Friday, August 15, 2014

உயர்ந்தவை அல்லவா?

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா?
(மத்தேயு 6:25)

விவிலியத்தின் ஒரு சில கேள்விகளுக்கு 'ரெட்டரிக்' (rhetoric) கேள்வி என்று பெயர். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கேள்வியிலேயே இருக்கும்.

'உணவை விட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா?' என்ற கேள்விக்குப் பதில்: 'உணவை விட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை!'

இந்தக் கேள்வியில் இரண்டு முதன்மைப்படுத்துதலை இயேசு முன்வைக்கின்றார்:

அ. உணவை விட உயிர்
ஆ. உடையை விட உடல்

உயிரும், உடலும் இறைவனின் கொடைகள். உணவும், உடையும் மனிதரின் கண்டுபிடிப்புக்கள். மனுக்குலம் முழுவதற்கும் உயிரும், உடலும் ஒன்றுதான். இந்தியாவில் இருக்கும் இந்து ஒருவருக்கும், இத்தாலியில் இருக்கும் கிறித்தவர் ஒருவருக்கும், ஈராக்கின் இஸ்லாமியர் ஒருவருக்கும் உயிர் ஒன்றுதான், உடல் ஒன்றுதான். தட்பவெட்ப நிலை காரணமாக உடலின் தோலின் நிறம் வேண்டுமானால் மாறுபடுமே தவிர உடல் அமைப்பு மாறுவதில்லை. இந்தியருக்கு வாய் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் இத்தாலியருக்கும் வாய் இருக்கிறது. உறுப்புகளின் எண்ணிக்கையும் ஒரே போலத்தான் இருக்கின்றது. இத்தாலியர்கள் அதிகம் பேசுவார்கள் என்பதற்காக அவர்களுக்கு இரண்டு நாக்குகள் எல்லாம் கிடையாது.

ஆனால் உணவிலும், உடையிலும் எத்தனை மாற்றங்கள். நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம். இனத்திற்கு இனம் உணவுப் பழக்கவழக்கமும், உடைப் பழக்கவழக்கமும் மாறுகிறது. நம் ஒரே இந்தியாவில் வடக்கேயும், தெற்கேயும் உணவுப்பழக்கவழக்கங்கள் வேறுபடுகின்றன. நம் தமிழகத்திலேயே மதுரையின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், நாகர்கோவிலின் உணவுப்பழக்கத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன?

உயிரும், உடலும் எசன்ஷியல்ஸ் (essentials). உணவும், உடையும் ஆக்ஸிடன்டல்ஸ் (accidentals).

சின்ன உதாரணம், ரப்பர் பந்து ஒன்று இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இதில் ரப்பர் என்ற மெட்டீரியலும், உருண்டை என்ற வடிவமும் அதன் எசன்ஸியல்ஸ். எசென்ஸியல்ஸ் மாறினால் அதன் முழுக்குணமும் மாறிவிடும். ரப்பருக்கு பதில் இரும்பு இருந்தால் அதை நாம் ரப்பர் பந்து என்று அழைப்பதில்லை. உருண்டையாக இருப்பதற்குப் பதில் கனசதுரமாக இருந்தாலும் நாம் ரப்பர் பந்து என்று அழைப்பதில்லை. ரப்பர் பந்தின் நிறம் என்பது ஆக்ஸிடன்டல். ஆக்ஸிடன்டல்ஸ் பந்தின் குணத்தை மாற்றுவதில்லை. பச்சையாக இருந்தாலும் அது ரப்பர் பந்துதான். மஞ்சளாக இருந்தாலும் அது ரப்பர் பந்துதான்.

இன்று இயேசுவின் குட்டிப் பாடம் இதுதான்:

ஆக்ஸிடன்டல்ஸின் மேல் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக எசன்ஸியல்ஸின் மேல் கவனம் செலுத்துங்கள்.

ஆக்ஸிடன்டல்ஸ்தான் நம்மை ஒப்பீட்டுக்கும், வேறுபாட்டிற்கும் தூண்டுகின்றன.

ஊதாவை விட பச்சை நன்றாக இருக்கிறது என்று ஒப்பீடு செய்யவும், என்னிடம் மஞ்சள் இருக்கிறது, உன்னிடம் வெள்ளை இருக்கிறது என்று வேறுபடுத்திப் பார்க்கவும் நம்மைத் தூண்டுபவை அவைதாம். இந்த ஒப்பீடுகளால் தேவையற்ற மனக்குழப்பமும், நேரவிரக்தியும், மனத்துயரமும் தான் வருகின்றது.

நாம் துணியெடுக்க ஜவுளி கடைக்குப் போய் துணியும் எடுத்து வந்து விட்டு, வீட்டுக்கு வந்து அவற்றை விரித்துப் பார்த்து, 'சே! அந்தக் கலர் வாங்கியிருக்கலாமே!' என்று எத்துனை முறை புலம்பியிருப்போம். ஓட்டலில் ஒரு உணவை ஆர்டர் செய்து விட்டு, அது நம்மிடம் கொண்டுவரப்பட்டு நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பக்கத்து மேசையில் ஒருவர் சாப்பிடும் குழிப்பணியாரம், 'சே! நாம் பணியாரம் ஆர்டர் பண்ணியிருக்கலாமே!' என்று நினைக்கத் தூண்டுகிறதே. நாம் பயன்படுத்தும் செல்ஃபோன், செருப்பு, பைக், கார் என எல்லாவற்றிலும் ஆக்ஸிடன்டல்ஸ்தான் நம் மகிழ்ச்சியைக் குலைக்கின்றன.

மகிழ்ச்சிக்கு இயேசு வைக்கும் ஒரு வழி: treat essentials as essentials and accidentals as accidentals.

1 comment:

  1. தந்தையே! தாங்கள் கூறும்'essentials'ம்,'accidentals'ம் பொருட்களுக்க்உ மட்டும் தான் பொருந்துமா? மனிதருக்குப் பொருந்தாதா? பொருட்களை விட நம் மகிழ்ச்சியைக் குலைப்பது நாம் அன்பு செய்யும் மனிதர்கள்தானே! நம் மகிழ்ச்சியை நிரந்தரமாகத் தக்க வைக்க இயேசு என்ன சொல்கிறார்? கூறுங்களேன்...

    ReplyDelete