Friday, August 22, 2014

'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் அவர்களோடு'!

அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். (லூக்கா 1:27-28)

'ஆண்டவர் உம்மோடு!', 'கடவுள் நம்மோடு!' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்து இன்று திருப்பலியில் மறையுரை நிறைவேற்றிவிட்டு இருக்கையில் அமர்ந்த போது திடீரென உள்ளத்தில் ஒரு நெருடல். அந்த நெருடலை இன்றைய வலைப்பதிவாக எழுத விழைகிறேன்.

'கடவுள் நம்மோடு' என்ற வார்த்தைகளோடு தொடங்குவோம். பழைய ஏற்பாட்டில் சிரியா நாட்டோடு அண்டை நாடுகள் எல்லாம் உடன்படிக்கை செய்து கொண்டுவிட்டன. இனியும் தான் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளாவிட்டால் எருசலேம் அழிந்துவிடும் என அஞ்சுகின்ற ஆகாசு அரசன் எசாயா இறைவாக்கினர் வழியாக யாவே இறைவனிடம் அறிகுறி ஒன்று கேட்கின்றார். அப்போது அவருக்குத் தரப்படும் அடையாளமே 'இம்மானுவேல்!' என்னும் மகன். 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு' என்பது பொருள். பழைய ஏற்பாட்டில் இம்மானுவேல் என்பது ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கும். புதிய ஏற்பாட்டில் இது இயேசுவுக்குப் பொருந்துவதாக மாற்றிக் கொண்டார்கள்.

'கடவுள் நம்மோடு!'

தமிழில் ஆட்களைப் பற்றிப் பேசும் போது மூவிடங்களையும், இரண்டு எண்களையும் பயன்படுத்துகின்றோம்: மூவிடங்கள் என்பவை தன்மை, முன்னிலை, படர்க்கை. எண்கள் என்பவை ஒருமை எண், பன்மை எண்.
'நம்மோடு' என்பது தன்மை பன்மை. பன்மையை இன்னும் விரித்துப் பார்த்தால் 'உங்களோடு', 'அவர்களோடு' என இழுக்கலாம்.

ஆக, கடவுள் நம்மோடு, கடவுள் உங்களோடு, கடவுள் அவர்களோடு.

தன்மை பன்மையில் தமிழில் மட்டும் ஒரு வேறுபாடு வருகின்றது. 'எங்களோடு' என்பதும் தன்மை பன்மையே. ஆனால் பொருளில் வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, நமக்கு முன்னால் இருக்கும் நபரையும் சேர்க்காமல் பேசும்போது 'எங்களோடு' என்றும், சேர்த்துப் பேசும் போது 'நம்மோடு' என்றும் சொல்கின்றோம். உதாரணத்திற்கு, குழந்தைகள் 'எங்களுக்கு' பசிக்கிறது என்று தாயிடம் சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் பசிக்கிறது என்று பொருள். தாயின் பசி குறித்து இங்கு நாம் பேசுவதில்லை. ஆனால் குழந்தைகள் 'நம்மோடு' சாப்பிட யார் வருகிறார்கள் என்று கேட்டால் அங்கே குழந்தைகள் தங்களை மட்டுமல்ல, தங்கள் தாயையும் தங்கள் குழுவோடு இணைத்துப் பேசுகிறார்கள்.

ஆங்கிலத்தில் 'எங்களோடு' மற்றும் 'நம்மோடு' என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் '...' என்ற ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது. எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இலத்தீனிலும் கூட ஒரு சொல்தான் உள்ளது. தமிழ் இதில் வேறுபட்டு நிற்கிறது.

இப்போது, கடவுள் நம்மோடு என்று சொல்லும் போது நாம் இரண்டு வகை தவறைச் செய்கிறோம்:

அ. அடுத்தவர்களுக்காக நாம் பேசுகிறோம். இங்கு இத்தாலியில் நின்று கொண்டு 'நம் இந்தியா!' என நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். அது ஆணவமாக அல்லது இத்தாலியர்களை அவமதிப்பதாகக் கருதப்படும். என்னைச் சாராத ஒருவரை நான் வம்படியாக என்னோடு இழுக்க நினைப்பது தனிமனித சுதந்திரத்தையும் உரிமையையும் அவமதிப்பதாகும். நம்மூரில் ஒரு கிறிஸ்துமஸ் விழா நடக்கிறது என வைத்துக்கொள்வோம். அங்கே இசுலாமிய, இந்து, பௌத்த, ஜைன, எம்மதம் சாராத சகோதர, சகோதரிகள் உடன் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் 'இயேசு என்றால் இம்மானுவேல். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு' என நான் சொன்னால், அது அவர்களின் மனதைப் புண்படுத்துவதாகும். அவர்களை எப்படி இயேசு என்ற என் கடவுளுக்குள் இழுக்க முடியும்?

ஆ. 'கடவுள் நம்மோடு' என்று சொல்லும் போது அது மற்ற இரண்டு இடங்களையும் நிராகரிக்கிறது. அதாவது 'கடவுள் உங்களோடு இல்லை!' எனவும், 'கடவுள் அவர்களோடு இல்லை!' எனவும் 'கடவுள் எங்களோடு!' எனவும் பொருள் தருகிறது. இது நம்மையறியாமலேயே மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் எனச் சிந்திக்கவும், மற்றவர்கள் இருக்கவே தகுதியற்றவர்கள் எனவும் நம் மூளை சிந்திப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடக்கும் சண்டையின் கருத்தியல் இதுதான். 'கடவுள் எங்களோடு' என்று மார்தட்டும் இஸ்ரேல் யூதர்கள், 'கடவுள் உங்களோடு இல்லை!' என்று பாலஸ்தீன இசுலாமியர்களை நோக்கி விரலை நீட்டுகின்றனர்.

நாம் நம்மையறியாமல் அன்றாடம் ஏற்றுக்கொள்ளும் விவிலிய உண்மைகள் நாம் விடுதலையடைவதற்குப் பதிலாக, நம்மை அடிமைகளாக்கவும் செய்து விடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. Religion can be oppressive as much as it is liberative.

'ஆண்டவர் உமக்காக!' என்று விடுதலைப்பயண நூலில் (14:13) தம்மை வெளிப்படுத்தும் இறைவன், நீதித்தலைவர்கள் நூலில் (6:12) தான் 'ஆண்டவர் உங்களோடு' என்று மாறுகின்றார். கிதியோனைப் பார்த்து முதன் முதலாக வானதூதர் சொல்வதும் ஒரு போரின் பின்புலம்தான். 'ஆண்டவர் உங்களோடு!' என்று சொல்கிறீர்களே, 'ஆண்டவர் எங்களோடு இருந்தால் நாங்கள் ஏன் இப்படி அடிமைகளாக இருக்கிறோம்!' என்று எகத்தாளமாகக் கேட்பார்.

அன்று வானதூதர் கிதியோனிடம் சொன்ன வார்த்தைகளை கபிரியேல் தூதர் மரியாவிடம் சொல்கிறார். இன்றும் அதை நாம் திருப்பலி மற்றும் அருட்சாதனக் கொண்டாட்ட நிகழ்வுகளில் சொல்கிறோம்.

'ஆண்டவர் உங்களோடு!' என்றால் 'ஆண்டவர் எங்களோடு!' அல்லது 'ஆண்டவர் அவர்களோடு!' என்பது பொய்யா?

ஆண்டவர் என்றால் அவர் எல்லாருக்கும் தானே! ஏன் நமக்கு மட்டும் அல்லது நம்மோடு மட்டும் எனச் சொல்ல வேண்டும்?

'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு!' என்பது பொருள்...!


1 comment:

  1. 'கடவுள் நம்மோடு', 'கடவுள் உங்களோடு' எனும் வார்த்தைகளை நம் மனத்தின் அடித்தளத்திலிருந்து நாம் கூறும்போது அது யாரை வேண்டுமானாலும்..ஆம் உடலளவில்,உள்ளத்தளவில் அங்கு இல்லாதவர்களைக்கூட சென்றடையலாம்.இதைத்தான்'telepathy', 'wishful thinking' என்றெல்லாம் கூறுகிறார்கள்.மற்றபடி இவ்வார்த்தைகள் எவரையும் புண்படுத்துமா இல்லை பண்படுத்துமா..விவிலியத்தின் துணைகொண்டு கிண்டிக்கிழங்கெடுத்துள்ளீர்கள்.மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த விரும்புகிறேன்..'ignorance is bliss..' படைத்தவனை வழிபட இத்தனை தூரம், மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டுமா தெரியவில்லை.என்ன சொல்கிறீர்கள் தந்தையே? இரவு வணக்கங்கள்..

    ReplyDelete