Tuesday, August 12, 2014

எனக்கு என்ன தருவீர்கள்?

பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 'இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். (மத்தேயு 26:14-15)

நேற்றைய பேதுருவின் கேள்வியைத் தொடர்ந்து இன்று யூதாசின் கேள்வியைப் பார்ப்போம்: 'எனக்கு என்ன தருவீர்கள்?' பேதுருவின் கேள்வியில் ஒரு பன்மை ஒளிந்திருந்தாலும், யூதாசின் கேள்வியில் 'நான், எனக்கு, எனது!' என்னும் தனிப்பட்ட சுதந்திரமும், பொறுப்புணர்வும் இருக்கிறது. யாரையும் கூட்டுச் சேர்க்கவில்லை.

'எனக்கு என்ன தருவீர்கள்?' - இங்கே யூதாசுக்கும் தலைமைக் குருவுக்கும் இடையே வணிகப் பரிமாற்றம் நடக்கின்றது. தன்னிடமுள்ள ஒன்றை விற்கத் துணிகின்றார் யூதாசு. செக்கரியா இறைவாக்கினர் தான் செய்த இறைவாக்குப் பணிக்காக 30 வெள்ளிக் காசுகள் கூலி பெறுகிறார். அதை அவரே குயவனின் நிலத்தில் தூக்கி எறிகின்றார் (11:12-13:30). விடுதலைப்பயணம் 21:32ன் படி 30 வெள்ளிக்காசுகள் என்பது ஒரு அடிமையின் விலை. தன் தலைவரை ஒரு அடிமையின் விலைக்கு விற்கத் துணிகின்றார் யூதாசு.

இயேசு என்ற கதையும், கலாச்சாரமும் யூதாசுக்கும், தலைமைக்குருவுக்கும் பிடிக்கவில்லை. தலைமைக் குருவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் இருக்கின்றது. ஆனால், பாவம்! யூதாசுக்கு ஏன் பிடிக்கவில்லை?

நாம் எல்லோருமே ஏதோ ஒரு கதையைத் தான் வாழ்கின்றோம். ஒரு கதையைக் கேட்கிறோம். அதையே நாம் வாழ்வாக்கத் துணிகிறோம். கதையென்றால் கட்டுக்கதை என்று நினைக்க வேண்டாம். ஒரு கதையாடல் என வைத்துக்கொள்வோம்.

ஒன்றை ஆக்கவோ, அழிக்கவோ வேண்டுமெனில் ஒரு கதையாடலை உருவாக்கினால் போதும். முடிவு தானாகவே வந்துவிடும். யூதர்களை அழிக்க நினைத்த ஹிட்லர் பயன்படுத்தியது ஒரு கதை. அதாவது, தன் ஆரிய இனம் தான் தூய இனம் என்றும், விவிலியத்தில் தன்னையே தூய இனமாகக் கருதும் யூத இனம் தூய்மையற்றது என்றும், அது இருக்கவே தகுதி அற்றது என்றும் ஒரு கதையை உருவாக்குகின்றார். விளைவு யூத இனம் அழிக்கப்படுகின்றது. இந்த யூதர்கள் 'இஸ்ரேல்' என்று நாடு தங்களுக்குக் கடவுள் வழங்கியது எனவும், தங்கள் மாபெரும் அரசன் தாவீது வாழ்ந்த பாலஸ்தீனமும், எருசலேமும் தங்களுக்கு உரியது என்றும் ஒரு கதையை வைத்துக்கொண்டு பாலஸ்தீனத்தில் குடியிருக்கும் இஸ்லாமியர்களை அழிக்கின்றனர். இந்த இஸ்லாமியர்கள் ஜிகாத் என்ற கொள்கையை கதையாக வைத்துக்கொண்டு ஈராக்கில் கிறித்தவர்களை அழிக்கின்றனர். இந்த கிறித்தவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் கிறித்தவம் என்ற கதையை வைத்துக்கொண்டு எல்லா நாடுகளிலும் காலனி ஆதிக்கம் செய்தனர். அடிமை வணிகம் செய்தனர்.

எல்லாமே கதைதான். ஒரு கதை நம் சிந்தனையையே முடமாக்கிவிடலாம்.

நேற்று ஒரு அருட்பணியாளர் ஒரு கதையை எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். ஏற்கனவே படித்ததுதான். நீங்களும் படித்திருப்பீர்கள். இமெயில், ஃபேஸ்புக், பிளாக் என வலம்வரும் கதை.

சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் தன் மகன் ஜேக்கை விளையாட விட்டு பார்த்துக்கொண்டிருப்பார் அவனது தந்தை. மாலை மங்கும் வேளையில், 'ஜேக் வா! நேரமாயிடுச்சு போகலாம்!' ஆனால் சிறுவனோ, 'அப்பா! அஞ்சு நிமிஷம்!' என்று விளையாடிக் கொண்டே இருப்பான். மறுபடியும் தந்தை அழைக்க மறுபடியும் 'அஞ்சு நிமிஷம்' என்பான். தந்தையும் அமைதியாக அமர்ந்திருப்பார். இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்து பெஞ்சு பெண்மணி, 'நீங்க ஒரு பொறுமைசாலி அப்பா!' என்பார். அந்த நேரம் அப்பா ஒரு பிளாஷ்பேக் சொல்வார். தனக்கு மற்றொரு மகன் இருந்ததாகவும், அவன் பெயர் ஜான் என்றும், அவன் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டான் எனவும், அவனோடு தான் அதிக நேரம் செலவிடவில்லை எனவும், கேக்கோடு நேரம் செலவிடுவதே  தன் இலக்கு என நிர்ணயித்துக் கொண்டதாகவும், இப்போது கூட ஜேக்கை மேலும் 5 நிமிடங்கள் விளையாட அனுமதிப்பதால் தனக்குத்தான் ஜேக்குடன் இருக்கும் சந்தோஷம் கிடைப்பதாகவும் சொல்வார்.

தெ மாரல் ஆஃப் தெ ஸ்டோரி என இரண்டு வரிகள்:

Life is not a race. Life is all about making Priorities. What are your priorities? Give someone you love, 5 more minutes of your time no matter how busy and you will have no regret forever.

Once you have lost it, shall be lost Forever.... Life can only be understood backwards; But it must be Lived forwards. LIVE LIFE BEFORE YOU LEAVE LIFE...!

இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு முதலில் சரி நானும் என் அன்பிற்குரியவர்களோடு நேரம் செலவழிப்பேன் என்று சொல்லி ஃபோனை எடுத்து எண்களை சுழற்றினேன். முதல் அன்பிற்குரியவர் ஃபோனை எடுக்கவில்லை. பின் சொன்னார் கோவிலுக்குப் போயிருந்தாராம். இரண்டாம் அன்பிற்குரியவர் ஃபோனை எடுத்தார். ஆனால் 'அப்பா வருகிறார்!' என்று பாதியிலேயே வைத்து விட்டார். மூன்றாம் அன்பிற்குரியவர் ஃபோனை எடுத்தவுடன், 'ஏன்டா! இவ்ளோ நாள் ஃபோன் பண்ணல என கோபித்துக்கொண்டார்'. நான்காம் அன்பிற்குரியவர் ரொம்ப நேரம் பேசினார். ஆனால் பேச்சின் நிறைவு சண்டையாக முடிந்தது.

ஒரு கதையில் வரும் ஒரு சின்ன வரியை நடைமுறைப்படுத்தினாலே இவ்வளவு சிக்கல் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம்:

'பிரிண்ட் செய்யப்பட்ட எல்லாத்தையுமே நம்பக் கூடாது!'

ஒரு அமெரிக்கக் கதை தமிழன் ஒருவனுக்கு அப்ளிகேஷன் செய்து பார்க்க வேண்டும் என்று மனதைத் தூண்டுகிறது என்றால் அதுதான் மிகப்பெரிய கலாச்சார சீரழிவு. கோக், பெப்சி, பர்கர், பீட்சா, ஃபேஸ்புக் என அமெரிக்காவின் குப்பையை நம் முதல் உணவாக எடுத்துக்கொண்ட நாம் இன்று நம்மையறியாமலேயே அவர்கள் சொல்லும் கதையையும் வாழ்வாக்கப் பார்க்கிறோம். சாப்பாடு செரித்துவிடும்! கதை செரிக்குமா?

ஜேக் கதையை வாசித்தவுடன் 'இப்படி இருக்க வேண்டும்' என்று முதலில் தோன்றினாலும், உடனடியாக 'ஐயோ! என் அப்பா அம்மா இப்படி இல்லையே!' என்று அவர்களை குற்றத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையும் வருகிறது. என் அப்பா, அம்மாவும், உங்கள் அப்பா, அம்மாவும் மேனேஜ்மென்ட் புக்குகள் படித்தும், குழந்தைவ வளர்ப்பு செமினார் போயும் நம்மை வளர்க்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் விடிந்தால் வேலை, அடைந்தால் வீடு. சனி, ஞாயிறு விடுமுறை என்ற வசதி வாய்ப்புக்களை அறியாதவர்கள். தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், எஸ்எம்எஸ், கேபிள் டிவி என எதன் வழியாகவும் தங்களை உலகத்தோடு இணைத்துக் கொள்ளாதவர்கள். ஜேக் அப்பா மாதிரி நம்மைப் பார்க்கிற்குக் கூட்டிட்டுப் போய் 'இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்!' நம்மை விளையாடவிட்டுப் பார்க்காமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் வாரம் முழுவதும் நம்மோடுதானே இருந்தார்கள். 7 நாட்கள் 24 மணி நேரங்கள் என நம் மரபில் நம் குழந்தைகளோடு பெற்றோர்கள் இணைந்திருக்கவே செய்கிறார்கள்.

இப்படி ஏதாவது கதையை வாசித்து இந்தக் கதை நமக்கு ஏதோ சொல்ல வருகிறது என்று நாம் நினைத்தால், ஒரு நிமிஷம் யோசிக்கணும்!

ஒவ்வொரு கதையும் ஒரு யூதாசு. நம்முன் நின்று 'எனக்கு என்ன தருவீர்கள்?' என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறது. கதவைத் திற! காற்று வரட்டும்தான்! ஆனால் இங்கு குப்பைகள் வருகிறதே?


1 comment:

  1. தந்தைக்கு அமெரிக்கா மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.ஒரு விஷயத்தின் மூலத்தைப் பாராமல் அது என்ன சொல்கிறது என்று புரிந்து அதை நம் நடைமுறைக்கு ஏற்ப சிறிது திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்வதே விவேகம்.காற்றை அனுமதிக்க நம்மூரில் கதவைத்திறந்தால் குப்பையும் சேர்ந்து வருவது சாதாரண விஷயம்தான்.ஆனால் எது வேண்டுமோ அதை மட்டுமே ஃபில்டர் பண்ணி எடுக்கும் வித்தையும் தெரியவேண்டும் நம் மனதுக்கு."Live life before you leave life"...தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சம்ம்.நன்றி....

    ReplyDelete