Sunday, August 10, 2014

என்னை வெறுக்கத்தான் செய்கிறீர்!

தமிழ் மொழியின் சங்க இலக்கியங்களையும், எபிரேய விவிலியத்தையும் சொல், எழுத்து, பொருள் என்னும் மூன்று நிலைகளில் ஒப்புமை செய்து பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. அந்தக் கனவு கொஞ்சமாவது நனவாக வேண்டும் என்று இன்று முதல் அந்த முன்னெடுப்பைத் தொடங்குகிறேன்.

மொழி ஒரு ஊடகம். மொழி உருவான வரலாறு மிகவும் சுவராஸ்யமானது. முதலில் வெறும் ஓசைகளை மட்டும் எழுப்பி ஒருவர் மற்றவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட குகை மனிதர்கள், அடுத்த நிலையாக சைகைகளும், சமிக்ஞைகளும் காட்டத் தொடங்கினர். பின் தாங்கள் கையால் காட்டியதை வரைந்து காட்டத் தொடங்கினர். 'மரத்தில் ஏறு!' என்று சொல்வதற்கு, மரத்தையும், மரத்தில் மேல் ஒருவர் அமர்ந்திருப்பதையும் கோட்டு ஓவியங்களாக வரைந்தனர். கோட்டு ஓவியங்கள் வெளிப்புற உலகைத்தான் அடையாளப்படுத்தியனவே தவிர அவைகளால் மனிதரின் உள்ளத்து உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தத் தவிப்பில் உருவானதே மொழி. மொழி உருவாகப் பலர் பல காரணங்கள் சொல்கின்றனர்.

மொழி கடவுளின் கொடை என்று சிலரும், சமூகத்தின் வளர்ச்சி என்று சிலரும், உடலியில் கூறு என்று சிலரும் சொல்கின்றனர். இப்படி மனுக்குலம் பேசத் தொடங்கிய மொழிக்கு காலப்போக்கில் இலக்கணம் உருவானது. இலக்கணம் உருவாக்கப்பட்டு பேசப்படும் மொழிகள் மிகவும் சொற்பம். பிந்தைய காலங்களில் வந்த மொழிகளே அப்படி உருவாகின்றன. மிகவும் தொன்மையான மொழிகள் முதலில் பேசப்பட்டு, பயன்பாட்டில் இருந்து, பின்பு இலக்கணங்களால் நெறிப்படுத்தப்பட்டன.

எபிரேயத்தையும், விவிலியத்தையும் ஒப்பீடு செய்ய முடியுமா? எபிரேயமும், விவிலியமும் மிகத் தொன்மையான மொழிகள் தாம். ஆனால் அவைகள் இரண்டும் வௌ;வேறு எழுத்துருக்களை கொண்டவை. முக்கியமான வேறுபாடு தமிழை நாம் இடப்புறமிருந்து வலப்புறம் எழுதுகிறோம். ஆனால் எபிரேயம் வலப்புறமிருந்து இடப்புறம் எழுதப்படுகிறது. பண்டைக்கால எபிரேயத்திற்கும், தற்கால எபிரேயத்திற்கும் உயிரெழுத்துக்கள் கிடையாது. இடைக்கால எபிரேயத்தில் மட்டுமே உயிரெழுத்துக்கள் உண்டு. ஆனால் தமிழில் உயிரெழுத்துக்களே மொழிக்கு உயிர் தருபவை. இப்படி அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும் மனித மனமும். சிந்தனையும் ஒன்றுதானே.

வேறு வேறு கண்டங்களில், வேறு வேறு காலங்களில் மக்கள் பேசியிருந்தாலும் அது இன்றும் நமக்குப் புரிகிறது என்றால் மொழி, இனம், காலம், இடம் அனைத்தையும் கடந்து ஏதோ ஒன்று நம்மை இணைக்கிறது என்றுதானே அர்த்தம்.

