Friday, July 31, 2015

ஊருக்கு நாலு பேரு!

நேற்று காலை நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் அவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மனிதன் மனிதனைத் தண்டிக்கும், உயிரை எடுக்கும் கொடூரம் ஒன்றும் புதிதல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை நிகழ்வை நாம் நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

ஊருக்கு நாலு பேரு என்பது மாதிரி இந்த நிகழ்விலும் நாலு பேரு - ஏரோது, ஏரோதியா, சலோமி மற்றும் (திருமுழுக்கு) யோவான்.

ஏரோதியா பற்றி லூக்கா பற்றி க்ளேட்வெல்லின் புதினத்தில் ஒரு குறிப்பு உண்டு. பிலாத்தின் அரண்மனை. விருந்து ஒன்று நடக்கிறது. விருந்திற்கு லூக்கானுஸ், ஏரோது, அவரது தம்பி பிலிப்பு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பிலிப்பின் மனைவி ஏரோதியாவைத்தான் ஏரோது 'வைத்திருக்கிறார்'. விருந்தின்போது பிலாத்து ஏரோதிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் ரோமிற்கு ஏற்றதுபோல இல்லாததால் அவரை அகற்றிவிட்டு பிலிப்பை நியமித்துவிட்டதாகச் சொல்கிறார். ஏரோதுக்கு தன் சகோதரன் பிலிப்பு மேல் கோபம். 'நான் உன் மனைவியை அபகரித்துக் கொண்டேன் என்பதற்காக என்னை ரோமிடம் போட்டுக் கொடுத்துவிட்டாயா!' என்று பிலிப்பு மேல் பாய்கின்றார் ஏரோது. அப்போது பிலிப்பு பின்வருமாறு சொல்வார்:

'ஏரோதியாவை நான் ஒருநாளும் அன்பு செய்ததில்லை.
அவளும் என்னை அன்பு செய்ததில்லை.
ஆகையால் அவள் என்னைவிட்டு உன்னிடம் வந்ததில்
அவள் மேலும், உன் மேலும் எனக்கு கோபமில்லை.
என் உலகத்தில் அவள் இருந்ததே இல்லை.
அவளுக்கும் எனக்கும் திருமணம் நடந்த நாளன்று,
நான் அவளைப் பார்த்து, 'I love us'
என்று சொல்ல நினைத்தேன். சொன்னேன்.
ஆனால் அவள் சிரித்தாள்.
'I love you' என்று சொல்வதைவிட,
'I love us' என்று சொல்வதுதான் சிறப்பு என நினைக்கிறேன்.
- ஏனெனில் நீயும், நானும் இணைந்தால்தானே காதல்.
நானில்லாமல் நீ எப்படி? -
ஆனால் இன்று ஏரோதியா என்னிடம் திரும்பினால்,
நான் 'I love you' என்றே சொல்வேன்.
ஏனெனில் 'I love wine', 'I love horseriding' என்பதுபோல
'I love you, Herodia'

ஏரோது, ஏரோதியா, சலோமி, யோவான் - இந்த நாலுபேரும் வெளியில் இருப்பவர்கள் அல்லர். நமக்கு உள்ளேயே இருக்கிறார்கள். இவர்கள் யார்?

அ. ஏரோது - மகிழ்விப்பவர் (Pleaser) - முதலில் தன் ஏரோதியாவை மகிழ்விக்க யோவானை தளையிடுகிறார். சலோமியை மகிழ்விக்க வாக்குறுதி கொடுக்கிறார். விருந்தினரை மகிழ்விக்க யோவானைக் கொலை செய்கிறார். கடைசி வரைக்கும் ஏரோது எப்படிப்பட்டவர் என்று நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், திருப்திப்படுத்துவதிலும் மட்டுமே அக்கறையாக இருக்கிறார் இவர். 'என் சந்தோஷத்தை விட உன் சந்தோஷம்தான் முக்கியம்' என்று நாம் அடுத்தவர்களை திருப்திப்படுத்துவதில் அக்கறை காட்டினோம் என்றால் நாம் அடுத்தவர்களுக்காக மட்டுமே வாழ்பவர்களாகிவிடுவோம். நம் மகிழ்ச்சியை அடுத்தவரிடம் கொடுத்துவிடுவோம். அடுத்தவர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுத்துவிடுவோம்.

ஆ. ஏரோதியா - பழிவாங்குபவர் (Avenger) - ஏரோதியா தன் குற்றத்தைச் சுட்டிக்காட்டிய யோவானை நேருக்கு நேர் பழிவாங்காமல் அந்தக் கோபத்தை மனத்தின் ஓரத்தில் வைத்து, தன் மகள் சலோமியைப் பயன்படுத்தி பழிவாங்குகிறார். இந்த வகை மனநிலை கொண்டிருப்பவர் எப்படி இருப்பார்? தன் கோபத்தை நேருக்கு நேர் காட்ட பயந்து கொண்டு, அதைத் தனக்குக் கீழ் உள்ளவற்றில் வடிகால் தேடுவார். 'திருட்டு' பற்றி ஒரு கதை படித்தேன் நேற்று. அதில் இறுதியாக என்ன புரிகிறது என்றால், திருடுபவர் எதற்காக திருடுகிறார்? தனக்கு இன்னும் வேண்டும் என்பதற்காகவா? இல்லை. சமூகத்தின் மேலுள்ள கோபத்தை இப்படித் திருட்டாக வெளிப்படுத்துகின்றார்.

இ. சலோமி - கிளிப்பிள்ளை (Duty-doer) - யார் சொன்னாலும் அதைச் செய்வார். நல்லதா, கெட்டதா என்று பார்க்க மாட்டார். இழுத்து இழுப்புக்கெல்லாம் வருவாள். இந்த மனநிலை நம்மிடம் இருக்கும்போது நாம் சூழ்நிலையின் கைதியாகிவிடுகிறோம். 'நான் என்ன செய்ய? அந்த சூழலில் யாராக இருந்தாலும் அப்படித்தான் செயல்பட முடியும்!' என்றும் சொல்லத் தொடங்கிவிடுகிறோம்.

ஈ. யோவான் - துணிச்சல்காரர் (Courageous) - அரசன் செய்வது தவறு என்று அவனிடமே சொல்வது. நேற்று அப்துல் கலாம் அவர்களின் நல்லடக்கம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். மேலும் அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்களும் வந்திருந்தார்கள். எனக்கு இப்படி நடந்திருக்க வேண்டும் என்ற ஆசை. என்ன ஆசை? கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் இணைந்து, வந்திருந்த அரசியல் தலைவர்களிடம், 'நீங்களும் இவரை மாதிரி எளிமையா, நாணயமா, கொள்கையோட இருப்பீங்கன்னு எங்களுக்கு சத்தியம் செஞ்சுட்டு இவருக்கு மரியாதை செய்யுங்க!' அப்படின்னு ஒரே குரலா சப்தம் போட்டு, வந்திருந்த சில நூறு அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். இப்படித்தான் செய்தார் யோவான்.

இந்த நான்கு பேரும் நம்மில் இருக்கின்றனர். சில நேரம் ஏரோது அதிகாரத்தோடு இருப்பார். கொஞ்ச நேரம் ஏரோதியா கோபக்கணலோடு இருப்பார். சில நேரங்களில் சலோமி நடமாடுவார். சில நேரம் யோவான் வந்து போவார்.

நம்மில் யார் அதிகம் இருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கலாமே!

Thursday, July 30, 2015

இனிய இனிகோ

இனிகோ என்ற தென்றலுக்கு

இன்று திருநாள்.

கடவுளுக்காக காயம்பட்ட வீரர்கள் மத்தியில்
காயம் பட்டதால் கடவுளைக் கண்டவர் இனிகோ

இனிகோ என்றால் வெற்றி

இந்த வெற்றி வந்தது வெற்றிடத்தில் இருந்துதான்

மன்ரோசா குகையில் அடிபட்டுக் கிடந்த
இந்த வீரருக்கு

குண்டடிபட்டது காலிலும், இதயத்திலும்

காலில் வலி

இதயத்தில் வெறுமை

என்ன செய்வது வெறுமை என்னும் இந்த நிறைவைக் கொல்ல?
கேட்கின்றார் விவிலியம்

கொடுக்கின்றார்கள் புனிதர்கள் வரலாறு

வாசிக்க வாசிக்க

அந்தப் புத்தகம் இவரை வாசிக்கும் வரை வாசிக்கின்றார்.
'அவருக்கும், இவருக்கும் இந்தப் புனிதம் சாத்தியமென்றால்,
எனக்கு ஏன் இல்லை?'

புத்தகத்தை மூடிய பின்னும் தொடர்ந்து வாசிக்கின்றார் தன் எண்ணங்களை.
உறுதி எடுக்கின்றார் புனித வாழ்விற்கு.
வாழ்வின் முதல் வெற்றி.

வாழ்வைப் பெற்ற வெற்றி.
மருத்துவனின் கத்தி போல் இந்த அனுபவம் வலித்தது
ஆனால் வலி போக்கியது!

இனிகோ என்றால் எளிமை.

குருவாக மாற வேண்டும் என்ற ஆசை.
இலத்தீன் படிக்க வேண்டுமே.
இவ்வளவு வயதான பிறகு எப்படி?
புறப்படுகின்றார் ஒரு மாணவனாக.
சின்னஞ்சிறு பிள்ளைகளோடு அமர்ந்து படித்தது இலத்தீன்
ஆனால் கற்றுக் கொடுத்தது எளிமை

நோக்கம் தெளிவாக இருப்பவனுக்கு

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டா?

இனிகோ என்றால் நெருப்பு

பற்றி எரிந்த ஒரு கனவு

திருச்சபையின் தீமைகளை அழிக்க வந்த நெருப்பு

வெறும் ஏழுபேருடன் உருவாக்கப்பட்ட சபை

இந்த நெருப்பை அணைக்க முற்பட்டனர் திருத்தந்தையர்

ஊதி அணைப்பதற்கு இனிகோ என்ன மெழுகுதிரியா?

அவன் கதிரவனல்லவா?

கோடிப்பேர் மூடி மறைத்தாலும்
ஆதவனை மறைக்க முடியுமா என்ன?

வெற்றி எளிமை நெருப்பு கனவு இனிகோ!

தனது சபையை கிறிஸ்துவுக்கு, கிறிஸ்துவுக்கு மட்டும் அர்ப்பணித்தவர்.
'எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே'
என்று தனக்கு முன்பாக இறைவனை மட்டும் வைத்துப் புறப்பட்டதுதான்

சேசு சபை என்ற ஆலமரம்

இனிகோ என்ற ஆணிவேர் வித்திட்ட இம்மரம் உலகமெங்கும் இன்று விழுதிட்டு நிற்கின்றது.
இவரின் சுவாசம் இன்று நம் சுவாசம்

இவரின் கனவு இன்று நம் கனவு

இவர் கண்கள் வழியாகத்தான் இன்று நாம் உலகம் பார்க்கின்றோம்.
இவர் கரம் பிடித்துத்தான் நாம் நடை பயின்றோம்.

காலில் அடிபட்டதால் தன்னைக் கண்டார்.
அன்றாடம் அடிபடும் மனித முகங்களில் தொடர்ந்து
இறைவனைக் காண்போம்.

இனி
 இனிகோவுக்கு அழிவில்லை.

Wednesday, July 29, 2015

இனிகோவும், கலாமும்

மேதகு. கலாம் அவர்களின் இந்த மாத நிகழ்வுகளில் ஏறக்குறைய இறுதியாக இருந்தது அவரின் திண்டுக்கல் பயணம். திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் தங்கியிருக்கும் தன் இயற்பியல் பேராசிரியர் அருட்தந்தை. சின்னதுரை அவர்களைக் காணச் சென்றார் கலாம். கலாமின் வாழ்க்கை அடித்தளம் தொடங்கியது இயேசு சபையினரின் கைகளில்தாம் என்று நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அருட்தந்தை. சின்னதுரை அவர்களைக் கண்டபோது கலாம் என்ன நினைத்திருப்பார்? அல்லது அருட்தந்தை அவர்கள் என்ன நினைத்திருப்பார்?

ஏணி ஒரே இடத்தில் நிற்க ஏறியவர் என்னவோ கலாம்தான். ஒவ்வொரு ஆசிரியரும், பேராசிரியருக்கும் இருக்கும் பெருமிதம் இதுதான் - ஏணியாக இருப்பது. தன்மேல் ஏறிச்சென்ற மாணவ, மாணவியர் தங்களைவிட மேலான புகழோடு இருந்தாலும், இந்த ஆசிரியர்களுக்கு ஒருபோதும் பொறாமை வருவதில்லை. 'இவர் என் மாணவர்' என்ற பெருமிதம்தான் வருகிறது. ஆகையால்தான் ஆசிரியர்களைக் கடவுள் நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். கடவுள் தன் குழந்தைகள் மேல் என்றாவது பொறாமைப்படுவாரா? பெருமிதமே அடைவார்.

நாளை கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு. நாளை மறுநாள் (31 ஜூலை) இயேசு சபையின் நிறுவனர் புனித இஞ்ஞாசியாரின் திருநாள் (அவரின் இறந்த நாளும் இதுவே!). இரண்டு நாட்களும் அடுத்தடுத்து வருவது இயல்பாக நடந்ததுபோல எனக்குத் தெரியவில்லை.

இயேசு சபையினரின் கரங்கள் பிடித்து தன் வாழ்வைத் தொடங்கிய கலாம், இயேசு சபையினருக்கு நன்றியால் கரம் கூப்பி விடை பெறுகிறார்.

இனிகோவிற்கும் ('இனிகோ' என்பது இஞ்ஞாசியரை மற்றொருமாதிரியாக விளிக்கும் விதம்) கலாமிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன:

1. இனிகோ பிறந்த இடம் பிஸ்கே கடல் தாலாட்டும் லொயோலா கடற்கரை.
கலாம் பிறந்த இடம் வங்கக் கடல் தாலாட்டும் ராமேஸ்வரம் கடற்கரை.

2. படைவீரராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இனிகோ.
இந்திய வான்வழிப்படையில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் கலாம்.

3. இனிகோ என்றால் நெருப்பு என்று பொருள்.
கலாமின் வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பும் 'அக்கினிச் சிறகுகள்' என்பதுதான்.

4. தன் 30ஆம் வயதிலும் மாணவர்களோடு அமர்ந்து இலத்தீன் கற்றார் இனிகோ.
தன் இறுதி நிமிடம் வரை மாணவர்களோடு அமர்ந்திருந்தார் கலாம்.

5. இயேசு சபையின் தலைமகனாய், ஆன்மீகத் தலைவராக உயர்ந்தவர் இனிகோ.
இந்திய நாட்டின் தலைமகனாய், அரசியல் தலைவராக உயர்ந்தவர் கலாம்.

6. 'அனைத்தும் இறைவனின் மகிமைக்கே' என்று வாழ்ந்தவர் இனிகோ.
'அனைத்திலும் இறைவனை மகிமையடையச்;' செய்தவர் கலாம்.

7. இனிகோவும் மணத்துறவு மேற்கொண்டவர்.
கலாமும் மணத்துறவு மேற்கொண்டவர்.

8. இனிகோவின் கனவு இறையரசு மலர வேண்டும் என்பது.
கலாமின் கனவு வல்லரசு மலர வேண்டும் என்பது.

9. காலில் பட்ட குண்டை தடையாகக் கருதாதவர் இனிகோ.
வாழ்வில் பட்ட வறுமை எனும் குண்டை தடையாகக் கருதாதவர் கலாம்.

இனிகோவின் கனவு இன்று இயேசுசபையாக விரிந்து நிற்கிறது. விளிம்புகளை நாடிச் செல்லும் இயேசுசபையார் தாங்கள் சந்திக்கும் அனைவரின் உள்ளங்களிலும் புன்னகையை விதைக்கின்றனர். 

இந்தியாவின் கோடானு கோடி மக்களும் புன்னகைக்க வேண்டும் என்பதே கலாமின் கடைசி ஆசையும்கூட.

இருவருக்கும் மரணமில்லை.

மலர் தூவினோம். அஞ்சலி செலுத்தினோம். அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிட்டோம்.

இப்படி இருந்தவிடாமல்,

நாமும் இவர்களைப் போல இனி இருக்கலாம்!


Tuesday, July 28, 2015

டாக்டர். கலாம்

இந்தியக் கடைக்கோடியில் பிறந்து

இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த

ராக்கெட் மனிதர்

ஏவுகணை விஞ்ஞானி

அகில உலகில் இந்தியாவின் ஞானத்தின், விஞ்ஞானத்தின்

அடையாளமாய் விளங்கிய

டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

நேர்மை, எளிமை, கடின உழைப்பு

இந்த மூன்றையும் மட்டுமே தன் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்ட இவர்

இறந்த போதும் கூட இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவே நின்றிருக்கிறார்.

தன் இறுதி நிமிடம் வரை 'கனவு காணுங்கள்!' என்று சொன்ன இவர்

இன்று நம்மோடு இல்லை.

இனி இந்தியா உங்கள் கைகளில் என்று சொல்லிவிட்டுச்

சென்றுவிட்டார்.

வெறும் அஞ்சலி செலுத்தி இவரை அந்நியப்படுத்திவிடாமல்

இவரைப் போல ஏதாவது ஒன்றில் வாழ்ந்து காட்டலாம் என

என் மனம் துடிக்கிறது!

தாய்மொழிக்கல்வி மட்டுமே பயின்று தாய்நாட்டையே வழிநடத்திய இவர்
ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் புறநானூறு பேசியவர்

திருக்குறள் நெறியில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர்

தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு நன்மாதிரி!

'ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்!

அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்.

ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்.'

(திவெ 14:13)

Monday, July 27, 2015

எலைட் டாஸ்மாக்

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம்' என்று கடந்த வாரம் அறிக்கை விட்டார் கலைஞர் கருணாநிதி.

இதே கலைஞர்தான் 1971ஆம் ஆண்டில் இராஜாஜி இவரின் காலில் விழாத குறையாக, 'மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள்' என்று சொன்னபோது அதைக் கண்டுகொள்ளாமல் இரத்து செய்து, மதுக்கடைகளைத் திறந்துவிட்டார்.

45 வருடங்களுக்குள் கலைஞருக்கு ஞானம் பிறந்துவிட்டதா, அல்லது ஆட்சியைப் பிடிக்க வேறு அஸ்திரம் இல்லாததால் அதைக் கையில் எடுத்திருக்கிறாரா?

'டாஸ்மாக்கை மூட வேண்டும்!' என்று ஒரு பக்கம் குரல் பலமாக எழும்ப, நம்ம அம்மா மறுபக்கம் 'எலைட் டாஸ்மாக்' திறந்து கொண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்கு தாய்மாமனே மது கொடுப்பது, மகளிரும் மதுக்கடையில் மது வாங்குவது, குடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் ரகளை செய்வது என 'கலாச்சாரம்' வளர்ந்து கொண்டிருக்கிறது மறுபக்கம்.

இன்னொரு பக்கம் படிக்காமல் ஊர்சுற்றிக் கொண்டு, பாரில் அமர்ந்து குடித்துக்கொண்டு, வம்பு செய்து, அந்தப் பக்கம் வரும் ஒரு பணக்காரப் பெண்ணை 'வளைத்துக்' காதல் செய்வதே, 'இப்பிறவிப் பயன்' என்று சொல்லிக்கொடுக்கிறது இன்றைய சினிமா. குடிக்கின்ற காட்சிகளை வைத்துவிட்டு, 'குடி நாட்டுக்கு, வீட்டுக்கு கேடு!' என்று போடுவதைப் போல ஒரு அபத்தம் இருக்கவே முடியாது.

குடி எப்போதுமே தவறா? சிகரெட்ரோடு ஒப்பிடும்போது குடி பரவாயில்லை. குடியால் குடிப்பவன் மட்டும் கெடுகிறான். ஆனால் சிகரெட்டால் அருகிலிருப்பவரும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்.

குடி பழக்கமாக மாறிவிட்டால், அதிலிருந்து வெளிவர இன்று மூலைக்கு மூலை உதவி மையங்களும் திறக்கப்பட்டுவிட்டன.

ஒரு குடி தனிநபரின் பழக்கமாக (addiction) மாறுகிறது என்பதற்கு ஆறு காரணிகள் உண்டு:

1. சுய கட்டுப்பாடு இல்லாமை
2. அடக்கமுடியாத ஆர்வம்
3. அதிக நேரத்தையும், ஆற்றலையும் அதற்கே செலவிடல்
4. குடும்ப மற்றும் சமூக பொறுப்புக்களை தட்டிக்கழித்தல்
5. அதன் எதிர்மறை தாக்கம் தெரிந்தாலும் அதையே நாடித் தேடுதல்
6. கிடைக்காத பட்சத்தில் ஒதுங்கிக் கொள்ளுதல்

இந்த ஆறும் இப்போது தமிழக அரசுக்கும் இருக்கிறது. ஆக, தமிழக அரசுதான் இப்போது உதவி மையத்திற்குச் செல்ல வேண்டும்.


Sunday, July 26, 2015

சார்புநிலை

அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
(யோவான் 6:15)

இன்றைய திருப்பலியில் இந்த நற்செய்தியை வாசித்து மறையுரை வைத்து முடித்தாலும் இந்த இறுதி வாக்கியம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

'பசி' என்பது ஒரு எதிர்மறை நிகழ்வு என்பதைச் சொல்லி, அந்த எதிர்மறை நிகழ்வை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்று மறையுரை நிகழ்த்தினேன்.

ஆனால், இந்த இறுதி வாக்கியம் நான் மறையுரையில் சொல்லிய அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. எப்படி?

பசி (hunger) என்பது எப்படி ஒரு எதிர்மறை நிகழ்வோ, அப்படித்தான் 'மக்கள் இயேசுவை அரசராக்க நினைப்பதும்' (dependence) ஒரு எதிர்மறை நிகழ்வு. ஆனால் முதல் எதிர்மறை நிகழ்வை நின்று, சமாளித்த இயேசு ஏன் இரண்டாவது எதிர்மறை நிகழ்வைக் கண்டவுடன் ஓடுகிறார்?

சிலர் சொல்வார்கள். இயேசு தன்னை அரசனாக்க நினைத்தது கிடையாது. அவர் ரொம்ப தாழ்ச்சியானவர். அவருக்கு இந்த மணிமகுடம் எல்லாம் பிடிக்காது என்று.

ஆனால், பின் சிலுவையில் 'நீர் அரசுரிமையோடு வரும்போது' என்று சொன்ன கள்வனின் வார்த்தைகளை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்? அப்போது சிலுவையிலிருந்து தப்பி ஓட முடியாது என்பதாலா?

இயேசு ஒரு கடவுள் என்பதை ஓரங்கட்டிவிட்டு மேற்காணும் இறைவாக்குப் பகுதியைப் பார்ப்போம்.

நம்ம ஊர்ல திடீர்னு எல்லாரும் கூடி வந்து நம்மை அரசராக்க அல்லது ஒரு பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆக்க, அல்லது மாநகர மேயர் ஆக்க, அல்லது ஒரு எம்எல்ஏ, எம்பி ஆக்க நினைக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நாம என்ன செய்வோம்? துணிச்சல்காரர்கள் என்றால் 'சரி' என்போம். பயமாக இருந்தது என்றால் 'இல்லை' என்போம். ஆனால், அதற்காக வீட்டை விட்டு ஓடுவோமா என்ன? ஓடினால் நம்மை வந்து பிடித்துவிடமாட்டார்களா என்ன?

நான் ஒரு பிரசிடென்ட் அல்லது மேயர் ஆவதற்கு என்ன தடையாக இருக்கிறது? பயம்!

நான் எப்படி சமாளிப்பேன்? என்ற பயம்.

மற்றவர்களின் தன்மேல் சார்ந்திருக்கிறார்கள் என்பது இயேசுவுக்கு பயமாக மாறிவிடுகிறது.

ஆக, ஒருவரின் பசியைக் கூட நாம் உணவளித்து தீர்த்துவிடலாம். ஆனால், அவர் என்மேல் சார்ந்திருப்பதை என்னால் சமாளிக்க முடியாது.

சின்ன உதாரணம். நான் பங்கு அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறேன். 20 வயது இளம்பெண் ஒருவர் வருகிறார். ரொம்ப பசிக்கிறது என்கிறார். நான் உடனடியாக ஒரு ப்ளேட் பாஸ்தா அல்லது ஒரு பீட்சா வாங்கிக் கொடுத்து அவரின் பசி தீர்த்துவிடுகிறேன். அடுத்த நாளும் வருகிறார். 'உங்களோடு பேசணும்' என்கிறார். பேசுகிறார். பின் தொலைபேசி எண் வாங்குகிறார். இரண்டு நாட்கள் கழித்து அவர் என்னிடம் வந்து, 'அதெப்படி எனக்கு பசின்னு சொன்னவுடன் சாப்பாடு வாங்கிக் கொடுத்துட்டீங்க! நீங்க ரொம்ப க்ரேட்' அப்படி, இப்படின்னு சொல்றார். பின் மறுபடியும் இரண்டு நாள் கழித்து வந்து, 'நான் ஃபோன் பண்ணும்போது ஏன் எடுக்கல! நான் தூங்கவே இல்லை தெரியுமா' என்று சொல்ல ஆரம்பிக்கிறார். எனக்கு எப்படி இருக்கும்? எங்கேயாவது ஓடிப்போய் ஒளிந்து கொள்ளணும்போல இருக்கும்.

அவரின் பசிக்கு என்னால் உணவளிக்க முடிகிறது. ஆனால், அவர் என்னைச் சார்ந்திருக்க நினைக்கிறார் என்பது எனக்கு பயத்தைத் தருகிறது. ஒருவர் என்னைச் சார்ந்திருக்கிறார் என்றால், நான் அவர்மேல் பொறுப்புணர்வு (responsibility) காட்டுவது அவசியம். ஆக, சார்ந்திருத்தலும், பொறுப்புணர்வும் கைகோர்த்தே செல்கின்றது.

இயேசு பொறுப்புணர்வு இல்லாமல் தப்பித்து ஓடுகிறார். இப்படித்தான் நான் சொல்வேன்.

ஆனால், இதைவிட பெரிய பொறுப்புணர்வு அவருக்கு இருந்ததால், இந்த அப்பம் கொடுக்கும் சாதாரண சார்புநிலையை அவர் தள்ளிவிடுகிறார்.

ஒருசிலர் குடும்பங்களில் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது சில அருட்பணியாளர்கள் தங்கள் பணியில் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள் என்று சிலர் புலம்புவார்கள்.

இவர்களுக்கு தங்கள் பொறுப்பைவிட வேறு பொறுப்பு வந்துவிட்டது என்றே அர்த்தம். ஆகையால் ரொம்ப கவனம்.

நான் அருட்பணிநிலைக்குத் தயாரித்துக்கொண்டிருந்தபோது இப்படி தேவையற்ற பொறுப்புணர்வுகளை நானாக ஏற்றுக்கொண்டு, பின் ரொம்பவே அவதிப்பட்டேன். இப்படியாக அடுத்தவர்கள் என்னைச் சார்ந்திருப்பதற்கு நானே இடத்தைக் கொடுத்துவிட்டு, பின் பொறுப்பு என வந்தபோது நான் ஓடி ஒளிந்தேன். பொய் சொன்னேன். என் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை.

இன்று மேற்காணும் இறைவாக்கு என் அருட்பணி வாழ்வுக்கு ஒரு நல்ல பாடம் என்றே உணர்கிறேன்.

ஒருவர் என்னைச் சார்ந்திருக்க விழைகிறார் எனத் தெரிய ஆரம்பித்தால், உடனே தனிமையான இடத்திற்கு ஓடிவிடு. ஏனெனில், நீ சார்ந்திருக்கும் கடவுள் அங்கே காத்திருக்கிறார் என்பதுதான் இயேசு வைக்கும் சவாலாக இருக்கிறது!

உடனே மற்றொரு சோதனை வரும். என் ஃப்ரண்ட் ஃபாதருக்கு நிறைய கேர்ள்ஃபிரண்ட்ஸ். அவனெல்லாம் நல்லாதானே இருக்கான். நல்லாதான் பூசை வைக்கிறார். நல்லாதான் செபம் செய்றார். ஆக, நானும் அவனைப்போல இருந்தால் என்ன! உறவுகள்னா பிரச்சினை வரத்தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிக்கணும் என்று அவன் அட்வைசும் கொடுக்கிறான்.

என்னைச் சார்ந்து நிற்பவர்களை பொறுப்புணர்வோடு ஏற்றுக்கொண்டு, 'என்னை அரசனாக்குங்கள்!' என்று சொல்வதா, அல்லது அவர்கள் என்னைச் சார்ந்து நிற்க வருகிறார்கள் என்று பார்த்தவுடன் ஓடி ஒளிவதா? - இதுதான் கேள்விக்குறி.

இன்றைய நற்செய்தி சொல்வது என்ன?

எல்லா எதிர்மறை நிகழ்வுகளையும் நேருக்கு நேர் நின்று தீர்க்க வேண்டும் என்பது சால்பன்று. சில நேரங்களில் நாம் ஓடி ஒளிந்து கொள்ளத்தான் வேண்டும். நாம் ஓடுவதும் சில நேரங்களில் நமக்கு நல்ல தீர்வாக அமையும்.

Saturday, July 25, 2015

சந்தியாகு

இன்று தூய யாகப்பரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்', இஸ்பானியத்தில் 'ஹைமே', இத்தாலியனில் 'யாக்கோமோ' என அழைக்கப்படும் இவரின் லத்தீன் பெயர் 'சான்க்து இயாக்கோபு' - இதுவே மருவி சந்தியாகு அல்லது சந்தியாகோ என ஆகிவிட்டது.

தென்தமிழகத்தில் தங்கச்சிமடத்தில் இவருக்கு ஒரு சிற்றாலயம் உண்டு. 2010ஆம் ஆண்டு அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு குதிரையில் சவாரி செய்பவர் போல இருக்கும் இவர் நம் தமிழ்மரபின் அய்யனாரை நினைவுபடுத்துகிறார்.

இவர் திருஅவை பாரம்பரியத்தில் 'யாக்கோப் மயோர்' (பெரிய யாகப்பர்) எனவே அறியப்படுகின்றார். இவர்தான் செபதேயுவின் மகன். யோவானின் சகோதரர். அப்படியென்றால் 'யாக்கோப் மினோர்' (சின்ன யாகப்பர்) என்று சொல்லப்படுபவர் யார்? அவர் அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (காண். மத் 10:2).

இயேசுவுக்கு பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் இயேசுவின் 'பவர் ஹவுஸ்' போல அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்: பேதுரு, சந்தியாகு மற்றும் யோவான். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருக்கின்றனர். இந்த மூவரையும் தான் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் வைத்துக்கொள்கின்றார். மேலும் இந்த மூவர்தாம் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருக்கின்றனர்.

மேலும், இவர்தான் முதல் மறைசாட்சி என்கிறது பாரம்பரியம்.

இவர் தொடக்ககாலத்தில் திருச்சபையின் முக்கியத் தலைவராக இருந்திருக்கின்றார். மேலும் முதன்முதலாக கூட்டப்பட்ட எருசலேம் சங்கத்தின் தலைவராகவும் (திப 15) இருந்து பிறஇனத்தாருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

இவர் தன் திருச்சபைக்கு ஒரு திருமடலும் வரைகின்றார். இந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 'கம்போஸ்தெலா' என்றாலே 'உடலின் எலும்புகளின் மிச்சம்' என்பதே பொருள். இந்தச் சாலை 'சான் டியாகோவை நோக்கிய சாலை' என இன்றும் அழைக்கப்பட்டு நிறையப்பேர் ரோமிலிருந்தும், லூர்துவிலிருந்தும், ஃபாத்திமாவிலிருந்தும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். தங்களின் வாழ்வின் நோக்கம் தெளிவாகும் அல்லது தெளிவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் காட்சி கிடைப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.

சந்தியாகப்பர் நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள அருள்புரிவாராக!



Friday, July 24, 2015

இராங்கியம் சந்தனமாதா

நாளையும், நாளை மறுநாளும் இராங்கியம், உலகரட்சகர்புரத்தில் குடிகொண்டிருக்கும் சந்தனமாதாவின் திருநாள்.

இந்த ஆலயத்திற்குக் கடந்த ஆண்டு செல்லும் பாக்கியம் கிடைத்தது. நாங்கள் சென்றது யாருமில்லாத மதிய வேளை. நாங்கள் கோவிலுக்கு அருகில் செல்வதைப் பார்த்து, அந்தக் கோவிலின் சாவியைக் கொண்டிருக்கும் பெண் ஓடோடி வந்தார். (என்னதான் கடவுள் கோவிலுக்குள் இருந்தாலும் அதன் சாவி என்னவோ மனிதர்களிடம்தான் இருக்கின்றது!)

செபம் செய்துவிட்டுப் புறப்படும்போது, எல்லாருக்கும் சந்தனம் நிறைந்த குப்பி ஒன்றைக் கொடுத்தார். கொடுப்பதற்கு முன் ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்தார். அது தீர்த்தம் என்றே நினைக்கின்றேன். அது தீர்த்தம் இல்லையென்றாலும் பரவாயில்லை. அதற்கு என்ன அர்த்தம் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒருவேளை சந்தனமும், தண்ணீர் இணைந்தே செல்வதால்தான், இரண்டும் கொடுக்கப்படுகிறதோ என நினைத்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஐ தூய சுவக்கின்-அன்னாள் திருநாள் என்று நாம் கொண்டாடுகிறோம். பாரம்பரிய நம்பிக்கையின்படி இவர்கள்தாம் இயேசுவின் தாய் மரியாளின் பெற்றோர். இயேசுவின் அம்மா வழி தாத்தா-பாட்டி.

இராங்கியம் கோவிலில் இருக்கும் சந்தனமாதாவின் பெயர் 'சாந்த். அன்னா' என்பதன் மரூவாகத்தான் இருக்கும். 'சாந்தன்னா' என்பது 'சந்தன்னா', 'சந்தனா' என மாறியிருக்கலாம். ஏனெனில் இந்த ஆலயத்தின் மையமாக இருப்பது மாதா அல்ல. மாதாவின் அன்னையே. ஆக, சந்தனமாதா என்ற பெயரில் 'மாதா' என்பதை 'மரியாள்' என்று எடுத்துக்கொள்ளாமல், 'மாதா' என்பதை 'அம்மா' என எடுத்தால், 'சந்தன அம்மாள்', 'சாந்த். அன்னம்மாள்' என அன்னம்மாளின் பிரசன்னம் தெளிவாகிறது.

இந்த வாரம் வெளியான ஆனந்த விகடனில் மதுரையின் தென்கிழக்கேயிருக்கும் மணலூரில் 2500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த குடியிருப்பு பகுதி ஒன்றை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி குடும்பத்திலும், சமுதாயத்திலும் நம் தமிழ்மரபில் முதன்மையானவர்களாக இருந்தவர்கள் பெண்கள்தானாம். பெண்கள் தான் குடும்பத்தையும், ஊரையும் நிர்வகித்தனர். குடும்பத்தலைவிகள் தாம் சொத்துக்களை உரிமையாக்கிக்கொள்ளவும் முடியும்.

ஆக, பெண்களின் அரசியாம் மரியாளின் தாய்க்கே கோவில் எடுக்கத் துணிந்திருக்கின்றனர் இராங்கியத்து இனியவர்கள்.

நம்மைப் பற்றி அதிகம் நம் தாய்க்குத்தான் தெரியும். அவளின் வயிற்றில் நாம் 10 மாதங்கள் இருந்தோம். அவளின் மார்பில் பால் குடித்தோம். மடியில் படுத்துறங்கினோம். நம் முதல் பல், நம் முதல் சிரிப்பு, நம் முதல் அழுகை, நம் முதல் வார்த்தை என அனைத்தையும் பார்த்தவள் அவள்தான். அவள் நம்மைக் குளிப்பாட்டியவள். நாம் அழுக்காக்கிய ஆடைகளைத் துவைத்தவள். அவள்தான் நம் எல்லாம்.

இயேசுவுக்கு இந்த எல்லாமாக இருந்தவர் மரியாள். மரியாளுக்கு எல்லாமாக இருந்தவர் அன்னம்மாள்.

ஆக, அன்னம்மாளின்வழி மரியாளையும், மரியாள்வழி இயேசுவையும் நாம் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல முடிகிறது.

சுவக்கீன் மற்றும் அன்னம்மாளின் திருநாளைக் கொண்டாடும் இந்த நாட்களில், தண்ணீர் போல சுவக்கீனையும், சந்தனம் போல அன்னம்மாளையும் நினைத்துக்கொள்வோம். இந்த இரண்டையும் கலந்து நம் நடு நெற்றியில் பொட்டிடும்போது, நம் தாத்தா-பாட்டி என்னும் வேர்களை நினைத்துப் பார்க்கலாமே!

உலகரட்சகர்புரம் சந்தனமாதா திருத்தலம் பற்றி அறிய பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடலாம்:

Santhana Matha



Thursday, July 23, 2015

மதலேன் மரியாள்

நேற்று மகதலா நாட்டு மரியாளின் (மதலேன் மரியம்மாளின்) திருநாள்.

நேற்றைய திருப்பலியில் மறையுரையாற்றிய என் பங்குத்தந்தை, 'ஒரு பாவி! ஒரு விபச்சாரியின் திருநாள்...!' என்று தொடங்கினார். என்னையும், என் பங்கு மக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது இந்த வாக்கியம்.

'மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும், காலேஜ்ல படிக்கிற பொண்ணும் ஒன்னு' என்று சொல்வார்கள். ஏன்னா, இந்;த இரண்டும் காணாமல் போனாலும் கண்டவர்கள் கண்டமாதிரி பேசுவார்கள்.

ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மாதிரி பேசும் ஒரு நபர்தான் நம்ம மதலேன் மரியம்மாள்!

இந்த மதலேன் மரியம்மாள் யார்?

'மரியா' என்பது எபிரேய மக்கள் நடுவில் வழங்கப்பட்ட பொதுவான பெயர். நம்ம ஊர் 'ராஜா' மாதிரி. மோசேயின் சகோதரி 'மிரியம்' என்ற பெயர்தான் 'மரியா' என வழங்கப்பட்டது.

இரண்டாம் ஏற்பாட்டில் மொத்தம் 5 மரியாக்கள் உள்ளனர்:

1. இயேசுவின் தாய் மரியாள் (மத் 2:11) அல்லது யோசேப்பின் மனைவி மரியாள் (மத் 1:20)

2. யாக்கோபு மற்றும் யோசேயின் தாய் மரியாள் (மத் 27:56, மாற்கு 15:40)

3. இலாசரின் சகோதரி அல்லது மார்த்தாவின் சகோதரி மரியாள் (யோவா 11:1)

4. கிளயோப்பாவின் மனைவி மரியாள் (யோவா 19:25)

5. மகதலா நாட்டு மரியாள் (யோவா 20:1) - இவரை 'மரியா மதலேன்' என லூக்காவும் (24:10), 'மகதலா மரியாள்' என மாற்கும் (16:9) அழைக்கின்றனர். மேலும் இவரிடமிருந்து ஏழு பேய்கள் ஓட்டப்பட்டது என்ற புதிய தகவலையும் தருகின்றார் மாற்கு.

மேலும், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என்ற ஒருவரைப் பற்றி யோவான் தன் நற்செய்தியில் (8:1-11) குறிப்பிடுகின்றார். இந்தப் பகுதியை விவிலியத்தில் பார்த்தால், முன்னும், பின்னும் அடைப்புக்குறி இடப்பட்டிருக்கும். எதற்காக இந்த அடைப்புக்குறி? இந்த இறைவாக்குப் பகுதி பல மூலப் பிரதிகளில் காணப்படவில்லை. ஆகவே, இதை யாராவது பின்னால் சேர்த்திருக்கலாம். அல்லது முன்னாலேயே அழித்திருக்கலாம்.

இந்ந ஆறு பேரில் யார்தான் மதலேன் மரியாள்?

ஐந்தாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நபரே மதலேன் மரியாள். இவர்தான் விபச்சாரத்தில் பிடிபட்டவர் என்பதற்கு சான்றுகள் இல்லை. இரண்டு பேரும் ஒன்றுதூன் என்று சொல்வது, 'இராத்திரியும் விளக்குத்திரியும் ஒன்றுதான்' என்று சொல்வது போல இருக்கும்.

சர்ச்சைகளின் பெண்

சர்ச்சைகள் மனிதர்களை மட்டும் ஆட்டுவிப்பவை அல்ல. அவைகள் கடவுள்களையும் ஆட்டிப்படைக்கின்றன.

இரண்டாம் ஏற்பாட்டு நூலில் வரும் இந்த கேரக்டர் வரலாற்றில் மிக அதிகமான ஓவியங்களிலும், நூல்களிலும், நாடகங்களிலும், பின் திரையுலகிலும் இடம்பெற்றுள்ளார்.

நிக்கோஸ் கசன்ட்சாகிஸ் அவர்கள் எழுதிய 'கடைசி சோதனை' (The Last Temptation) அல்லது 'கிறிஸ்துவின் கடைசி சோதனை' (1960 ஆங்கிலத்தில்). இதுவே 1988ல் சினிமாகவும் வந்தது. இந்தப் புதினத்தின் படி சிலுவையில் அறையுண்ட இயேசுவுக்கு ஒரு இறுதி சோதனை வருகிறது. என்ன சோதனை? எதற்காக இப்படி மனுக்குலத்திற்காக துன்பப்பட வேண்டும்? நான் ஏன் மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாக இருக்கக் கூடாது? சிலுவையில் தன் ஆணிகளைக் களைந்துவிட்டு இறங்கி வருகின்றார். மதலேன் மரியாளைத் திருமணம் செய்கின்றார். குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றார்.

டான் பிரவுன் எழுதிய 'டா வின்சியின் குறியீடு' (The Da Vinci Code) (2003). இது திரைப்படமாக 2006ல் வெளிவந்தது. இந்தப் புதினத்தின்படி இயேசுவின் இரத்த உறவு இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த உறவு மதலேன் மரியாள் வழியாக வந்தது. மதலேன் மரியாளும் இயேசுவின் இறுதி இராவுணவில் இருந்தார். இதை லெயோனார்டோ டா வின்சி குறிப்பாக தன் 'இறுதி இராவுணவு' ஓவியத்தில் உணர்த்தியிருக்கின்றார்.

இந்த இரண்டு புதினங்கள் வரலாற்று உண்மைகளைக் கொண்டிருக்கின்றனவா, அல்லது இதை எழுதிய ஆசிரியர்களின் கற்பனையா என்பது நீங்களும், நானும் எந்த இடத்தில் இருந்து இதை வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

மேலும், 'ஏற்றுக்கொள்ளப்படாத எழுத்துக்கள்' என்று சொல்லப்படும் நிறைய பிரதிகளில், குறிப்பாக 'தோமையாரின் நற்செய்தி,' 'மரிய மதலேனாளின் நற்செய்தி' நூல்களில் 'இயேசு மரிய மதலேனாளை அடிக்கடி உதட்டில் முத்தமிட்டார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதைப் புரிந்து கொள்வதற்குத் தடையாக பெரிய கலாச்சாரத் தூரம் இருக்கின்றது. அதாவது, அன்பு அல்லது நட்பு எப்படி அந்த நாட்களில் பரிமாறப்பட்டது என்பதை நாம் இன்று பயன்படுத்தும் அடையாளங்களை வைத்துப் புரிந்து கொள்ள முடியாது.

அன்பே மதலேன் மரியாள்!

நேற்றைய வாசகங்கள் அனைத்தும் அன்பை மையமாகக் கொண்டிருந்தன. மணத்துறவு என்பதும், கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பதும் யூத சிந்தனைக்கு எட்டாதவை. ஆண்-பெண் பேதம் உருவாகக் காரணம் கிரேக்க தத்துவம். மனிதனை பொருள் மற்றும் ஆவி என இரண்டாகப் பிரித்து, பொருள் சார்ந்த அனைத்தும் தீயது என கற்பித்தது கிரேக்கத் தத்துவம். ஆக, உடல் மற்றும் அதன் உணர்ச்சிகள், சுரப்பிகள் அனைத்தும் தீயவை என்ற சிந்தனை, இந்த கிரேக்கர்களைப் பின்பற்றிய அகுஸ்தினார் மற்றும் அக்வினாஸின் வழியாக இன்றுவரை தொடர்கிறது. ஆனால் அன்று இருந்த 'ஐரேனியு' என்ற எழுத்தாளர் சற்று வித்தியாசமாக, 'மனிதத்தில்தான் இறைமையின் நிறைவு' இருக்கிறது என மனிதத்தையும், மனித உடலையும், அதன் உணர்ச்சிகளையும் மேலான நிலைக்கு உயர்த்தினார். இன்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் புதிய சுற்றுமடல் வழியாக, கிரேக்க சிந்தனை ஏற்படுத்திய தாக்கம், இயற்கையையும் சீரழித்துவிட்டது என்று சொல்கின்றார்.

அன்பு செய்வது தவறு என்று எந்தக் கடவுளும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?

முதல் ஏற்பாட்டு மற்றும் இரண்டாம் ஏற்பாட்டு மீட்பு நிகழ்வுகள், மணத்துறவு மேற்கொண்ட ஆண்களிடம் அல்லது தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்த பெண்களிடம் தொடங்கவில்லை. மாறாக, சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்குகிறது. ஆக, ஆண்-பெண் உறவும், அதன் வழி உருவாகும் குடும்பமும் தவறானது அல்ல.

இன்று, ஆண்-பெண் அன்பு என்பது மருவி, ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-வளர்ப்பு பிராணி, பெண்-வளர்ப்பு பிராணி, பெரியவர்-குழந்தை என்று யாரும், யாரையும் அன்பு செய்யலாம், திருமணம் முடிக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நேரத்தில் இயேசுவும், மதலேன் மரியம்மாளும் திருமண உறவில் இணைந்திருந்தார்களா, அல்லது நண்பர்களா, அல்லது நலவிரும்பிகளா என்று கேட்பது பொருந்தாததாகவே இருக்கிறது.

ஆனால், பெண் என்பவள் தீட்டு அல்லது தகாத பொருள் அல்ல. அப்படி நினைப்பது அவரைப் படைத்த கடவுளையே தீட்டு என்று சொல்வது போல இருக்கும்.

மரியாள் மதலேனம்மாள் ... ... ...

எல்லாப் பெண்களைப் போலவே ... ... ...

என்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்! இருப்பார்!

புனித மரியாள் மதலேனம்மாளே!

எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!


Wednesday, July 22, 2015

16 வயதினிலே

நம்ம ஜோதிகா நடிச்ச '36 வயதினிலே' படம் பார்த்தாச்சான்னு எல்லாரும் கேட்கிறாங்க. 'நமக்குன்னு ஒருத்தர் இந்த உலகத்துல இருக்கார் அப்படின்னு நமக்குத் தெரிஞ்சா நம்மால் எதுவும் சாதிக்க முடியும்' என்பதுதான் இந்தப் படத்தின் பஞ்ச் லைன். எதற்காக '16 வயதினிலே' படத்துல இந்த பஞ்ச் லைனை வைக்காமல், '36 வயதினிலே'யில் வைத்திருக்கிறார்கள்.

'எனக்குனு யாரு இருக்கா?' என்ற இந்தக் கேள்வி நமக்கு 16 வயதினிலே வருவதை விட, 36 வயதினிலும், 56 வயதினிலும்தான் வருகின்றது.

நம் வாழ்வின் வளர்ச்சி அல்லது வளர்பிறை முடிந்து, தேய்பிறை தொடங்கும் வயதுதான் 36. மேலே ஏறிச்சென்ற நாம் கீழே இறங்கத் தொடங்கும் நேரம் அது. நாம் திரும்பி இறங்கி வர, வர நாம் ஏறிச்சென்ற பாதையும், அதில் மற்றவர்கள் ஏறிச்செல்வதும் தெரிகிறது. நம்மை இறந்தகாலம் பற்றிக்கொள்கிறது. அது நோக்கி நம் மனம் ஓட ஆரம்பிக்கிறது. 'நான் இன்னும் இளமைதான்!' என்று நாம் 'பொய்' சொல்லத் தொடங்குகிறோம். விழுந்த முடிகளை எப்படியாவது ஒட்ட வைக்கலாமா என நினைக்கிறோம். நரைமுடியை கறுப்பாக்கவும், கன்னத்தில் விழும் கோடுகளை ரோஸ்பவுடர் கொண்டும் அடைக்க முயற்சிக்கிறோம். கண்களில் கருவளையம், கைகளில் தளர்ச்சி, தோலில் சுருக்கம் என தேய்பிறையை நம் எல்லா உறுப்புகளும் நினைவுபடுத்த ஆரம்பிக்கின்றன. இதுவரை நம்முடன் ஓடிவந்த உடல், நம்மை பின்னுக்கு இழுக்கிறது. நம் மூக்கின்மேல் மூக்குக் கண்ணாடி அமர்ந்து கொள்கிறது. நம் நண்பர்களோடு நின்று ஆண்டாள் கோயில் தேருக்கு வடம் பிடித்த கை, இன்று மினரல் வாட்டர் பாட்டிலைக் கூட திறக்க முடியாமல் வலுவிழந்து நிற்கிறது.

ஆக, உடலும் நம்மோடு இல்லை. உணர்வுகளும் நம்மோடு இல்லை. ஆற்றலும் நம்மோடு இல்லை. இந்த நேரத்தில் என்னோடு யார் இருக்கிறார் என்ற கேள்விதான் எழுகிறது. நம் மனம் இந்தக் கேள்விக்கு விடையாக நம் உற்றவரையோ, நண்பரையோ வைத்துக்கொள்ளத் துடிக்கிறது.

என்ன ஃபாதர் 16 வயதினிலேனு தலைப்பு போட்டுட்டு, 36 வயதினில் இருக்கிறீர்கள் எனக் கேட்கிறீர்களா?

கடந்த ஞாயிறன்று 16 வயது இளவல் ஒருவர் அதிகமான போதை மருந்து உட்கொண்டதால் இறந்து போனார்.

இன்று 17 வயது இளவல் ஒருவர் தன் வயதையொத்த மற்றவர் தன்னைவிட அழகாயிருந்ததால் பொறாமை கொண்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்.

நேற்று பதின்மரின் (13 வயதுமுதல் 19 வயதுவரை) செக்ஸ் வாழ்க்கை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பதின் பருவத்தினர் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது 40 சதவிகிதம் குறைந்துவிட்டது எனச் சொல்கிற ஆய்வு, பசங்க திருந்திட்டாங்களா? அல்லது வீரியம் இழந்துவிட்டார்களா? என்ற கேள்வியோடு முடிகிறது.

பைபிளிலும் நிறைய 16 வயதினிலே நிகழ்வுகள் இருக்கின்றன.

16 வயதினில்தான் யோசேப்பு எகிப்தின் ஆளுநராகின்றார்.

யோசுவா படைத்தலைவன் ஆகின்றார்.

சாம்சன் சிங்கத்தின் வாயைப் பிளக்கின்றார்.

ரூத்து தன் மாமியாரைப் பின்பற்றிச் செல்கின்றார்.

தாவீது அரசனாகின்றார்.

சாலமோன் கடவுளிடம் ஞானம் கேட்கின்றார்.
மரியா இறைத்திட்டத்திற்கு ஆம் சொல்கிறார்.

திருமுழுக்கு யோவான் 'மனந்திரும்புங்கள்' என்ற நற்செய்தியை அறிவிக்கிறார்.

இயேசு எருசலேம் ஆலயத்தில் விவாதம் செய்கின்றார்.

லூக்கா மருத்துவராகிறார்.

சலோமி நடனமாடி ஏரோதை மகிழ்விக்கிறாள்.

இவர்கள் 16 வயதினிலேயே சாதிக்க வேண்டியதைச் சாதித்துவிட்டார்கள்.

இவர்கள் 36 வயதினில் எப்படி இருந்தார்கள் என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை. சிலர் வழிமாறினர். சிலர் 36வயதையே எட்டவில்லை.

இன்று பதின்மர் (teenagers) மற்றும் வளரிளம்பருவத்தினர் (adolescents) மிக வேகமாக வளர்கின்றனர். இந்த வளர்ச்சிக்கு 36 வயதினராலும், 56 வயதினராலும் ஈடுகொடுக்க முடிவதில்லை.

இந்த வளர்ச்சி சமுதாயத்தின் வீக்கமாக இருந்துவிட்டால் அது அவர்களுக்கும், சமூகத்திற்கும் ஆபத்தே.

16 வயதினில் வாழ்வு இனித்தால், 36 வயதினிலும், 56 வயதினிலும் இனிக்கும்!


Tuesday, July 21, 2015

கையை நீட்டி

இன்று நாம் திருப்பலியில் வாசித்த முதல் வாசகத்தில் யாவே இறைவன் மோசேயை நோக்கி, 'கையை கடல் மேல் நீட்டு!' என்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்கள் பக்கம் 'கையை நீட்டி', 'இவர்களே என் தாயும், என் சகோதரர்களும்' என்கிறார்.

பெரியவர்களிடம் பேசும்போது கையை நீட்டிப் பேசக் கூடாது என்பார்கள்.

ஏன்?

கையை நீட்டுதல் என்பது அதிகாரத்தின் அடையாளம். ஆக, பெரியவர்களை நோக்கி நாம் கைகளை நீட்டும்போது அவர்கள் மேல் அதிகாரம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறோம்.

நம்ம ஊருல ஒரு டீச்சர் மாணவனை அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். மாணவனின் தாய் கோபப்பட்டு தெருவில் சத்தமிட்டுக் கொண்டு வரும்போது என்ன சொல்வார்?

'ஏன்டி! உனக்கு எவ்வளவு தைரியம்னா என் புள்ளைமேல கையை நீட்டுவ!'

மோசே கடலின் மேல் கையை நீட்டியவுடன், கடல் கட்டுப்படுகிறது. உலர்ந்த தரை உண்டாகிறது.

இயேசு தன் சீடர்கள் தன்னவர்கள் என நினைத்ததால் அவர்களை நோக்கி தன் கையை நீட்ட அவரால் முடிகிறது.

இன்றும் நாம் கையை நீட்டத்தான் செய்கிறோம்.

எப்போது?

நம்மை உரசி ஓவர்டேக் செய்து செல்லும் ஆட்டோக்காரனை முறைத்து, கெட்ட வார்த்தை சொல்லிக் கொண்டு!

அல்லது

வீட்டில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டு 'கனிமொழி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்' என்ற செய்தியிலிருந்து 'ரெட்டை வால் குருவி'க்கு மாறும்போது!

அல்லது

இனி பட்டன்களே தேவையில்லை, எல்லாம் 'டச்'தான் என நாம் அப்டேட் செய்த புதிய செல்ஃபோனின் கொரில்லா கிளாஸ் திரையை நோக்கி!

அல்லது

'ஆண்ட்டி! எனக்கு இன்று பிறந்தநாள்! அங்க்கிள்! நான் இன்று காலேஜ் போறேன்!' என்று நம் முன் வந்து நிற்கும் நம் நண்பர்களின் குழந்தைகளை ஆசீர்வதிக்க!

அல்லது

கட்டியணைக்க,

அல்லது

திருட

அல்லது

தேட

அல்லது

அடிக்க

என நாம் கைகளை நீட்டிக் கொண்டே இருக்கின்றோம்.

கைகளை நீட்டுவதால் சிலவற்றில் அதிகாரம் பெறுகிறோம்.

அதிகாரம் இருப்பதால் சிலவற்றில் கையை நீட்டுகிறோம்.


Monday, July 20, 2015

கடவுளின் கருணை

கடந்த மாதம் 20ஆம் தேதி நற்செய்தியாளர் லூக்காவைப் பற்றி டேய்லர் க்ளாட்வெல் அவர்கள் எழுதிய வரலாற்றுப் புதினம் Dear and Glorious Physician படிக்க ஆரம்பித்தேன். வெளியூர் பயணங்களால் அதை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன் அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புதினத்தை வாசிக்காமல் அதைப் பற்றிய விமர்சனம் அல்லது திறனாய்வுக் கட்டுரையை மட்டும் வாசித்து புதினத்தைப் புரிந்து கொள்ளலாமா என்ற சின்ன சபலமும் வந்தது. No shortcut to great things in life. அதனால், வாசித்துவிடுவது என முடிவெடுத்தேன்.

பெரிய புத்தகம். மலைப்பாக இருந்தது.

'கொஞ்சம், கொஞ்சமாகத் தின்றால் பனைமரத்தையும் தின்னலாம்!' என்பது மலையாளத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு பழமொழி. இதில் ஒரு நல்ல மேலாண்மை கருத்து இருந்தாலும், சேர நாட்டின் தென்னை மரங்களை வளர்த்தெடுப்பதற்காக, நம் பாண்டி நாட்டின் பனை மரங்களை அழிக்க சேர அரசு (கேரள அரசு) ஏற்படுத்திய பழமொழியாக இது இருக்குமோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்தப் பழமொழியை அப்படியே புத்தகத்திற்குப் பொருத்தி, தினமும் 40 பக்கங்கள் எனத் திட்டமிட்டு ஓடிக்கொண்டிருக்கிறேன்.

லூக்கா நற்செய்தி மற்ற நற்செய்திகளை விட ஒரு விதத்தில் அதிகம் மாறுபடுகிறது. எதில்? இந்த நற்செய்தியில் எல்லாருக்கும் இடமுண்டு? இவர்களுக்கெல்லாம் இடமில்லை என்று சொல்லப்பட்ட பெண்கள், புறவினத்தார், அடிமைகள், தொழுநோயாளர்கள், இன்னும் பலர்.

மேலும், லூக்கா இப்படித் தன் நற்செய்தியை எழுதக் காரணம் அவரிடமிருந்த இந்த நல்ல குணமே.

நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தானே நாம் நம் எழுத்துக்களில் நம்மை வெளிப்படுத்துகிறோம்!

வருகின்ற டிசம்பர் 8 அன்று 'கருணையின் யூபில ஆண்டை' தொடங்கவிருக்கின்றோம். 'உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல' (லூக்கா 6:36) என்பதுதான் இந்த யூபிலி ஆண்டின் மையக்கருத்து.

கருணை ஆண்டை ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், 'இறைவனின் பிரசன்னத்தில் எல்லா மனிதர்களுக்கும் இடம் இருப்பது போல, நம் வாழ்விலும், திருஅவை வாழ்விலும் எல்லார்க்கும் இடம் இருக்க வேண்டு;ம்.'

யூபிலி ஆண்டிற்காக வத்திக்கான் ஒரு சின்னத்தையும் (logo) ('பதாகை' என்றும் சொல்லலாம்) வெளியிட்டுள்ளது.

இதை உருவாக்கியவர் இயேசுசபை அருட்பணியாளர் அருட்திரு. மார்க்கோ ரூப்னிக் அவர்கள். இவர் சிறுகற்களைக் கொண்டு ஓவியங்கள் வடிவமைப்பதில் திறமையானவர்.

இரண்டு பேர் இருக்கின்றனர் இந்த லோகோவில். ஒருவர் நின்று கொண்டிருக்கின்றார். மற்றவர் நிற்பவரின் தோள்மேல் கிடக்கின்றார்.

முதலில், இந்த ஓவியத்தில் இயேசுவும், அவரின் தோளில் இருக்கும் ஓர் ஆடும் என நம் மனம் கற்பனை செய்கிறது. ஆக, நல்லாயன் இயேசு தன் கருணையால் தன் மந்தையை தன் தோளில் சுமக்கின்றார் என்பது முதல் கருத்து. இந்த ஓவியத்தில் நிற்பவர் இயேசுதான் என்பதைக் காட்டும் மற்றொரு அடையாளம் நிற்பவரின் கைகளிலம், பாதங்களிலும் இருக்கும் சிலுவைக் காயங்கள்.

இரண்டாவதாக, நிற்பவர் கடவுளாகிய தந்தை. தோளில் கிடப்பவர் ஆதாம். இதில் சிறப்பு என்னவென்றால், ஆதாமின் ஒரு கண்ணும், கடவுளின் ஒரு கண்ணும் இணைந்து இரண்டு கண்களாக இல்லாமல் ஒரே கண்ணாக இருப்பது. (இதை இந்து ஆலய சுவர்களில் உள்ள நந்திகளிலும் பார்க்கலாம். சுவர்கள் இணையும் மூலையில் உள்ள நந்திக்க தலை ஒன்றாக இருக்கும். ஆனால், உடல்கள் இரண்டாக இருக்கும். இரண்டு சுவர்கள் பக்கம் நின்று பார்த்தாலும் நந்தியின் தலை அழகாகப் பொருந்தியிருக்கும்) ஆக, கடவுளின் கண்கள் போல நமது கண்களும் இருந்தால் நாமும் கருணையுள்ளவர்களாக இருப்போம் என்பதே ஓவியம் சொல்லும் யூபிலி ஆண்டுப் பாடம்.

'கருணை உன் வடிவல்லவா, கடவுள் உன் பெயரல்லவா!' என்ற தமிழ் கிறிஸ்தவ பாடலும், கடவுளை கருணை என்றே வர்ணிக்கிறது.

கடவுளின் கருணை முகத்தை நமக்கு அடையாளம் காட்டியதில் லூக்காவுக்கு சிறந்த பங்கு உண்டு.

மணிமண்டபம்

மெல்லிசை மன்னரின் இறப்பு செய்தி கேட்டவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த திரு. ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம். 'மெல்லிசை மன்னருக்கு அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும்' என்று சொன்னார். அங்கிருந்த எல்லாரும் கைதட்டினார்கள்.

நேற்று சென்னையில் சில சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு வழக்கு போட்டிருக்கிறார்கள். யாருக்கு எதிராக? சிவாஜி சமூக நலப்பேரவைக்கும், நடிகர் சங்கத்திற்கும் எதிராக. என்ன வழக்கு? சிவாஜிக்கு அரசு மணிமண்டபம் கட்டக்கூடாது.

மணிமண்டபம் என்றால் என்ன?

கடைசியாக தமிழகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது மேதகு. பென்னிகுயிக் அவர்களுக்காக. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி ஐந்து மாவட்டங்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தன் சொந்த நாட்டிலிலுள்ள தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டிய அவருக்கு மணிமண்டபம் கட்டியது சரியா? அல்லது தவறா? தவறு என்றே நான் சொல்வேன். ஐந்து மாவட்டங்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக ஜெயா அவர்கள் மணிமண்டபத்தை வாக்களித்து அதை அரையும், குறையுமாகக் கட்டியும் முடித்து, அதன் தொடக்க விழாவை மதுரையில் நிகழ்த்தி தன் கல்லாவைக் கட்டிக்கொண்டார். ஆனால், இந்த மணிமண்டபம் கட்டுவதற்கு அரசு செலவிட்டதை, கேரள அரசுடன் அமர்ந்து முறையான பேச்சுவார்த்தை நடத்த செலவிட்டிருக்கலாம்.

சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா?

இதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.

தன் குடும்பத்திற்கு அவர் வேண்டியவர் என்பதாலும், தன் குடும்பத்தோடு திருமண உறவு இருக்கிறது என்பதற்காகவும், தன் சுயநலத்திற்காக திரு. கலைஞர் அவர்கள், சிவாஜிக்கு ஒரு சிலையை நிறுவி போக்குவரத்து பிரச்சினையை சென்னையில் இன்னும் அதிகமாக்கிவிட்டார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திடம் மணிமண்டபம் கட்டுவதற்காக அவரே இடத்தையும் இலவசமாகக் கொடுத்தார். இப்போது அரசு கட்டியும் தர வேண்டுமாம்? என்ன ஒரு முட்டாள்தனமான கோரிக்கை!

அவர் கலைக்குச் சேவை செய்தாராம்.

சேவை செய்தார்.

ஆனால் என்ன காசு வாங்காமலா செய்தார்.

'உலகம் சிரிக்கிறது' திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவின் உரையாடல்தான் நினைவிற்கு வருகிறது:

'இந்த வீட்டைக் கொத்தனார் கட்டினான், கட்டினான் என்கிறாயே? காசு வாங்காமலா கட்டினான்? சல்லிக் காசு குறைந்தாலும் கட்ட மாட்டேன் என்று சட்டம் பேசியல்லவா கட்டினான்!'

இன்னும் அரசே கட்ட வேண்டும் என்றால் அது எப்படி இருக்கும் தெரியுமா?

அரசாங்கம் அந்த மணிமண்டபத்திற்கு டெண்டர் விடும். அதில் கமிஷன். லஞ்சம். ஊழல். அப்புறம் சிவாஜி பயன்படுத்திய பொருட்கள் என்று சிவாஜி குடும்பத்தாரிடமே கொள்ளைக் காசு கொடுத்து வாங்கி, அதை மக்களுக்குத் திறந்து வைத்து, வருகின்ற காசை சிவாஜி குடும்பத்திடமே திரும்ப கொடுக்கும். ஆக, லாபம் சிவாஜி குடும்பத்தாருக்கே.

ஆக, மெல்லிசை மன்னரோ, செவாலியே சிவாஜியோ தங்களின் கலைத்திறனை வியாபாரமாக்கினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்கள் தங்கள் கலைக்கேற்ற சன்மானத்தையும், பெயரையும், புகழையும் பெற்றுவிட்டனர்.

நம்ம ஊருல உச்சி வெயிலில் நின்னு வயற்காட்டில் பாத்தி கட்டும் ஒரு மாடசாமியோ, கோவந்தசாமியோ செய்யும் வேலையை நானோ, நீங்களோ, சிவாஜியோ, எம்.எஸ்.வியோ செய்ய முடியாதுதான். அவரவருக்குரிய வேலையை அவரவருக்கிரிய திறமையில் நாம் எல்லாரும் செய்து முடிக்கின்றோம். இதில் ஒரு சில நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏன் மற்றவர்களின் வரிப்பணம் செலவிடப்பட வேண்டும்?

இப்படியே போனா அடுத்து நம்ம ஜெயாவுக்கும், கலைஞருக்கும் மணிமண்டபம் கட்டணும்.

நினைச்சாலே கோபம் வருதுல்ல!


Saturday, July 18, 2015

பெர்க்மான்ஸ் பாடல்கள்

நான்கு நாட்களுக்கு முன் மெல்லிசை மன்னரைப் பற்றி எழுதிய பதிவில் அருட்தந்தை. பெர்க்மான்ஸ் அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன்.

அவரின் பாடல்களை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் கேட்டிருக்கிறேன்.

ஆனால், அன்று அவர் வெளியிட்டுள்ள ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாகம் 1ஐ (Last volume is the 34th) முழுவதுமாகக் கேட்டேன். பாடல்களைக் கேட்டதோடு அல்லாமல் அவரைப் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றும் வாசித்தேன்.

ஆகஸ்ட் 3, 1949ல் சூசைப்பட்டி என்ற ஊரில் பிறந்த அவர், மதுரை உயர்மறைமாவட்ட அருட்பணியாளராக 1978ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்படுகின்றார். சிவகங்கை மறைமாவட்டம் தனியாகப் பிரிந்தது 1987ஆம் ஆண்டுதான். அவர் கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விலகிய ஆண்டு 1983. 1979-1980ல் அவர் திருவில்லிபுத்தூரில் உதவிப்பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். 1981வரை என் ஊரும் இந்தப் பங்கைச் சார்ந்ததே. அதன்பின் நாங்கள் இராஜபாளையத்தின் உறுப்பினராகிவிட்டோம். அவர் திருவில்லிபுத்தூரில் இருந்த ஆண்டு என் ஊருக்கு திருப்பலிக்கு வந்திருந்ததாகவும், அன்று இரவு என் மாமை (அம்மாவின் அம்மா, ஆச்சி) வீட்டில் சாப்பிட்டதாகவும் பின்னொரு ஆய்வில் தெரிந்தது.

இவ்வளவு ஆராய்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா?

அருட்திரு. பெர்க்மான்ஸ் (இன்றும் அவர் தன்னை அருட்தந்தை எனவே அழைக்கின்றார்!) அவர்கள் ஒரு தோட்டத்திலிருந்து தன்னைத்தானே பிடுங்கி, ஜெபத்தோட்டத்தில் தன்னை நட்டுக்கொண்டார்.

இது சரி அல்லது தவறு என்பது என்னுடைய விவாதம் அல்ல.

அப்படி அவர் தன்னைப் புதிய இடத்தில் நட்ட போது அவரின் உள்ளத்தில் என்ன போராட்டம் இருந்திருக்கும் என்பதையே நான் நான்கு நாட்களுக்கு முன் கேட்ட அவரின் முதல் வால்யூம் பாடல்கள் பிரதிபலிக்கின்றன.

வெள்ளை சட்டையாகப் போட்டுக்கொண்டிருந்துவிட்டு, திடீரென கறுப்பு சட்டையாக நான் போடத் தொடங்கியபோது, எனக்கே முதலில் விகாரமாக இருந்தது. அசைவ உணவாகச் சாப்பிட்டுவிட்டு திடீரென ஒருநாள் அசைவம் அனைத்தையும் விட்டுவிட்டு, சைவத்தை தழுவியது இரண்டு மாதங்கள் துன்பமாக இருந்தது. இவ்வளவு ஏன்? மெட்ரோவில் போவதற்குப் பதில் பேருந்தில் போகலாம் என முடிவெடுத்துவிட்டு, பேருந்து நிறுத்தம் வந்து, நிறுத்தத்திற்கு பேருந்து எதுவும் வராததால், 'நிற்போமா?' அல்லது 'போவோமா?' என முடிவெடுப்பதற்கே எனக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது நேற்று. இப்படி உடை, உணவு, சின்ன சௌகரியம் என ஒரு மாற்றத்திற்கு என்னை உட்படுத்தும்போதே என் உடலும், மனமும் துன்பப்பட ஆரம்பிக்கிறது.

ஆனால், 34 வருடங்கள் கத்தோலிக்க நம்பிக்கையில் பிறந்து, வளர்ந்து, ஆளாகி, அருட்பணியாளராகி அன்றலர்ந்த மலராக நின்ற அருட்திரு. பெர்க்மான்ஸ், ஜெபத்தோட்டதிற்கு இடம்பெயர்ந்தது ஒரு மிகப்பெரிய மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கு எதுவும் காரணமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அவர் முடிவெடுத்தார். தன் முடிவில் உறுதியாக நின்றார்.

நாம் ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தரைப் பார்க்கவில்லை. நிறையப் பேர் அந்த மார்ட்டின் லூத்தரையும், அமெரிக்காவின் மார்ட்டின் லூத்தர் கிங்கையும் கூட குழப்பி விடுவார்கள். ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தர், கத்தோலிக்க திருஅவையை விட்டு பிரிந்து சென்று தன் '95 கோட்பாடுகளை' (The Ninety-Five Theses) வித்தென்பர்க் ஆலயக் கதவுகளில் ஒட்டி வைத்த நிகழ்வு, திருஅவையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படக் காரணமானது. தான் செய்தது சரி என்று நினைத்துக் கொண்டிருந்த கத்தோலிக்கத் திருஅவையும் ஒரு நிமிடம் அமர்ந்து, 'நான் போகும் வழி சரிதானா?' என்று சுயஆய்வு செய்து பார்க்கும் வாய்ப்பாக இருந்தது.

மார்ட்டின் லூத்தர் போலவே, அருட்திரு. பெர்க்மான்ஸ் என்றாலும் மாற்றம்தான் நினைவிற்கு வரவேண்டும்.

வெறும் விவிலியம், வழிபாடு, நற்கருணை, மணிச்சத்தம், பங்கு வரிக்கட்டணம் என்றிருந்த தமிழகக் கத்தோலிக்கத்தை இசையால் தட்டி எழுப்புகின்றார். எல்லார் வாயிலும் தன் பாடலை முணுமுணுக்க வைத்து கடவுளை எல்லார் வீட்டிற்கும் கொண்டு வந்துவிட்டார்.

'விண்ணப்பத்தைக் கேட்பவரே' என்ற அவருடைய பாடல் இல்லாமல் நம் ஊரில் நடைபெறும் நற்கருணை வழிபாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

எளிய வார்த்தைகள். எளிய ராகம். எளிய மனிதர். அருட்திரு. பெர்க்மான்ஸ்.

ஜெபத்தோட்ட ஜெயகீதங்களின் முதல் பாகம் 10 பாடல்களையும் கேட்க முடியவில்லை என்றாலும், அதிலுள்ள 'ஆண்டவரே உன்பாதம்', 'இஸ்ரவேலே பயப்படாதே', 'இயேசு கூட வருவார்' என்ற மூன்று பாடல்களையாவது கேட்டுப்பாருங்கள்.

'ஆண்டவரே உன்பாதம்' கேட்கும்போது, அகுஸ்தினாரின் 'மனக்கிடக்கைகள்' (Confessions) வாசித்ததுபோன்ற உணர்வு.

இறையனுபவத்தின் புதிய மைல்கல் கிறிஸ்தவ இசை.

கிறிஸ்தவ இசையின் புதிய மைல்கல் அருட்திரு. பெர்க்மான்ஸ்.


Friday, July 17, 2015

ரமலான் பெருநாள்

நம் இசுலாமிய சகோதர, சகோதரிகள் இன்றைய நாளில் ரமலான் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

இசுலாம் நாட்காட்டியின்படி இன்றுதான் ரமலான் மாதம் நிறைவடைகின்றது. கிரகோரியன் நாட்காட்டியில் நாளை முடிவதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால், நம்ம ஊரிலும் இந்தக் குழப்பம் - ரமலான் இன்றா? அல்லது நாளையா?

ரமலான் என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன், இசுலாம் மதத்தின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படும் அவர்களின் முக்கிய போதனையை தெரிந்து கொள்வோம்.

இசுலாம் என்பது மதம் என்று சொல்லப்படுவதை விட மார்க்கம் என்றே சொல்லப்படுகிறது. திருக்குரான் இசுலாம் மார்க்கத்தினருக்கு ஐந்து கடமைகளை பரிந்துரை செய்கின்றது. ஒவ்வொரு இசுலாமியரும் தன் வாழ்நாளில் இந்த ஐந்துக் கடமைகளையும் நிறைவேற்றிய ஆகவேண்டும். இந்து ஐந்து கடமைகளே, இசுலாம் மார்க்கத்தின் ஐந்து தூண்கள்.

அவை யாவை?

1. ஷஹாதா (நம்பிக்கை அறிக்கை). கடவுள் ஒருவர் என்று அறிக்கையிடுவதும், அவரின் ஒரே இறைவாக்கினர் முகமது என நம்புவதும். இசுலாமைப் பொறுத்தவரையில் முகமது நபி ('நபி' என்றால் எபிரேயத்திலும், அராபிக் மொழியிலும் இறைவாக்கினர் என்று அர்த்தம்) அவர்கள் கடவுளின் தூதர்தான். அவர் கடவுள் அல்லர். 'லா இலஹா இல்லா-லஹ முகமதுன் ரசுலல்லா' என்று அவர்கள் ஓதுவதன் அர்த்தம் இதுதான்: 'கடவுளைத்தவிர வேறு கடவுள் இல்லை. முகமது அவரின் தூதர்'. கத்தோலிக்கர்கள் நிசேன் அல்லது அப்போஸ்தலிக்க விசுவாச அறிக்கை செய்து கிறிஸ்தவராக மாறுவதுபோல, இசுலாம் மதத்தைத் தழுவும் ஒருவர் இந்த ஷஹாதா அறிக்கை செய்ய வேண்டும்.

2. சலாத் (செபம்). ஐந்துமுறை செபிக்கும் செபம். அதிகாலை, மதியம், பிற்பகல், மாலை மற்றும் இரவு என ஐந்து நேரங்களில் இசுலாமியர்கள் தொழுகை செய்ய வேண்டும். தொழுகைக்கு முன் தங்கள் கைகளையும், கால்களையும் சுத்தம் செய்ய வேண்டும். முகமது நபி அவர்களின் கல்லறை இருக்கும் காபா (மெக்கா)வை நோக்கி நிற்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் இயக்கும் வானூர்திகளில் மெக்கா இருக்கும் திசையும் காட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை அடுத்தமுறை நீங்கள் பயணம் செய்யும்போது கவனியுங்கள்! இசுலாமியர்கள் தாங்கள் வசிக்கும், பணி செய்யும், படிக்கும், பயணம் செய்யும் இடத்திலிருந்தும் இந்த செபத்தைச் செய்ய அனுமதி தந்தாலும், மசூதியில் தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து செய்யவே அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. ட்சகாத் (ஈகை). மணிரத்னம் அவர்கள் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் கதாநாயகி மனிஷா கொய்ராலா திரையில் காட்டப்படும்போது, அவரின் முதல் செயலே ஈகையாகத்தான் இருக்கும். இதில் இரண்டு விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஒன்று, நாம் வைத்திருக்கும் எல்லாம் இறைவனுக்குச் சொந்தமானவை. பொருள் இல்லாமல் இருப்பவனும் இறைவனின் சாயல்தான். ஆக, அவனுக்கு உரியதை அவனுக்குக் கொடுக்க வேண்டும். இரண்டு, தன் இனத்தின் மீதுள்ள பற்று. தன் இனத்தைச் சார்ந்த எவனும் வறுமை என்று அழிந்துவிடக்கூடாது. ஆக, இருப்பவர் இல்லாதவருக்கு உதவ வேண்டும்.

4. ஸ்சாம் (நோன்பு). இசுலாம் நாட்காட்டியின் ஒன்பதாம் மாதமான ரமலானில் சூரிய உதயம் முதல் மறைவு வரை தண்ணீர் மற்றும் உணவு அருந்தாமல் இருப்பது. இந்தச் செயலால் தாங்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாக செல்வதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர். மேலும், இந்த நோன்பு காலத்தில் மனத்தில் உள்ள வன்மம், காமம், ஆசை போன்ற உணர்வுகளுக்கும் அணை போட வேண்டும் என்பது அவர்களின் படிப்பினை.

5. ஹஜ் (திருப்பயணம்). ஹஜ் என்பது அவர்களின் நாட்காட்டியின் பன்னிரண்டாம் மாதம். இந்த மாதத்தின் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் (ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது - நம்ம ஈஸ்டர் மாதிரி!) மெக்காவுக்கு இசுலாமியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

ரமதான் திருநாளின் முக்கியத்துவம் என்ன?

ரமதானை அடையாளம் காட்டுவது பிறைநிலா.
ரமதான் மாதத்தில் தான் இறைவன் முகமது நபி அவர்களுக்கு திருக்குரானைக் கற்பித்தார். இந்த மாதத்தில் நிறைய இசுலாமியர்கள் திருக்குரானையும் முழுமையாக வாசிக்க முயற்சி செய்கின்றனர். (நானும் தொடங்கினேன். ஆனால் 10 பக்கங்கள்தான் வாசிக்க முடிந்தது!)
இன்றைய நோன்பு சுகூர் மற்றும் இப்தார் என்ற இரண்டு பெரிய விருந்துகளால் நிறைவடைகிறது.
இன்றைய நாளில் சிறப்பான வழிபாடுகளும் மசூதிகளில் நடைபெறும்.

யூதர்கள், இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்னும் மூவரின் மதம் 'புத்தகத்தின் மதம்' அல்லது 'ஒரு கடவுள் மதம்' என அழைக்கப்படுகிறது. இந்த மூன்று பேருக்கும் ஒரு தொப்புள் கொடி உறவு உண்டு (இசுலாமுக்கம், கிறிஸ்தவத்திற்கும் நேரடியாக இல்லையென்றாலும்!). 'இசா இப்ன் மரியாம்' என்று இயேசுவும், மரியாளும் திருக்குரானில் இடம்பெறுகின்றனர்.

நோன்பு, கடவுளோடும், பிறரோடும் நெருக்கம் என இன்றைய நாளை இனிய நாளாகக் கொண்டாடும் நம் இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.


Thursday, July 16, 2015

புளுட்டோ

அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய 'நியு ஹாரைசன்ஸ்' (New Horizons) மின்பறவை புளுட்டோ கிரகத்தை மிக நெருக்கமாகக் கண்டு எடுத்தனுப்பிய முதல் நிழற்படங்கள் இன்று பூமியை வந்து சேர, அமெரிக்காவும், அமெரிக்காவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த உலகமும் (அமெரிக்கா ஆர்ப்பரித்தால் எல்லாரும் ஆர்ப்பரிக்க வேண்டும்தானே! அதுதானே உலக நியதி!) ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என் மனம் நான் ஐந்தாம் வகுப்பு பயின்ற ஆர்.சி.தொடக்கப் பள்ளியின் ஓடு போட்ட வகுப்பறைக்குள் செல்கின்றது.

அன்று புவியியல் பாடம். ஆசிரியை தெரசா அவர்கள் சூரிய குடும்பத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பாடம் நடத்தினார். பாடப்புத்தகத்தைத் திறக்குமுன் செயல்முறை விளக்கமாக சூரிய குடும்பத்தைச் செய்து காட்ட, ஒன்பது மாணவர்களையும், ஒரு மாணவியையும் அழைத்தார். உங்கள் யூகம் சரிதான். மாணவிதான் சூரியன். மாணவர்கள்தாம் கிரகங்கள். புளுட்டோதான் குட்டி கிரகம் என்று சொன்னவர், அதன் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். எனக்கு அருகில் இருந்த நெப்டியுன் கடற்கரைச்சாமி. என் வீடும், இவங்க வீடும் பக்கம் பக்கம் என்பதால், சூரியக் குடும்பத்திலும் நாங்கள் பக்கம் பக்கமாகவே இருந்தோம். சுப்புலட்சுமிதான் சூரியன். எங்கள் வகுப்பிலிருந்த தெலுங்கு பேசும் பெண். எங்கள் ஊரில் இன்றும் தெலு(ங்)கு பேசும் (ஆனால் எழுதத் தெரியாது!) நாயுடு அல்லது நாயக்கர் சமூகத்தவர் இருக்கின்றனர். சுப்புலட்சுமி நடுவில் நிற்க பெயர் தெரியாத கிரகங்கள் சுற்றிக்கொண்டே இருந்தன. புதனாக இருந்தவன் பாக்கியசாலி. சுப்புலட்சுமியை உரசிக்கொண்டே இருந்தான். புளுட்டோதான் ரொம்ப பாவம். சுற்றிச் சுற்றி வந்தாலும் கடற்கரைச்சாமி நெப்ட்யூன்தான் என்மேல் உரசினான். சுப்புலட்சுமி மிகவும் அழகான பொண்ணு. நல்ல வடிவான முகம். சுண்டுவிரல் படும் அளவிற்கு திருநீறு அணிந்து அதன் நடுவில் புள்ளியாய் மஞ்சள் வைத்திருப்பாள். பவுடர் கன்னங்கள். சுண்டி இழுக்கும் கண் மை. செருப்பு அணிந்து பள்ளிக்கு வரும் ஒரே பணக்காரி அவள். அவளின் செருப்பில் வரையப்பட்டிருக்கும் மிக்கி மவுஸ் பொம்மையைப் பார்ப்பதற்காகவே, வகுப்பறையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருப்போம். அவளை ஐந்தாம் வகுப்பிற்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் புளியமரத்து பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தேன். புதனும், சூரியனும் என்ற நெருக்கத்தில் இல்லையென்றாலும், பூமி சூரியன் என்ற நெருக்கத்தில் சந்திக்க முடிந்தது.

சரி நம்ம புளுட்டோ கிரகத்திற்குப் போவோம்.

'புளுட்டோ' என்றால் கிரேக்கத்தில் 'செல்வம் படைத்த' என்பது பொருள். கிரேக்க புராணத்தில் வரும் இறப்பின் அல்லது இருளின் கடவுளின் பெயரும் புளுட்டோதான். புளுட்டோ என்றால் சிறியது என்றும் பொருள்.

1930ஆம் ஆண்டு கிளைட் டோம்பாக் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் புளுட்டோ. இந்த டோம்பாக் அவர்களின் சாம்பலும் இந்த மின்பறவையில் பயணம் செய்கிறது. 1996 மார்ச் 7ல் ஹப்பிள் தொலைநோக்கி புளுட்டோவின் தெளிவான படத்தை எடுத்துத் தந்தது. 2011, ஜூலை 20 அதே தொலைநோக்கி எடுத்த படத்தில் புளுட்டோவைச் சுற்றிக் குட்டியாக மூன்று நிலாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 19, 2006ல் விண்ணிற்கு அனுப்பப்பட்ட 'நியு ஹரைசன்ஸ்' மின்பறவை முதன்முதலாக 2015, ஏப்ரல் 14ல்தான் தன் முதல் படத்தை அனுப்பியது. இதில் புளுட்டோ தன்னைத் தானே சுற்றிவர பூமியின் கணக்கில் 6.4 நாட்கள் தேவைப்படுகின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 2005ல் புளுட்டோவை கிரகம் என்பதற்குப் பதிலாக 'குள்ளக் கிரகம்' (dwarf planet) எனப் பெயரிட்டு, சூரிய கிரகத்திற்கு வெறும் 8 கிரகங்கள்தான் என மாற்றி எழுதினர். ஆனால், புளுட்டோவைக் கடந்து சென்ற மின்பறவை அதை மிக நெருக்கமாக படம் பிடித்து, அது இன்று நம் கைகளுக்கு வந்துள்ளது. புளுட்டோவின் மர்மங்கள் இனி அவிழ்க்கப்படலாம்.

'நாங்கள் ஒன்பது கிரகங்களையும் கண்டு விட்டோம்!' என மார்தட்டுகிறது அமெரிக்கா. வாழ்த்துக்கள் தம்பி! ஆனா, நாங்க ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்பதை 4000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அவைகளை எங்கள் கோவிலின் கர்ப்ப கிரகத்துக்குள் அடக்கிவிட்டோம்.

இப்போ நாம பெருசா, அவங்க பெருசா என்பது கேள்வியல்ல.

மனிதர்களின் பார்வை இன்று பல கோடி மைல்களைத் தாண்டிப் பார்க்கும் அளவுக்கு விரிந்துள்ளது. நம் கண்களின் நீட்சிதான் இந்த மின்பறவை. நம்மைச் சுற்றியிருக்கும் பால்வழியை நாம் ஆராய, ஆராய நாம் அவற்றின் முன் கூனிக் குறுகி விடுகிறோம்.

'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள
நிலாவையும், விண்மீன்களையும் நான் நோக்கும்போது
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?' (திபா 8:3-4)

என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள்தான் நம் நினைவிற்கு வருகின்றன.

மின்பறவை புளுட்டோவை படம் எடுத்துக்கொண்டிருந்த இதே நேரத்தில், விசாகப்பட்டினத்தில் ஒரு பிரசவ வார்டுக்குள், போலி டாக்டர் போல நுழைந்த ஒரு இளைஞன் அங்கிருந்த ஒரு பெண்ணை படம் எடுக்க முயன்று கைது செய்யப்பட்டான் என்ற செய்தியும் வலையில் மின்னியது.

உலகம் ரொம்ப பெருசு தம்பி!

இல்ல... இல்ல...

சூரிய குடும்பம் ரொம்ப பெருசுசுசுசுசுசுசுசுசுசுசுசு தம்பி!


(Info Source: Wikipedia.org)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

இருள் மற்றும் வெளிச்சத்தின் சரிநிகர் கலவை ஓவியம் என்றால், சப்தம் மற்றும் மௌனத்தின் சரிநிகர் கலவை இசை.

மனித மனத்தின் உச்சகட்ட வலியிலும், மகிழ்ச்சியிலும் நம்மையறியாமல் இசை ஆரவாரமாகவோ, முனகலாகவோ வெளிப்படுகிறது.

இயல், இசை, நாடகம் என தமிழ்த்தாய்க்கும் மூன்று முகங்கள் உண்டு.

பக்கம் பக்கமாக சிந்திக்கிடக்கும் வார்த்தைகளை ஓரிரு வரிகளில் சுருக்கி விடுகிறது இசை. ஆகையால்தான், 'ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம்' என்றார் அகுஸ்தினார்.

திருவழிபாட்டில் இசைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எல்லா மதத்தினரும் தங்கள் கடவுள்களை பாடல்கள் கொண்டே புகழ்கின்றனர். ஆக, மனிதருக்குப் பாடல் பிடிப்பதால், கடவுளுக்கும் அது பிடிக்கத்தானே வேண்டும்.

கருநாடக சங்கீதத்திற்கு சாட்டையடியாக வந்தது நாட்டுப்புறப் பாடல்கள்.

மேற்கத்திய இசைக்கு எதிர்ப்பாக வந்தது பாப் எனப்படும் பாடல்வகை.

ஆக, ஒரு கலாச்சாரத்திற்கு மனிதர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும் இசையைக் கையில் எடுக்கின்றனர்.

எவ்வளவு பெரிய விடயத்தையும் மிக எளிதாகச் சொல்லிவிடுகிறது பாடல்.

நாம் தமிழ்க் கத்தோலிக்க வழிபாட்டில் பாடும் பாடல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

அ. இறையியல் மிகுந்தவை. ஆனால், எளிதில் புரியாதவை. உதாரணத்திற்கு, திருப்பாடல்களை மையமாக வைத்து இயற்றப்படும் அல்லது திருப்பாடல்களே இசையோடு பாடப்படுவது.

ஆ. இறையியல் இல்லாதவை. ஆனால் யாரும் பாடக்கூடியவை. உதாரணத்திற்கு, அருட்திரு. பெர்க்மான்ஸ் அவர்களின் 'இயேசப்பா ஸ்தோத்திரம்' வகை. இயேசுவை கத்தோலிக்க இறையியல் சகோதரன் என்றுதான் சொல்கிறதே தவிர, தந்தை என்று சொல்வதில்லை. ஆக, இந்தப் பாடல் கத்தோலிக்க இறையியலுக்கு முரணானது. ஆனால், எளிதில் எந்த உள்ளத்தையும் தொடக்கூடிய வரி இந்தப் பாடல் வரி.

இ. இறையியிலும் இருக்கும். எளிதாகவும் புரியும். எ.கா. 'உன்னில் நான் ஒன்றாக' என்னும் பாடல். இதில் வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும்: 'முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா'. மூவொரு இறைவன் இறையியலை மிக எளிதாக உணர்த்தும் பாடல் இப்பாடல்.

இந்த மூன்றாம் வகைப் பாடலைப் பற்றிப் பேசும்போது நாம் கண்டிப்பாக நினைவுகூர வேண்டிய ஒரு நபர் எம்.எஸ்.வி.

மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட, தமிழ்ச்சமூகத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு. எம். எஸ். விஸ்வநாதன் நேற்று (14 ஜூலை 2015) அதிகாலை இயற்கை எய்தினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்றுமொழித் திரைப்படங்களிலும் இவர் இசையமைத்து முத்திரை பதித்திருந்தாலும், இவரின் இசை சினிமாவையும் தாண்டி நிற்கின்றது. 'விடை கொடு நாடே' என்று இவர் கசிந்துருகிய பாடல் இன்றும் புலம்பெயர் தமிழர்களின் அடிநாதமாய் ஒலிக்கின்றது.

ஞான ஒளி திரைப்படத்தில் வரும் 'தேவனே என்னைப் பாருங்கள்' என்ற பாடலைக் கேட்டவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவிற்கு வரும்?

அ. கத்தோலிக்க திருஅவையில் இருக்கும் ஒப்புரவு என்னும் அருட்சாதனம்.

ஆ. நம் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு என்னும் இறையியல்.

இ. இயேசுவின் காணாமற்போன ஆடு உவமை (லூக்கா 15:1-7)

ஈ. செல்வனின் உவமை (லூக்கா 12:13-21)

உ. மான்கள் நீரோடை தேடும் உருவகம் (திபா 42:1)

ஊ. இயேசுவின் சிலுவைச் சாவு

ஆக, ஒரு பாடலைக் கேட்பதன் வழியாக இவ்வளவு இறையியல் பயணம் செய்துவிடுகிறது நம் ஆன்மா. இதைச் சாத்தியமாக்கியவர் எம்.எஸ்.வி.

இசைக்கு மரணமில்லை. இந்த இசை மன்னருக்கும்!


Wednesday, July 15, 2015

அம்மா அக்கா இளவரசி

இன்று காலை கனடாவின் டொரொண்டோவிலிருந்து ஒலிபரப்பாகும் 'கலசம்' என்ற இணையவழி பண்பலையில் சுகி சிவம் அவர்களின் சிற்றுரை ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர், 'உலகிலிருக்கும் எல்லா மதங்களிலும், கடவுளை 'ஆண்-பெண்' என்று ஜோடியாகச் சித்தரிக்கும் மனப்பான்மை இந்து மதத்தில் மட்டும்தான் இருக்கிறது. சிவன் என்றும் சக்தியோடு இருக்கிறார். மேலும் ஆண்-பெண் இணைந்த அர்த்தனாரீஸ்வரர் என்னும் சித்தாந்தம் இந்துக்களுக்கு மட்டுமே உண்டு. ஆகவே, இந்து மதம் எல்லா மதங்களையும் விட ஒரு படி உயர்ந்தது' என்றார்.

இன்று மாலை திருப்பலியில் நாம் வாசித்த முதல் வாசகம் எனக்கு சுகி சிவத்தை நினைவூட்டியது. அப்படி என்ன வாசித்தோம் இன்று? எல்லா ஆண்குழந்தைகளையும் எகிப்தின் பாரவோன் கொல்லத் தேடிக்கொண்டிருக்க மோசே மட்டும் காப்பாற்றப்படுகிறார். மீட்பு வரலாற்றின் தொடக்கம் இந்த நிகழ்வுதான். இஸ்ரயேலின் முதற்கனியாக மோசே மீட்கப்படுகிறார். பின்பு இஸ்ரயேல் இனமே அவர் வழியாக அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டது. ஆனால் ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். என்ன? இந்த முதல் மீட்பு நிகழ்வில் இறைவனுக்கு உதவி செய்வது ஆண்கள் அல்ல. பெண்கள். அதுவும் மூன்று பேர். ஒரு அம்மா. ஒரு அக்கா. ஒரு இளவரசி. ஆக, இந்து மதத்தில் கடவுள் தன் துணையோடு வான்வீட்டில் இருக்கிறார். ஆனால் முதல் ஏற்பாட்டில் கடவுள் தன் துணையை, தன் பெண்ணை மனுக்குலத்தில் தேடி, அவளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். இதனால் தான் ஒசேயா இறைவாக்கினர்கூட யாவே இறைவனை கணவனாகவும், இஸ்ரயேல் இனத்தை மனைவியாகவும் சித்தரிக்கின்றார். ஆக, இந்து மதத்தில் தூரத்தில் துணையோடு நிற்கும் கடவுள், யூத மதத்தில் துணையை மனக்குலத்தில் தெரிவு செய்துகொள்கிறார். இதிலிருந்து யூத மதம் அல்லது அதன் வழி வந்த கிறிஸ்தவம் இந்து மதத்தைவிட பெரியது என நான் வாதிட விரும்பவில்லை. ஆனால், மனித இனத்தின் ஆழ் அனுபவம் மற்றும் இறை அனுபவம் எல்லாருக்கும் பொதுவானது என்றே சொல்ல விழைகிறேன்.

நம்ம கதைக்கு வருவோம்.

இது கதையா? ஆம். கதாநாயகன் ஆற்றில் எறியப்பட்டு காப்பாற்றப்படுவது எல்லா உலக இலக்கியங்களுக்கும் பொதுவானது. அக்காடிய இலக்கியத்தில் கில்கமேஷ் இப்படித்தான் காப்பாற்றப்படுகிறார். மகாபாரத்தில் கர்ணன், தமிழ் மரபில் ஒளவையார் என நிறைய சான்றுகளை நாம் சொல்லலாம்.

மீட்பு வரலாற்றுத் தொடக்கம் யாக்கோபு கட்டிய பெத்தேல் ஆலயத்தில் தொடங்கவில்லை. ஒரு ஆற்றங்கரையில் தொடங்குகின்றது.

ஒரு அம்மா. செங்கல் சுடவே கோரைப்புல் கிடைக்காதபோது இவளுக்கு பெட்டி செய்ய கோரைப்புல் எங்கே கிடைத்தது? கூடையின் ஓட்டைகளை அடைக்க அவளுக்கு தார் அல்லது கீல் எங்கிருந்து கிடைத்தது? அதை அவள் பூசியபோது அவளின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்திருக்கும்? ஆக, ஒரு பெண் தன் கைகளை அழுக்காக்கியதால் தான் ஒட்டுமொத்த மனித இனமே மீட்பை, விடுதலையை பெற முடிந்தது.

ஒரு அக்கா. இந்த சிறுமிதான் வாசகத்தின் கதாநாயகி. இவர்தான் மிரியம் என்கின்றனர் சிலர். எபிரேய இனத்திற்கும், எகிப்திய இனத்திற்கும், எபிரேயத்தாய்க்கும், எகிப்திய பாரவோனின் மகளுக்கும் இணைப்புக் கோடாக நிற்கிறாள் இந்த இளவல். தானும் அடுத்தவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால் தன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது. இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில்தான் இந்த இளவல் அந்த நைலின் குளிரையும், கோரைப்புற்களின் அரிப்பையும் பொறுத்துக்கொண்டு ஒளிந்திருக்கிறாள். 'ஒரு அக்கா தன் தம்பி அல்லது தங்கையின் இரண்டாம் தாய்' என்பார்கள். மோசேயின் சின்ன அக்காவும் தன் கண்களை மோசேயின் மேல் பதித்துக்கொண்டே இருக்கிறாள்.

ஒரு இளவரசி. எல்லாக் கதையில் வரும் இளவரசிகளையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன் தெரியுமா? இந்த இளவரசிகள் நினைப்பது கண்டிப்பாக அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் எதிர்பார்க்காததும் கிடைக்கும். மேலும் இருப்பதில் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்தான்' இந்த இளவரசிகளுக்குச் சொந்தமாகும். என் அன்புக்குரியவர்களை நான் அடிக்கடி இளவரசி என்று அழைப்பதுண்டு. இளவரசி அல்லது இளவரசனாய் இருப்பதில் இன்னொரு அட்வான்டேஜ் என்றால் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இவர்கள் அதிர்ஷ்டத்தின் தூதர்கள். இவர்கள் நம்பிக்கை தருபவர்கள். நைலுக்கு இளவரசி குளிக்க வந்த நிகழ்வு மற்றொன்றையும் சுட்டிக்காட்டுகிறது. இயற்கை வாழ்வாதாரங்கள் ஆள்பவருக்கும், அடிமைகளுக்கும் ஒன்றே. இயற்கை யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை. ஆகையால்தான், அடிமை அக்காவும், ஆளும் இளவரசியும் ஒரே நைலுக்குள் இறங்குகின்றனர்.

இந்த மூன்றுபேரும் இணைந்ததில் இறைவனின் அருட்கரம் செயலாற்றுகிறது. ஆக, இறைவனின் துணையாக நின்றவர்கள் பெண்களே. ஆகவேதான், படைப்புச் செயலும் இன்றுவரை பெண்கள்வழியாகவே நடைபெறுகிறது.

இறைவனின் துணையே நம் அருகிருக்கும் பெண்ணும்!


Monday, July 13, 2015

முன்பின் அறிந்திராத...

'அந்நாள்களில், யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.' (விடுதலைப் பயணம் 1:8)

'அவரை எனக்கு முன்னப்-பின்ன தெரியாது ... நான் எப்படி அவர்கிட்ட போய்...' இந்த மாதிரி நாமே பேசியிருப்போம். அல்லது மற்றவர் பேசக் கேட்டிருப்போம்.

முன்பின் அறிந்திருத்தல் என்பது விவேக் காமெடியில் வருவது போல, ஒருவரின் உடலின் முன்னும், பின்னும் அறிந்திருப்பது அல்ல.

விவிலியத்தின் முதல் ஏற்பாட்டில் ஒருவர் மற்றவரை புதிதாக சந்திக்கும்போது என்ன கேட்டுக்கொள்வார்கள் தெரியுமா?

'எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்கிறாய்?'

இந்தக் கேள்வியை வானதூதர் ஆகாரிடம் கேட்கின்றார் (தொநூ 16:8), நகர வாயிலில் இருந்தவர்களிடம் வயல் வெளியிலிருந்து திரும்பும் முதியவர் கேட்கிறார் (நீத 19:17).

அதாவது, உன் இறந்தகாலம் என்ன? உன் எதிர்காலம் என்ன?

அல்லது நீ கடந்து வந்த பாதை என்ன? நீ செல்லப் போகும் பாதை என்ன?

ஆக, 'முன்' என்பது ஒருவரின் எதிர்காலம். 'பின்' என்பது ஒருவரின் இறந்தகாலம்.

நமக்கு இன்று யாரெல்லாம் தெரியும் என்று ஒரு லிஸ்ட் போடுவோம்.

ஒரு சிலரின் முன்னும் தெரியும், பின்னும் தெரியும் நமக்கு.

மற்ற சிலரின் முன் மட்டும்தான் தெரியும் பின் தெரியாது.

மற்ற சிலரின் பின் மட்டும்தான் தெரியும். முன் தெரியாது.

இந்த இரண்டுமே தெரியாதவர்கள்தாம் நாம் சந்திக்கும் அந்நியர்கள். அந்நியர்கள் ஒரு மெட்ரோவில் ஏறுவதுபோல ஒரு நிறுத்தத்தில் ஏறி, மறு நிறுத்தத்தில் இறங்கிவிட்டால் நமக்கு பயம் இல்லை. ஆனால், அவர் நம்முடன் நடக்கத் தொடங்குகிறார் என்றால் நம்மை ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது.

'அறியாதவைகளின் பயம்'தான் (fear of the unknown) மனித மனச்சோர்வுக்கு மிக முக்கியமான காரணம் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

நேற்று ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் பெயர் அல்மா. அவர் ஒரு வயதான பாட்டியின் உதவியாளராக இருந்தார். அந்த பாட்டி திடீரென இறந்து போனார். இப்போது இவராக இன்னொரு வேலையும் தேட வேண்டிய கட்டாயம். தேடினார். வேலையும் கிடைத்தது. 'இந்தப் பாட்டி வீட்டில் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'அவரை ஏற்கனவே தெரியுமா?' என்றேன். 'இல்லை' என்றார்.

'பின் எப்படி வேலை பார்க்க முடிகிறது?' என்று கேட்டேன்.

'பொதுவானவைகளில் தொடங்க வேண்டும் ... பின் எல்லாம் பழகிப் போகும்.' என்றார். தொடர்ந்தார். 'அவர் பணிவிடை பெறுபவர். நான் பணிவிடை புரிபவர். எனக்கு சில கடமைகள் உண்டு. சில உரிமைகள் உண்டு. அவருக்கும் என்மேல் சில உரிமைகள் உண்டு. சில கடமைகள் உண்டு. இந்த இரண்டில் தொடங்கினால் பின் படிப்படியாக என் உள்ளம் அவருக்குத் தெரியும். அவரின் உள்ளம் எனக்குத் தெரியும். அவ்வளவுதான், முன்பின் தெரியாதவரும் நமக்கு நெருக்கமானவராகிவிடுவார்.'

ஒரு பங்குத்தளத்திற்கு புதிய பங்குத்தந்தை வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு மக்கள் யாரையும் முன்பின் தெரியாது. ஆனால், ஐந்து வருடங்கள் கழித்து அவர் பணிமாற்றம் செய்யப்படும்போது, மக்கள் கண்ணீர்விட்டு பிரியாவிடை கொடுக்கின்றனர். எப்படி? முன்பின் தெரியாதவர் எப்படி நெருக்கமானார்? பொதுவானவைகளில் தொடங்குவதால்தானே.

அல்மாவின் மேலாண்மை தத்துவம் மிகப்பெரியது. ஹார்வர்டின் ஒட்டுமொத்த செமஸ்டரையும் ஓரிரு நிமிடங்களில் சுருக்கி விட்டார்.

யோசேப்பை அறிந்திராத பாரவோன் மன்னன் இஸ்ராயேல் மக்களின் மேல் உள்ள உரிமைகளையும், கடமைகளையும் மறந்தான். அவர்களின் உரிமைகளையும், கடமைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்தான். ஆக, முன்பின் தெரியாதாவர்கள் வேண்டாதவர்கள் ஆகிப்போனார்கள்.

ஆக, இன்று முன்பின் தெரியாத ஒருவரைப் பார்க்க நேர்ந்தால், முதலில் அவருக்கும் நமக்கும் பொதுவானவைகளைப் பார்ப்போம். வேற்றுமைகளைக் பார்த்தால் பிரிவோம். ஒற்றுமையைப் பார்த்தால் இணைவோம்.


வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது!

மேலும் அவர், 'நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும் வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.' (மாற்கு 6:10)

பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்தில் வெளியான 'வீடு' (1988) என்ற திரைப்படத்தை நான்கு நாட்களாகப் பார்த்து முடித்தேன்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இல்லாத மகள் ஒருத்தி தன் தாத்தாவின் உடனிருப்புடன், தன் குடும்பத்திற்காக கட்டும் ஒரு வீட்டைச் சுற்றி இருக்கிறது கதையாக்கம். கதைக்கரு வீடு என்றாலும் காதல், நாட்டு நடப்பு, இலஞ்சம், நல்லவர்கள், கெட்டவர்கள், ஊழல், ஏமாற்றுதல், காமம், களவு என எல்லாவற்றையும் சொல்லி முடிக்கின்றார் பாலு மகேந்திரா.

நாம் உலகையே சுற்றி வந்தாலும், நாம் நாமாக இருக்கக் கூடிய ஒரே இடம் நம் வீடுதான். இறப்பதற்குமுன் சொந்தவீடு ஒன்று கட்ட வேண்டும் என்பது எல்லாருடைய ஆசையாகவே இருக்கின்றது. வீடு வெறும் கட்டிடம் மட்டும் அல்ல. அது ஒரு அடையாளம். அதுதான் ஒரு மனிதரின் முகவரி.

வீட்டை விட்டு வந்துவிடும் அருட்பணியாளருக்கு செல்லுமிடமெல்லாம் வீடு என்று சொல்வார்கள். நேற்றும் இன்றும் திருப்பலி நிறைவேற்றுவதற்காக நாப்போலி என்ற நகருக்குச் சென்றிருந்தேன். என் வீட்டிற்கு வெளியில் இருக்கும்போதுதான் என் வீட்டின் அருமை தெரிகிறது. நான் செல்லும் வீடு எனக்கு அசௌகரியம் தந்தது என்ற பொருளில் அல்ல. மாறாக, ஏதோ ஒரு வெறுமை என்னையறியாமல் தொற்றிக் கொண்டது. 'எப்படா வீட்டுக்கு வருவோம்!' என்று மனதுக்குள் தோன்றியது.

இந்த உணர்வு எனக்கு இன்றைய நற்செய்தியை ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கத் தூண்டியது.

'நீங்கள் போகுமிடத்தில் ஒரு வீட்டில் தங்குங்கள்!' என்கிறார் இயேசு. அதாவது நீங்கள் செல்லுமிடத்தில் உங்கள் உள்ளம் ஒன்றிப்போகுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் இயேசு. ஆக, பணிக்கு அனுப்பப்படுபவருக்கு பணி பிடிக்க வேண்டும். பிடித்திருந்தால் பணி செய்ய முடியும். பிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். பணியிடத்தை வீடு போல கண்டுபாவிக்க வேண்டும்.

படிப்பு முடிந்து விடுமுறையில் இருக்கும் இந்த நாட்களில்தான் எனக்கு என் ஊர் ஞாபகம், மறைமாவட்டம் ஞாபகம் அடிக்கடி வருகிறது. 'வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது!' என்று குருமடத்தில் சேர்ந்த புதிதில் குருமட அதிபரின் அறைக்கு வெளியில் அமர்ந்து அழுதது போல, இன்றும் அழத் தோன்றுகிறது.


Saturday, July 11, 2015

செபமும், வேலையும்

இன்று தூய ஆசீர்வாதப்பரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர் ஐரோப்பா கண்டத்தின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். 'பெனடிக்டைன்ஸ்' என்று சொல்லப்படும் ஆசீர்வாதப்பர் சபையை நிறுவியவரும் இவரே.

தினமும் நான் சைக்கிள் பயிற்சி செய்யும்போது 60 நிமிடங்களில் 30 கிமீ என 'டைமர்' தொடக்கிவைத்து சைக்கிள் மிதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் சைக்கிள் ஓட்டும்போது, குறித்து வைத்த வேகத்தை விட அதிக வேகமாக ஓட்டுகிறேன். 60 நிமிடங்கள் ஒதுக்கியிருக்க, 55 நிமிடங்களில் நான் ஏன் முடிக்க நினைக்க வேண்டும் என யோசித்தபோது, என்னிடம் உள்ள ஒரு குறை தெரிந்தது. அந்தக் குறை என்னவென்றால் 'வேகம்'.

'வேகம் செயல்திறனையும், செய்யப்படும் வேலையின் தரத்தையும் குறைக்கிறது!' என்று சொல்வார்கள்.

என்னைச் சுற்றியிருக்கும் வேகம் என்னையும் தொற்றிக்கொள்ள வி;ட்டுவிட்டேன் என்றே நினைக்கிறேன். வேகமாக சைக்கிள் ஓட்டுவது, வேகமாக காஃபி குடிப்பது, வேகமாக சாப்பிடுவது, வேகமாக டைப் அடிப்பது என்று வளரும் அந்தக் குறை, வேகமாக செபிப்பது, வேகமாக திருப்பலி நிறைவேற்றுவது, வேகமாக மறையுரை நிகழ்த்துவது என மலர்ந்து நிற்பதைக் கண்டு நான் வருத்தப்படவே செய்கிறேன்.

இந்த அருட்பணி நிலை வேகத்திற்கு வேகத்தடை போட்டவர்தான் ஆசீர்வாதப்பர். 'தெ ரூல் ஆஃப் பெனடிக்ட்' என்ற அவருடைய நூல் இன்றும் ஐரோப்பிய இராணுவப் பயிற்சியில் பயன்படுத்தப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். காட்டிலும், மேட்டிலும் ஓடிக்கொண்டிருந்த வைக்கிங்ஸ் மற்றும் ஜெர்மானிக் மக்களை கொஞ்சம் நிற்க வைத்து, யோசிக்க வைத்து, அவர்களின் வாழ்வையே மாற்றி அமைத்தவர் ஆசீர்வாதப்பர். துறவிகள் என்றால் நாட்டை விட்டு, ஊரைவிட்டு ஓடி மறைந்திருக்க வேண்டும் என்றல்லாமல், 'ORA ET LABORA' (செபமும், வேலையும்) என ஆன்மீகத்திற்கும், செய்யும் வேலைக்கும் முடிச்சுப்போட்டவர் அவர்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு மனிதருக்கு தேவை வேரூன்றுதலும் (rootedness), விழுதுபரப்புதலும் (openness). வேர்கள் இல்லாமல் விழுதுகள் மட்டும் இருந்தால் (openness without rootedness) அவை சாய்ந்து விடும். விழுதுகள் இல்லாமல் வேர்கள் மட்டும் இருந்தால் (rootedness without openness) அவை கடினப்பட்டு விடும்.

செபம் நம்மை வேரூன்றவும், வேலை நம்மை விழுதுபரப்பவும் செய்கின்றது.

இன்று நம்ம ஊர்க்காரங்க எல்லா நாட்டுலயும் வேலை பார்க்கிறாங்க என்று பெருமைப்படுகிறோம். ஆனால் விரல் விட்டு எண்ணும் சில இடங்களில் மட்டுமே முதலாளிகளாக இருக்கிறார்கள். மற்ற இடங்களில் வெறும் வேலைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். சராசரி இளைஞனின் கனவும் இப்படித்தான் இருக்கின்றது. 10ஆம் வகுப்பில் நல்ல மார்க். அப்புறம் ஃபர்ஸ்ட் க்ரூப். என்ஜினியரிங் காலேஜில் இடம். ஒரு எம்.என்.சி அவுட்சோர்ஸிங்கில் வேலை. சிகப்பான ஒரு பொண்ணு. குறையாத பேங்க் பேலன்ஸ். இப்படிப்பட்ட வேலையை ஆசீர்வாதப்பர் முன்வைக்கவில்லை. மாறாக, மனிதர் தன் தான்மையை வெளிப்படுத்தி, தன்னைப் படைத்தவரோடு ஒருங்கிணைத்துக் கொள்ளக்கூடிய வேலையைத்தான் அவர் முன்வைக்கின்றார்.

வேலை என்பது நம் முதற்பெற்றோரால் வந்த சாபம் அல்ல. இது ஒரு வரம். இந்த வேலையினால்தான் நாம் கடவுளின் படைப்புச்செயலில் பங்கேற்கிறோம். ஆக, என் வேலையினால் நான் என்னிலிருந்து வளர்ந்து பிறரைத் தொட வேண்டும்.

ஆக, செபத்தின் வழி இறைவனைத் தொட வேண்டும்.

வேலையின் வழி எனக்கு அடுத்திருக்கும் மனிதரையும், இயற்கையையும் தொட வேண்டும்.

நேற்று முன்தினம் திருப்புகழ்மாலையின் மாலைசெபத்தின் மன்றாட்டுகள் பகுதியில் இப்படி ஒரு செபம் இருந்தது:

'உம் பணிக்கென நீர் தேர்ந்து கொண்டவர்களை ...

ஏழ்மையில் அவர்களை வளப்படுத்தும்,

கற்பில் அவர்களை அன்பொழுகச் செய்யும்,

கீழ்ப்படிதலில் அவர்கள் மனத்தை எளிதாக்கும்!'

'செபம்' மற்றும் 'வேலையில்' தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ளும் அருட்பணியாளருக்கு மேற்காணும் மூன்று வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது மிக எளிது!



Friday, July 10, 2015

கருணாலயா

இன்று என் அப்பா விண்ணில் பிறந்த 10ஆம் ஆண்டு நாள்.

நேற்று மாலை என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இதைச் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் பேச முடியாமல் தவித்தார்கள். தன் வாழ்க்கைத்துணை இல்லாமல் அவர்கள் இந்த 10 ஆண்டுகள் பட்ட கஷ்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

10 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், புனேயில் மதியம் நான் பார்த்த எக்ஸ்டரா லைப்ரரி வேலையிலிருந்து திரும்பி வந்து அறையில் கிடந்த செல்ஃபோனைப் பார்த்தபோது நிறைய தவறிய அழைப்புகள். அத்தனையும் புதிய எண்கள். யார் என்று நானே கூப்பிட்டேன். எதிர்முனையில் என் அம்மாவின் அழுகைச்சத்தம். அழுகையிலும் என் அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லிமுடித்தார்கள்.

எனக்கு அதிர்ச்சியோ, அழுகையோ வரவில்லை. என் நண்பனிடம் சொன்னேன். குருமட அதிபரிடம் சொன்னார்கள். விமான டிக்கெட் புக் செய்தார்கள். யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னார்கள். நான் அமைதியாக மட்டுமே இருந்தேன். அடுத்தநாள் அடக்கத்திலும் அழுகை வரவில்லை.

ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்று கண்ணீர் வருகிறது.

என் அப்பாவின் மறைவு இன்றுதான் எனக்குத் துயரம் தருகிறது. என் மகிழ்ச்சிதான் அவருக்கு எல்லாம் என்று இருந்த ஒருவர் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அதைப்பார்த்து மகிழ்ந்திருக்க அவர் இல்லை.

உடலோடுதான் இல்லை. அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் - என்று எனக்கு நானே சம்மதம் சொல்லிக்கொள்ளவும் முடியவில்லை.

'கருணாலயா'

இப்படித்தான் தன் பெயரை அடிக்கடி எழுதிக்கொள்வார்.

தன் பிறந்தநாள் தெரியாது. ஆனால், எங்கள் பிறந்தநாளை நினைத்து, நினைத்து கொண்டாடுவார்.

செருப்பு அணியமாட்டார். வாட்ச் கட்ட மாட்டார். லுங்கி உடுத்த மாட்டார். வெள்ளை வேஷ்டி மட்டும்தான் அணிவார். அரைக்கை சட்டை மட்டுமே வைத்திருந்தார். 'முழுக்கை சட்டை போட மாட்டீர்களா?' என்று ஒருமுறை கேட்டதற்கு, உடலை மறைக்க அரைக்கை போதாதா என்பார். வெள்ளைநிற கர்ச்சீஃப்தான் பயன்படுத்துவார். தேய்க்காமல் என்றும் உடை அணிந்ததில்லை. என் அம்மா சமைத்த உணவைத் தவிர வேறு யார் வீட்டிலும் வாங்கி சாப்பிட்டதில்லை.

எல்லா சாமியையும் நம்புவார். ஆனால் எந்த சாமியையும் கும்பிட்டதில்லை.

எல்லாக் கோவிலுக்கும் வரி கொடுப்பார். எந்தத் திருவிழாவுக்கும் போகமாட்டார்.

ஆஸ்துமாவால் ரொம்ப கஷ்டப்பட்டார். அவரின் அப்பா அவருக்கு விட்டுச்சென்ற சொத்து அது ஒன்றுதான். ஆனால், கஷ்டத்தை எங்களிடம் சொன்னதில்லை, எந்த சாமியிடமும் சொன்னதில்லை.

எனக்கு எதுவும் பிரச்சினை இருக்கிறதா என்று ஒருநாளும் கேட்டதில்லை. தன் பிரச்சினை இதுதான் என்று என்னிடமும் எதுவும் சொன்னதில்லை.

பரந்த மனப்பான்மை கொண்டவர் அவர். என் வீட்டின் பின்புறம் இருக்கும் ஒருவர் தன் கொழுந்தியாவின் கணவர் இறந்தவுடன், கொழுந்தியாவைக் கூட்டிக்கொண்டு தன்னுடன் வைத்துக்கொண்டார். 'அவர் கொழுந்தியாவைச் சேர்த்துக்கொண்டாராம்!' என்று என் அம்மா எதேச்சையாக பேச்சு வாக்கில் சொல்ல, 'ச்சூ, வாயை மூடு! நாம் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அந்தப் பொண்ணை நினைச்சுப் பாரு. அதுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? அவர் நல்லவர்.' என்று உடனடியாக அந்த நாயக்கருக்காக வரிந்து கட்டிக்கொண்டு சென்றவர்.

கையில் காசு இருக்காது. ஆனால் யாரிடமும் அவர் கடன் வாங்கியது கிடையாது.

சின்னக் குழந்தைகள் வந்தாலும், 'நீங்க! நாங்க!' என்று மரியாதையாகத்தான் பேசுவார்.

உள்ளத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், ஒருநாளும் அவர் சிரிப்பை மறந்தது கிடையாது.

உடல்நலம் இல்லை. உடல்நலம் இல்லாததால் வேலையில்லை. வேலையில்லாததால் காசு இல்லை. காசு இல்லாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அவர் தன் தன்மானத்தை ஒருநாளும் எதற்காகவும் அடகு வைத்தது கிடையாது.

அவர் இறந்தபோது நானும் அருகில் இல்லை. என் தங்கையும் அருகில் இல்லை. தன் அருகில் என்றும் இருந்த என் அம்மா மட்டும்தான் அன்றும் இருந்தார்கள்.

இறப்பு வரப்போகிறதென்று அந்த வருடம் அவருக்குத் தெரிந்ததுபோல!

அதனால்தான், எப்போதும் அல்லாமல் நான் ஜூன்மாதம் குருமடம் புறப்பட்டுப் போனபோது, என்னை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தார். நான் போன கொஞ்ச நேரத்தில் 'இன்னும் அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கணும்போல இருக்கு!' என்று என் அம்மாவிடம் சொன்னாரம். ஆறு வருடங்களாக என்னை வழியனுப்ப வராதவர் அந்த ஆண்டு மதுரை இரயில்நிலையம் வரை வந்தார். அதுவரை நான் அருட்பணியாளராக மாறுவதற்கு அனுமதி தராதவர், அன்று ரயிலின் ஜன்னலின் அருகில் நின்றுகொண்டு, 'உனக்குப் பிடித்தால் மட்டும் நீ குருவாக இரு! உன் அம்மாவுக்காகவோ, எனக்காகவோ இராதே!' என்றார்.

அவர் இறந்தவுடன் உடலைக் குளிப்பாட்டி நாற்காலியில் அவரை அமர வைக்கத் தயாரித்தவர்கள் அவரின் உள்பாக்கெட்டில் பணம் இருக்கக் கண்டு என் அம்மாவிடம் எடுத்துக் கொடுத்தார்களாம். 'உள்ளே வைத்துவிடுங்கள்!' என்றாராம் என் அம்மா. 'இல்லக்கா! ரொம்ப இருக்கு! இந்தாங்க!' என்று கொடுத்தாராம் வந்திருந்தவர். எண்ணிப்பார்த்ததில் நான்காயிரம் ரூபாய் இருந்ததாம். தான் ஒருவேளை இறந்துவிட்டால், தன் மனைவி எப்படி செலவைச் சமாளிப்பாள் என்று நினைத்தவர் அதை தன் உள்பாக்கெட்டிலேயே வைத்திருந்திருக்கிறார். தன் இறுதிப் பயணத்திற்குக்கூட யாரையும் நம்பியிருக்கவில்லை அவர்.

இறந்து, அடக்கச் சடங்கு முடிந்து நான் புனே திரும்பியபோது, அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வந்து சேர்ந்தது. 'எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும். முடிந்தால் கொடு!' என்று எழுதியிருந்தார். நான் குருமடத்தில் படித்துக்கொண்டே மாலைநேரங்களில் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தேன். அதனால்தான் கேட்டிருக்கிறார். அவருக்குக் கொடுக்குமுன் அவர் இறந்துவிட்டாரே என்ற கவலைதான் என் மனத்தின் ஓரத்தில் அம்மைத் தளும்பாக விழுந்து நிற்கிறது.

'அப்பா! உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்!' என்று அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்போல இருக்கிறது. ஆனால், இன்று அவர் இல்லை.

அவரோடு பயணித்த பேருந்து பயணங்கள், மூச்சிரைக்க அவர் கூட்டிச் சென்ற சைக்கிள் பயணங்கள், நான் புதிய பள்ளிக்குச் சென்றபோது அவர் கொடுத்த சிகப்புநிற ஒற்றை இரண்டு ரூபாய்த்தாள், அவருடன் நாங்கள் குடும்பத்தோடு சென்ற சுற்றுலாக்கள், பிறந்தநாளுக்கும், கிறிஸ்து பிறப்புக்கும் கேட்காமலேயே வந்து கிடைக்கும் புத்தாடைகள் என எண்ணற்ற நினைவுகளை விட்டுச்சென்றார்.

இன்று நான் இருப்பதும், இயங்குவதும் அவரில்தான்.

ஏதாவது சாமி வந்து வரம் கேட்டால், என் அப்பாவின் ஆட்காட்டிவிரலை ஒருமுறை தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற வரத்தை மட்டுமே நான் கேட்க விரும்புகிறேன்.

கருணாலயா - இன்றும் எங்களுடன்!


Thursday, July 9, 2015

சோகங்களை யார் தீர்ப்பார்?

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணமாக எக்வதோர், பொலிவியா மற்றும் பராகுவே என்னும் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்.

செல்லும் இடமெல்லாம் ஒரே கூட்டம் என்று வத்திக்கானின் ஊடகங்களும், உலக ஊடகங்களும் படம் காட்டுகின்றன.

கூடியிருக்கும் மக்களைப் பார்க்கும்போதெல்லாம் பாவமாக இருக்கிறது.
வெளிப்புறத்தில் எல்லாம் நல்லாதான் இருக்கு. 'பிரான்சிஸ்' என்று போட்ட டிசர்ட்டுகள், வத்திக்கான் கொடிகள், கைதட்டல்கள், மாலைகள், பூக்கள். ஆனால், இந்த மக்களின் கண்களை உற்றுப்பார்த்தால் ஒரு சோகம் தெரிகிறது.

1. சிலுவைகளும், சிலுவையில் சுற்றிய செபமாலையும். காலனியாக்கப்பட்ட நாடுகளில், ஐரோப்பிய கிறித்தவ மறைபோதகர்கள் போதித்த இடங்களில் கிறிஸ்தவத்தின் பழக்கம் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு, நம்ம மதுரைக்கு போப்பாண்டவர் வந்தால் நாம் கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்? போப்பாண்டவரைப் பார்க்கச் செல்லும்போது நாம் என்ன கொண்டு செல்வோம்? தனியாகப் பார்க்க அல்ல. கூட்டத்தில் பார்க்க. பெரும்பாலும் சும்மாதான் போவோம். ஆனால், இந்த மக்கள் கைகளில் சிலுவைகளும், சிலுவையில் சுற்றிய செபமாலையுமாய் காட்சி தருகிறார்கள். இது எதற்காக என்று அங்கிருந்து வந்திருக்கும் ஒரு அருட்தந்தையிடம் கேட்டேன். அவர் சொன்னார்: 'தொடக்கத்தில் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறியபோது, அவர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது இந்த சிலுவையும், செபமாலையும்தான். கொஞ்ச ஆண்டுகள் கழித்து கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கொன்றழிக்கப்படுகிறார்கள் கிறிஸ்தவர்களால். அந்த நேரத்தில் யாரெல்லாம் சிலுவையையும், செபமாலையையும் ஏந்தியிருக்கிறார்களோ, அவர்கள் மட்டும் கொல்லாமல் விடப்பட்டனர். ஆக, இந்த பழக்கம் அப்படியே பதிந்து எங்கெல்லாம் பொதுக்கூட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் இவர்கள் தற்காப்புக்காக இதை எடுத்துச்செல்ல தொடங்கினர். அந்தப் பழக்கம் அப்படியே தொடர்கிறது!' இயல்பிலேயே பாதுகாப்புடன் இருக்கும் ஒரு மனித இனத்தின் மனத்தில் பயத்தை விதைத்துவிட்டு, பின் அந்த பயத்தை போக்க ஒரு மருந்து என சிலுவையைத் தருவது சரியா?

2. இஸ்பானிய மொழி. மற்ற திருத்தூதுப் பயணங்களில் இத்தாலியன் மொழியில் மட்டும் உரை நிகழ்த்திய, திருப்பலி நிறைவேற்றி திருத்தந்தை அவர்கள் இங்கு மாய்ந்து, மாய்ந்து இஸ்பானியம் பேசுகின்றார். கேட்டால் மக்களின் தாய்மொழியில் பேசுகிறாராம். ஆனால், இந்த மக்களின் தாய்மொழியைத்தான் இந்த கிறிஸ்தவம் நான்கு நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டு அழித்துவிட்டதே. ஐரோப்பியர்கள் திட்டமிட்டு இனவழிப்பு செய்ய கையில் எடுத்தது மொழி அழிப்பு. இந்த நாட்டவர்கள் தங்கள் தாய்மொழி இஸ்பானியம் என சொல்வது இவர்கள்மேல் நமக்கு பரிதாப உணர்வையே தருகிறது. யூதர்களுக்கு எதிராக, ஆர்மேனியர்களுக்கு எதிராக ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் அநீதிகளுக்காக ஓடி, ஓடி மன்னிப்பு கேட்கும் திருத்தந்தை, இந்த மக்களிடம் 'நாங்கள் உங்கள் மொழியை, இனத்தை அழித்துவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்கள்!' என்று ஏன் கேட்கவில்லை? ஏன்னா, ரொம்ப சிம்பிள். யூதர்களிடமும், அர்மேனியர்களிடம் காசு இருக்கிறது. பாவம். இந்த மக்களிடம் கடவுள் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. காசு இருந்தால் அங்கே கடவுளும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பார்.

3. வன்முறை அழிய வேண்டும். போகிற இடங்களில் எல்லாம் வன்முறை அழிய வேண்டும் என்று சொல்லும் திருத்தந்தையின் பேச்சு, அடிப்பனைப் பார்த்து அடிக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக, அடி வாங்குபவனைப் பார்த்து, 'யாரும் யாரையும் அடிக்கக் கூடாது!' என்று சொல்வது போல இருக்கிறது. இந்த மக்களிடம் வன்முறை இருக்கிறதுதான். திருடுவார்கள். போதைப் பொருள்கள் விற்பார்கள். ஆனால், இவர்களின் வாழ்வாதாரங்களையெல்லாம் மேற்கத்திய நாடுகள் எடுத்துவிட்டால், எடுத்தவனிடமிருந்து இவன் எடுக்கத்தானே செய்வான். ஆக, எடுத்தவர்களையல்லவா 'கொடுங்க' என்று சொல்ல வேண்டும். 'விடுங்க' என்று சொல்ல வேண்டும்.

இந்த மக்களின் சோகங்களை யார் தீர்ப்பார்?




Wednesday, July 8, 2015

இரண்டு தீர்ப்புகள்

ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் மிக முக்கியமானவை என நினைக்கிறேன்.

அப்படி என்ன தீர்ப்புதான் வழங்கப்பட்டது?

தீர்ப்பு 1: கார்டியனாக இருப்பது (ஜூலை 6, 2015)

ஒரு காதலன். ஒரு காதலி. திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டதில் காதலி கர்ப்பம். கர்ப்பம் கண்ட காதலன் பின்வாங்குகிறான். காதலி துணிச்சல்காரி. 'போடா! எனக்கு குழந்தை வளர்க்கத் தெரியாதா என்ன?' இப்போது ஒரு சட்டச் சிக்கல் வருகிறது. பிறக்கப்போகும் குழந்தைக்கு இவர் அம்மாவா அல்லது கார்டியனா (வளர்ப்புத்தாயா)? இவர் அம்மாவாக இருக்க சட்டம் அனுமதிக்காது. ஏனெனில் சட்டப்பூர்வமாக இவருக்குத் திருமணம் ஆகவில்லை. கார்டியனாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் ஆண்களின் துணையோடுதான் பெண்கள் கார்டியனாக இருக்க முடியும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து 2011ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்த ஒரு இளவலின் வழக்கில், (திருமணம் செய்யாத) பெண்கள் ஆண்களின் துணையின்றி சட்டப்பூர்வமான கார்டியனாக இருக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு 2: பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் தேவையில்லை (ஜூலை 7, 2015)

வழக்கு ஏறக்குறைய முன்னதைப் போலத்தான். ஆனால் பிரச்சினை வேறு. திருமணமாகாத பெண் குழந்தை பெற்றுவிட்டாள். இந்தக் குழந்தைக்கு யார் தந்தை? என்ற கேள்வி வருகிறது. 'அப்பா பேர் தெரியாதவன்' என்ற சினிமாகுப்பையை சுத்தமாக்கியிருக்கிறது இரண்டாம் தீர்ப்பு. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் தந்தை பெயர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆக, பெண்கள் தனிநபராக குழந்தை பெற்றுக்கொள்ளலாம். வளர்க்கலாம்.

தீர்ப்புகளின் பயன் என்ன?

அ. பெண்களுக்கு சம உரிமை அல்லது பெண்களும் தன்னிலேயே முழுமையானவர்கள் என்பதையும் இந்த தீர்ப்பு நினைவுபடுத்துகிறது. இந்த வகையான தீர்ப்பு பெண்களின் தன்னம்பிக்கையையும், தற்சார்பையும் இன்னும் அதிகப்படுத்தும்.

ஆ. சாதிகள் ஒழியும். இரண்டாம் வகைத் தீர்ப்பு சாதி ஒழிப்பிற்கு முதல்படி. நம் ஊர் வழக்கப்படி, தந்தையின் இனிஷியல் ஒரு குழந்தைக்கு கொடுக்கப்படும்போது, மறைமுகமாக அவரின் சாதியும் அந்தக் குழந்தையை தொற்றிக்கொள்கிறது. பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் வெறும் குழந்தையாக இருந்த ஒரு உயிர், தந்தையின் இனிஷியல் பெற்றவுடன் நாடார் குழந்தை, உடையார் குழந்தை, வேளாள குழந்தை, கிறிஸ்தவ குழந்தை, இந்து குழந்தை என்று மாறிவிடுகிறது. குழந்தை என்ன தவறு செய்தது இந்த அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு? எதற்காக இந்த தேவையற்ற அடையாளங்கள்? யாரின் இனிஷியல் வைக்கணும் என்ற பிரச்சினை வந்தால், தாயின் இனிஷியல் வைக்கலாம். அல்லது தாயின் பெயரையே இரண்டாம் பெயராக வைக்கலாம். உதாரணத்திற்கு, யேசு கருணாநிதி என்பதற்குப் பதிலாக யேசு மரிய செல்வம். தந்தையர்கள் சாதிகளையும், மதங்களையும் பிடித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு தாய்மார்கள் பிடித்துக்கொண்டிருப்பதில்லை. தாய் என்றும் பரந்த பார்வை கொண்டவள். தன் பிள்ளைக்கு எது நல்லதோ அதை சரி என்று ஆமோதிப்பவள். சாதியத்தின், மதத்தின் கோரம் அவளுக்குத் தெரியும். ஆகையால் தன் குழந்தையை சாதியையும் தாண்டி சிந்திக்க வைப்பாள்.

இ. ஏளனப்பேச்சு குறையும். நம்ம ஊரில் கர்ப்பமாக இருப்பது பல நேரங்களில் ஒரு அறநெறி பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத, குடிகார, நோய்வாய்ப்பட்ட ஒரு கணவனுக்கு மனைவி குழந்தை பெற்று வாழ்நாள் முழுவதும் அடிவாங்கி, மிதிவாங்கி, தன் வியர்வை சிந்தி அந்த குழந்தையை வளர்க்கலாம். இதை சட்டம் அனுமதிக்கும். ஏன்னா, அவங்க திருமணம் ஆனவங்க. அவன் தாலி மட்டும்தான் கட்டினான். மற்ற கஷ்டங்களை அனுபவிக்கிறவள் பெண். ஆனால், ஒரு தோழன், ஒரு தோழி. இரண்டுபேரும் நல்லவர்கள். இரண்டு பேரும் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். இரண்டுபேரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்கிறார்கள். இந்த தோழமையின் அடையாளமாக குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கின்றனர். சட்டம் இதை அனுமதிக்காது. ஏன்னா, தாலியோ, மோதிரமோ அவர்கள் மாற்றவில்லை. இப்போது தரப்பட்டுள்ள இந்த சட்டப்படி இரண்டாம் வகை உறவும் சாத்தியம். இறுதியாக ஒருவர் மற்றவருக்கு தேவை தாலியோ, மோதிரமோ அல்ல. ஒருவர் மற்றவர் தரும் நம்பிக்கையும், வாக்குறுதியும்தான். மேலும், திருமணத்திற்கு புறம்பாக குழந்தை பெற்றுக்கொள்வது ஏளனம் என்ற நிலையும் மாறும். திருமணத்திற்கு புறம்பாக பிறந்தால்தான் என்ன?

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு தீர்ப்புகளும் நம் இந்தியா ஒரு பரந்த மனப்பான்மையை நோக்கி வளர்ச்சியடைகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு நாடு வல்லரசாகிறது என்பது அது வைத்திருக்கும் அணு ஆயுதங்களைப் பொறுத்தது அல்ல. மாறாக, அது எந்த அளவிற்கு அறிவு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது.

வாழ்க அரசியலமைப்புச் சட்டம்!