Monday, March 7, 2016

கண்மணி நீ வர

'கண்மணி நீ வரக் காத்திருந்தேன்...'

என்று ஒலோபெரின் ஒரு பக்கமும், யூதித்தின் சொந்த ஊர்க்காரர்கள் மறுபக்கமும் பாடிக்கொண்டிருக்க, யூதித்து எதையும் கண்டுகொள்ளாதவராய் தன் வேலையில் கண்ணுங் கருத்துமாய் இருப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது யூதித்து நூல் 12 மற்றும் 13ஆம் பிரிவு.

யூதித்து ஒலோபெரினின் தலையைக் கொய்யும் நிகழ்வு நான்கு படிகளாக நடந்தேறுகிறது:

அ. யூதித்து ஒலோபெரினிடம் அனுபவித்த கட்டின்மை (12:1-9)
ஆ. ஒலோபெரின் தந்த விருந்து (12:10-18)
இ. ஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல் (13:1-9)
ஈ. யூதித்து தன் சொந்த ஊர் திரும்புதல் (13:10-20)

அ. யூதித்து அனுபவித்த கட்டின்மை (12:1-9)

1. 'தன் வெள்ளிக்கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு' (12:1). 'வெள்ளிக்கலன்கள்' என்பவை கடவுளின் சிலைகளையும், வழிபாட்டு பொருள்களையும் குறிப்பவை. ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்கு எதிராக போருக்குச் செல்லும்போது தங்களின் கடவுளர்களின் சிலைகளையும், அவற்றிற்கான வழிபாட்டுப் பொருள்களையும் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். இந்தச் சிலைகளும், வழிபாட்டுப் பொருள்களும் இருக்கும் அறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், வெகு சிலரே இந்த அறைக்குள் நுழையும் உரிமை கொண்டிருப்பர். அந்த உயரிய உரிமையை யூதித்துக்குத் தருகின்றான் ஒலோபெரின்.

2. 'இவற்றை நான் உண்ணமாட்டேன்.' இஸ்ரயேலர்கள் தூய்மை-தீட்டு என்ற பாகுபாட்டை தாங்கள் உட்கொள்ளும் உணவில் அதிகம் காட்டினர். தீட்டான உணவை உண்ணும்போது அது ஒருவரின் உடலில் கலந்து, அந்த உடலின் தூய்மையையும் அழித்துவிடுகிறது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகையினால் யூதித்து, ஒலோபெரினின் உணவுப் பொருள்களை உண்ணாமல், தான் எடுத்துச் சென்றவற்றையே உண்டு பருகுகின்றார். இதை அவர் செய்யவும் ஒலோபெரின் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

3. 'நான் மன்றாடக் கட்டளையிடும்.' ஒலோபெரினின் சிலைகள் இருக்கும் அறைக்குள் நுழைந்தாலும் யூதித்தின் மனமெல்லாம் தன் ஊரின் கடவுளிடமே இருக்கின்றது. தான் ஒலோபெரினோடு தங்கியிருந்த மூன்று நாட்களும் தன் கடவுளை வழிபட நடந்து செல்கின்றார் யூதித்து. இதற்கும் அனுமதி கொடுக்கின்றான் நம்ம வள்ளல் ஒலோபெரின்.

(ஒலோபெரின் ரொம்ப பரந்த மனமுடையவரா? அல்லது காமத்தீயால் பற்றி எரிந்தவரா? எதற்காக யூதித்து கேட்ட எல்லாவற்றிற்கும் 'சரி' 'சரி' என மண்டையை மண்டையை ஆட்டுகிறார்? அடிக்கடி மண்டையை ஆட்டிதால்தான் என்னவோ அவனது மண்டையைக் கொய்து விடுகிறார் யூதித்து!)

ஆ. ஒலோபெரின் தந்த விருந்து (12:10-18)

1. 'பகோவா என்ற உயர்அலுவலர்' (12:11). அரசவைகளில் குறிப்பாக அந்தப்புரங்களில் பணியாற்ற திருநங்கைகள் அல்லது அண்ணகர்களே நியமிக்கப்பட்டனர். அரசர்கள் போருக்குச் சென்றுவிட்டால் திரும்பி வர பல மாதங்கள் ஆகலாம். இந்த நாட்களில் தங்கள் மனைவியர் மற்ற ஆண்களோடு உறவுகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதால், ஆண்களை நியமிப்பதை விடுத்து அண்ணகர்களையே நியமித்தனர் அரசர்கள். யூதித்துக்குப் பணிவிடைசெய்வதும் பகோவா என்ற திருநங்கைதான்.

2. 'உறவு கொள்ள' (12:12, 16). யூதித்து கேட்ட எல்லாவற்றிற்கும், 'சரி' என ஒலோபெரின் சொல்லக் காரணம் என்ன என்பதை இங்கே சொல்கின்றார் ஆசிரியர்: 'யூதித்தைக் கண்ட ஒலோபெரினின் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிற்று. அவனது மனம் கிளர்ந்தெழுந்தது. அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்பு தேடியிருந்தால் அவன் அவரை அடைய ஏக்கம் கொண்டான்' (12:16).

உடலுறவு அல்லது வன்புணர்ச்சி என்பது ஒருவரைப் பார்த்தவுடன் அவர்மேல் பாய்வது அல்ல. உடலில் நடந்தேறுவதற்குமுன் எல்லாம் உள்ளத்தில் அல்லது சிந்தனையில் நடந்தேறிவிடுகிறது. இதனால்தான் புத்தரும், 'சிந்தனையே எல்லாவற்றிற்கும் காரணம்' என்கிறார். யூதித்தோடு ஒன்றாக ஒலோபெரின் இப்போதுதான் நேருக்கு நேர் அமர்ந்தாலும், அவன் இந்த நாட்களில் மனதளவில் நிறையமுறை கூடியிருப்பான். மனதளவில் ரிஹெர்ஸ் செய்து பார்த்ததை இன்று நேரில் நடத்திவிட திட்டமிடுகிறான். (இன்று பல இடங்களில் நடந்தேறும் வன்புணர்ச்சி மற்றும் எதிர்பாலருக்கு எதிரான வன்முறையைச் சரி செய்ய வெளிப்புற செயல்களைக் கட்டுப்படுத்தினால் மட்டும்போதாது. மனதளவில் அரங்கேற்றமாகும் பாலியல் உணர்வுகளையும் சரி செய்ய வேண்டும்!)

3. 'இந்நாள் என் வாழ்வின் பொன்னாள்' (12:18). ஒலோபெரினின் அழைப்பைக் கேட்டவுடன் மறுக்காமல் உடனே அழகுப் பதுமையாகச் சென்று அவனை இன்னும் உசுப்பேத்துகின்றார் யூதித்து. 'இன்று என் வாழ்வின் பொன்னாள்' என்று உதடுகளில் ஹம் செய்து கொண்டே உள்ளே நுழைகின்றார்.

தன்னை அறிந்த ஒருவரால், தன்னைச் சுற்றியிருப்பதை அறிந்த ஒருவரால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். அதாவது, எந்த நேரத்தில், எதைச் செய்ய வேண்டும் என்று யூதித்து அறிந்திருந்ததால், அந்த நேரம் வந்து விட்டதை எளிதாக உணர்கின்றார். பெண்களுக்கு இயல்பாகவே இந்த உணர்வு அதிகம் என்பது உளவியல் பாடம்.

4. 'பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் குடித்ததில்லை' (12:20). 'ஐ ஆம் தெ ஹேப்பியஸ்ட் மேன் இன் தெ வேர்ல்ட்' என்று சொல்லிக்கொண்டே அள்ளிக் குடித்து மட்டையாகின்றான் ஒலோபெரின். யூதித்தின் அழகு அவன் கண்களைக் கட்டிவிட்டது. பயபுள்ளைக்கு யூதித்தைத் தவிர அந்த நேரத்தில் வேறொன்றும் தெரியவில்லை.

தன் நிலை இழக்குமளவிற்கு ஒருவரை மாற்றக் கூடியது பெண்ணின் அழகு. இதனால் தான் அழகாயிருக்கும் பெண்களின் கண்களை உற்றுப் பார்க்கக் கூடாது என்கின்றன நம் இலக்கியங்கள். 'பிறந்தநாள்' என்று இங்கே ஆசிரியர் சொல்வதன்வழியாக, இந்த நாளே ஒலோபெரின் 'இறக்கும் நாள்' என்று எச்சரிக்கை செய்கின்றார்.

இ. தலையைக் கொய்தல் (13:1-9)

1. 'பொழுது சாய்ந்தபோது' (13:1). மதியம் தொடங்கிய விருந்து ஏறக்குறைய சாயங்காலம் வரை நீடிக்கிறது. பொழுதும் சாய்கிறது. தங்கள் படைத்தலைவனின் தலையும் சாயப்போகிறது என்று தெரியாத அப்பாவி வீரர்கள் தங்கள் கூடாரங்களுக்குத் தலைசாய்க்கச் செல்கின்றனர். யூதித்து மற்றும் ஒலோபெரின் தனியே விடப்படுகின்றனர். தன்னுடன் இருந்த பணிப்பெண்ணையும் கொஞ்சம் வெளியே நிற்கச் சொல்கின்றார் யூதித்து.

2. 'மதுமயக்கம்' (13:2). யூதித்தைக் கட்டிப்பிடிக்க வேண்டும், முத்தமிட வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என கற்பனை செய்து கொண்டிருந்த நம் ஒலோபெரின் மதுமயக்கத்தால் உட்காரக்கூட முடியாமல் இருக்கின்றான்.

3. 'அணுகினார், செபித்தார், துண்டித்தார்' (13:6-9). தான் செய்யும் ஒவ்வொன்றிலும் செபத்தைக் கலந்து செய்கின்றார் யூதித்து.

4. 'இருமுறை வெட்டி' (13:8). ஒலோபெரினின் தலையை தன் வலிமையெல்லாம் பயன்படுத்தி இரண்டுமுறை வெட்டினார் என்று ஆசிரியர் சொல்வதன்வழியாக, ஒலோபெரினின் வன்மையையும், யூதித்தின் மென்மையையும் நமக்குச் சொல்கின்றார்.

5. 'சிறிது காலம் தாழ்த்தி' (13:9). யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, கொஞ்சம் நேரம் கழித்து வெளியே செல்கின்றார். தலையில்லா உடலோடு உட்கார்ந்திருக்க இந்த இளவலுக்கு துணிச்சல் எங்கிருந்து வந்ததோ?

ஈ. பெத்தூலியாவுக்குத் திரும்புதல் (13:10-20)

ஒலோபெரினின் அறையை விட்டு வெளியே வருகின்ற யூதித்து, ஒலோபெரினின் தலையை தன் பணிப்பெண்ணிடம் கொடுக்க, இருவரும் தங்கள் ஊர்நோக்கி வழிநடக்கின்றனர்.
யூதித்தின் குரலைத் தூரத்தில் கேட்ட காவல்வீரர்கள் வேகமாக கதவுகளைத் திறந்துவிடுகின்றனர். வேகமாக நெருப்பு மூட்டுகின்றனர்.

யூதித்து என்ன சொன்னார்?

நாளை பார்க்கலாம்.

2 comments:

  1. இன்றையக் கால கட்டத்துப் பெண்டிர் தங்களைத் தைரியம் மிக்கவர், முற்போக்கு சிந்தனை உள்ளவர்,துணிவே துணை என்று நிற்பவர்,ஆடவருக்கு சற்றும் சளைக்காதவர் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.ஆனால் இன்றையப் பதிவின் வீராங்கனை ' யூதித்தின்' செயல்களைப் பார்க்கையில் வாய் பிளந்து நிற்பது தவிர, செய்வதற்கு வேறொன்றுமில்லை எனத் தோன்றுகிறது.ஒலோபெரின் தனக்குத் தரப்போகும் விருந்தின் நோக்கம் தெரிந்திருந்தும் அவரோடு தனிமையில் இருக்கத் துணிகிறார் ...மனது பூரா தன் ஊரின் கடவுளைப்பற்றிய எண்ணங்களுடனும்,உதடு முழுதும் இறைவனின் நாமத்தை செபிப்பதிலும், மனத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவர் செய்யப்போகும் காரியத்தை ஒத்திகை பார்ப்பதிலும் தம் நேரத்தைக் கடத்துகிறார். ஒலோபெரினின் இருப்பிடம் நெருங்கியதும் அவர் செய்ததை " அணுகினார்,செபித்தார்,துண்டித்தார்" என விவரிக்கின்றன இன்றையப் பதிவின் வரிகள். யூதித்தின் இந்த வீரச்செயலை அழகாக படம் பிடித்துக்காட்டுகின்றன தந்தையின் வார்த்தைகள்.ஆம்.... " தன்னை அறிந்த ஒருவரால், தன்னைச் சுற்றியிருப்பதை அறிந்த ஒருவரால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்." என்று.நாம் கிழித்த கோட்டிலேயே நடந்து கொண்டிருக்கையில் கொஞ்சம் அப்படி இப்படி கால் தடம் மாறினால் கூட பதட்டத்தின் உச்சிக்கே சென்று 'எடுத்தோம்,கவிழ்த்தோம்' என்று காரியங்களைச் சிதறடிக்கும் என் போன்றவர்களுக்கு மத்தியில் ' யூதித்து' எனும் இந்த வீராங்கனை போற்றப்பட வேண்டியவளே! பெண்களைப் பெருமைப்படுத்தக்கூடிய ஒரு பதிவைத்தந்த தந்தைக்கு ஒரு சபாஆஆஆஆஆஷ்!

    ReplyDelete
  2. ' மகளிர் தினமான' இன்று சமுதாயத்தின் அணிகலன்களாயிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் என் வாழ்த்துக்கள்." மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா " எனும் வார்த்தைகளுக்குப் பொருள் சேர்க்கும் சமுதாயத்தின் கண்களாக வாழ முயற்சிப்போம். அறியாமையாலும்,ஆண் வர்க்கத்தாலும்,சமுதாய இடிபாடுகளாலும்,ஏன் சக பெண்களாலுமே அவதிப்படும் அத்தனை பெண்களும் தங்களின் அடிமைப்பிடிகளைத் தகர்த்தெறிந்து மேலே வர, மேன்மையைக் கண்டிட என் மனத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்......

    ReplyDelete