Tuesday, August 12, 2014

எங்களுக்கு என்ன கிடைக்கும்?

சங்க இலக்கியத் தமிழையும், விவிலிய எபிரேயத்தையும் ஒப்பீடு செய்து எழுதும் முயற்சி இரண்டாம் நாளே பெரிய சவாலாகத் தெரிகிறது. 'ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்!' என உள்மனம் எச்சரிக்கிறது. இன்னும் கரையில் நின்று கடலைச் சரியாகப் பார்க்கும் பக்குவமே இல்லாமல் கடலுக்குள் இறங்கி முத்துக்குளிப்பது மலைப்பாகத் தெரிகிறது.

ஆகையால், பழைய ஏற்பாட்டில் நாம் சில மாதங்களுக்கு முன் பார்த்த சில கேள்விகளைப் போல புதிய ஏற்பாட்டிலும் கேள்விகள் இருக்கின்றன. அவைகளைக் கொஞ்சம் கேள்விக்குறிகளாவும், ஆச்சர்யக்குறிகளாகவும் பார்ப்போம். மன்னித்தருள்க!

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, 'நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே. எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார். (மத்தேயு 19:27)

எங்களுக்கு என்ன கிடைக்கும்? இன்னும் சுருக்கினால் 'என்ன கிடைக்கும்?' இதே கேள்வியை தலைமைக்குருவிடம் சென்று யூதாசும், 'இயேசுவைக் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்கின்றார். இந்த இரண்டு கேள்விகளையும் அருகருகில் வைத்து கொஞ்சம் 'ஃபார்மல் லாஜிக்' (formal logic) வைத்து சிந்தித்தால் அர்த்தம் மிகவும் சவாலாக மாறுகிறது:

"உங்களைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்?"
"காட்டிக் கொடுத்தால் என்ன கிடைக்கும்?"

இந்த இரண்டு கேள்விகளிலும் 'என்ன கிடைக்கும்' என்பதை நீக்கிவிட்டால், 'இயேசுவைப் பின்பற்றுவதும்,' 'அவரைக் காட்டிக் கொடுப்பதும்' ஒன்று என ஆகிவிடுகிறது. இயேசுவைப் பின்பற்றுவது எதற்காக என்று என்னையே சுயஆய்வு செய்து பார்க்கவும் தூண்டுகிறது.

பேதுருவின் கேள்வியை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்று இறந்தகாலத்தில் பேசுகின்றார் பேதுரு. இந்த இடத்தில் தான் நமக்கு டவுட்டு வருகிறது. இயேசுவின் பதில் அந்த டவுட்டை இன்னும் ஆழமாக்குகிறது: 'புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள்...என் பெயரின் பொருட்டு வீட்டையோ...நூறு மடங்காகப் பெறுவர்'.

இயேசுவின் பதிலில் சீடர்கள் அரசர்களாக இருப்பர் எனவும், அவர்கள் நூறு மடங்கு நிலபுலன்கள் பெற்றிருப்பர் எனவும் சொல்லப்படுகிறது.

இப்போது என் கேள்வி இதுதான்: 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்றும் 'என் வலப்புறமோ, இடப்புறமோ அமர்வது நான் முடிவு செய்வதல்ல' என்று சொல்கிற இயேசு எப்படி தன் சீடர்கள் நூறு மடங்கு பெற்றிருக்கவும், தன்னோடு ஆட்சி செய்யவும் விரும்புவார். இதன் கிரேக்கப் பாடத்தைப் பார்த்தால் அந்தியோக்கு நகரம் சார்ந்த படிவங்களில் மட்டுமே இந்தப் பகுதி உள்ளது. அந்தியோக்குப் பகுதியில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயர்களும், குருக்களும் நிலபுலன்கள் பெற்று அரசர்கள்போல இருந்தனர். இதை நியாயப்படுத்துவதற்காக இயேசுவே சொல்லியிருப்பதாக அவர்கள் தங்கள் விவிலியத்தில் திணித்திருக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தப்பகுதி இந்த நற்செய்தியில் மட்டுமே பேதுரு கேட்பதாகவும், இயேசு பதில் சொல்வதாகவும் உள்ளது. அனைத்து ஆயர்கள், குருக்களின் பதிலாளியாக பேதுரு கேட்பதாகவே இது இருக்கின்றது.

சீடத்துவம் என்பதை தன் பற்றுக்களை விடுத்து இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொள்வது. அப்படியிருக்கு ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு சகோதரன், ஒரு சகோதரி என ஒன்றையே இழப்பது இயேசுவைப் பற்றிக்கொள்ளவா அல்லது நூறு தந்தை, தாய், சகோதரன், சகோதரியைப் பற்றிக்கொள்ளவா? மேலும் எல்லா உறவுகளையும் ஏன் 'பிள்ளை உறவையே' குறிப்பிடுகின்ற இந்தப் பகுதியில் 'மனைவி' பற்றி குறிப்பிடவில்லை. அதெப்படி பாஸ்? பிள்ளைகளை விட்டுவிட்டு பின்தொடர்வாராம்! ஆனால் மனைவியை விட மாட்டாராம்! மூன்றாம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆயர்களும், குருக்களும் திருமணம் முடித்தவர்கள் என்பது நினைவுகூறப்பட வேண்டியது. மணத்துறவு என்பது 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்தது. மூன்றாம் நூற்றாண்டிலும் மணத்துறவு கொண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் மனநலம் சரியில்லாதவர்களாக இருந்தார்கள் என்பதும் வரலாற்றின் எச்சம்.

இன்று இயேசு தரும் 'நூறு பெறுவீர்கள்!' என்ற வார்த்தைகளை வாசிக்கும் போது நான் துறக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் அனைத்தையும் நியாயப்படுத்திக்கொள்ள எனக்கு வசதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு குடும்பத்தை விடுத்ததால் இன்று நூறு குடும்பங்களோடு உறவு கொள்ள முடியும். ஒரு ஊரை விடுத்ததால் நூறு ஊருக்குப் பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த உறவுகள், ஊர்கள் அனைத்தையும் பற்றிக்கொள்ளத் துணியும் நான் பல நேரங்களில் பேதுருவின் கேள்வியின் முதல் பகுதியை மறந்து விடுகிறேன்: 'நாங்கள் உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!'

'துறவைத் துறந்த துறவு' என்பார் வைரமுத்து. நம் இந்திய மரபின் படி 'சந்நியாசம்' என்பது மனித வாழ்வின் நான்காம், அதாவது, இறுதிநிலை. இந்த நிலையில்தான் எல்லாப் பற்றுக்களையும் விடுத்த ஒருவர் 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என இறைவனைப் பற்றிக் கொள்கின்றார். இறைவனைப் பற்றுவதும் ஒரு பற்றுதானே! என்றும் கேட்கத் தோன்றுகிறது.

கையை மூடிக்கொண்டே பிறக்கும் நாம் வாழ்வின் இறுதிவரை எதையாவது பற்றிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. கையை முதன் முதலாக விரிக்கும் போது வருகின்ற பாதுகாப்பின்மையில் நாம் நம் உறவு, மண், மனைவி, பிள்ளை, வேலை, பதவி, பெயர், பொருள், ஃபோன் என பற்றிக்கொண்டே இருக்கின்றோம். பற்றிக்கொண்டிருத்தல் தவறல்ல. பற்றுக்களை விடும்போது வரும் வெற்றிடத்தை நிரப்ப இறைவன் வருதல் நலம்!


1 comment:

  1. இன்றைய காலகட்டத்திற்கும், இன்றைய மனித மனத்திற்கும் 'துறவு' என்பது 'சந்நியாசம்' என்று பொருள்தரக்கூடிய வார்த்தை அல்ல.அது 'மனது' சம்பந்தப்பட்ட விஷயம் என்றே நினைக்கிறேன்.என்று நம் மனது எனக்கு " வறுமையிலும் வாழத்தெரியும்; வளமையிலும் வாழத்தெரியும்" என்று தூய பவுலடிகளாரின் பாணியில் கூறுகிறதோ அன்றே நாம் துறவு பூண்டவர்களாவோம்.'அவர்' நூறு மடங்கு கொடுப்பார் என் எதிர்பார்த்து அவரைப்பின்பற்றுவதும் துறவு நிலையைச் சாராத ஒன்றே என்று சொல்கிறது என் மனம்...

    ReplyDelete