Monday, August 4, 2014

எலிகூவின் மூன்று சொற்பொழிவுகள்

அனைத்தையும் இழந்து, வெறுமை, தனிமை, நோய் என வாடியிருந்த யோபைச் சந்திக்க நான்கு நண்பர்கள் வருகின்றார்கள். இதுவரை யோபுவோடு உரையாடியவர்கள் மூன்று நண்பர்கள் மட்டுமே. இவ்வளவு நேரம் நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டும், அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டும் இருந்த நான்காம் நண்பர் எலிகூ இப்போது பேசத் தொடங்குகின்றார். 'எலிகூ' என்றால் 'அவரின் கடவுள்' என்பது பொருள். எலிகூ இவ்வளவு நேரம் ஏன் பேசவில்லை? இப்பபோது ஏன் பேசுகிறார்? அவர் என்ன பேசுகிறார்? எலிகூவின் பேச்சிற்கு யோபு பதில்மொழி தருவதில்லை. ஆகையால் இதை உரையாடல் என்றழைப்பதை விட சொற்பொழிவு அல்லது உரை என அழைப்பதே தகும்.

எலிகூ ஏன் பேசத் தொடங்குகிறார்?

அ. அவரின் கோபம். யார் மேல்? யோபுவின் நண்பர்கள் மேலும் யோபு மேலும். எதற்காக? நண்பர்களின் கூற்றுக்கள் பயனற்றவை. மேலும் யோபு கடவுளுக்காகவும், அவரின் நன்மைத்தனத்திற்காகவும் வாதாடுவதை விடுத்து தனக்காகவும், தன் நன்மைத்தனத்திற்காகவும் வாதாடியதற்காக. 'தான் ஒரு இளைஞன்' என்பதால் பெரியோர் அவையில் பேசலாகாது என எண்ணியிருந்த இளைஞன் எலிகூ, பெரியவர்களின் முறையற்ற செயலாலும், சொல்லாலும் கோபம் கொண்டு பேசத் தொடங்குகிறார்.

ஆ. ஞானம் வயது சார்ந்தது அல்ல. வயதிற்கும், ஞானத்திற்கும் தொடர்பு இல்லை. வயது வந்துவிட்டால் மட்டும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என்பதும் அல்ல. ஞானம் கடவுளின் கொடை. அவர் தான் விரும்பியவருக்கு அதை அளிக்கின்றார். அதைப் பெற்ற எவரும் தன் ஞானத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இ. பேசியே தீர வேண்டிய கட்டாயம். மற்ற நண்பர்கள் பேச எதுவும் இல்லாமல் அமைதி காத்ததாலும், தோல்பையிலிருந்து வெடித்து வெளிவரும் திராட்சை ரசம் போல தன் ஆவி தன்னை உந்தித் தள்ளுவதாலும், தன் மௌனத்தால் யாரையும் தான் மகிழ்விக்க வரவில்லை என்பதாலும் பேசத் தொடங்குகிறார் எலிகூ.

ஈ. யோபிற்கு உதவி செய்ய. யோபுவின் கேள்விகளுக்கு அவரின் மூத்த நண்பர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பதிலுக்குப் பதிலாக அவர்கள் யோபு மேல் குற்றச்சாட்டுக்களையே வைக்கின்றனர். தான் பேசுவதன் வழியாக யோபிற்கும் மறுமொழி கூறமுடியும் என நினைக்கின்றார் எலிகூ.

எலிகூ என்ன பேசினார்?

அ. கடவுள் அருள்நிறைந்தவர். கடவுளை யோபு தன் எதிரியாக நினைப்பது தவறு. கடவுளை அயோக்கியராக்கி, யோபு தன்னை யோக்கியராக்க நினைப்பதும் தவறு. மனிதரோடு போட்டியிடும் அளவிற்குக் கடவுள் தாழ்ந்தவர் அல்லர். கடவுள் தான் அன்பு செய்யும் மனிதரோடு பல்வேறு வகைகளில் பேசுகிறார். மனிதர்களின் அவரின் குரலைக் கண்டுகொள்ளவில்லையென்றாலும், கேட்கவில்லையென்றாலும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார். கனவுகள், காட்சிகள் என்று பேசும் அவர் மனிதர்களுக்கு வரும் துன்பம், தனிமை மற்றும் வெறுமை வழியாகவும் பேசுகின்றார். 'துன்பம்' 'வெறுமை' 'தனிமை' என யோபு புலம்புகிறாரே, ஒருவேளை அவர் இறந்திருந்தால் இன்னும் அதிக துன்பம், வெறுமை, தனிமை இருந்திருக்குமே. 'உனக்குக் கீழே உள்ளவர் கோடி. எண்ணிப்பார்த்து நிம்மதி தேடு!' என்று கண்ணதாசன் பாணியில் யோபின் கண் திறக்கிறார் எலிகூ. கடவுள் துன்பம் தருவது நம்மை வருத்துவதற்காக அல்ல, நம்மைத் திருத்துவதற்காக!

ஆ. கடவுள் நேர்மையானவர். கடவுளின் நீதிக்கு நாம் எந்த வகையிலும் வரையறை செய்ய முடியாது. நம் சொற்களால் கடவுள் இப்படித்தான் என வேலியிட்டுவிடவும் முடியாது. நாம் நல்லவை செய்வதால் கடவுளை மகிழ்விக்கவும் முடியாது. நாம் பொல்லாதது செய்வதால் அவரை முகவாட்டம் அடையச் செய்யவும் முடியாது. இன்பத்தையும், துன்பத்தையும், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் கடந்தவர் அவர். தான் நல்லது செய்வதால் கடவுளை மேன்மைப்படுத்தவதாக நினைப்பதே மனிதர் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆன்மீக ஆணவம். யோபு தான் செய்த நற்செயல்களைக் கொண்டு கடவுளுக்கு பெருமை சேர்த்ததாக நினைப்பது சின்னப்பிள்ளைத்தனமாக இருப்பதாக கடிந்து கொள்கின்றார் எலிகூ.

இ. கடவுள் மேன்மையானவர். இடி, மின்னல், மழை என நம்மேல் தோன்றுபவற்றை நம்மால் புரிந்த கொள்ள முடிகிறதா? அவைகளுக்கு நம்மால் 'இப்படி இரு! அப்படி இரு! இப்பொழுது மழை பெய்யலாம்! இப்பொழுது இடி இடிக்கலாம்!' என்று கட்டளையிட முடியுமா? கண்ணால் காணும் இவைகளின் இயக்கத்தையே நம்மால் புரிந்து கொள்ளவும், நெறிப்படுத்தவும் முடியவில்லையே. அப்படியிருக்க, ஐம்புலன் உணர்திறன்களையும் கடந்த கடவுளை நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும். அவரை நாம் எப்படி நெறிப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டுவரவும் முடியும்?

எலிகூவின் அறிவுரை கடவுளின் அறிவுரை போலவே இருக்கின்றது. பழங்கால அக்காடிய, சுமேரிய இலக்கியங்களில் பிரச்சினை என்று ஒன்று வரும்போது, அதைத் தீர்ப்பவராக இளைஞர் ஒருவர் வருவதாக கதாசிரியர் எழுதுவது மரபு. இந்த இளைஞர் இறைவனின் பிரதிநிதியாகவே சித்தரிக்கப்படுவார். தோபியாசு நூலில் தோபியாவின் நெடும் பயணம், திருமணம், தந்தையின் நோய் என அனைத்திற்கும் ஆறுதலாக வருபவர் இரபேல் என்ற இளைஞர். நம் மண்ணின் இதிகாசங்களான இராமயாணத்தில், சீதையின் சுயம்வரத்தில் 'வில்லை எடுத்து நாணேற்றி' சீதையைக் கரம் பிடிக்கும் இராமபிரானும், மகாபாரதத்தில், கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமான போரில் சாரதியாக வந்து தீமையை அழித்து, நன்மையைக் கொணரும் கண்ணபிரானும் இளைஞர்களே.

நம் வாழ்வில் நமக்கு விடைதெரியாத போதெல்லாம் அங்கே விளக்கம் சொல்ல ஒரு எலிகூ வருவான்! வருவாள்!


1 comment:

  1. எலிகூ என்ற இளைஞனின் வாய்வழி வரும் அத்தனையுமே வாழ்க்கையின் ஆதார சுருதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.முக்கியமாக.." ஞானம் வயது சார்ந்ததல்ல.அது கடவுள் தான் விரும்பியவருக்கு அளிக்கும் கொடை.,அதைப்பெற்ற எவரும் தன் ஞானத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்"...போன்றவை.ஆம், நமக்கும் கூட நாம் செல்லும் திசை தெரியாத போதெல்லாம் நம்மை சரியாக வழிநடத்த வரும்'எலிகூ'க்களுக்காக இறைவனுக்கு நன்றி பகர்வோம்...யோபு நூலின் கருத்துக்களோடு தன் 'ஞானம்' சார்ந்த விஷயங்களையும் கலந்தளித்த தந்தைக்கு என் நன்றிகள்...

    ReplyDelete