Thursday, August 7, 2014

யோபு - நமக்கு! நம்மில்!

யோபிடம் பேசுகின்ற கடவுள் இறுதியாக யோபுவின் நண்பர்களிடமும் பேசுகின்றார். யோபுவின் நண்பர்களின் எலிப்பாசை மட்டும் பதிலியாகக் கொண்டு அவரிடம் பேசும் கடவுள் நண்பர்களின் வெற்று வார்த்தைகளைக் கடிந்து கொள்கின்றார். தொடர்ந்து யோபு இழந்தது எல்லாம் அவருக்குத் திரும்பக் கிடைக்கின்றது. யோபு பெற்றிருந்த அனைத்தும் அவருக்கு இரண்டு மடங்காகத் திரும்பக் கிடைக்கின்றது. மறுபடியும் நண்பர்கள், மகிழ்ச்சி, விருந்து என யோபின் வாழ்க்கை தொடர்கிறது. பிள்ளைச் செல்வம், கால்நடைகள், நீடிய ஆயுள் என யோபு இறைவனின் அனைத்து ஆசிரையும் பெறுகின்றார். மகிழ்ச்சியோடு தொடங்கும் மகிழ்ச்சியோடு நிறைவடைகிறது.

யோபுவின் ஆளுமையை இரண்டே வசனங்களில் சொல்லி விடுகிறது யோபு நூல்:
'என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்.
அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்;.
ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!' என்றார்.
இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை.
கடவுள் மீது குற்றம் சாட்டவுமில்லை. (யோபு 1:21-22)

யோபு இந்த வார்த்தைகளைச் சொன்னாலும் அவரது கடவுள் நம்பிக்கை பற்றி நூலில் வேறெதுவும் சொல்லப்படவில்லை. ஒருவேளை யோபுக்கு எதுவும் திரும்பக் கிடைக்கவில்லையென்றால் அவரது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?
ஒரு திரைப்படத்தின், நாவலின் நிறைவு போலவே யோபு நூலின் நிறைவும் இருக்கின்றது: 'தீமை அழிகின்றது. நன்மை பிறக்கின்றது.'
ஆனால் இந்த நம்பிக்கை ஒன்றுதான் நமக்கு வாழ்வு தருகிறது. நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை தான் இன்று நாம் வாங்கும் சம்பளத்தில் கொஞ்சத்தைச் சேர்த்து வைக்கச் சொல்கிறது. 'எல்லாம் ஒரு நாள் மாறும்!' என்ற நம்பிக்கை தான் நம் வாழ்வில் வரும் துன்பங்களையெல்லாம் சகித்துக்கொள்ள நமக்கு தெம்பு தருகிறது.

இன்று நாம் யோபுவைப் போல அனைத்தையும் இழக்க வேண்டும், நம் உடலெல்லாம் நோய் வர வேண்டும் என்பதல்ல. நம் சிறு சிறு இழப்புக்களில் கூட யோபுவைப் போல இருக்கும் மனம் இருந்தாலே போதும்.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே உள்ள தூரத்தைக் காட்டும் நூலே யோபு. யோபுவின் நம்பிக்கைக்கு மாறாக அவர்களின் நண்பர்களும், மனைவி பிள்ளைகளும், அலகையும் இருக்கின்றனர். யோபுவின் நண்பர்கள் கொண்டிருந்தது அதீத நம்பிக்கை, யோபுவின் மனைவி கொண்டிருந்தது அவநம்பிக்கை.  அலகை கொண்டிருந்தது மூடநம்பிக்கை. நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க நாம் வெற்றி கொள்ளவேண்டியவைகளும் இந்த மூன்றுதான்: அதீத நம்பிக்கை, அவநம்பிக்கை, மூட நம்பிக்கை.

யோபு கொண்டிருந்த நம்பிக்கை நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நம் மேலும், பிறர்மேலும், இறைவன்மேலும் இருந்தால் போதும். நம் துன்பமும் இரண்டு மடங்கு இன்பமாக மாறும்.

யோபு நூலை அபக்கூக்க இறைவாக்கினரின் வார்த்தைகளாகச் சுருக்கிச் சொல்லிவிடலாம். காலத்தை வென்ற வார்த்தைகள் இவை:

'அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களிகூர்வேன்.
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை.
அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்.
உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.'

(அபக்கூக்கு 3:17-19)

1 comment:

  1. நன்று,நன்று நல்ல ஊழியனே! என்று தங்களைத் தட்டிக்கொடுக்கத் தோன்றுகிறது தந்தையே! ஆம், இந்த ' யோபு'வின் நூலை இதற்குமேல் அழகாக முடித்திருக்க முடியுமா? ..இல்லை என்றே சொல்கிறது மனம்.அபக்கூக்கு நூலிலிருந்து தாங்கள் கொடுத்துள்ள அந்த வரிகள் சற்றே 23ம் சங்கீத்த்தை நினைவு படுத்தினாலும் உண்மையிலேயே காலத்தை வென்ற வரிகள்தாம் அவை.அவ்வரிகளை மனப்பாடம் செய்து தினமும் உச்சரிக்க ஆவல் கொள்கிறது மனம்.அடுத்த படைப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.தொடரட்டும் தங்கள் பணி.இறைவன் தங்களை நிறைவாகவும்,வளமாகவும் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete