Wednesday, August 20, 2014

துன்பத்தால் மன உறுதி - 1

ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும்,
மன உறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்
என அறிந்திருக்கிறோம்.
(உரோமையர் 5:3-4)

நேற்றைய தினம் திருச்சபையின் திருப்புகழ்மாலையில் மன்றாட்டுக்களுக்கு முன்னுரையாக மேற்காணும் இறைவாக்கு இருந்தது. கடந்த ஆண்டு உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் கிரேக்கக் கட்டமைப்பைப் படித்த போது என்னைத் தொடாத இந்த வாக்கு நேற்று காலை முதல் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அ. துன்பம், மன உறுதி, தகைமை, எதிர்நோக்கு - நான்கு வார்த்தைகள்.

ஆ. துன்பத்திலிருந்து மன உறுதி, மன உறுதியிலிருந்து தகைமை, தகைமையிலிருந்து எதிர்நோக்கு - மூன்று தொடர்புகள்.

இ. துன்பம் என்னும் எதார்த்தம், மன உறுதி, தகைமை, எதிர்நோக்கு என்னும் மதிப்பீடுகள் - இரண்டு படிநிலை உண்மைகள்.

நான்கு, மூன்று, இரண்டு என அழகாக கிரேக்கக் கட்டமைப்பு இருக்கின்றது.

அ. நான்கு வார்த்தைகளின் பொருள் என்ன?

துன்பம் என்றால் 'கஷ்டம்' என வைத்துக் கொள்வொம். இந்த அதிகாரத்தில் 'துன்பம்' என்ற வார்த்தையை பவுலடியார் ஏன் கொண்டு வருகிறார்? 'கடவுளுக்கு ஏற்புடையவராதல்' என்பது இந்தப் பகுதியின் தலைப்பு. 'கடவுளுக்கு ஏற்புடையவராக' இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் அல்லது துன்பங்கள் என வைத்துக்கொள்ளலாம். ஏற்புடையவராக இல்லாமல் இருப்பது சிக்கல் இல்லை. ஏற்புடையவராக இருத்தலில் தான் நிறைய சிக்கல்கள் அல்லது துன்பங்கள் இருக்கின்றன. 'ஏற்புடையவராதல்' என்பது பவுலடியாரின் மிகப்பெரிய இறையியல். நாம் கடவுளின் அருளால் ஏற்புடையவராகிறோமா அல்லது நம் செயல்களால் ஏற்புடையவராகிறோமா? அருளா? நம்பிக்கையா? என கேள்விகள் வளர்ந்து லூத்தர் அவர்கள் பிரிந்து போகக் காரணமாக இருந்ததும் இந்த ஏற்புடையவரதால் கருத்தியல்தான்.

இன்னைக்கு நமக்குத் துன்பமே வரக்கூடாது என நினைக்கின்றோம். நாம் அன்றாடம் வாசிக்கும் திருட்டு சம்பவங்கள், வன்முறை, கொலை அனைத்திற்கும் பின்னால் இருப்பதும் இதே சிந்தனை தான். 'கஷ்டப்படாம எல்லாமே கிடைக்கணும்!'

இந்த சிந்தனை ஆன்மீகத்திலும் சில நேரங்களில் வந்து விடுகிறது. 'கஷ்டப்படாம மோட்சத்துக்குப் போகணும்!' நான் என்ன செஞ்சாலும் கடவுள் தான் மன்னித்துவிடுவாரே என்று சொல்லியே நாம் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்துகிறோம். கடவுளின் மன்னிப்பு ஒரு குறுக்குவழி ஆன்மீகமாக மாறிவிடுகிறது. பவுலடியாரின் இந்த ஏற்புடையவராதலில் குறுக்கு வழிக்கே இடமில்லை. ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார் என்று சொல்லும் போது அவர் குறிப்பிடுவது, ஆபிரகாமை கடவுள் அழைத்தபோது அவர் அனைத்தையும் விட்டுவிட்டு 'தான் எங்கு செல்கிறோம் என்று தெரியாமலேயே புறப்பட்டுச் சென்றார்!' என்று சொல்கின்றார். இப்படிச் செல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். 'என்ன நடந்தாலும் பரவாயில்லை!' என்ற திடம் வேண்டும். இது ஒரு துன்பமயமான பாதை.

இரண்டாவதாக, மன உறுதி. 'காம்ப்ரமைஸ்' செய்யாத ஒரு மனநிலை. ஆல்கஹாலிக் அனானிமஸ் புரோகிராமிலும், போதை மருந்து எடுத்தல், பாலியல் பிறழ்வு போன்ற விடமுடியாத பழக்கவழக்கங்களிலும் இருப்போரை நேரிய வழிக்குக் கொண்டுவரும்போது அவர்கள் அதிக கஷ்டப்படுவது இந்த மனஉறுதியில்தான். 'இன்னைக்கு ஒரு நாளைக்கு குடிக்கிறேனே! நாளை விட்டுவிடுகிறேன்!' என்று சொல்பவர் ஒருநாளும் குடிபோதையை நிறுத்த மாட்டார். 'இன்று மட்டும் நான் சுயஇன்பம் பெறுகிறேன்! நாளை நிறுத்திவிடுகிறேன்!' என்ற சொல்பவரும் நிறுத்துவதேயில்லை. ஒருநாள் நல்லவராக இருப்பது எளிது. என்றுமே நல்லவராக இருப்பதற்கு நிறைய மனஉறுதி தேவை. ஆனால் துன்பங்கள் வர வர மனஉறுதி தானாக வந்துவிடும். காலையில 5 மணிக்கு எழுவதோ, குடிக்காமல் இருப்பதோ ஒரு சில நாட்கள் துன்பமாக தெரியும். ஆனால் தொடர்ந்து இந்தத் துன்பங்களை ஏற்க பழகிவிட்டால், நம் மனம் நம்மேல் நம்பிக்கை வைக்கும்: 'குட் பாய்! இவனுக்கு 5 மணி என்றால் 5 மணி! ஆம் என்றால் ஆம்! இல்லை என்றால் இல்லை!' நம் மனம் நம்மை நம்பினால் போதும். இந்த உலகமே நம்மை நம்பவில்லையானாலும் நாம் சாதித்துவிடலாம். ஆனால் உலகமே நம்மை நம்பி, நம் மனம் நம்மை நம்பவில்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த உற்சாக நிலைதான் மூன்றாவதாக வரும் தகைமை. அழகான தமிழ் வார்த்தை. நேர்மை என்றும் கண்ணியம் என்றும் கூட மொழி பெயர்க்கலாம். ஆங்கிலத்தில் 'கேரக்டர்' என மொழிபெயர்க்கின்றனர். 'அவன் கேரக்டர் சரியில்லையே!' என்று நாம் சொல்லும் போது பயன்படுத்தும் 'கேரக்டர்'.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
என்ற 405வது குறளில் 'தகைமை' என்பது ஒருவரின் கேரக்டர் என்ற பொருளில் உள்ளது.

அபிராமி அந்தாதியிலும் (எண் 46) தகைமை பற்றிய அழகான பாடல் உண்டு:
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே - புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவேனே.

'தகைமைகள்' என்று பன்மையில் வருமிடத்தில் இதன் பொருள் செயல். 'தகைமை' என்று ஒருமையில் வருமிடத்தில் இதன் பொருள் 'கடவுளின் மேன்மை'.

தகைமையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தங்கம் - தக தகவென இருப்பதால்தான் அது தங்கம். ஒன்றின் உண்மை இயல்பாக இருப்பதே தகைமை.

நெருப்பு என்றால் சுட வேண்டும். பூமி என்றால் சுற்ற வேண்டும். மனிதர் என்றால் போராட வேண்டும் - இது கவிப்பேரரசு வைரமுத்து சொல்லும் தகைமை!

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. தந்தையே! இன்றையப்பகுதி போற்றுதற்குரிய பகுதி.துன்பத்தின் மேன்மை,அவசியம்..நாம் அன்றாடம் கையாள வேண்டிய ஒன்று. ஒரு கல் அது கல்லாகவே இருக்கும் வரை யாரும் அதைத்திரும்பிப் பார்ப்பதில்லை.ஆனால் ஒரு சிற்பி தன் உடல்,உள்ள பலத்தை அந்தக் கல்லிடம் காட்டும்போது, அது பிறர் ஏறிச் செல்லும் படிக்கட்டாகவோ,பார்த்து இரசிக்கும் சிற்பமாகவோ மாறுகிறது.மனிதனுக்கும் அப்படித்தான்..துன்பம் என்ற உளி நம்மீது படப்படத்தான் நமக்கு ஒரு சுய அடையாளம் கிடைக்கறது.ஒருவனைப்பற்றி எண்ணும்போது 'அவன் இப்படித்தான்; யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டான்' என்ற எண்ணம் வருமேயானால் அதுதான் அவனது வெற்றி.' Character' என்பதும்அதுதான்.இலையெனில் மனிதனுக்கும்,மண்,புழுவுக்கும் வேறுபாடு தெரியாமல் போய்விடும்.'தகைமை' எனும் அழகான வார்த்தையையும் அதற்கான பொருளையும் எடுத்துரைத்த தந்தைக்கு நன்றிகள்...

    ReplyDelete