Tuesday, August 5, 2014

கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?

யோபு நூலில் 38:1லிருந்து 42:6 வரை கடவுள் யோபுவோடு உரையாடுகிறார். தன் நண்பர்களிடம் யோபு புலம்பியபோதெல்லாம் அவரின் எதிர்பார்ப்பு, 'கடவுள் என்னோடு ஒருமுறையாவது பேச மாட்டாரா?' என்பதாக இருந்தது. யோபுவின் இந்த வேண்டுகோளுக்கு நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக யோபுவோடு உரையாடத் தொடங்குகிறார் கடவுள்.

சூறாவளியினின்று யோபுவோடு பேசும் கடவுளின் உரையாடல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது:

க. முதல் உரையாடல்

அ. யோபுவைக் கடிதலும் சவாலும்
'யோபின் அறிவற்ற சொற்கள் தன் அறிவுரையை இருட்டடிப்பு செய்வதாக' இருக்கின்றது என்று யோபுவைக் கடிந்து கொள்கின்றார் கடவுள். 'எல்லாம் தெரியும் என்பதாகச் சொல்கிறாயே?' - எங்கே! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல் பார்க்கலாம்! என்று திருவிளையாடல் கேள்விகள் போல கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே போகிறார் கடவுள்.

ஆ. கடவுளின் கேள்விகள்
முதல் சுற்றில் கடவுள் யோபிடம் 68 கேள்விகளைக் கேட்கின்றார். இந்தக் கேள்விகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:
படைப்பு குறித்தவை (வானம், வையம், கடல், வைகறை)
- உயிரற்றவை குறித்தவை (பாதாளம், பூமியின் எல்கை, ஒளி, இருள், தட்பவெப்பநிலை, காற்றின் திசை, வேகம், நட்சத்திரங்கள், கோளங்கள், வெள்ளம்)
- உயிருள்ளவை குறித்தவை (சிங்கம், சிங்கக் குட்டிகள், ஆடுகள், மான்களின் இனப்பெருக்கம், காட்டுக் கழுதையின் சுதந்திரம், காட்டெருமையின் வீரம், நெருப்புக் கோழியின் அலட்சியம், போரிடும் குதிரை, உயர்விடத்தில் இருக்கும் கழுகு)

இ. என்னோடு வழக்காடுவாயா?
இவ்வளவு கேள்விகளில் ஒன்றிற்காவது உனக்குப் பதில் தெரியுமா? என்ற தொனியில் கேட்டு முடிக்கும் கடவுள் 'என்மேல் குற்றம் காண்பாயோ? என்மேல் வழக்காடுவாயோ?' என்கின்றார். 'இதோ! எளியேன் நான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்! ஒருமுறை பேசினேன். மறுமொழி உரையேன். மீண்டும் பேசினேன். இனிப் பேசவே மாட்டேன்' என பணிகின்றார் யோபு.

ங. இரண்டாம் உரையாடல்

அ. கடவுளின் கேள்விகள்
கடவுளின் தன் இரண்டாம் உரையாடலில் 22 கேள்விகள் கேட்கின்றார்.
- கடவுளின் தீர்ப்பு குறித்தவை
- பெகிமோத்து குறித்தவை (நீர்யானை அல்லது காண்டாமிருகம் போன்ற ஒரு விலங்கு. இப்போது இல்லை. அதிக வீரம் கொண்டதாகக் கருதப்பட்ட ஒரு விலங்கு)
- லிவியத்தான் குறித்தவை (முதலை போன்று நீர்நிலையில் வாழும் ஒரு விலங்கு. ஆபத்தானது. கடல் என்றும் பேய் என்றும் ஒருசிலர் இதற்கு விளக்கம் தருகின்றனர்)

ஆ. யோபின் சரணாகதி
'நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்.
அறிவேன் அதனை.
நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது.
நான் புரியாதவற்றைப் புகன்றேன்.
அருள்கூரும் அடியேன் மேல்!
உம்மைப் பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்.
இப்போது என் கண்களால் கண்டுகொண்டேன்
என்னையே நொந்து கொள்கிறேன்.
புழுதியிலும். சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்!'

இவர்களில் யார் சரி?

கடவுள் - யோபு: இந்த இருவரில் யார் செய்தது சரி? கடவுளின் வாதம் சரியா?

அ. அறிதலும், அறிவிலும். மனிதனின் அறிதலை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- டிஸ்கவரி: தான் காணும் காரியம் (effect) ஒன்றிலிருந்து அதன் காரணம் (cause) என்ன என காண்பது. உதாரணத்திற்கு, ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் தரையில் விழுகிறது என்ற 'காரியத்தைக்' காண்கின்ற நியூட்டன் அதன் 'காரணமான' புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கின்றார். இது 'டிஸ்கவரி'. 'கவர்' செய்யப்பட்டு இருந்ததை 'அன்கவர்' அல்லது 'டிஸ்கவர்' செய்கின்றார் நியூட்டன். இதை நியூட்டன் கண்டுபிடித்ததால் நியூட்டனுக்கு முன் புவிஈர்ப்பு விசை இல்லை என்று சொல்லிவிட முடியாது.

- இன்வென்ஷன். தான் விரும்பும் காரியத்திற்காக காரணம் ஒன்றைக் கண்டுபிடிப்பது. சூரியன் மறைந்து இருட்டாகிவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் தன் செயல்களைச் செய்வதற்கு மற்றொரு ஆற்றல் தேவை என்றும் உணர்கின்ற மனிதன் அந்தத் தேவை என்ற காரியத்தைக் கொண்டுவரும் காரணத்தை உருவாக்குவது இரண்டாம் வகை. வெளிச்சம் என்ற காரியத்திற்காக மின்சாரம் அல்லது மின்விளக்கு என்ற காரணத்தைக் கண்டுபிடிக்கிறார் எடிசன். இது இன்வென்ஷன். எடிசனே இதன் படைப்பாளி. இந்த இரண்டாவது அறிவில் காரணம் காரியத்தின் வடிவம் பெறுகிறது.

கடவுள் தன்னைப் பற்றியும், தன் மேன்மை பற்றியும் உரையாடுவது இந்த இரண்டிலும் பொருந்தும். அதாவது, படைப்பிலிருந்து படைத்தவரைக் கண்டுகொள்ள முடியும். ஆகையால் டிஸ்கவரி. இரண்டாவதாக, தான் விரும்பும் காரியத்திற்காக கடவுள் காரணங்களை உண்டாக்குகிறார். ஆகையால் இன்வென்ஷன்.

- மூன்றாம் வகை அறிதலின் பெயர் 'ரெவலேஷன்' - வெளிப்பாடு. கடவுளே தான் விரும்பும் வகையில் தன் பக்தர்களுக்கும் தன் அடியார்களுக்கும் தன்னை வெளிப்படுத்துவது. சீனாய் மலையில் மோசேக்கு, கார்மேல் குகையில் எலியாவுக்கு, பூட்டிய அறையில் தோமாவுக்கு, தமாஸ்கு வழியில் பவுலுக்கு, சூறாவளியில் யோபுக்கு என கடவுளின் வெளிப்பாடு தொடர்கின்றது. இந்த வகை வெளிப்பாடு எல்லாருக்கும் கிடைப்பதில்லை.

ஆ. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? தாமஸ் அக்வினாஸ் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஐந்து ஆதாரங்கள் என்று சொல்லும் போது முதலில் யோபு நூலின் அடிப்படையில் 'படைத்தவற்றிலிருந்து படைத்தவரைக் கண்டுகொள்ள முடியும்!' என்று முதல் ஆதாரம் வைக்கின்றார். இதற்குக் கடிகாரக் கொள்கை என்றும் பொருள். அதாவது நாம் காணும் கடிகாரத்தை வைத்து அதன் பிண்ணனியில் அதை உருவாக்கியவர் இருப்பார் என்று உறுதி செய்வது. இந்த உலகம், அதன் இயக்கம், பகல், இரவு என்று எல்லாவற்றின் சிறப்பான இயக்கத்தைக் கொண்டு அதை உருவாக்கிய ஒருவர் இருக்கிறார். அவர்தான் கடவுள் என்று சொல்வது. ஆனால் மிஸ்டர் அக்வினாஸ்! யோபு நூலின் இந்தப் பகுதி 'கடவுள் இருக்கிறாரா! அல்லது இல்லையா!' என்ற கேள்விக்குப் பதிலாக எழுதப்பட்ட பகுதி அல்ல. மாறாக, 'எனக்கு மட்டும் துன்பம் ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக எழுதப்பட்டது. இந்தப் பகுதியில் வரும் கேள்விகளை எல்லாம் கேட்பதற்கு கடவுள் தான் வரவேண்டும் என்பதல்ல. கொஞ்சம் 'காமன் சென்ஸ்' இருந்தாலே போதும். உடனே, 'காமன் சென்ஸ்!' யார் கொடுத்தார் என்று கேட்காதீர்கள்?

இ. கடவுள் இருக்கிறார் என்றால் அது எந்தக் கடவுள்? சரி! கடவுள் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டது எந்தக் கடவுள்: யூதர்களின் யாவேயா? கிறித்தவர்களின் தந்தையானவரா? இசுலாமியர்களின் அல்லாவா? சிவனா? இராமனா? கண்ணனா? பிரம்மனா? பெருமாளா? புத்தரா? சூனியமா? சக்தியா? ஆற்றலா? இப்போதுதான் பிரச்சினை வருகிறது. இந்தக் குழப்பம் இன்னும் யோசித்தால் அதிகமாகும். உதாரணத்திற்கு, நான் இறந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். இறந்தவுடன் என் ஆவி எந்தக் கடவுளிடம் போகும்? யாராவது லிஸ்ட் வைத்துச் செக் பண்ணுவாங்களா? 'இது கிறித்தவ ஆவி! இது கத்தோலிக்கக் கிறித்தவர் ஆவி! நீங்க அங்க போங்க!' 'உங்க அப்பா பாதி இந்து! பாதி கிறித்தவர்! அவருக்கென்று வேறு இடம்!' 'உங்க சித்தப்பா முழு இந்து! அவர் வேற இடத்துல இருக்கார்!' இப்படி 'போஸ்ட்மேன்' தபால் பிரிப்பது மாதிரி பிரிப்பார்களா? எல்லாக் கடவுளர்களுக்கும் பிரித்து அனுப்பக் கூடிய கடவுள் யார்?

ஈ. இன்று யோபுவைப் பார்த்துக் கடவுள் இத்தனை கேள்விகளைக் கேட்கிறாரே! நாமும் அவரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கலாமே! மனிதர் செய்ய முடியும் பலவற்றைக் கடவுள் செய்ய முடியுமா?
உங்கள், சாரி! நம் கடவுளுக்கு...

