Wednesday, August 27, 2014

ஏன் நோன்பு இருப்பதில்லை?

பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, 'நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, 'மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என்றார். (மத்தேயு 9:14-15)

'ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்ற கேள்வியைக் கேட்கின்றனர் இயேசுவிடம்.

அதற்கு இயேசு தரும் பதில் உருவகமாக இருக்கின்றது. மணமகன் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும் என்று மேலோட்டாமப் பொருள் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் வேறு அர்த்தமும் புலப்படும்.

நோன்பு என்பது துக்கம் எனவும், விருந்து என்பது மகிழ்ச்சி எனவும் சொல்ல இயேசு விரும்பவில்லை. ஏனெனில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த எஸ்ஸீன்கள் நோன்பை மகிழ்ச்சி எனவும், விருந்தை துன்பம் எனவும் கருதினர்.

மணமகன் இருக்கும் போது நோன்பு என்பது 'அவட் ஆஃப் ப்ளேஸ்' (out of place). எப்படி பழைய துணியில் புதிய துணி பொருந்தாத ஒன்றோ, பழைய தோற்பையில் புதிய திராட்சை ரசம் பொருந்தாத ஒன்றோ அது போலவே திருமண விருந்து நடக்கும் இடத்தில் நோன்பு பற்றி யோசிப்பது. எதை எப்போது செய்ய வேண்டுமோ, அதை அப்போது செய்ய வேண்டும். இதுதான் இயேசுவின் உருவகத்தின் ஆழ்ந்த அர்த்தம்.

ஒவ்வொரு உருவகத்திற்கும் இரண்டு அர்த்தங்கள் உண்டு: மேலான அர்த்தம் மற்றும் ஆழ்ந்த அர்த்தம். நம் தமிழ்மொழியில் இந்த உருவகங்களின் விளையாட்டு மிகவும் ருசியானது.

உதாரணத்திற்கு ஒன்றை எடுப்போம்:

'மேலோர் நினைப்பர், கீழோர் மறப்பர்'

இந்த வாக்கியத்தின் பொருள் என்ன?

நல்ல எண்ணங்களை அல்லது குணங்களை உடையவர் தங்களுக்கு மற்றவர் செய்த உதவிகளையும், நன்றியையும் மறக்க மாட்டார்கள். ஆனால் கீழான குணங்களையும், இயல்பையும் உடையவர்கள் செய்ந்நன்றி மறந்து விடுவர்.

இதுவும் இதன் அர்த்தம் தான். ஆனால் இதையும் தாண்டி ஒரு பொருளை இங்கே வைத்திருக்கின்றார் புலவர்.

அதாவது, தொலைநாட்டிற்கு வாணிபம் செய்வதற்காகச் செல்கின்ற தலைவன் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வருகின்றான். அவனை வாயில் வரை வழியனுப்ப வந்து தலைவி வாயில் நிலை பிடித்து நிற்கிறாள். முன்னே நடந்து செல்கின்ற தலைவன் தலைவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்கிறான். அப்போது தலைவி தனக்குள் பேசிக்கொள்கிறாள்: 'என் தலைவனின் பாதங்களுக்கு நான் எவ்வளவு முறை பணிவிடைகள் செய்திருக்கிறேன். ஆனால் அவைகள் அதையெல்லாம் மறந்து வேகமாக நடக்கின்றன. ஆனால் தலைவனின் கண்களுக்கு நான் ஒரு பணிவிடையும் செய்ததில்லை. இருந்தாலும் அவைகள் என்னை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே இருக்கின்றன. கீழோர் (கீழ் இருக்கும் பாதங்கள்!) மறப்பர்! மேலோர் (மேலிருக்கும் கண்கள்) நினைப்பர்!

வாழ்வில் நாமும் உருவகங்கள் தாம். நம்மை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு நாம் ஒரு அர்த்தம் தருவோம். நம்மை நெருக்கமாய்ப் பார்ப்பவர்களுக்கு வேறு அர்த்தம் தருவோம்.

உருவகங்களே வாழ்வு!


1 comment:

  1. விவிலியம் வேறு; வாழ்க்கை வேறு எனப்பிரித்துப் பார்க்காமல் ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்தி அதையும் யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தாங்கள் எடுத்துச் சொல்லும் விதமே ஒரு அழகு.வாழ்த்துக்கள் தந்தையே! ஆனால் ஒரு சந்தேகம்...தலைவனின் பாதங்களுக்குப் பணிவிடை செய்யும் தலைவி யாரேனும் இருக்கும் திசையைக் காட்டுக்களேன்.கும்பிட வேண்டும் போல் தோன்றுகிறது.
    தந்தைக்குப் 'புனித அகுஸ்தினாரின்' திருவிழா வாழ்த்துக்கள்....

    ReplyDelete