Wednesday, August 27, 2014

மருத்துவருக்கு எல்லாரும் தேவை!

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும், பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், 'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை' என்பதன் கருத்தை நீங்கள் போய் கற்றுக்கொள்ளுங்கள் என்றார். (மத்தேயு 9:11-12)

இயேசுவின் வாழ்வில் தன் சக மனிதர்களால் அவருக்கு வந்த முதல் பிரச்சினை இதுதான்: '... சேர்ந்து உண்பது ஏன்?'

'நீ யாருடன் சேர்ந்து குடிக்கிறாயோ அவரைப் பற்றிக் கவனமாயிரு!' என்பது ஒரு பழமொழி. நாம் எல்லாரும் எல்லாரோடும் பேசுகிறோம், சிரிக்கிறோம், நடக்கிறோம், வாழ்கிறோம். ஆனால் நாம் எல்லாரும் எல்லாரோடும் சாப்பிடுவது கிடையாது. மனிதர்கள் சாப்பிடுவதற்கும், விலங்குகள், தாவரங்கள் சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசங்களில் இதுவும் ஒன்று தான். ஒரே தெருவில் உள்ள அடுத்தடுத்த திருமண மண்டபங்களில் ஒரே நேரத்தில் விருந்து நடந்தாலும் நாம் அழைக்கப்பட்ட இடத்திற்கு மட்டுமே சென்று உண்கிறோம். ஆனால் வெளியே சுற்றித் திரியும் நாய்க்குட்டிகளும், கன்றுக்குட்டிகளும் அப்படி 'செலக்ட்' செய்வதில்லை. அவைகளுக்கு இரண்டு விருந்தும் ஒன்றுதான்.

'ஏம்ப்பா...உங்க போதகர் தராதரம் பார்த்து சாப்பிட மாட்டாரா?' என்ற தொனியில் இருக்கிறது பரிசேயர்களின் கேள்வி. சீடர்களிடம் தான் அவர்கள் கேட்டாலும் இயேசு தான் அவர்களுக்குப் பதில் சொல்கின்றார்.

'வரிதண்டுபவர்களையும், பாவிகளையும் நண்பர்களாக்கிக் கொண்டால் அவர்களோடு உண்பதில்' எந்தச் சிக்கலும் இருப்பதில்லை என்ற பின்புலத்தில் இயேசு பதில் சொல்கின்றார்.

'நோயற்றவருக்கு அல்ல. நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை!' - என்ற பழமொழியின் வழியாக அவர்கள் தேவையில் இருப்பவர்கள் எனவும், தான் அவர்களின் அன்புத் தேவையை, சமத்துவத் தேவையை நிறைவேற்ற வந்தவன் எனவும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றார்.

இன்று பழமொழியை கொஞ்சம் மாற்றித்தான் விட்டோம்: 'மருத்துவருக்கு இன்று நோயற்றவரும் தேவை, நோயுற்றவரும் தேவை!'

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையின் ஒரு பிரபல மருத்துவமனையில் மாஸ்டர் செக்-அப் செய்யச் சென்றேன். ரிப்போர்ட்டை இறுதியாக மருத்துவர் பார்வையிட்டு அறிவுரை கூறும் அறையில் நின்று கொண்டிருந்தேன். 'உங்களுக்கு சுகர் இல்லை, உப்பு இல்லை, பிரஷர் இல்லை. நன்றாக இருக்கிறீர்கள்' என்று சொன்னவர் இப்படியே மெயின்ட்டெய்ன் செய்ய ஒரு கோர்ஸ் மருந்து இருக்கிறது. ஒன்பது நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி என்னை பார்மஸிக்கு அனுப்பிவிட்டார். அங்கே எனக்கு முன் சென்றவர் சுகர் மாத்திரை வாங்கிக் கொண்டிருந்தார். நான் சீட்டை நீட்டி 'இதற்கு எவ்வளவு ஆகும்!' என்று மட்டும் கேட்டேன். மூவாயிரத்து சொச்சம் என்று அவர் சொன்ன நேரம் எனக்கு முன்னால் இருந்தவர் வெறும் நாற்பது ரூபாய் பில் கட்டிக் கொண்டிருந்தார். இன்று மருத்துவர்கள் எல்லாருக்கும் தேவையோ, இல்லையோ மருத்துவர்களுக்கு எல்லாம் தேவை.

நேற்று டென்டிஸ்ட் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன். டென்டிஸ்டின் பில் நமக்குப் பார்க்கும் வைத்தியத்திற்கு மட்டுமல்ல. நாம் மல்லாந்து படுக்கும் நாற்காலி, அப்போது நாம் வெறிக்க பார்க்கும் மருத்துவமனையின் அழகுபடுத்தப்பட்ட மேல்கூரை, வெறும் பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு ஏதோ சர்ஜன் ரேஞ்சில் கேள்விகள் கேட்கும் வரவேற்பறைப் பெண், அவருக்கு மேலே எல்.சி.டி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஆதித்யா சேனல், 'இங்கு கலனிகளை விடவும்' என்று அரைகுறை தமிழில் வாசலை அலங்கரிக்கும் போர்டு என அனைத்திற்கும் தான்.

ஆகையால், இனி பழமொழியை மாற்றிப் படிப்போம்!

மருத்துவருக்கு எல்லாரும் தேவை!

இயேசுவுக்கும் எல்லாரும் தேவை!


1 comment:

  1. நம் மக்களைப் பொறுத்தவரை 'விருந்தோம்பலும்', 'விருந்துண்பதும்' எல்லோருக்கும் பிடித்த விஷயம்.நமக்கு வேண்டாதவர்கள் என் நாம் நினைப்பவர்கள் கூட ஒரு நேரம் நம் வீட்டில் 'கை' நனைத்துவிட்டால் நமக்கு வேண்டியவர்களாகி விடுவர் என்பது நம் மரபு.அதைத்தான்...பாவிகளும் தனக்கு வேண்டப்பட்டவர்களே என்பதை உணர்த்தத்தான் இயேசு பாவிகளோடு உணவருந்துகிறார்.மற்றபடி 'மருத்துவர்' உலகத்தைப்பற்றிக் கூறும்போது சுகம் கொடுக்கும் மருத்துவர்களைத் 'தெய்வங்களாகப்' பாவிப்பவர்கள் நம் மக்கள்.தெய்வங்கள் வாழும் பூமியில் அஅசுத்த ஆவிகளும் உலா வர்த்தானே செய்கின்றன? நோய் நீக்க வாழ்பவர்கள் சிலரென்றால் நோயால் வாழ்பவர்கள் பலர்.நாம் தானே அவர்களை இனம் காண வேண்டும்? ...

    ReplyDelete