சின்ன உதாரணம். கொஞ்சம் நக்கலான உதாரணம்தான். நீதித்தலைவர்கள் நூலில் வரும் சிம்சோனுக்கும், திம்னா நகரத்துப் பெண்ணுக்குமான உரையாடல். சிம்சோனின் புதிருக்குப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன செய்தும் தோல்விறும் அப்பெண் சிம்சோனைப் பார்த்துச் சொல்வார்: 'நீர் என்னை அன்பு செய்வதில்லை. என்னை வெறுக்கத்தான் செய்கிறீர். என் உறவினருக்கு நீர் சொன்ன புதிரின் விடையை மறைப்பது ஏன்?' இன்றைக்கும் நாம் அன்பு செய்யும் பொண்ணுகிட்ட ஏதாவது தெரிஞ்சோ, தெரியாமலோ சொல்ல மறந்து, அல்லது மறைத்து அதை அவர்கள் கேள்விப்பட்டால், அறிந்து கொண்டால் சொல்லும் வார்த்தைகளும் இதுதான்: 'நீ என்னை அன்பு செய்யவில்லை!' (மறைத்தல் என்பது ஒரு செயல் என எடுத்துக்கொள்ளாமல் அதை ஒரு மனிதரின் ஒட்டு மொத்த அடையாளமாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்! இது சரியா! தவறா! எனத் தெரியவில்லை!) ஏறக்குறைய 3000 ஆண்டுகள் ஆனாலும் சிம்சோன் காலத்துப் பெண்களைப் போலவே நம் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் நமக்கு அர்த்தமுள்ளதாகிறது என்றால் அதற்குக் காரணமும் மனிதருக்குள் இருக்கும் தொடர்ச்சி தான்.

மற்றொரு உதாரணம், நீதித்தலைவர்கள் நூல் 19வது அதிகாரம் தான் மிகவம் சோகமான அதிகாரம். ஒரு மலைக்கிராமம். கணவனும், மனைவியும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஒருநாள் சின்ன வாக்குவாதம். மனைவி தன் தந்தைவீடு சென்று விடுகிறாள். அவளை அழைத்துச் செல்ல கணவன் செல்கிறான். விருந்து. ஒயின். உபசரிப்பு. மாலையாகிறது. இன்னொரு நாள் போகலாம், இன்னொரு நாள் போகலாம் என்று தள்ளிப் போய் கடைசியில் ஒரு நாள் மாலை தங்கள் ஊர் திரும்புகிறார்கள். இருட்டி விடுகிறது. வழியில் ஒரு ஊரில் தங்குகிறார்கள். யாரும் இடம் தராததால் மரத்தடியில் தங்குகிறார்கள். ஒரு முதியவர் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த ஊரின் ஆண்கள் இணைந்து அவரின் 'மனைவியை' அவமானப்படுத்துகிறார்கள் (அப்படித்தான் பைபிள் சொல்கிறது!). காலையில் எழுந்து பார்க்கிறான் கணவன். மனைவி இறந்து கிடக்கிறாள். கோபத்தில் தன் ஊர் திரும்பி அவளின் உடலை 12 பாகங்களாக அறுத்து 12 குலங்களுக்கும் அனுப்புகிறான். பென்யமீன் குலம் தீக்கிரையாகி அழிகிறது.

இதை வாசித்தவுடன் சிலப்பதிகாரம் நினைவிற்கு வருகிறதா? கண்ணகி - கோவலன். பெண் தன் தந்தைவிடு செல்வது போல கோவலன் மாதவி வீடு செல்கிறான். கணவனை மீட்டெடுத்த கண்ணகி அவனை மதுரைக்கு அழைத்துச் செல்கிறாள். சிலம்பு. இரவு. பொற்கொல்லன். கோவலன் கொல்லப்படுகிறான். கோபம் கொண்ட கண்ணகி தன் மார்பை அறுத்தெரிய மதுரை தீக்கிரையாகி அழிகிறது.

இரவின் கொடுமை - அவமானம் - ஏமாற்றுதல் - சூழ்ச்சி - பழிவாங்குதல்: இந்த ஐந்தும் தான் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இருக்கின்றன.

இவைகளில் ஏதேனும் ஒன்று நமது வாழ்க்கை இலக்கியத்திலும் இருக்கலாம் அல்லவா?

1 comment:

  1. இன்று தாங்கள் எடுத்திருக்கும் புது முயற்சி எங்களுக்கும் புதியதுதான்; புதுமையானதுதான்.எபிரேய விவிலியத்தையும்,சங்க இலக்கியங்களையும் ஒப்புமைப் படுத்தி எங்களுக்கு கொடுக்க இருக்கும் படைப்பைக்காண நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்.தங்ளின் அத்தனை கனவுகளும் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete