Tuesday, August 13, 2019

கல்லறை இருக்குமிடம்

இன்றைய (14 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (இச 34:1-12)

கல்லறை இருக்குமிடம்

சில ஆண்டுகளுக்கு முன் நான் உடல்தானம் செய்யலாம் என்று எண்ணியபோது என்னுடைய நண்பர்கள் சிலர், 'ஐயயோ! அதெல்லாம் வேண்டாம்! இறந்த ஒருவரை அடக்கம் செய்து அந்த இடத்தில் சென்று நாம் நிற்க, செபிக்க என்று ஒரு கல்லறையில் அடக்கம் வேண்டும்!' என்றார்கள்.

இன்று பட்டினத்தார் ஜீவ சமாதி அடைந்த நாளைக் கொண்டாடுகிறோம். வள்ளலார், பட்டினத்தார் போன்றவர்கள் திடீரென்று அப்படியே கல்லாக, சிலையாக, லிங்கமாக மாறிவிடுகின்றனர். அவர்கள் நினைவை நாம் ஜீவ சமாதி அடைந்த இடங்களில் கொண்டாடுகிறோம்.

இறந்தபின்னும் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் நீட்சியே நாம் அடக்கம் செய்யப்படவும் கல்லறை கட்டப்படவும் நினைப்பது. இது நம் எண்ணம் மட்டுமல்ல. எகிப்து நாட்டின் பாரவோன்கள் அன்றே இவற்றைச் செய்தார்கள். உடலைப் பதப்படுத்துவது, மம்மிகள் ஆக்குவது, பிரமிடுகளில் அடக்கம் செய்வது என்று நிறையக் காரியங்கள் செய்தனர்.

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்த விடுதலை வீரர் மோசே இறக்கும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்;. 'அவருடைய கல்லறை இருப்பது எந்த மனிதருக்கும் தெரியாது' என்று பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒன்றை நாம் பார்க்கும்வரை தான் அது நினைவில் இருக்கிறது. அப்படி என்றால் மோசேயின் நினைவு மக்களுக்கு இருக்கக்கூடாது என்று கடவுள் நினைத்தாரா?

பின் லேடன் கொலை செய்யப்பட்டபோது அவருடைய கல்லறை எங்கும் இருக்கக் கூடாது என்று நினைக்கின்ற அமெரிக்க அரசு அவரது உடலைக் கடலில் ஆழ்த்தி மீன்களுக்கு இரையாக்கியது.

ஆக, கல்லறை அழிக்கப்படுதல் ஒரு கொடுமையான உணர்வு.

இன்று கல்லறைகள் சேதப்படுத்தப்படும்போதும் நம்முடைய நினைவு சேதப்படுவதாக எண்ணுகின்றோம்.

நாம் என்றும் அடுத்தவருடைய நினைவில் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்கேற்ற செயல்களைச் செய்யச் சொல்கிறது நம்முடைய ஈகோ. ஆனால், ஒருகாலத்தவரைப் பற்றிய நினைவு மறுகாலத்தவருக்கு இருப்பதில்லை என்கிறார் சபை உரையாளர்.

மிகவும் குறுகிய நாள்கள் வாழ்கின்ற நாம் மிகவும் குறுகிய நாள்களே நினைவிலும் வாழ்கின்றோம்.

இதுவே நம் வாழ்வின் வேகத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகரிக்கிறது.

இதை உணர்ந்த இன்றைய புனிதர் மாக்ஸிமிலியன் கோல்பே தன்னுடைய உடன் சிறைக்கைதி ஒருவருக்காக உயிரை இழக்கத் துணிகின்றார்.

நாம் இவ்வுலகில் வாழும் காலம் முழுவதும் மனமொத்திருந்தால் அங்கே எல்லாம் சாத்தியமாகும் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:15-20) மொழிகிறார் இயேசு.

மோசேயின் கல்லறை இன்று இல்லை என்றாலும் அவரின் நினைவு எங்கும் இருக்கிறது. கல்லறைகளையும் கடந்து நினைவுகள் சாத்தியம் என்பதைத் தன் எளிய, தாழ்ச்சியான வாழ்வால் காட்டுகின்றனர் மோசேயும் கோல்பேயும்.


1 comment:

  1. “ உடல் தானம்”... ஒருமுறை லயன்ஸின் வளனார் சபையின் சகோதரி ஒருவரின் மரணத்திற்குச் சென்றபோது, அவர் உடல்தானம் செய்து விட்டதாகப் பேசப்பட்டது.’சரியான செயலே’ என்றனர் சிலர்.’இதென்ன கொடுமை’ எனறனர் பலர்.எனக்கும் அதில் சிறிதும் உடன்பாடில்லை.’அடக்கம் செய்வதும்,கல்லறை கட்டுவதும் இறந்த பின்னும் நாம் வாழவேண்டுமெனும் எண்ணத்தின் நீட்சியே’ எனினும் அதில் தவறென்ன? மோசேக்கு கல்லறை இல்லை என மருகும் நாம், பின்லேடனின் உடலை மீன்களுக்கு இரையாக்கிய அமெரிக்க அரசை சாடும் நாம், நாளை நமக்கு நெருக்கமானவர்களை நினைத்துப்பார்க்க ஒரு இடம் அமைப்பது சரிதானே! ஒரு வாத்த்திற்காக நாம் எதை வேண்டுமானாலும் பேசினாலும் “கல்லறைகளையும் கடந்து நினைவுகள் சாத்தியம்” என்பதைத் தன் எளிய,தாழ்ச்சியான வாழ்வால் காட்டினர் மோசேயும்,கோல்பேயும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையே!

    “ உடல் தானம்” பற்றி நினைக்கத் தந்தைக்கு என்ன அவசரம் தெரியவில்லை.
    மோசேயையும், கோல்பேயையும் கொண்டாடும் தந்தை, அதே உணர்வோடு பட்டினத்தாரையும், வள்ளகாரையும் நினைவு கூறுவது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete