Saturday, August 2, 2014

இரண்டாம் சுற்று உரையாடல்

முதல் சுற்று உரையாடல் போலவே தொடர்கின்றது இரண்டாம் சுற்று உரையாடல். ஆனால் முதலில் அதிகமாகப் பேசிய நண்பர்கள் இப்போது கொஞ்சம் குறைவாகப் பேசுகிறார்கள். ஆனால் முதலில் அவர்கள் கொண்டிருந்த கோபத்தை விட இப்போது அதிகமாக கோபம் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் பேசத் தொடங்கும் எலிப்பாசு தான் முன்னால் சொன்னதையே திரும்பவும் சொல்கின்றார்: துன்பத்திற்குக் காரணம் பாவம். மேலும் மனிதர்களால் என்றும் நல்லவர்களாக இருக்க முடியாது எனவும், அருவருப்பும், ஒழுங்கீனமும் நிறைந்தவர்கள் மனிதர்கள் என்றும் ஒட்டு மொத்த மனுக்குலத்தையும் சாடுகின்றார்.

எலிப்பாசுக்குப் பதில் அளிக்கும் யோபு அவர்கள் மூவரும் 'புண்படுத்தும் தேற்றுவோர்' என்று கடிந்து கொள்கின்றார். தேற்றுவது போல வந்து அமர்ந்து கொண்டு அவர்கள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாகத் துன்புறுத்துவதாகப் புலம்புகின்றார் யோபு.

யோபுவின் வார்த்தைகள் பில்தாதின் கோபத்திற்குத் தூபமிடுகின்றன. 'வெறும் சொற்களால் எவ்வளவு காலத்திற்குப் பிதற்ற முடியும்? எங்களை மதியீனர்கள் என்றும் அறிவிலிகள் என்றும் ஏன் கருதுகிறீர்?' என்று கேட்பதோடல்லாமல், பாவம் செய்தவர்கள் எப்படியெல்லாம் துன்புறுவார்கள் என்று பெரிய பட்டியலையும் இடுகின்றார்.

'என்னை எவ்வளவு காலம் துன்புறுத்துவீர்கள்?' என்று அவர்களைக் கேட்கும் யோபு. 'பாவி! பாவி! என்று என்னைச் சொல்கிறீர்களே? அப்படி நான் செய்த பாவம் தான் என்ன? சொல்ல முடியுமா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார். யோபுவின் மேல் நமக்கே பரிதாபமாக இருக்கிறது. தன் தனிமையையும், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையையும் எண்ணி கடவுளிடம் புலம்புகின்றார். 'கடவுள் என்னை ஏன் தன் எதிரியாகப் பார்க்க வேண்டும்?' என்று கேட்கின்றார். யோபுவின் புலம்பலுக்குப் பின்னால் அவரின் நம்பிக்கை மட்டும் குறைந்து போகவே இல்லை. 'என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்' என்று அறிக்கையிடுகின்றார்.

தன் பங்கிற்குப் பேசத் தொடங்கும் சோப்பாரும் ஏற்கனவே மற்றவர்கள் சொன்னதைத் தான் திரும்ப வேறு வார்த்தைகளில் சொல்கிறாரே தவிர, புதிதாய் ஒன்றும் சொல்லவில்லை. தீயவர்கள் எப்படி மடிவார்கள் என்றும் அவர்களின் துர்க்கதி மிகவும் கொடுமையானது எனவும் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குப் பின்னால் 'நான் மட்டும் யோக்கியம்!' என்று அவர் நினைப்பது தெரிகிறது.

'தீயவர்கள் அழிந்து விடுவார்கள் எனில் பல நேரங்களில் அவர்கள் நல்வாழ்வு வாழக் காண்கிறேனே! அதற்கு உங்கள் பதில் என்ன?' என்று அவர்களைக் கேட்கின்றார் யோபு.

இரண்டாம் உரையாடல் நமக்கு சொல்லும் ஒரு உண்மை என்னவென்றால், மனிதர்களால் மட்டும் தன் சக இனத்திற்குத் துன்பமும், வலியும் கொடுக்க முடியும். ஏற்கனவே துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும் யோபிற்கு தன் புண்களின் வலியைவிட இவர்களின் வாய்ச்சொற்கள் மிகுந்த வலி தந்திருக்கும்.

'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்பது போல அவர்கள் யோபுவைச் சுடும் காயம் ஆன்மாவில் விழுந்த அம்மைத் தளும்பு போல அழியாமலே இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா?

மூன்று நண்பர்களின் பேச்சிலும் 'நாங்கள் யோக்கியர்கள்!' என்ற ஆணவம் ஒளிந்திருக்கிறது. 'நமக்கு நடக்காத வரை நடப்பதெல்லாம் வேடிக்கை!' என்பது போல இருக்கிறது அவர்களின் பேச்சு.

யோபு என்ற மனிதரைப் பார்ப்பதற்குப் பதில், அவருடைய செயல்களைச் சுட்டிக்காட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றனர். நம் செயல்கள் வேறு. நாம் வேறு. ஒருவரின் செயலை மட்டும் வைத்து அவர் இப்படித்தான் என்று தீர்ப்பு எழுதுவது தவறு.

மனித வாழ்க்கை என்பது வெறும் வாய்ச்சவடால்கள்! என்பதற்கு இரண்டாம் சுற்று உரையாடல் நல்ல எடுத்துக்காட்டு!


1 comment:

  1. இரவு இரவாகவே இருக்குமானால்,பகலும் பகலாகவே இருக்குமானால் மனித வாழ்க்கையே அஸ்தமித்துவிடும்.மாறிமாறி வரும் விஷயங்களே வாழ்க்கைக்கு சுவை சேர்க்கின்றன.சூல் கொண்ட கரும் மேகத்தைக்கூட ஒரு வெள்ளிக்கம்பி அலங்கரிக்கத்தானே செய்கிறது..? " எந்த ஒரு பாவியும் அழிவுறுவது என் விருப்பமல்ல" என்பது இயேசுவின் கூற்றாக இருக்கும்போது அனைத்து நன்மைத்தனங்களும் ஒருசேரப் பெற்ற 'யோபு' போன்ற மனிதர்களை இறைவனால் எப்படிப் புறக்கணிக்க முடியும்? ஆறுதல் தரும் விஷயம்தானே!

    ReplyDelete