Friday, August 22, 2014

துன்பத்தால் மன உறுதி - 2

தகைமையின் தொடர்ச்சியாக தூய பவுலடியார் முன்வைக்கும் மதிப்பீடு எதிர்நோக்கு. எதிர்நோக்குக்கு அடிப்படை நம்பிக்கை. எடுத்துக்காட்டாக, காலை 10:00 மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வரும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு 9:50லிருந்து அல்லது 9:55லிருந்து காத்திருப்பது எதிர்நோக்கு. 10:00 மணிக்கு பேருந்து வராது என்று நாம் நம்பினால் நாம் அதற்காக காத்திருக்கப் போவதில்லை. நம்பிக்கையும், எதிர்நோக்கும் கைகோர்த்து நிற்பவை. எதிர்நோக்கில் ஒரு காத்திருத்தல் ஒளிந்திருக்கிறது. தூய பவுலடியார் குறிப்பிடும் எதிர்நோக்கு விண்ணகம் சார்ந்தது. எதிர்நோக்கை மண்ணகம் சார்ந்து புரிந்து கொள்ள முடியுமா? நம் வாழ்வில் நம்மை முன்னோக்கிக் கொண்டு செல்லக் காரணம் இந்த எதிர்நோக்குதான். நம்பிக்கை உள்ள மனிதர்கள் வாழ்வார்கள். எதிர்நோக்கு உள்ள மனிதர்கள் முன்னோக்கிச் செல்வார்கள். எதிர்நோக்கு குறையும் போது வாழ்வில் தேக்க நிலை வந்து விடுகிறது. 'என்ன படிச்சு என்ன ஆகப்போது!' 'என்ன வேலை செஞ்சாலும் நான் அப்படியே தான் இருக்கப் போகிறேன்!' என்ற புலம்பல்கள் வரும்போது நம் எதிர்நோக்கை பூஸ்ட் செய்வது அவசியம்.

துன்பம், மன உறுதி, தகைமை, எதிர்நோக்கு என அடுக்கிக் கொண்டு போகும் பவுலடியார் துன்பம் என்ற வாழ்வியல் எதார்த்தம் தரும் மூன்று மதிப்பீடுகளைச் சொல்கின்றார்.

வாழ்வின் எதார்த்தங்கள் ஒவ்வொன்றும் நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கத்திலிருந்து நாம் எந்த மதிப்பீட்டை கடைந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்வியல் அமைந்திருக்கின்றது. எதார்த்தங்கள் மதிப்பீட்டைத் தருகின்றது. மதிப்பீடுகள் எதார்த்தங்களை மாற்றுப் பார்வையோடு பார்க்க நமக்குக் கற்றுத் தருகின்றன.

1 comment:

  1. 'காத்திருத்தல்' என்பது சில சமயங்களில் சுகமானதாகவும்,அதுவே பல சமயங்களில் சுமையானதாகவும் அமைந்து விடுகிறது..நாம் எதற்காக, யாருக்காக்க் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து. இது கண்டிப்பாக நடக்காது என்று தெரிந்தும் கூட ,இல்லை நடக்கும் என்று உள்மனத்தின் மூலையில் துருவ் நட்சத்திரம் மாதிரி ஒன்று வந்து செல்கிறதே..அதுதான் " நம்பிக்கை." விண்ணகமோ மண்ணகமோ...நம் நம்பிக்கையும்,எதிர்நோக்கும் உயிரோட்டத்துடன் இருக்கும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.அது இல்லாதபோது அதே வாழ்க்கை அஸ்தமனமாகிவிடுகிறது.வாழ்வின் எதார்த்தங்களையும் மதிப்பீடுகளையும் சரியாகப் புரிந்து செயல்படுவோம்...அனைவருக்கும் காலை வணக்கங்கள்...

    ReplyDelete