Monday, August 4, 2014

மூன்றாம் சுற்று உரையாடல்

யோபு நூலின் திரைவிழும் படலம் தொடங்குகின்றது. யோபுவைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவரது நண்பர்கள் மறுபடியும் பேசத் தொடங்குகின்றனர். மீண்டும் எலிப்பாசே உரையாடலைத் தொடங்குகின்றார். முதல் மற்றும் இரண்டாம் உரையாடல்களில் சுற்றி வளைத்துப் பேசிய எலிப்பாசு நேரிடையாகவே யோபின் மேல் சொல்லம்புகளை வீசுகின்றார். 'உறவினரிடம் அடகு வாங்கினீர், ஏழைகளின் உடையை உரித்து விட்டீர், தாகமுள்ளோருக்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை, பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை, விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர், அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்' என அடுக்கிக் கொண்டே போகிறார். இவைகளையெல்லாம் யோபு செய்தாரோ என்னவோ, ஆனால், இவையெல்லாம் யோபின் சமகாலத்தவர் செய்யக்கூடாத ஒன்றாகக் கருதப்பட்டது.

எலிப்பாசு வைத்த குற்றச் சாட்டுகளுக்கு நேரிடையாகப் பதில் சொல்ல மறுக்கின்றார் யோபு. மாறாக, அவரின் கடைசிக் கேள்வி, 'சும்மா! இப்படிச் செய்திருக்கலாம்! அப்படிச் செய்திருக்கலாம்! என்று உறுதியற்றுப் பேசாதீர்கள்! நான் என்ன தவறாகப் பேசினேன் அல்லது செய்தேன் என்று சுட்டிக் காட்டுங்கள். அது போதும்!' என்று தன் பதிலை நிறைவு செய்கின்றார்.

தொடர்ந்து பேசும் பில்தாது தான் முதல் முறை சொன்னதை இப்போது திரும்பவும் சொல்கிறார்: 'மனிதர்கள் வெறும் புழு பூச்சி. அவர்களால் நல்லவர்களாக இருக்க முடியாது!'

பில்தாதுக்கு பதிலுரைக்கும் யோபு கடவுள் மேன்மையானவர் என்றும், அந்தக் கடவுளே வலுவற்ற மனிதருக்குத் துணை செய்கின்றார் என்றும் உறுதியாகச் சொல்கின்றார்.

மூன்றாம் சுற்று உரையாடலில் சோப்பார் எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றார். யோபுவே தொடர்ந்து பேசுகின்றார். தான் ஒரு நேர்மையாளர் எனவும், தன் நண்பர்களின் பேச்சு காற்றிலடிக்கப்படும் பதர் போல மறைந்துவிடக்கூடியவை என்றும் சொல்கின்றார். மேலும்,

'பெண்ணில் என் மனம் மயங்கியதா?
பிறரின் கதவருகில் காத்துக்கிடந்தேனா?
வேலைக்காரரின் வழக்கைத் தட்டிக் கழித்தேனா?
ஏழையர் விரும்பியதை ஈய மறுத்தேனா?
கைம்பெண்டிரின் கண்கள் பூத்துப் போகச் செய்தேனா?
என் உணவை நானே தனித்து உண்டேனா?
ஆடையின்றி இருந்தவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா?
தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்தேனா?
கதிரவனையும், நிலவையும் வணங்கினேனா?
என்னை வெறுப்போரின் அழிவில் மகிழ்ந்தேனா?
சாகும்படி அவர்களை நான் சபித்தேனா?

இந்தக் குற்றங்களில் ஒன்றையும் நான் செய்ததில்லையே. கடவுள் என்னோடு பேசமாட்டாரா? என் நேர்மையை நான் அவரிடம் எடுத்துச்சொல்ல ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டாரா? என ஏங்குகின்றார்.

கடவுள் யோபுவிடம் பேச இறங்கி வந்தாரா? யோபுக்கு அவரின் விண்ணப்பம் நிறைவேறியதா?

1 comment:

  1. யோபு தான் கண்டிப்பாகச் செய்யவில்லை என்று நினைக்கும் சில விஷயங்களைப்பட்டியலிட்டு அவற்றைக் கேள்விக்கணைகளாகத் தொடுக்கிறார் தன் நண்பர்களிடம்.இப்படிப்பட்ட நல்லவருக்கு ஏன் கடவுள் துன்பங்களைத்தரவண்டும்..என்ற கேள்வி நமக்கும் எழுவது இயற்கைதான்." ஆண்டவன் சிலரைத் தண்டிப்பது போல் தோன்றினாலும் நிரந்தரமாக அவர்களைக் கைவிடுவதில்லை" என்று ரஜினி ஸ்டைலில் ஆறுதல் சொல்வோமா?.....

    ReplyDelete