Saturday, August 30, 2014

அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத்தேயு 16:26)

தூய இஞ்ஞாசியார் அவர்கள் தூய சவேரியாருக்கு அடிக்கடி இந்த இறைவார்த்தையைச் சொல்லி, ஒருநாள் திடீரென்று இதன் அர்த்தம் உணர்ந்து தான் ஆற்றிய பேராசிரியப் பணியை விடுத்து மறைப்பணி செய்ய சவேரியார் புறப்பட்டார் என்பது வரலாறு.

இந்த இறைவார்த்தையைக் கேட்டு அவர் அவரது ஊரிலேயே இருந்து தன் பேராசிரிய வேலையைப் பார்த்திருந்தால் நம் இந்திய மண்ணில் மதமாற்றம் என்ற பேரில் நம் முன்னோர்கள் கண்ணீருக்கும், செந்நீருக்கும் ஆளானதும், 'பேய்களின் கோவில்கள்' என்று நம் இந்திய மண்ணின் முன்னோர்கள் எழுப்பிய கடவுளின் ஆலயங்களும் மண்ணில் புதையுண்டு போகாமல் இருந்திருக்கும்.

கிறிஸ்தவ மதம் வந்ததால் தான் இந்தியாவில் கல்வியறிவு வந்தது என்றும், நல்ல மருத்துவ வசதிகள் வந்தது என்றும் போர்க்கொடி தூக்காதீர்கள். 4000 ஆண்டுகளுக்கு முன் வந்த வேதங்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் வந்த திருக்குறளும் கல்வியறிவு இல்லாமலா வந்தது? சித்தா, ஆயுர்வேதா என்ற இன்று வெளியே இருந்து எல்லாரும் இங்கே ஓடிவருகிறார்களே. நம் மருத்துவம் என்ன பின்தங்கியா இருந்தது? மேற்கத்திய கல்விக்காகவும், மருத்துவத்திற்காவும் நாம் கொடுத்த விலை ஏராளம். பால்பவுடருக்கும், கோதுமைக்கும் விலைபோன நம் முன்னோரின் ஏழ்மை, வறுமை, இயலாமையை நினைக்கும் போது கண்களில் வியர்க்கிறது.

தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் எவ்வளவோ பரவாயில்லை. மறைபரப்புப் பணியாளர்களால் இன்று அவர்கள் தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் இழந்த நிற்கின்றனர். கொலோம்பியாவின் ஒரு அருட்பணியாளரிடம் உங்கள் தாய் மொழி என்ன என்றால் 'இஸ்பானியம்' என்கிறார். சென்டரல் ரிபப்ளிக் ஆஃப் ஆப்ரிக்கா அருட்சகோதரி தன் தாய்மொழி 'பிரெஞ்சு' என்கிறார். என்ன ஒரு பரிதாபம்!

இந்த மறைபரப்புப் பிண்ணனியில் பார்க்கும் போது எந்த ஒரு விவிலிய வார்த்தையும் ரொம்பக் கவனமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 'உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்' என்று இயேசு சொன்னதால் நாங்கள் எல்லா நாடுகளுக்கும் புறப்பட்டுப் போனோம் என்கிறார்கள் காலனியவாதிகள். அதே இயேசுதான் 'நான் சிதறுண்ட இஸ்ரயேல் மக்களுக்காக மட்டும் அனுப்பப்பட்டேன்' என்கிறார். அப்படியென்றால் எருசலேமோடு நின்றிருக்க வேண்டியதுதானே. எண்ணெய் வளம் மற்றும் செல்வம் கொழித்த மத்திய கிழக்கு நாடுகளில் ஐரோப்பாவின் பருப்பு வேகவில்லை. ஆகையால் வரிந்து கட்டிக் கொண்டு நம்ம ஊருக்கு வந்தார்கள். இந்தக் காலனியாக்க பிண்ணனியில் பார்க்கும் போது நானும் என் தாய் மதத்திற்குத் திரும்பிவிடலாமோ என்றே பல நேரங்களில் தோன்றுகிறது.

சரி ... ரெலிஜியஸ் பாலிடிக்ஸ் பேசுவதை விட்டு மேட்டருக்கு வருவோம்!

சவேரியாரின் உள்ளத்தில் மறைபரப்புத் தீ மூட்டும் அளவிற்கு அப்படி என்ன இந்த வசனத்தில் இருக்கிறது?

பழைய மொழிபெயர்ப்பில் 'வாழ்வு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஆன்மா' என்ற வார்த்தை இருக்கிறது.

மனிதர்
உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும்
வாழ்வை இழந்தால்
வரும் பயன் என்ன?

வாழ்வுக்கு ஈடாக அவர் எதைக் கொடுக்க முடியும்?

இந்த இறைவாக்குப் பகுதியில் இரண்டு வகையான duality இருக்கின்றது: உலகம் மற்றும் வாழ்வு, இழப்பது மற்றும் பெறுவது.

உலகம் மற்றும் வாழ்வு
இரண்டு உலகம் இருக்கிறது. ஒன்று வெளியில் இருக்கிறது. மற்றொன்று உள்ளே இருக்கிறது. வெளியே உள்ள உலகத்திற்குப் பெயர் உலகம். உள்ளே உள்ள உலகத்திற்குப் பெயர் ஆன்மா அல்லது வாழ்வு. வெளியே உள்ள உலகத்தை ஒருவர் தமதாக்கிக் கொண்டாலும், உள்ளே உள்ள உலகம் தமதாக்கப்படவில்லையென்றால் அவருக்கு இழப்பு தானே. அந்த இழப்புக்கு ஈடாக தான் வெளியில் பெற்ற எதையும் அவரால் கொடுக்க முடியாது.

மாயன் நாகரீகக் கதை ஒன்றில் மனிதர்களின் உள்ளத்தில் ஒரு ஓட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஓட்டையை எதைக் கொண்டு அடைத்தாலும் நிரப்ப முடியாது. அந்த ஏக்கத்திலேயே மனிதர் இறந்து போகின்றனர் எனவும் அது சொல்கின்றது. இயேசு குறிப்பிடுவதும் இந்த வெற்றிடத்தைப் பற்றிதான்.

மனிதர் தன் வாழ்வில் செல்லும் மிக நீண்ட பயணம் தன் உள்மனப் பயணம்தான். வெளியே தேடும் தேடல் அவருக்கு நிறைவு தருவதேயில்லை. ஒன்று கிடைக்க மற்றொன்றின் மேல் ஆசை வந்துவிடுகிறது. பொருளின் மேல் ஆசை. பின் பொருளைப் பாதுகாக்க ஆசை. பாதுகாத்த பொருளை அனுபவிக்க ஆசை. ஆசை வளர்ந்து கொண்டே போகிறது. பின்னாலேயே நிழல்போல வெற்றிடமும் தொடர்ந்து கொண்டே வருகின்றது.

மகிழ்ச்சி என்பதும் வாழ்வு என்பதும் ஒரு உள்மன வேலை. அதை வெளியே எதிர்பார்ப்பதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நம்மிடம் இழக்க ஒன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் எதைக் குறித்தும் பயப்படமாட்டார்கள்.

மறுபடி சவேரியாருக்கே வருவோம். இந்த வார்த்தைகள் அவரின் மனதைப் பாதித்தால் ஏன் உலகம் சுற்றப் புறப்பட வேண்டும்? ஒருவேளை அது உண்மையா என்று பார்க்கப் புறப்பட்டிருப்பாரோ? ஆனால் இழப்பு என்னவோ அவருக்கும், நமக்கும் தான்!

அலெக்சாண்டர் தி கிரேட் உலகையெல்லாம் தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து விட்டதாக தத்தவ ஞானிகள் முன் உரையாற்றிக் கொண்டிருந்தாராம். கூட்டத்தில் இருந்த ஒருவர் அரசரைப் பார்த்து கையாட்டினாராம். 'என் முன்னே கையை ஆட்டுகிறீரா?' என்று கோபம் கொண்ட அலெக்சாண்டர் வாளை எடுத்துக் கொண்டு அவர் மேல் பாய்ந்தாராம். கொஞ்சமும் பயப்படாமல் ஞானி சொன்னாராம்: 'கொஞ்சம் தள்ளி நில். சூரிய ஒளியை மறைக்காதே!' ஞானம் பெற்றார் அரசர்.

நம் உள் இருக்கும் ஒளியை நம்மேல் படவிடுவதே வாழ்வைப் பெற்றுக் கொள்வது!


1 comment:

  1. தந்தையின் கோபம் புனித சவேரியாரில் ஆரம்பித்து எங்கெங்கோ போய்விட்டது.நியாயமான கோபம்தான்.ஆனால் ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப்பெற இயலும் என்ற நிதர்சனத்தைப் பலநேரங்களில் மறந்து விடுகிறோம்.எதற்காக எதை இழப்பது? அது அவரவரின் தனிப்பட்ட விஷயம்.மற்றபடி ஆன்மா, உலகம்,பெறுவது,இழப்பது...இவை எல்லாமே மேடை போட்டும் பேசக்கூடிய விஷயங்கள் அல்ல..இன்றைய வாழ்க்கைச்சூழலில்.எந்த நெருடலுமின்றி என் மனசாட்சி என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளதா?..அதுதான் வாழ்வு...அதுவே மோட்சம்....இதை அவரவர் போக்குக்கே விட்டு விடுவோமே!..அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete