Thursday, August 29, 2019

என் பெயர் வெரோணிக்கா

இன்றைய (30 ஆகஸ்ட் 2019) நற்செய்தி வாசகம் (மத் 25:1-13)

என் பெயர் வெரோணிக்கா

நீங்கள் இன்றைய நற்செய்தியில் வாசிக்கும்

பத்துக்கன்னியர் உவமையில் வரும் ஒரு கன்னி நான்!

நேற்று காலை என்னுடன் தையல் படிக்கும் சாரா என்னைத் தேடி ஓடி வந்தாள்!

'ஏய்! வெரோ! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'

'என்ன?'

'நாளைக்கு ஒரு திருமண நிகழ்வு. மணமகன் தோழியராய் பத்து பேர் வேண்டுமாம். ஒன்பது பேர் ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஒரு ஆள் வேணும்! நீயும் வாடி...ப்ளீஸ்...!'

'நீ வந்தா நானும் வர்றேன்!'

'ஆமாம்! நானுந்தான்!'

மாலையில் திருமணம் என்பதால், 'கையில் விளக்கு எடுத்துக்கொண்டு போ!' என்று சொன்னாள் என் அம்மா.

விளக்கை அவசர அவசரமாக துடைத்தேன்.

திறந்து பார்த்தேன். எண்ணெய் ஆழத்தில் சொட்டு சொட்டாய்த் தெரிந்தது.

கல்லைப் போட்டு அதை மேலே கொண்டு வர நான் என்ன காக்காவா?

என் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரி அணையாமல் மெல்ல சாய்த்து

அதில் உள்ள கொஞ்ச எண்ணெயை என் விளக்கில் ஊற்றிக்கொண்டேன்.

சாராவுடன் சேர்ந்து திருமண மண்டபத்திற்குச் சென்றேன்.

'என்னடி சாரா? விளக்குடன் சேர்த்து ஏதோ கையில் டப்பா?' என்றேன்.

'எக்ஸ்ட்ரா எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்! எதுக்கும் பயன்படும்ல!'

'இருக்கப்பட்டவள் நீ எடுத்துக்கொண்டாய்! இல்லாதவள் நான் என்ன செய்ய?' என் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

காத்திருந்தோம். காத்திருந்தோம். மணமகன் வந்தபாடில்லை.

என் கண்களில் தூக்கக் கலக்கம். எப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

'மணமகன் வருகிறார்!' 'மணமகன் வருகிறார்!' என்ற சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்தோம்.

விளக்குகளைப் பார்த்தால் விளக்குகள் இப்போவா, பிறகா என்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

'இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால்தான் நன்றாக எரியும். ஆனால் இந்த எண்ணெய்க்கே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!'

சாராவைப்போலவே டப்பாவில் எண்ணெய் கொண்டுவந்த இருக்கப்பெற்றவர்கள் தங்கள் விளக்குகளுக்கு உயிர் கொடுத்தார்கள்!

'சாரா! எனக்கும் கொஞ்சம் எண்ணெய் கொடு!' என்றேன்.

'ஐயயோ! அப்போ எனக்கு இல்லாம போச்சுனா! நீ போய் கடையில் வாங்கிக்கோ!'

'கடையில் வாங்கிக்கவா? காசிருந்தால்தானடி கடைக்குப் போவேன்!'

என்னைப்போலவே கையில் எண்ணெய் இல்லாத - ஆனால் கையில் காசு இருந்த - மற்ற நான்கு பேர் கடைக்கு வேகமாக ஓடினர்.

மணமகன் வந்துவிட்டார்! இதோ என் கண்முன் அவர்!

விளக்குகள் ஏந்திக்கொண்டிருந்த ஐந்து பேரைக் கண்டுகொள்ளாமல் வேகமாக என்னிடம் வந்தார்.

'ஐயோ! என்னை வசைபாடப் போகிறார்!' என நினைத்துக்கொண்டு சாராவின் முதுகிற்குப் பின் ஒதுங்கினேன்.

என் தோளைத் தொட்டார்.

'என் அருகில் வா!' என்றார்.
'நீயே என் மணவாட்டி!' என்றாள்.

என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

'இது கனவா? இல்லை! கிள்ளினால் வலிக்கிறதே!'

திருமண மண்டபத்திற்கு தோழியாய்ச் சென்றவளுக்கு மணவாட்டி பாக்கியம் கிடைத்தது.

நிற்க...

இயேசுவின் பத்துக் கன்னியர் உவமையில் முன்மதியில்லாத ஐந்து கன்னியர் வெளியே அனுப்பப்பட்டதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.

ஏன்?

தவறு அவர்கள்மேல் அல்லர்! பின் யார்மேல்?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்த ஐந்துபேர் மேலும்!

மணமகன் மேலும்!

எதற்காக?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்தவர்கள் இன்றைய முதல் உலக நாடுகள் போல. முன்மதி என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வர். இந்த மாதம் 13ஆம் தேதி பூமியின் 'இலக்க கடந்த நாள்' என்று கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, இந்த வருடம் முழுவதும் நாம் செலவழிக்க வேண்டியதை நான்கு மாதங்களுக்கு முன்னே சுரண்டி முடித்துவிட்டோம்.

'பின் தேவைப்படும்!' என்று நான் சேகரித்து வைப்பதும் எதுவும் முன்மதி அல்ல. சுயநலமே!

இந்த சுயநலம்தான் அந்த ஐந்துபேர் தங்கள் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள தடுக்கிறது.

இரண்டாவதாக, மணமகனின் காலதாமதம். வழக்கமாக திருமண இல்லங்களில் மணமகள் வருகைதான் தாமதமாக இருக்கும். ஆனால், இங்கு நேரந்தவறுகிறார் மணமகன். இந்த மணமகனால் பாவம் ஐந்து பேர் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன் தினம் நாம் கொண்டாடிய புனித அகுஸ்தினார் இந்த வெளியனுப்பப்பட்ட ஐந்து பேரில்தான் ஒருவர் என நினைக்கிறேன்.

ஏனெனில், 'பின்பு பயன்படும்!' என அகுஸ்தினார் தனக்கென எந்த புண்ணியங்களையும் சேர்த்து வைக்கவில்லை.

மேலும் கடவுளை, 'தாமதமாக நான் உன்னை அன்பு செய்தேன்!' என்கிறார். ஆக, இவரின் வாழ்விற்குள் மணமகனின் வருகையும் தாமதமாகவே இருந்தது.

மணமகன் வந்தபோது அணைந்து போன திரியோடும், காய்ந்து போன விளக்கோடும்தான் நின்றுகொண்டிருந்தார் அகுஸ்தினார்.

அவரைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார் இந்த மணமகன்.

இன்று நம் வாழ்விலும் திரிகள் அணைந்தால், விளக்கு காய்ந்து போனால், நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லையே என வருத்தம் மேவினால் தளர்ந்து போக வேண்டாம். ஏனெனில் நாம் இருப்பதுபோல் நம்மை ஏற்றுக்கொள்வார் அந்த மணமகன்!


1 comment:

  1. எனது கல்லூரி நாட்களில் ’பத்துக்கன்னியர்களை’ வைத்து ஒரு music concert நடத்தினோம்.அதைத் திரும்பப் பார்த்த உணர்வைக்கொடுத்தனர் வெரோனிக்காவும் சாராவும்.” பின் தேவைப்படுமென நான் சேகரிக்கும் அனைத்தும் முன்மதி அல்ல.சுயநலமே!” கொஞ்சம் முரண்பாடாகத்தான் பட்டது.ஆனால் புனித அகுஸ்தினாரின் வாழ்வில் வரும் இதே விஷயம் ...”பின்பு பயன்படுமென எந்தப் புண்ணியங்களையும் அவர் சேர்த்துவைக்கவில்லை”... மிக நியாயப்பட்டது.ஆனால் எல்லோருக்குமா இறைவன் இம்மாதிரி சலுகைகளை அள்ளி வீசுகிறார்? இல்லையே! “இறைவனைத் தாமதமாக அன்பு செய்த அகுஸ்தினாரின் வாழ்வுக்குள் இறைவனும் தாமதமாகவே வருகிறார்...மணமகன் வந்த போது அணைந்துபோன திரியோடும், காய்ந்துபோன விளக்கோடும் நின்றவரை அணைத்தார் மணமகன்” தேன் சொட்டும் வரிகள். அகுஸ்தினாருக்கு நடந்த அதே விஷயங்கள் நமக்கும் நடக்கலாம் . “வருத்தம் வேண்டாம்...நம்மை இருப்பது போல் ஏற்றுக்கொள்வார் அந்த மணமகன்” என்கிறார் தந்தை. சரியே! ஆனால் அப்படி நடப்பதற்கு நான் என்னை இன்னொரு அகுஸ்தினாராகத் தயார் செய்ய வேண்டாமா? கேட்கிறது என் உள் மனது! என் பதில் என்ன? யோசிக்கிறேன். இரசிக்கும்படி படைக்கப்பட்ட பாத்திரங்கள் வெரோனிக்கா,சாராவுக்காக தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete