Sunday, August 24, 2014

ஏனெனில் அவர் கடவுள்!

இயேசு தம் சீடரை நோக்கி, 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்...ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். (மத்தேயு 16:13-17)

இரண்டு கேள்விகள்:

'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'

'நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?'

இந்த நற்செய்திப்பகுதி மாற்கு (8:27-30) மற்றும் லூக்கா (9:18-21) நற்செய்திகளிலும் உள்ளது. ஆனால் அவைகளுக்கும், மத்தேயுவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது:

'நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று மற்ற நற்செய்தியாளர்கள் சொல்ல, மத்தேயு மட்டும் 'மானிடமகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மேலும் பேதுருவின் பதில் மாற்கு நற்செய்தியில் 'நீர் மெசியா' என்றும், லூக்காவில் 'நீர் கடவுளின் மெசியா' என்றும் உள்ளது. மத்தேயுவில் 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று இரண்டையும் சேர்த்திருப்பதாக உள்ளது.

இயேசு என்னதான் கேட்டார்? பேதுரு என்னதான் சொன்னார்? - இவைகளை நாம் உறுதியாகச் சொல்ல முடியவில்லையென்றாலும், மத்தேயு சொல்கிறபடியே இருப்பதாக எடுத்துக்கொள்வோம்.

'மானிடமகன்' என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் தானியேல் மற்றும் எசேக்கியேல் நூல்களை முழுவதுமாகப் படிக்கவேண்டும். அது நம் தேடலை அதிகமாக்கிவிடும். ஆகவே, மானிடமகன் என்பதற்குப் பதில் நமக்குத் தெரிந்த 'கடவுள்' என்ற ஒரு வார்த்தையைப் போட்டு கேள்வியை மாற்றிக்கொள்வோம்:

'கடவுள் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'

நாம் இதற்கு என்ன பதில் சொல்வோம்? சிலர் சிவன் என்றும், சிலர் பெருமாள் என்றும், சிலர் புத்தர் என்றும், சிலர் மகாவீரர் என்றும், சிலர் காளி என்றும், சிலர் அல்லா என்றும், சிலர் இயேசு என்றும், சிலர் இயற்கை என்றும், சிலர் அப்படி யாரும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

கேள்வி இப்போது நம் பக்கம் திரும்புகிறது:
'நான் யாரென்று, அதாவது கடவுள் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?'

இப்போது நாம் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் முதற்கேள்விக்கான பதிலை 'கூட்டத்தோடு கோவிந்தா' என்ற அடிப்படையில் சீடர்கள் சொல்கிறார்கள். இரண்டாம் கேள்விக்கு பேதுரு மட்டுமே பதிலளிக்கத் துணிகிறார்.

இன்றைக்கு எல்லாருமே கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள். அல்லது கடவுள் இல்லை என்று பேசுகிறார்கள். கடவுளைப் பற்றிப் பேசுவதுதான் இன்றைய ஃபேஷன். ஏனெனில், எல்லாவற்றையும் பற்றி நாம் பேசி முடித்துவிட்டோம். இனி அவர் ஒருவர் தான் பாக்கி. எல்லார் சொல்வதும் சரியாக இருப்பது போல நமக்குத் தெரிவதுதான் அதிலுள்ள வேடிக்கையே. ஒருவர் மற்றவரோடு போட்டி போட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் நாமும் 'பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நானும் ஒன்று' என்ற தொனியில் எல்லாரோடும் சேர்ந்து கொள்கிறோம்.

மெய்யியலில் 'மாஸ்டர்ஸ் ஆஃப் சஸ்பிஷன்' என்று மூன்று பேரைக் குறிப்பிடுவார்கள்: சிக்மண்ட் பிராய்ட், ஃப்ரையிட்ரிக் நீட்சே மற்றும் காரல் மார்க்ஸ். கடவுள் என்பவரை 'சஸ்பிஷன்' கொண்டு இவர்கள் பார்த்ததால் இந்தப் பெயர் இவர்களுக்கு. இந்த மேற்கத்திய குழுவோடு நம்ம ஊர் ஈ.வே. ராமசாமி (பெரியார்) அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அப்படி அவர்கள் என்னதான் சொன்னார்கள்?

பிராய்ட்: மதம் என்பது ஒரு மாயை. மனித உளவியல் பிறழ்வுகளில் மிக முக்கியமானது மதம். மதம் என்பது நாம் விடமுடியாமல் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நியூரோஸிஸ்.

நீட்சே: கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இறந்தவராகவே இருக்கிறார். அவரை நாம் கொன்றுவிட்டோம்.

மார்க்ஸ்: மதம் என்பது ஒடுக்கப்பட்டோர் விடும் பெருமூச்சு. இதயமில்லாத உலகின் இதயம். ஆன்மா இல்லாமல் வாழும் வாழ்க்கை நிலையின் ஆன்மா. மக்களின் போதை மருந்து.

இந்த மூவரும் மதங்கள் முன் வைத்த கடவுளைத் தான் இப்படிச் சொன்னார்களே தவிர, தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையைக் கண்டிக்கவில்லை.

இப்படி எல்லாரும் கடவுளைப் பற்றிச் சொல்கிறார்கள்.

நானும், நீங்களும் என்ன சொல்கிறோம்?

தாகூர் சொல்வது போல அவர் இன்னும் நம்மிடையே வந்து கொண்டுதான் இருக்கின்றார். அந்த மெல்லிய காலடி ஓசைகளை நாம் தான் கேட்டு அவருக்குப் பெயர் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கின்ற பெயராகவே அவர் மாறிவிடுகிறார்! ஏனெனில் அவர் கடவுள்!


2 comments:

  1. Anonymous8/25/2014

    Excellent

    ReplyDelete
  2. "அருமை." ஆம்..கடவுள் மற்றவருக்கு யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்..எனக்கு அவர் யார்? யோசிக்க வைக்கும் கேள்விதான். கடவுள் எங்கோ தூரத்தில்,உயரத்தில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டும் மந்திரவாதி அல்ல.அவர் நான் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பவர்தான்.நான் கூப்பிட்டுத்தான் வரவேண்டும் என நினைக்கும் விருந்தாளி அல்ல.அல்லும்,பகலும் என்னோடு உடன் இருப்பவர்; உடன் வருபவர்.கடவுள் இல்லை என்பவர்கள்கூட தங்கள் மனதாரச்சொல்வதில்லை.அப்படியே யாரும் இருப்பினும் ..பாவம்..அவர்கள் சாய்ந்து கொள்ளத்தோள் இல்லாதவர்கள்.அப்படியானால் என் கடவுள் எனக்கு யார்? என் 'உடனிருப்பு', என் 'நிழல்', என் 'நிஜம்'.என்னுடைய 'பலத்தை' உணரவைத்த தந்தைக்கு நன்றிகள்.இந்த வாரம் இனிய வாரமாக வாழ்த்துக்கள்!

    ReplyDelete