவேற்றியும், நம் குருத்துவத்தின் முன்மாதிரியாய் இருக்கின்ற ஆண்டவர் இயேசுவோடு, உங்களையே நெருக்கமாக்கி இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கேயும் மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. குருத்துவம் என்பது ஒரே நாளில் அடைந்துவிடும் நிலை அல்ல. அது ஒவ்வொரு நாளும் ஒரு அருள்பணியாளர் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தின் இலக்கு ஆண்டவர் இயேசுவோடு தன்னையே இணைத்துக்கொள்ளுதல். ஆக, ஓர் அருள்பணியாளர் முதலில் தன்னையே கிறிஸ்துவோடு இணைத்துக்கொள்ள வேண்டும். (அப்படி இணைத்தால்தான் தன் மக்களை இறைவனோடு இணைக்க முடியும்).

ஆ. 'உங்களையே மறுத்தல்' என்றால், 'இனி நான், எனது, எனக்கு' என்று எதுவும் இல்லை என்பது பொருள்.

இ. 'எவ்வித வற்புறுத்தலுமின்றி.' என் ஏழு ஆண்டு அருள்பணி வாழ்வுப் பயணத்தில் இந்த வார்த்தைதான் இன்று எனக்கு ரொம்ப முக்கியமானதாகத் தெரிகின்றது. நானாக விரும்பி, யாருடைய வற்புறுத்தலுமின்றிதான் அருள்பணிநிலையை ஏற்றுக்கொள்கிறேன் என்றால், நான் எவ்வித முணுமுணுப்பும், எதிர்பார்ப்பும் இன்றி பணி செய்ய வேண்டும். மேலும், ஒன்றை விரும்பி ஏற்றுக்கொண்டபின், அதில் நிலைத்திருக்க வேண்டுமே தவிர, 'இன்னொன்றையும் நான் விரும்புகிறேன், அதுவும் எனக்கு வேண்டும்' என நினைப்பது மேன்மையன்று.

கேள்வி 3:

தலையும், மேய்ப்பருமான கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, மனித விருப்பங்களால் வழிநடத்தப்படாமல், உங்கள் சகோதரர்கள்மேல் கொண்ட அன்பினால் (வழிநடத்தப்பட்டு), கடவுளின் மறைபொருள்களை புனித நற்கருணை மற்றும் மற்ற வழிபாட்டு செயல்பாடுகள் வழியாக நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக இருக்கவும், மீட்பின் வார்த்தையின் பணியை பற்றுறுதியடன் நிறைவேற்றவும் விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கேயும் மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. முதல் வாக்குறுதி (கேள்வி 2) அருள்பணியாளரின் தனிநபர் வாழ்வையும், இரண்டாம் வாக்குறுதி (கேள்வி 3) அவரின் பணிவாழ்வையும் மையப்படுத்தி இருக்கிறது. பணிவாழ்வு 'மனித விருப்பங்களால்' உந்தப்படக்கூடாது. அதாவது, தான் செய்யும் ஒவ்வொரு (வழிபாட்டு) செயலிலும், 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்று அருள்பணியாளர் எண்ணக் கூடாது. 'இந்தப் பூசை வைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' 'வீடு சந்திக்கச் சென்றால் என்ன கிடைக்கும்?' 'இவரிடம் நான் நல்ல நட்பை வளர்த்துக்கொண்டால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற எண்ணங்கள் அறவே கூடாது. இப்படிப்பட்ட கேள்விகள் ஓர் அருள்பணியாளரை ஒரு முதலாளியாக ('capitalist') ('எதில் நான் இன்வெஸ்ட் செய்தால் எனக்கு அதிக பலன் கிடைக்கும?') அல்லது நுகர்வோராக ('consumer') ('இவரிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?') மாற்றிவிடும். அருள்பணியாளர் தன் சகோதரர்கள்மேல் கொண்ட அன்பினால் உந்தப்பட வேண்டும். பங்குத்தளத்தில் பணியாற்றும் ஓர் அருள்பணியாளர் அந்தப் பங்குத்தளத்தின் 'பாஸ்' அல்ல. மாறாக, சகோதரர். அந்த நிலையில்தான் அவர் தன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

ஆ.கடவுளின் மறைபொருள்களையே அருள்பணியாளர் நிறைவேற்றுகின்றார். 'மறைபொருள்' என்பதால் இங்கே நம்பிக்கை மிக முக்கியமானது. கடவுளின் மறைபொருள்கள் மேல் எனக்குள்ள நம்பிக்கை முதலில் ஆழப்பட வேண்டும். மேலும், இது கடவுளின் மறைபொருள் என்பதால், நான் என் மூளையைக் கசக்கி விடை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இ. 'நம்பகத்தன்மை.' 'பற்றுறுதி.' மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு வங்கியில் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த வங்கியின் மேல் அவர்களுக்கு முதலில் நம்பகத்தன்மை வரவேண்டும். அந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டும். தாங்கள் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதியில் பற்றுறுதியோடு இருத்தல் வேண்டும். ஓர் அருள்பணியாளர் ஒரு வங்கி அதிகாரியைவிட அதிக பொறுப்பு கொண்டவர். நான் என் நண்பனிடமும் சொல்லத் தயங்கும் என் இரகசியத்தை, என் தனிவாழ்வை ஓர் அருள்பணியாளரிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், அது என் குளியலறையை அவருக்குத் திறந்து காட்டுவது போன்றது. 'இதுதான் நான்!' என்று என்னிடம் மக்கள் தங்களையே முழுமையாக நிறுத்துகிறார்கள் என்றால், நான் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டவராகவும், நான் தரும் வாக்குறுதியில் பற்றுறுதி கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

நீண்ட கதையை ஒற்றை வாக்கியத்தில் சுருக்கினால், எனக்கும் எனக்கும், எனக்கும் இறைவனுக்கும், எனக்கும் என் சகோதரர்களுக்கும் உள்ள உறவு என்பது ஒரு வாக்குறுதி. நான் காப்பாற்றும் ஒவ்வொரு வாக்குறுதியும் அருள்பணிவாழ்வு என்ற ஓவியத்தில் நான் தூரிகையால் தீட்டும் வண்ணக் கோடுகள். நான் தவறும் ஒவ்வொரு வாக்குறுதியும் அந்த ஓவியத்தில் நான் கத்தியால் இழுக்கும் கீறல்கள்.

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' (பவுல், 2 கொரி 4:7).


1 comment:

  1. எத்தனை அழகானதொரு பதிவு! இந்த குருக்கள் வானதூதர்களையும் விடப் பாக்கியம் செய்தவர்கள் எனக் கேட்டிருக்கிறேன்.அவர்கள் சார்ந்திருக்கும் திருநிலைப்பாட்டைப் பற்றி குருக்களும்,அவர்களைச் சார்ந்துள்ள மக்களும் புரிந்து கொள்வார்களேயானால் அது எத்துணை நலன் பயக்கும் ஒரு விஷயம்.குருத்துவத்தின் ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படும் ' பெரிய வியாழனன்று' ஒவ்வொரு குருவும் தன் ஆயரின் வழியாகத் தங்களை இந்த 'மேல்' நிலைக்கு அழைத்த இறைவனிடம் புதுப்பிக்கும் வாக்குறுதிகளைப் பற்றியும்,அவற்றின் மேன்மை பற்றியும் இங்கே எடுத்துக்கூறுகிறார் தந்தை.இவற்றில் என் மனத்தைத் தொட்ட சிலவற்றை இங்கே கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.1. அருட்பணியாளர்களை இணைப்பது கிறிஸ்துவே என்பதும்,அருட்பணியாளர்கள் குருத்துவத்தில் மனித இயல்பில் அல்ல,மாறாக இறை இயல்பிலேயே பங்கேற்கிறார்கள் என்பதும்,அருட்பணி நிலையில் உயர்ந்தவர்- தாழ்ந்தவர் இல்லை என்பதும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.2 ஒன்றை விரும்பி ஏற்றுக்கொண்டபின் அதில் நிலைத்திருக்க வேண்டுமே தவிர ' இன்றொன்றையும் விரும்புகிறேன்' என்று நினைப்பது மேன்மையன்று.3. 'இதுதான் நான்' என மக்கள் தங்களையே என்னிடம் தங்களை முழுமையாக நிறுத்துகிறார்கள் என்றால் நான் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டவராகவும்,நான் தரும் வாக்குறுதியில் பற்றுறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.அழகுடன் கூடிய அமைதியான ஆனால் அழுத்தமான வார்த்தைகள்.இவற்றைக் காகிதத்தில் அச்சுக்களாகப் பார்க்கும் அளவிற்கு வாழ்க்கையின்( குருத்துவத்தின்) விழுமியங்களாகப் பார்ப்பது எளிதல்ல என்பது நாம் அனைவருமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அருட் பணியாளர்களே! தங்களது குருத்துவ ஆண்டு விழாவைக் கொண்டாடும் நாளை( பெரிய வியாழன்) தங்கள் அனைவருக்காகவும் இறைவனிடம் வரம் வேண்டி நிற்போம் என உறுதியளிக்கிறேன்.வாசகர்கள் அனைவரின் பெயராலும் தந்தைக்கும்,மற்ற அனைத்து அருட்பணியாளர்களுக்கும் திருநாள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.தங்களது 'அருள் பணி வாழ்வு எனும் ஓவியத்தில் கத்திக்கீறல்களை அல்ல,வண்ணக்கோடுகளை மட்டுமே தீட்ட நாங்கள் தங்களுக்கு உறுதுணையாக நிற்போம் என வாக்களிக்கிறேன். இறைவன் தங்களுக்கு நல்ல உடல்,உள்ள நலம் தந்து ,தங்கள் கரம் பற்றி வழி நடத்துவாராக! விசேஷமான முறையில் தந்தைக்கும் ' திருநாள் வாழ்த்துக்கள்' உரித்தாகட்டும்! தாங்கள் தூரிகை கொண்டு தீட்டும் ஓவியங்கள் அனைத்தும் இறைவனுக்கு மகிமை சேர்க்கட்டும்!!!

    ReplyDelete