Monday, August 18, 2014

மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! (மத்தேயு 7:9-11)

அப்பம் கேட்டால் கல்லைக் கொடுப்பாரா?

மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

மொழியில் உருவகங்கள் பல வகை. அவைகளில் ஒன்று தான் எதிர்ப்பதம். ஒன்றின் அர்த்தத்தை அதன் எதிர்ப்பதம் கொண்டு புரிந்து கொள்வது.
அப்பம் - கல், மீன் - பாம்பு என்ற இரண்டு உருவகங்கள் மட்டும் தான் வெளிப்படையாகத் தெரிந்தாலும், மற்ற இரண்டு உருவகங்கள் மறைந்திருக்கின்றன: பிள்ளைகள் - தந்தை, தீயோர்கள் - நன்மை.

வானகத் தந்தையின் மேன்மையைப் புரிந்து கொள்ள மண்ணுலகின் தந்தையர்களை முன் வைக்கின்றார் இயேசு. மண்ணுலகின் தந்தையர்களை ஏன் தீயோர்கள் என அழைக்கின்றார்? என்பது நம் முதல் கேள்வி. 'தீயோர்கள்' என்பது 'தீமை செய்பவர்கள்' என்று குறிப்பிடுவது அல்ல. கடவுள் தன்மையை விட குறைந்த தன்மைக்குத் தான் 'தீமை' என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, குறைவுடையவர்களே நிறைவான செயல்களைச் செய்யும் போது, நிறையுடையவர் இன்னும் எவ்வளவு நிறைவான செயல்களைச் செய்வார் என்பதே பாடம்.

அப்பமும், கல்லும் அளவில் ஒன்றாகத் தான் இருக்கும். அதுபோல மீனும், பாம்பும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுதான். இருளில் இருந்து பார்த்தால் கல் அப்பம் போலவும், பாம்பு மீன் போலவும் தான் இருக்கும். மீன் பிடிக்கப் போகிறேன் என்று சொல்லி குட்டித் தண்ணீர் பாம்புகளை பிடித்து வந்த நிகழ்வு என் சிறுவயதில் நடந்திருக்கிறது. மண்ணுலகின் தந்தையர் இப்படி தம் பிள்ளைகளை ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அவர்கள் தங்கள் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக ஏமாற்றுவதில்லை. தீமை செய்வதற்கான வாய்ப்பைக் கொண்ட தீயவர்களாக இருந்தாலும் அவர்கள் நன்மை செய்யவே துணிகிறார்கள். ஆனால் கடவுளைப் பொறுத்தவரையில் தீமை என்பதற்கே வாய்ப்பில்லை. அவரால் நன்மை மட்டுமே செய்ய முடியும்.

இந்தக் கேள்வி நமக்கு வைக்கும் பாடங்கள் மூன்று:

1. கடவுள் நன்மைத் தனம். 'கடவுள் எனக்குத் தீமை அனுப்பிவிட்டார்' என்று புலம்புவது தவறு. 'எண்ணம் தனக்கே!' என்பது முதியோர் வாக்கு. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா!' என்பது பூங்குன்றனாரின் மொழி.

2. அவரிடம் கேட்பவருக்கு! 'கேளுங்கள். கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது. 'கேட்பவரே!' பெறுகிறார். 'வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்!' என்பதுன் மூலமொழியும் இதுதான்.

3. 'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி' என்பார் கண்ணதாசன். அப்பம் என்றால் அப்பத்தையும், மீன் என்றால் மீனையும் சொல்வதும், அதன் படி செய்வதும் தான் மேன்மை குணம்.

அப்பம் கேட்டால் கல்லை, மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?


1 comment:

  1. அன்னையையும்,பிதாவையும் தெய்வத்திற்கு இணையாக்க் கொண்டாடுகிறது நம் தமிழ் மரபு. அப்படிப்பட்டவர்களே தம் மக்களுக்குக் கொடுக்க மறுப்பதைக்கூட நம் விண்ணகத் தந்தை தம்மை நம்பி இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்னரே அள்ளித்தருகிறார்.ஏனெனில் நம் தேவைகளையும் ஏக்கங்களையும் அறிந்தவர் அவர் ஒருவரே. கேட்போம்....பெறுவோம்...

    ReplyDelete