Saturday, August 16, 2014

எவர் ஒரு முழம் கூட்ட முடியும்?

வானத்துப் பறவைகளை நோக்குங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? (மத்தேயு 6:26-27)

'எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?'

இந்தக் கேள்வியை 'எவர் தமது ஆயுளோடு ஒரு நாளைக் கூட்ட முடியும்?' எனவும் மொழிபெயர்க்கலாம்.

இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு அங்கமாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. 'கவலைப்பட வேண்டாம்' என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருக்கும் இயேசு, கவலைப்படுவதன் காரணம் என்ன என்பதையும், கவலைப்படாமல் இருப்பதற்கு உதாரணம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்.

கவலை ஏற்படுவதன் காரணம் என்ன?

'இயற்கையின் போக்க மாற்ற நினைப்பது'

உதாரணம் என்ன?
'வானத்துப் பறவை'

வானத்துப் பறவை செய்யாத ஒன்றை மனித இனம் செய்வதாகச் சொல்கின்றார் இயேசு.

மனிதர்கள் விதைக்கிறார்கள்.
மனிதர்கள் அறுக்கிறார்கள்.
மனிதர்கள் சேர்த்து வைக்கிறார்கள்.

இந்த மூன்றையும் வானத்துப் பறவைகள் செய்வதில்லை.

இந்த மூன்றிலுமே மனிதர்கள் இயற்கையின் போக்கை மாற்ற நினைக்கிறார்கள் தாம். எங்கே விதைக்கிறார்கள்? 'தனக்கென்று உள்ள நிலத்தில்!' எவரும் அடுத்தவர் நிலத்தில் விதைப்பதில்லை. 'தனக்கென்று' ஒன்று வந்தவுடனே அங்கே கவலை வந்து விடுகிறது. 'எனக்கென்று' இருப்பது போதவில்லையே! எனக்கென்று இருப்பது நன்றாக இல்லையே! என்று தொடங்கும் புலம்பல் 'அவனுக்கு நிறைய இருக்கிறதே! அவனிடம் இருப்பது நன்றாக இருக்கிறதே!' என பொறாமையாக மாறிவிடுகிறது. அறுவடையிலும், களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதிலும் தன்னலம் இன்னும் ஆழமாக மனித மனதில் பதிந்து விடுகிறது.

'உங்கள் உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா?' என்று கேட்கிறார் இயேசு. நிலம், அறுவடை என்று இயற்கையின் போக்கை மாற்றும் மனித இனம் எல்லாவற்றிலும் மாற்ற முடியாது எனவும் எச்சரிக்கை செய்கின்றார். இன்றைய ஜெனிடிக் என்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜி வளர்ச்சியில் உயரத்தோடு ஒரு முழம் கூட்டுவது ஓரளவுக்கு சாத்தியமாகக் கூடியதுதான். மனித ஆயுளின் ஒருநாளைக் கூட்டுவதும் இந்த மருத்துவ உலகில் சாத்தியம்தான். இயேசுவின் கேள்வியை இன்றைய நிலையில் நாம் பொய்யாக்கி விடலாம் தான்.

ஆனால், வானத்துப் பறவை நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கவே செய்கிறது.

'சரி! விதைக்க வேண்டாம்! அறுக்க வேண்டாம்! களஞ்சியத்தில் சேர்க்க வேண்டாம்!' இப்படி வாளாவிருந்தால் நம் தட்டிற்குச் சோறு வந்து விடுமா என்ன?

எந்தப் பறவைக்கும் கடவுள் கூட்டிற்குக் கொண்டு போய் உணவை ஊட்டிவிடுவதில்லை. பறவைக்குத் தேடுதலைக் கொடுத்திருக்கிறார். அந்தத் தேடுதலைப் பயன்படுத்துகின்ற பறவை பசியாறுகிறது. நமக்கென்று இன்றைய அரிசி எங்கேயோ இருக்கும்! அதைத் தேடுவோம் என்ற கூட்டைவிட்டுப் புறப்படுகிறது பறவை.
நம் மனித இயல்புக்குரியவற்றை நாம் செய்யவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்மையில் அருட்தந்தை சிவன், சே.ச., அவர்கள் ஒரு கதை சொல்லக் கேட்டேன்:

'ஒரு மரத்தின் கூட்டில் உள்ள இரண்டு குருவிகள் பேசிக்கொண்டனவாம்.

ஒரு குருவி சொன்னதாம்! 'இந்த மனிதர்கள் ஏன் இவ்வளவு பரபரப்பாக இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?'

மற்ற பறவை கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு பதில் சொன்னதாம்: 'நம்மைப் பார்த்துக்கொள்ள ஒரு அப்பா இருப்பது போல அவர்களைப் பார்த்துக்கொள்ள அப்பா இல்லை போலும்!'

நம்மைப் பார்த்துக் கொள்ள ஒரு அப்பா இருக்கிறார் என்ற உணர்வு ஒன்றே நம் பசியாற்றும்!


1 comment:

  1. தந்தை அருள்சிவன் அவர்கள் போகிற போக்கில் எத்துணை பெரிய உண்மையை எவ்வளவு எளிதாகச் சொல்லியிருக்கிறார்.ஆம்...நம்மைப் பார்த்துக் கொள்ள ஒரு'அப்பா' இருக்கிறார் என்ற உணர்வு மட்டும் இருப்பின் நம் பசி மட்டுமா ஆறும்..இல்லை அந்த பஞ்ச பூதங்களுமே நம் கைப்பிடிக்குள் அடங்கும். ஒவ்வொரு அரிசிக்குள்ளும் அது யாருக்குப் போய்ச்சேர வேண்டும் என்று எழுதியுள்ளதாக்க் கேள்விப்பட்டிருக்கிறேன்.பின் எதற்கு இந்தத் தவிப்பு? நம்மைத் தன் கடைக்கண்பார்வையில் எப்பொழுதும் வைத்திருக்கும் நம் தந்தையின் கருணையை நம்புவோம்; அவர் பாத்த்தில் நம்மை ஒப்புவிப்போம்..

    ReplyDelete