Friday, August 9, 2019

புனித லாரான்ஸ்

இன்றைய (10 ஆகஸ்ட் 2019) திருநாள்

புனித லாரான்ஸ்

இன்று மறைசாட்சியான புனித லாரன்சின் திருநாளைக் கொண்டாடுகிறோம். உரோமைத் திருஅவை வரலாற்றில் மிக முக்கியமான நபர் இவர்.

கடந்த சில நாள்களுக்கு முன், 'பத்தில் ஒன்று கொடுப்பது' என்ற ஒரு தலைப்பில் பாடம் கற்றேன். இந்த வகுப்பை எடுத்த ஆசிரியர், 'கொடுத்தல் என்பது ஒருவரின் ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டுகிறது. கொடுத்தல் என்பது நம்பிக்கையின் அளவுகோல். அதிகமாக நம்பிக்கை கொள்பவர் அதிகம் கொடுக்கிறார். குறைவாக நம்பிக்கை கொள்பவர் குறைவாகக் கொடுக்கிறார்' என்றார். அவர் சொன்னதை ரொம்ப சீரியஸாக எடுத்து, இப்போது பத்தில் ஒன்று, இரண்டு என்று கொடுக்கவும் துணிந்திருக்கிறேன். ஆனாலும் உள்ளத்தின் ஓரத்தில், 'சேர்த்து வை. நாளைப் பயன்படும்' என்று மின்னல் ஒன்றும் அவ்வப்போது வெட்டுகிறது.

ஒருவரின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஒருவரின் கொடுத்தல் அமைகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதன் அடிப்படையில்தான் நற்செய்திக் கதைமாந்தர் கைம்பெண் தன்னிடம் உள்ள அனைத்தையும் போட்டுவிடுகிறாள்.

புனித லாரன்ஸ் மற்றும் இவர் போன்றவர்களின் மறைச்சாட்சியத்தைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. இருப்பதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாம். ஆனால், இருப்பதை அப்படியே கொடுக்கும் பக்குவம் இவர்களுக்கு எப்படி வந்தது? இவர்கள் எந்த அளவிற்கு கடவுளை நம்பினார்கள் என்றால் இந்த அளவுக்கு இவர்களால் கொடுக்க முடியும்?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 9:6-10), கொடுத்தலின் அவசியம் பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற பவுல், 'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்' என்றும், 'எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் கடவுள் உங்களுக்குத் தருவார்' என்றும், 'ஏழைகளுக்கு வாரி வழங்கும்போது நீதி நிலைக்கிறது' என்றும் சொல்கிறார்.

ஆக, கொடுத்தலுக்கு மூன்று காரணங்கள் உள்ளன: (அ) நிறைவாகப் பெற வேண்டும் என்பதற்காகக் கொடுக்க வேண்டும் - இந்தத் தன்னலத்திற்காகவாவது கொடுக்க வேண்டும், (ஆ) கொடுத்ததால் வரும் சின்னக் குறையை கடவுள் உடனடியாக நிறைவு செய்துவிடுகிறார், (இ) கொடுத்தல் நம் தலையைக் காக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 12:24-26), கோதுமை மணி உருவகத்தை முன்மொழிகின்ற இயேசு, கோதுமை மணி தன்னையே அழித்தால்தான், அளித்தால்தான் அது விளைச்சலைத் தரும் என்கிறார்.

பத்தில் ஒரு பங்கு கொடுக்க நினைத்துக்கொண்டிருந்தவர் நடுவில் பத்தையும் கொடுக்கத் துணிந்தார் புனித லாரன்ஸ்.

'என் வேலை, என் சம்பளம், என் உணவு, என் படிப்பு, என் பொழுதுபோக்கு' என இருக்கும் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் திருமணம் முடித்தவுடன் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். எடுத்தல் மறைந்து கொடுத்தல் மலர்கிறது. உணர்வு முதிர்ச்சி இல்லாத ஒருவரே எப்போதும் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

எடுத்துக்கொள்தல் குறைத்து கொடுத்துக் கொள்ளக் கைகளை விரிப்போம்.

தன் முழு உடலையும் எரிப்பதற்கெனக் கொடுத்த லாரன்ஸ் நம்மைத் தூண்டி எழுப்புவாராக!


1 comment:

  1. “கொடுத்தல் என்பது நம்பிக்கையின் அளவுகோல்; அதிகம் கொடுப்பதும் குறைவதாகக் கொடுப்பதும் ஒருவரின் நம்பிக்கை குறித்த விஷயம்”.... தந்தையின் ஆசிரியரின் கூற்றில் எனக்கும் உடன்பாடே! கொடுத்தலின் காரணங்களாகத் தந்தை குறிப்பிடும் நான்கு விஷயங்களைச் சுருக்கினால் “ தர்மம் தலை காக்கும்” என்ற கருத்தில் அடங்கும். தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்த இன்றைய நற்செய்திப்பெண்ணும், பத்தில் ஒரு பங்கு கொடுக்க நினைத்துப் பத்தையும் கொடுத்த புனித லாரன்ஸும் நம்மில் கொடுத்தலைத் தூண்டி எழுப்பட்டும்!
    கொடுக்க மனமிருந்தும் “ நாளைக்கு உதவும் சேர்த்து வை” எனத் தன் மனத்தில் வெட்டும் மின்னலைக் குறித்த தந்தையின் வரிகள் அவரின் மனமுதிர்ச்சியைக்காட்டுகின்றன..வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete