Thursday, August 28, 2014

என்றும் இளமையே! என்றும் புதுமையே!

பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். (உரோ 13:13-14)

மேற்காணும் உரோமையர் திருமுகப் பகுதிதான் இன்று நாம் புனிதராகக் கொண்டாடும் தூய அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. 354ஆம் ஆண்டு முதல் 430ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் மிகப்பெரும் இறையியல் வல்லுநராக, நல்வழிப் போதகராக, மிலான் நகரின் ஆயராகத் திகழ்ந்தார். தன் 14ஆம் வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையான நிலையில் இருந்தாலும் பின் தன் நிலையை இறைவன் பக்கம் மட்டும் திருப்பிக் கொண்டவர்.

'உமக்காகப் படைக்கப்பட்ட எங்களின் ஆன்மா உம்மை அடையும் வரை நிறைவு காண்பதில்லை' என்ற இனிய சொற்களுக்குச் சொந்தமானவர் இவர். உண்மையான மகிழ்ச்சியை உடலில், உலகில், பொருளில், புகழில், பெயரில் தேடி எங்கும் காண முடியாமல் போனவர்.

கிரேக்க மெய்யிலாளர் பிளேட்டோவின் கருத்துக்களால் கவரப்பட்டு அதே மெய்யியலை இறையியலுக்குள் புகுத்தியவர் இவர். ஆதிப்பெற்றோர் செய்த பாவம் நம்மை துரத்துகிறது என்றும், நம் உடலுக்கும் மனதுக்கும் எந்நேரமும் போராட்டம் நடக்கிறது, உடல் கெட்டது, மனம் தூயது எனவும் அன்று இவர் சொல்லி வைத்துப் போனது இன்றும் கத்தோலிக்கத் திருஅவையின் கொள்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

'பாவசங்கீர்த்தனங்கள்' என்று இவர் எழுதிய நூல் இவர் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தான் போராடியதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. நம் மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் போலவே தன் பலவீனங்களையும் மிக எதார்த்தமாக எடுத்துச் சொல்லி 'இவ்வளவு தான் நான்!' என தன்னையே துணிவோடு வெளிப்படுத்தியவர் இவர்.

இவரது சுயசரிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைதாம். இத்தாலியன் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முனைந்திருக்கிறேன்.

உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
ஓ அழகே!
என்றும் பழமையான, என்றும் புதுமையான அழகே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
நீ என்னுள் இருந்தாய்.
ஆனால் நான் வெளியே இருந்தேன்.
எனக்கு வெளியே நான் உன்னைத் தேடினேன்.
அன்பு செய்யத் தெரியாததால்
கண்ணுக்குத் தெரிந்த உன் படைப்புக்களை
அன்பு செய்வதில் மும்முரமாயிருந்தேன்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் நான் உன்னோடு இல்லை.
படைக்கப்பட்டவை உன்னிடமிருந்து என்னைப் பிரித்து விட்டன.
ஆனால் அவைகளிலும் நீ இருந்தாய்.
ஏனெனில் நீ இன்றி எவையும் இல்லையே.
நீ என்னை அழைத்தாய்.
நீ என்னை நோக்கிக் கத்தி என் செவிட்டுக்காதில் உன் குரல் விழச் செய்தாய்.
நீ மின்னலாய் ஒளிர்ந்து என் இருள் போக்கினாய்.
உன் நறுமணத்தால் என்னை நனைத்தாய்.
உன்னை நான் சுவாசித்தேன்.
இப்போது உனக்காக மட்டுமே நான் ஏங்குகிறேன்.
உன்னை நான் ருசித்தேன்.
இப்போது உனக்காகவே நான் பசித்திருக்கிறேன்.
நீ என்னைத் தொட்டாய்.
உன் அமைதியால் நான் எரிந்தேன்.
ஓ அழகே!
என்றும் இளமையே! என்றும் புதுமையே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.


Please click on the link below to listen to this song in English:

O Beauty So Ancient Yet New

1 comment:

  1. 'புனித அகுஸ்தினார்'..பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் பிடித்த ஒரு புனிதர்.உண்மையான மனமகிழ்ச்சியைப் படைத்தவனை விட்டுப் படைப்புக்களில் தேடிக் களைத்து இறுதியில் ,இறைவனடியே இன்பம்' என்று உணர்ந்தவர்.தன்னைத்தானே சுயபரிசோதனைக்குட்படுத்தியதால் தன் சுய சரிதையை எழுதியவர்.இறைவனிடம் தனக்குள்ள பக்திப் பரவசத்தை அவர் பாடியுள்ள விதமும்சரி,அதைத் தாங்கள் தமிழுக்குக் கொண்டுவர எடுத்துள்ள முயற்சியும் சரி..இரண்டுமே பாராட்டுக்குரியவைதாம்....

    ReplyDelete