Thursday, August 15, 2019

அருள்கொடை

இன்றைய (16 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 19:3-12)

அருள்கொடை

இன்றைய முதல் வாசகத்தோடு (காண். யோசு 24:1-13) நம் சிந்தனையைத் தொடங்குவோம். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் இடத்தில் குடியேறுகின்றனர். இந்த நேரத்தில் எல்லாரையும் ஒன்றுகூட்டுகின்ற இறைவன் தாம் செய்த அனைத்து செயல்களையும் ஒரு குறும்படம் போல் அவர்கள் முன் ஓடவிடுகின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் இது ஒவ்வொருவரின் மனத்திரையில் ஓடிய குறும்படம் என நினைக்கிறேன். நம் வாழ்வில் அடிக்கடி நம்முடைய பழைய வாழ்வியல் தருணங்கள் வந்து செல்லும். படம் போல மின்னி மறையும். அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் இம்மக்களின் அனுபவமும்.

இறுதியில் ஆண்டவராகிய கடவுள், 'இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று. உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே!' என்று நிறைவு செய்கிறார்.

'உங்கள் வாளாலும் அன்று, அம்பாலும் அன்று' - இதை நம் வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. இப்படி நினைவுபடுத்தும்போது அவர் நம் வாழ்வில் செயலாற்றியது நமக்கு நினைவிற்கு வரும்.

இன்றைய நற்செய்தியிலும், கணவர் மனைவி உறவு பற்றிப் பேசிவிட்டு, மணத்துறவை முன்வைக்கும் இயேசு, அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.

கடவுள் கலக்காத எதுவும் - அது உறவானாலும் உரிமைச் சொத்தானலும் உழைப்பானாலும் - வீண் என்றே சொல்லலாம். ஏனெனில், மனிதர்கள் தங்களிலேயே நிறைவற்றவர்கள். நிறைவற்றவர்கள் நிறைவான எதையும் தர முடியாது.

'விண்ணரசின் பொருட்டு மண உறவு கொள்ள முடியாத நிலைக்குத் தங்களையே ஆளாக்குபவர்கள் பேறுபெற்றவர்கள்' என்கிறார் இயேசு.

பிளவுபடா உள்ளம் அவருடைய அருள்கொடை.

1 comment:

  1. உண்மைதான்! இறைவனை சாட்சியாக வைத்து, நம் மனத்தின் மௌனத்தில் நாம் ஒரு குறும்படத்தை ஓடவிட்டால் நமக்கே புரியும்...நாம் நடந்து வந்த ...கடந்து வந்த பாதையின் கற்களையும்,முட்களையும் களைந்து நம்மைக் கரம் பற்றி இன்று நாம் நிற்கும் உயரத்திற்குக் நம்மைக் கொண்டுவந்தவர் ‘ அவரேயன்றி’ நாமோ,நம் பலமோ அல்ல என்று.” கடவுள் கலக்காத எதுவும்- அது உறவானாலும்- உரிமைச்சொத்தானாலும்- உழைப்பானாலும் வீண் என்றே சொல்லலாம்”. நிதர்சனமான உண்மை. அதற்கும் ஒரு படி மேலே, உயர்ந்த உண்மையாய்த், தொடரும் வரிகள்... “விண்ணரசின் பொருட்டு மண உறவு கொள்ள முடியாத நிலைக்குத் தங்களையே ஆளாக்குபவர்கள் பேறுபெற்றவர்கள்.”....... இத்தகைய பேறுபெற்ற, நம்மிடையே வாழும் நம் அருட்பணியாளர்களை நம் செபங்களால் தாங்கிப் பிடிப்போம். இறைவனின், கரையில்லாக் கருணையை எடுத்துக்கூறும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete