Monday, August 11, 2014

மொழி என்றால்...!

அ. மொழி என்றால் உதவி:

உதவி கேட்பது இரண்டு வகை: சிறிய உதவி, பெரிய உதவி. உதவி சிறியதா அல்லது பெரியதா என்பதை ஒருவர் அதைக் கேட்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனத்தை வைத்து அளந்து விடலாம். சிறிய உதவி என்றால் சிறிய மௌனம். 'எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? அந்தப் பென்சிலைக் கொடுங்களேன்!' இதில் மௌனமே இல்லை.

பெரிய உதவி என்றால், 'எனக்கு ஒரு உதவி செய்யணும்!....எட்டு நொடிகள் கடந்து விட்டன... 'என்ன? என்ன உதவி?' '...அது வந்து...' மௌனமும், வார்த்தை இடைவெளியும் அதிகமாக, அதிகமாக உதவியின் கனமும், அது தரும் வலியும் அதிகமாகிறது.

உயிரினங்களிலேயே மனித இனம் ஒன்றுதான் உதவி கேட்கக் கூடியது. விலங்குகள் உதவி கேட்பதும் இல்லை. உதவி செய்வதும் இல்லை. சுவரில் இருக்கும் பல்லி அது குறி வைக்கும் கரப்பான் பூச்சியிடம் போய், 'எனக்கு ஒரு உதவி செய்வியா? அசையாமல் நிற்கிறியா, நான் உன்னைச் சாப்பிடப்போகிறேன்!' என்று கேட்பதில்லை. உண்மையில் இதுதான் பெரிய உதவி...எந்தவொரு மௌனமும் இல்லாமல்!

வெறும் வார்த்தைகள் மட்டும் மொழியை அலங்கரிப்பதில்லை. வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனமும் மொழியின் அலங்காரமே!

ஆ. மொழி என்றால் மரியாதை:

'அந்த பேப்பரைக் கொடு!'
'அந்த பேப்பரைக் கொடுங்கள்!'
'தயுவு செய்து அந்த பேப்பரைக் கொடுங்கள்!'

- இந்த மூன்று வாக்கியங்களையும் நாம் ஒரே நபரை நோக்கிப் பயன்படுத்துவதில்லை. மரியாதை என்பது முகம் சார்ந்தது. ஒருவரின் முகத்தைப் பொறுத்தே நாம் அவரை அழைக்கும் விதமும், அணுகும் விதமும் அமைகிறது.

இ. மொழி என்றால் 'கொஞ்சம்! கொஞ்சம்!'

கணவன்: ஃபோன் அடிக்குது.
மனைவி: நான் குளிச்சுட்டு இருக்கேன்.
கணவன்: ஓ.கே.

இந்த உரையாடலில் அர்த்தம் முழுமை பெறுகிறதா? இந்த உரையாடலில்

கணவன் ஃபோன் எடுக்கச் சொல்லி தன் மனைவியிடம் உதவி கேட்கிறான்.
மனைவி தன் இயலாமையைச் சொல்கிறாள்.
கணவனே அந்த வேலையைச் செய்கிறான்.

மொழியில் பாதிப் பாதி சொற்கள் இருந்தாலே நம்மால் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். நம் உரையாடலின் அர்த்தம் நாம் பரிமாறும் வார்த்தைகள் மட்டும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. உரையாடுபவர்களைப் பொறுத்தும் அர்த்தம் அமைகின்றது.


1 comment:

  1. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை உணர்த்தி விட்டீர்கள் தந்தையே! 'சிறிய' வார்த்தைகளில் 'பெரிய' விஷயங்களைக் கூறியுள்ளீர்கள்.ஏதோ ஓரங்க நாடகங்கள் பார்த்த உணர்வு ஏற்பட்டது.நான் சிறு வயதில் கற்றுக்கொண்ட பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
    "There are two little magic words..that will open any door with ease
    One little word is 'thanks' and the other little word is 'please'....இந்த வாரம் இனிய வாரமாகட்டும்....

    ReplyDelete