Friday, August 1, 2014

முதல் சுற்று உரையாடல்

யோபு துன்புற்ற நிலையில் இருக்கும் போது அவரைத் தேடி வருகின்றனர் அவருடைய நண்பர்கள் நான்கு பேர்.

இந்த நான்கு பேரும் யோபுவுடன் உரையாடுவது நான்கு சுற்றுக்களாக அமைந்துள்ளது. முதலில் ஒருவர் பேச, பின் யோபு மறுமொழி பேச, பின் அடுத்தவர் என மூன்று பேர் மாறி மாறிப் பேசுகின்றனர்.

இறுதியாக, நான்காவது சுற்றில் நண்பர்களில் இளையவர் பேசுகின்றார்.

அதிகாரம் 4இலிருந்து 14 வரை முதல் சுற்று உரையாடல்கள் நிகழ்கின்றன.

எலிப்பாசும் யோபுவும்

தேமானியனான எலிப்பாசு முதலில் பேசத் தொடங்குகிறார். நேர்மையாளர்கள் துன்புறுவதில்லை எனவும், பாவிகளே துன்புறுவர் என்றும் தொடங்கும் எலிப்பாசு தன் கூற்றுக்குச் சான்றாக தான் கண்ட கனவு ஒன்றைக் குறிப்பிடுகிறார். யோபுவைக் கடிந்து கொள்ளும் எலிப்பாசு, கடவுளிடம் மன்னிப்பு கேட்கும் படியும், பாவச் செயல்களை விடுத்து அவரிடமே திரும்பிச் செல்லும் படியும் அறிவுரை பகர்கின்றார்.

எலிப்பாசின் வார்த்தைகள் யோபிற்கு கோபத்தை மூட்டுகின்றன. 'நான் எப்போது பாவம் செய்தேன் எனக் காட்டு!' என்று சவால் விடுகின்றார். தன்னைத் தேடி வந்திருக்கும் நண்பர்கள் வெறும் கானல்நீர் எனவும் அவர்களால் எந்த ஒரு பயனும் இல்லை எனவும் கடிந்து கொள்கின்றார்.

பில்தாதும் யோபுவும்

யோபுவின் பதிலுரையைக் கேட்டு சூகாயனான பில்தாது பேசத் தொடங்குகிறார். யோபின் பிள்ளைகள் இறந்ததற்குக் காரணம் அவர்களின் பாவச் செயல்கள் எனவும், யோபின் துன்பத்திற்குக் காரணம் அவரின் பாவம் தான் எனவும், உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ரீதியில் பேசி முடிக்கின்றார்.

பில்தாதுக்குப் பதில் சொல்லும் யோபு கடவுளிடம் கோபம் கொள்கின்றார். 'நல்லவராக இருக்க வேண்டும்!' என்று கடவுள் நமக்குச் சொல்கிறாரே, ஆனால் நம்மைச் சுற்றி எப்போதும் கெட்டதல்லவா இருக்கின்றது. நாம் நல்லவராக இருக்க வேண்டும் என்று சொல்லும் கடவுள் நம்மை நல்லவராக மட்டும் படைத்திருக்கலாமே. ஏன் பாவத்தில் விழும் அளவிற்கு பலவீனமானவர்களாகப் படைக்க வேண்டும்?

சோப்பாரும் யோபுவும்

யோபுவின் கேள்வியைக் கடிந்து கொள்கின்ற நாமாவியனான சோப்பார்: 'இந்தா! இதுக்குத்தான் கடவுள் உன்னைத் தண்டித்திருக்கிறார்! என்னமா கேள்வி கேட்குற பாரு! அவர் நம்மள எப்படிப் படைச்சா என்ன? நாம நல்லா இருக்குறது நம்மை கையில தான இருக்கு!'

பொறுமை இழக்கின்ற யோபு இந்த நண்பர்கள் தன் குறையைத் தான் காட்டுகின்றனரே தவிர, தனக்கு ஏன் இப்படி நடந்தது என்று விளக்கம் தரவில்லை என்கிறார். மேலும், இந்த நண்பர்கள் வெறும் வெற்றுப் பேச்சுப் பேசும் பேதையர். இவர்கள் தன்னைக் கேலிப்பொருளாக்கிவிட்டார்கள். இவர்கள் வெறும் பொய்யர்கள், காற்று அடித்துச் செல்லும் சாம்பல் எனவும் கடிந்து கொள்கின்றார். 'தான் நல்லவர்' என்பதில் உறுதியாக இருக்கும் யோபு கடவுள் தன்னுடன் ஒருமுறையாவது பேச மாட்டாரா என்று அபயக்குரல் எழுப்புகின்றார்.

இந்த முதல் சுற்று உரையாடல் நமக்குச் சொல்வது என்ன?

அ. 'துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்' (5:7). இவை எலிப்பாசின் வார்த்தைகள். திருமணத்திற்கும், அருட்பணி நிலையின் மணத்துறவிற்கும் உள்ள வித்தியாசம் பற்றிச் சொல்லும் போது, 'திருமணத்தில் துன்பம் இருக்கிறது!' என்றும் 'மணத்துறவில் இன்பம் இல்லை!' எனவும் சொல்வார்கள். இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றுதான்: இரண்டுமே துன்பமானதுதான். நாம் துன்பத்திற்கென்றே தோன்றியவர்கள் என்று சொல்வது எதார்த்தமாகத் தெரிந்தாலும் இதில் ஏதோ எதிர்மறைத்தன்மை மிகுந்திருப்பதாகவே தோன்றுகிறது. நோயுற்றவரின் கண்ணில் காணும் கண்ணீர் எந்த அளவிற்கு எதார்த்தமோ, அதே அளவிற்கு குழந்தையின் முகத்தில் புன்சிரிப்பும் எதார்த்தம் தானே. முதுமையின் தள்ளாடுதல் எந்த அளவிற்கு எதார்த்தமோ, அந்த அளவிற்கு இளமையின் துள்ளலும் எதார்த்தமே. 'இன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்' என்று அடுத்த கடைசிக்கு செல்ல முடியாது என்றாலும், நடுவில் அமர்ந்து கொண்டு 'இன்பத்திற்கும், துன்பத்திற்கும் தோன்றினர் மனிதர்' என்று சொல்லலாமே!

ஆ. 'சேறின்றி நாணல் தழைக்குமா? நீரின்றிக் கோரை வளருமா?' என்று கேட்கின்றார் பில்தாது. 'காரியம்' என்று ஒன்று இருந்தால் 'காரணம்' என்ற ஒன்று இருக்கும். காரணத்தின் மாற்று உருவமே காரியம். இந்த விதிமுறையை வைத்து யோபின் துன்பத்திற்கு அர்த்தம் காண விழைகின்றார் பில்தாது. சேறு நாணலைத் தழைக்கச் செய்கிறது. நீர் கோரையை வளர்க்கிறது. பாவம் நோயைப் பெற்றெடுக்கிறது. சிம்பிள் லாஜிக். 'லாஜிக்' சரிதான்! ஆனால் யோபு பாவம் செய்யவில்லையே! பாவம் செய்தவர் நோய் அனுபவித்தால் இந்த லாஜிக் சரி. ஆனால் நேர்மையாளர்களின் துன்பத்திற்கு என்ன லாஜிக் இருக்கின்றது. வாழ்வின் எதார்த்தங்கள் பல நேரங்களில் லாஜிக்குக்குள் பொருந்துவதில்லை. இந்த லாஜிக் உண்மையானால், பாவம் செய்யாதவர்கள் இறக்கவே கூடாதே! பச்சிளம் குழந்தைகளின் இறப்பை நாம் எந்த லாஜிக் கொண்டு புரிந்து கொள்வது? உழைப்பவருக்குத்தான் பணம் சேர்கிறதா? ஒன்றுமே உழைக்காமல், ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருப்பவர்களிடம் பணம் கோடி, கோடியாக வருகிறதே?

இ. காட்டுக்கழுதைக்குட்டி மனிதனாகப் பிறந்தால், அறிவிலியும் அறிவு பெறுவான். இவை சோப்பாரின் வார்த்தைகள். எது எப்படி இருக்க வேண்டுமோ? அது அப்படித்தான் இருக்கும். அதனதன் விதி அப்படி. இந்தச் சித்தாந்தம்தான் இவரின் வார்த்தைகளின் பின்னால் இருக்கின்றன. 'என்னால எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது! என் தலையெழுத்து அப்படித்தான்! என் விதி இதுதான்!' என்று ஒருசிலர் புலம்பக் கேள்விப்பட்டிருப்போம். ஏன்! நாமே கூட புலம்பியிருப்போம். 'சுதந்திரம்' மற்றும் 'நிர்ணயம்' - இந்த இரண்டில் எது மனிதர்களை உருவாக்குகிறது என்று காலங்காலமாக கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இயற்கை, தாவரம், விலங்கு தனக்கென அமைந்துள்ள விதியைப் பின்பற்றுவதுபோல மனிதர்களும் விதியின் வசம் உள்ளார்களா? அல்லது மதியால் விதியை வெல்லலாமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்தான் இரண்டாம் சுற்று உரையாடல்கள்.


1 comment:

  1. நமக்கு மிக நெருக்கமானவர்கள் துன்பத்தில் துவண்டு இருக்கையில் 'ஆறுதல்' என்ற பெயரில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி அவர்களின் மனப்புண்ணின் வீரியத்தைக் கூட்டுகிறோம்.அதை விட்டு நாம் அமைதி காத்தாலே அவர்களின் புண்கள் நாளடைவில் தானாக ஆறிவிடும்.நாணல் தழைக்க சேறும்,கோரை வளர நீரும் எவ்வாறு தேவையோ அதேபோல் மனித மனம் பண்படத் துன்பங்களும் அவசியம் என்ற கூற்றை சித்தரித்திருக்கும் விதம் பசுமரத்தாணியாக உள்ளது.பாராட்டுக்கள்...

    ReplyDelete