Sunday, August 17, 2014

எதை உண்போம்? எதை அணிவோம்?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்...உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். (மத்தேயு 6:31-32)

எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்?

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என இன்று கருதப்படுபவை மூன்று: உணவு, உடை, இருப்பிடம். இயேசுவின் காலத்தில் உணவும், உடையும் மட்டுமே இன்றியமையாதவை என கருதப்பட்டது. இயேசுவின் காலத்தவர் அன்றும் நிலையான இருப்பிடம் இல்லாதவர்களாகத் தான் இருந்தனர்.

உணவைப் பற்றிக் கவலை வேண்டாம் என்பதற்கு வானத்துப் பறவைகளை எடுத்துக்காட்டாக வைத்த இயேசு, உடையைப் பற்றிக் கவலை வேண்டாம் என்பதற்கு காட்டுமலர்ச் செடிகளை எடுத்துக்காட்டாக வைக்கின்றார்.

காட்டு மலர்ச் செடிகள் அல்லது லீலிப் பூக்களின் நேர்த்தியான வடிவமைப்பும், வர்ணங்களின் கலவையும் அரண்மனையில் ஆடை வடிவப்பராலும் செய்ய முடியாது என்பதைக் காட்டவே 'சாலமோன் கூட அப்படி உடுத்தியதில்லை' என முன்வைக்கின்றார்.
பறவைகள், பூச்செடிகள் - இந்த இரண்டோடும் மனித இனத்தை ஒப்பிடும் போது மனிதர்கள் நாம் விதைக்கிறோம், அறுவடை செய்கிறோம், களஞ்சியங்கள் கட்டி சேர்த்து வைக்கிறோம், ஆடை நெய்கிறோம், தைக்கிறோம், சாயம் போடுகின்றோம். இவைகளில் எதுவுமே இல்லாத பறவைகளும், பூக்களும் மகிழ்ச்சியாக இருக்க, இவ்வளவு இருந்தும் ஏன் நாம் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க இயேசு அழைக்கிறார்.

நாம் சின்னக் குழந்தைகளாக இருந்த போது நம்மை யாராவது அழ வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்று நாம் வளர்ந்த பிறகு நம்மை யாராவது மகிழ்ச்சியாக வைக்க ஜோக் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. சின்னக் குழந்தையாக இருந்த போது நம்மில் தழும்பி வழிந்த மகிழ்ச்சி, நாம் வளரத் தொடங்கியவுடன், குறைந்து வருத்தமாக, கவலையாக மாறிவிடுகிறது.

மகிழ்ச்சி குறைவுக்குக் காரணம் நம்பிக்கைக் குறைவு. மகிழ்ச்சி நம்மில் குறைந்தவுடன் அந்த மகிழ்ச்சியை நாம் வெளியே தேட ஆரம்பிக்கிறோம்.

சத்குரு ஒரு அழகிய உருவகம் சொல்வார். கொஞ்சம் க்ரூடாக இருக்கும்!

ஒரு தோட்டத்தில் ஒரு எருது மேய்ந்து கொண்டிருந்தது. மேய்ந்து கொண்டிருந்த எருது அங்கே ஒரு கொக்கு சோகமாக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறது. 'ஏய் கொக்கே! ஏன் இவ்வளவு சோகம்?' என்று கேட்க, கொக்கு சொல்கிறது: 'கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக நான் இளமையாக இருந்த போது அதோ தெரிகிறதே அந்த மரத்தின் உச்சியில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தேன். இன்று வயதாகிவிட்டது. மரத்தின் முதல் கிளையைக் கூட என்னால் ஏற முடியவில்லை. என் இறகுகளிலும் வலுவில்லை. அதை நினைத்து வருத்தமாயிருக்கிறேன்!' எருது சொன்னது: 'நான் போடும் சாணியில் தினமும் கொஞ்சம் சாப்பிடு! நீ வலிமை பெறுவாய்!'. கொக்கு, 'இல்லை! நீ ஏமாற்றுகிறாய். அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை!' என்றது. பின் ஒரு நாள் கொக்கும் 'சரி தின்றுதான் பார்ப்போமே!' என்று தின்றும் பார்த்தது. கொஞ்சம் வலிமை வந்தது போல இருந்தது. இப்படியாக தினம் ஒரு வாய் சாணி ஒரு கிளை உயரம் என ஒரு நாள் மரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது. அங்கே ஒய்யாரமாக அது அமர்ந்திருப்பதை தூரத்தில் பார்க்கிறார் ஒரு பால்கனியில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக் காரன். உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்து குறிபார்த்து அந்த கொக்கைச் சுட அது மடிந்து விழுந்து விட்டது.

சத்குரு இப்படி நிறைவு செய்கிறார்: இந்தக் கதையின் மாரல் இதுதான்: "any bullshit can make you reach height, but it won't let you stay there long".

நாம் அன்றாடம் ஓடித் தேடும் படிப்பு, வேலை, பயணம், உணவு, நாகரீகம், மது, போதை இவையெல்லாம் நம்மை மரத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லும். ஆனால் அங்கே நாம் நீடித்திருக்க முடிவதில்லை.

வெளியே தேடுவதை விடுத்து கொஞ்சம் உள்ளே தேடினால் கிடைக்குமே!

'ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33)


1 comment:

  1. நாளுக்கு நாள் மாறிவரும் புறத்தேவைகள் நமக்குத் திருப்தியளிப்பதில்லை.சக மனிதரோடு நாம் போடும் போட்டியும் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்வதில்லை.ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலைமை.மிஞ்சுவதெல்லாம் 'விரக்தி' என்ற நிலை மாற என்னதான் வழி? இதற்கான பதிலை விவிலியத்தில் தேடுவோம்.சத்குருவின் உருவகம் கொஞ்சம் க்ருட் தான்.ஆனால் நாம் முகம் சுழிக்கும் மாத்திரைகள் தானே நமக்கு முழு சுகத்தைத் தருகின்றன!? யோசிப்போம்..தந்தைக்கும் மற்றும் அனைவருக்கும் 'ஞாயிறு' வாழ்த்துக்கள்!

    ReplyDelete