Sunday, August 24, 2014

அவரைத் தான் தேடுவேன்!

இன்று மதியம் ஒரு புத்தகக் கடைக்குச் செல்வதற்காக மெட்ரோவில் சென்றேன். நான் ஏறிய நிறுத்தத்தின் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ஒருவர் சற்று வித்தியாசமாக இருந்தார். 'வித்தியாசமாக' என்றால் ஏறும்போதே தனக்குத் தான் பேசிக் கொண்டே வந்தார். விடுமுறைக்காலம் என்பதாலும், நான் இருந்தது மெட்ரோவின் முதல் பெட்டி என்பதாலும் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. எனக்கு நேரெதிரே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார். எனக்கருகில் இருந்தவர்கள் எங்கே அவரின் பார்வை தங்கள் மேல் பட்டுவிடுமோ என்று அவசர அவசரமாக தங்கள் புத்தகங்களிலும், அலைபேசிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினர். அவர் என்னைப் பார்த்துக்கொண்டே என்னைப் பார்க்காதது போல தனக்குத் தானே பேசிக்கொண்டார்.

அ. எங்க பார்த்தாலும் இத்தாலியில் டிஸ்ஓக்குபாஷியோனே! (disoccupazione) எனச் சொல்கிறார்கள். இங்கே இவ்வளவு இருக்கைகள் காலியாக இருக்கின்றதே! - என்று அவர் சொல்லி முடிக்க எனக்கருகில் இருந்தவர்கள் முகம் சுளித்தார்கள். எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. அவரின் மொழியுணர்வை அறிந்து வியந்தேன். ஏனெனில் 'டிஸ்ஓக்குபாஷியோனே' (disoccupazione) என்பதற்கு 'வேலையில்லாத் திண்டாட்டம்' என்றும் பொருள், 'காலியான இருக்கை' என்றும் பொருள். ஒரு பக்கம் எங்களுக்கு அலுவலகத்தில் காலி இருக்கைகள் இல்லை எனப் வீதிகளில் போராட்டம் தொடுக்கும் மக்கள். மற்றொரு பக்கம் இவ்வளவு காலி இருக்கைகள் (மெட்ரோவில்!).

ஆ. இவர் சொன்னதை உடனடியாகக் குறித்துக் கொள்ளவேண்டும் என்று என் பையில் கை விட்டு அலைபேசி எடுத்தேன். உடனே அவர் இரண்டாவதாக ஒன்று சொன்னார்: 'இந்த உலகத்தின் மகிழ்ச்சியாக இருக்கும் நபர் அலைபேசி இல்லாதவர்தான்!'

எனக்கு சுருக்கென்றது. மறுபடியும் லேசாகச் சிரித்துக் கொண்டேன். இவர் சொல்வதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கவே செய்கின்றது. எத்தனை பேர் நம்மை அழைத்தார்கள் என்று பார்த்தும், எத்தனை பேர் நம்மை அழைக்கிறார்கள் என்று பார்த்தும் தான் பல நேரங்களில் நம் மகிழ்ச்சியின் அளவுகோல் உள்ளது.

இ. மெட்ரோ அடுத்தடுத்த நிறுத்தம் கடந்து கொண்டிருக்க ஒரு நிறுத்தத்தில் ஒரு அல்பேனிய பெண்ணும் (ஏறக்குறைய 21 வயது) அவரது சிறு பெண் குழந்தையும் (ஏறக்குறைய 3 வயது) ஏறினர். அல்பேனிய பெண் பாட்டுப் பாடிக் கொண்டே செல்ல அந்தக் குழந்தை பிச்சை கேட்டுக்கொண்டே வந்தது. அம்மா வேகமாக முன்னால் போக இந்தக் குழந்தை மெதுவாக ஒவ்வொருவராகத் தொட்டு பிச்சை கேட்டுக்கொண்டே வந்தது. நிறையப்பேர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு சிலருக்கு தன் உதட்டிற்கெட்டிய தூரத்தில் முத்தமும் கொடுத்தது. எனக்கு அடுத்த வரிசையில் இருந்த ஒரு சீனப்பெண்ணை அந்தக் குழந்தை தொட்டவுடன் அவர் வேகமாக அந்தக் குழந்தையை நோக்கி கையை ஓங்கினார். எல்லாரும் அதைப் பார்த்தார்கள். ஆனால் இந்த மனிதர் மட்டுமே குரல் கொடுத்தார். அதிகம் பேசவில்லை. ஒரே ஒரு வாக்கியம்: 'அது குழந்தை என்பதனால் தானே எளிதாகக் கையை ஓங்குகிறாய்! அவள் அம்மாவை நோக்கி ஓங்கு பார்ப்போம் உன் வீரத்தை!'

நமக்கு கீழ் ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பு தானே நம் வார்த்தைகள் தடிப்பதற்கும், கைகள் ஓங்குவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கின்றது.

புலம்பிக் கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் சென்று விட்டார்.

இன்று அவரிடம் கேட்ட இந்த மூன்று வாக்கியங்கள் ஏதோ பெரிய இலக்கியம் படித்தது போல இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் நானும் இறங்கி மெட்ரோ லைன் மாறி புத்தகக் கடை செல்லாமலே வீடு திரும்பினேன்.

இனியும் நான் மெட்ரோவில் ஏறினால் அவரைத் தான் தேடுவேன்!

1 comment:

  1. தாங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியைத் தங்களுக்கே உரித்தான சுவாரஸ்யத்தோடு கூறியுள்ளீர்கள்.சுவாரஸ்யம் போல் தோன்றினாலும் நெஞ்சில் சுருக்கென்று தைக்கக்கூடிய விஷயம்தான்.அடுத்த ஊரைச் சொல்கிறோமே, நம் ஊரில் என்ன நடக்கிறது? குடும்பங்களில் நம் குழந்தைகளையும், நம் வேலைப்பழுவைக் குறைக்க நமக்கு உதவியாக இருப்பவர்களையும்,மற்றும் பள்ளி,கல்லூரி,இதர வேலைத்தளங்களில் நம் பொறுப்பில் உள்ளவர்களையும் அவர்கள் கையைத்தூக்கி நம்மை ஒன்றும் செய்ய இயலாது என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை எவ்வாறு பாவிக்கிறோம்? இதை மனத்தில் வைத்துத்தான் அன்றே 'பட்டுக்கோட்டையார்' " எளியோரைத்தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?" என்று பாடிச்சென்றுள்ளார் போலும்.அவரது வார்த்தைகளை செயலாக்க நாம் முயற்சிக்கலாமே! அனைவருக்கும் இதயம் கனிந்த ஞாயிறு வாழ்த்துக்கள்...

    ReplyDelete