- இழப்பின் வலி தெரியுமா?
- பெண்ணின் இன்பம் தெரியமா?
- முத்தத்தின் ஈரம் தெரியுமா?
- சேர்ந்து இருத்தலன் சுகம் தெரியுமா?
- பிரிவின் ரணம் தெரியுமா?
- வானில் பறக்கச் செய்யும் காதல் புரியுமா?
- அந்தக் காதலியின் இழப்பில் வரும் வேதனை தெரியுமா?
- பிஞ்சுக் குழந்தையின் ஸ்பரிசம் தெரியுமா?
- முதுமையின் தனிமை தெரியுமா?
- நோயின் வெறுமை தெரியுமா?
- போரின் இழப்பு தெரியுமா?
- ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடத் தெரியுமா?
- குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தன் கணவன் கையால் அடிவாங்கும் பெண்ணின் மௌன அழுகை தெரியுமா?
- அலுவலகத்திற்குப் பரபரப்பாக ஓடத் தெரியுமா?
- அங்கே ஓடி நம்மள விட எந்த விதத்திலும் தகுதியில்லாத ஒருவன் பாஸாக அமர்ந்திருக்க, அதையும் பொறுத்துக் கொண்டு அவன் முன் தலையாட்டத் தெரியுமா?
- 'நாங்களே சண்டை போடுவோம்! பின் நாங்களே போர் நிறுத்தம் செய்வோம்! எதற்காக? போரில் அடிபட்டவர்கள் ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமே!' - இது இஸ்ரேலின் நேற்றைய பதில். தம்பி! நீங்க சண்டை போடாம இருந்தா, குண்டு போடாம இருந்தா, அவங்க ஆஸ்பத்திரி போகும் தேவையே இருக்காதே!' - இவர்களின் கடவுள்தான் இன்று யோபிடம் பேசிய யாவே கடவுள்! இவர்களின் செயல் எதற்கு என்று கடவுளுக்குத் தெரியுமா?
- தான் பூமிப்பந்தின் மறுபக்கத்தில் பிறந்துவிட்ட ஒரே பாவத்துக்காக வறுமை, பசி, சுகாதாரமின்மை, பேரிடர் என்று மடிந்து கொண்டிருக்கும் மானிடத்தைத் தெரியுமா?
- தனக்கு வைத்திருந்த ஒருபிடிச் சோற்றையும் தன் பிள்ளைக்கு வழித்தெடுத்து வைத்துவிட்டு, தண்ணீர் மட்டும் குடித்து விட்டு தன் முந்தானையைத் தலைக்கு வைத்துத் தரையில் தூங்கும் தாயின் தியாகம் தெரியுமா?
- என் நிலை என்ன ஆனாலும் பரவாயில்லை! என் மகன் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று தள்ளாத நிலையிலும் சைக்கள் மிதித்து வீடு வீடாய் பழைய பிளாஸ்டிக் பொருள் விற்கும் என் பக்கத்து வீட்டு குமார் மாமாவின் வியர்வை தெரியுமா?

இந்தக் கேள்விகளைப் போலவே உங்கள் உள்ளத்திலும் எவ்வளவோ கேள்விகள் இருக்கலாம்.

கடவுள் என்ற ஒருவர் இல்லையென்றால் மானிடம் இன்று தன் சொந்தக் காலில் நிற்கப் பழகியிருக்கும்!

'அவரே கொடுத்தார்! அவரே எடுத்துக்கொண்டார்! அவர் பெயர் போற்றப்பெறுக!'

1 comment:

  1. இன்றையப்பகுதியானது 'யோபு'வை விட்டுச் சற்று விலகி வேறொரு மார்க்கத்தில் செல்வதுபோல் தோன்றுகிறது. தந்தையே! இறைவனைத் தேடுதலின் உச்சத்திற்கு சென்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.அதனால்தான் அடிப்படையே ஆட்டம் காணுவது போல் உணர்கிறேன்.மானிடம் இன்று சொந்தக் காலில் நிற்க பல விஷயங்கள் தேவைப்படுகிறது.சிலருக்குப் பணம்; சிலருக்கு உழைப்பு; சிலருக்குத் தன்னம்பிக்கை...இதைப் போன்று சிலருக்குக் 'கடவுள்'.பெயர்கள் வேறாக இருப்பினும் எல்லாமே நாம் கரையேறக் கைகொடுக்கும் 'கைத்தடிகள்தாம்'.ஆனால் காலத்தையும்,உறவுகளையும் கடந்த இறைவனுக்கு இது தெரியுமா,அது தெரியுமா என்று ஆராய்ச்சி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.எது எப்படியோ..யோபுவின் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருவதெல்லாம் 'இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மனநிலையோடு அணுக வேண்டும்' என்பதுமட்டும்தான்.இதற்கு மூல காரணி தங்களுக்கு என் நன்றிகள்...

    ReplyDelete