Friday, August 8, 2014

பின்னோக்கிப் பார்க்கிறேன்!

யோபு நூல் இரண்டு கேள்விகளுக்கு விடையாக அமைகின்றது:

1. யோபுவின் வழிபாடுகள் அவரையும் அவரின் நலனையும் மையப்படுத்தியதா? அல்லது கடவுளை மையப்படுத்தியதா?

2. துன்பம் வரும் போது நம் கண்ணில் ஒளியும், நம் ஆன்மா கசந்திருக்கும் போது நம் உடலில் உயிரும் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?

யோபு நூல் விவிலியத்தில் மட்டுமன்றி உலக இலக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யோபு என்பவர் இருந்தாரா? இல்லையா? யோபு என்பவர் இருந்தார் என்று சொல்கின்றார் எசேக்கியேல் இறைவாக்கினர் (14:4-20). அவரைப் பற்றிய வேறு குறிப்புக்கள் இல்லை. யூதர்களைப் பொறுத்தவரையில் யோபு ஒரு உருவகம். அந்த யோபு என்பவர் நம் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் சுட்டிக் காட்டுகின்றார். அந்த யோபுவிற்குள் நாமும் ஒளிந்திருக்கின்றோம்.

இந்த நூலில் மூன்று வகை டூவலிட்டி இருக்கின்றது:

பொறுமையுள்ள யோபு - கோபப்படும் யோபு.
கடவுள் பக்தி - துன்பம்
உரைநடை - செய்யுள்

உரைநடைப் பகுதிகள் யோபுவை பொறுமையுள்ளவராகவும், செய்யுள் பகுதிகள் அவரைக் கோபக்காரராகவும் காட்டுகின்றன. உரைநடைப் பகுதிகள் கடவுள் பக்தியையும், செய்யுள் பகுதிகள் 'ஏன் துன்பம்?' என்பதையும் விளக்குகின்றன.

இந்த நூலின் ஒரு சில சித்தாந்தப் பிரச்சினைகள்:

1. இவ்வுலகில் தீமை இருப்பது எதனால்? துன்பம் நம் பாவத்தால் வருகிறதா? பாவம் செய்யாதவர்கள் துன்பப்படுகிறார்களே அதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் கெட்டது செய்தால் கடவுள் தண்டிப்பார் என நமக்கு ஏன் பயம் வருகிறது?

2. இந்த நூலின் தொடக்கத்தில் வரும் சாத்தானையும், விண்ணக நீதி மன்றத்தையும் புத்தகத்தின் இறுதியில் காணோம். சாத்தான் ஜெயித்து விட்டது போலவே இருக்கின்றது இந்த நூலின் இறுதிப் பகுதி.

3. பொறுமைசாலியாகவும், கோபக்காரராகவும், மீண்டும் பொறுமைசாலியாகவும் மாறுகிறார் யோபு. இறுதியில் பொறுமை தான் தேவை என்றால் எதற்காக இடையில் இவ்வளவு கோபம்.

இந்த நூலை 'ஞானம்' என்ற வார்த்தையை வைத்து மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்:

யோபு மற்றும் அவரது நண்பர்களின் ஞானம்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் நம் ஞானம்.
கடவுளின் ஞானம்.

யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் சாத்தான் கடவுளிடம் விட்ட சவால் தெரியாது. நமக்கு சாத்தானின் சவால் பற்றியும் தெரியும், யோபுவின் துன்பமும் தெரியும். அவரது நண்பர்களின் கடினமான சொற்களும் தெரியும். இந்த இரண்டு ஞானங்களுமே கடவுள் என்ற ஞானத்திடம் சரணாகதியாக வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

61 வயதில் கேன்சரால் இறந்து போன ஒரு ரபியைப் பற்றிய கதை உண்டு:

'அவர் நிறையப் படித்தார். எழுதினார். பேசினார். ஒவ்வொரு நாளும் கேன்சர் இவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது. ஆனால் அவர் அதற்காக தன்னை நொந்து கொள்ளவோ, 'ஏன் எனக்கு மட்டும்!' என்று கேட்கவோ இல்லை. அந்த நாள் வந்தது. மௌனமாகச் சரி என்று சொன்னார். தான் அன்பு செய்த நண்பர்களும், தான் அன்பு செய்த புத்தகங்களும் அருகிருக்க அமைதியாக விடைபெற்றார்.'

யோபுவின் நூல் நமக்குக் கற்றுக்கொடுத்தவை மூன்று:

1. எல்லாக் கேள்விகளுக்கும், பதில்களுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டிற்கு மேல் நாம் சரணாகதி ஆக வேண்டும். கேள்வி கேட்கும் புத்தியை விடுத்து சரணாகதியாகும் மனநிலை எனக்கு தேவை.

2. நம் லிமிட் என்ன என்று தெரிந்து கொள்வதில்தான் ஞானம் தொடங்குகிறது. ஆல்பர் கேம்யூ அழகாகச் சொல்வார்: we can only do this much. therefore we must do at least that much.  நான் பல நேரங்களில் என்னால் முடிபவற்றையே செய்வதில்லை. 'எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றும் 'எனக்கு வேற வேலை இருக்கிறது' என்றும் என் லிமிட்டையே நான் வாழ்வதில்லை. 'இதுதான் லிமிட்' என்று தெரியாமல் ஏன் பயந்து நிற்க வேண்டும்? முடிந்த வரைப் போய்ப் பார்ப்போமே. என் பயம் விடுப்பேன்.

3. துன்பம் என்று வந்தவுடன் 'கடவுள் இல்லை' என்றும் 'கடவுள் ஒரு அசுரன். நம்மைத் துன்புறுத்தி வேடிக்கை பார்க்கிறார்' என்றும் விடையை எழுதிவிடுகிறது என் மனம். இந்த இரண்டு மனநிலையையும் கடந்து துன்பத்தை ஒரு எதார்த்தமாக ஏற்கும் வரம் கேட்கின்றேன்.

'...ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் ...
இறுதியில் மண்மேல் எழுவார்...'
(யோபு 19:25)


1 comment:

  1. யோபுவின் நூலை அலசி ஆராய்ந்ததன் விளைவாக தாங்கள் மேற்கொண்டிருக்கும் தீர்மானங்கள் எல்லோருமே பின்பற்றக்கூடியவைதான்.ஆம்...நம் புத்திக்கும்,சக்திக்கும் மிஞ்சிய விஷயங்கள் எத்துணை எத்துணையோ உள்ளன.இங்குதான் கைகொடுக்க வருகிறார் தந்தையாம் நம் இறைவன்." மாற்ற முடிந்ததை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும் வரம்தருவாய்" என்று இறைவனிடம் 'சரணாகதி' அடைவதுதான் ஞானத்தின் உச்சம்.தன்னுடன் சேர்ந்து எம்மையும் சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்...

    ReplyDelete