Sunday, August 25, 2019

குருட்டு வழிகாட்டிகள்

இன்றைய (26 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 23:13-32)

குருட்டு வழிகாட்டிகள்

நாங்கள் ஆன்மீக இயல் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வகுப்பெடுத்த அருள்தந்தை தொனேதஸ் ஜெயராஜ், சேச, அவர்கள் அடிக்கடி இந்த எடுத்துக்காட்டைச் சொல்வார்: குரங்கு மரத்தின் மேலே ஏற ஏற அதனுடைய அடிப்பகுதி எல்லாருக்கும் தெரியும், நன்றாகத் தெரியும்.

இதன் பின்புலம் இதுதான். பூனை மரத்தில் ஏறினாலும் குரங்கு மரத்தில் ஏறினாலும் கீழிருந்து பார்த்தால் ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால், கொஞ்சம் உற்று நோக்கினால் குரங்கின் அடிப்பகுதி மிகவும் அசிங்கமாக இருக்கும். சுத்தத்தில் குரங்கைவிட பூனை ஒரு படி மேல்.

ஒருவர் மேலே செல்லச் செல்ல அவர் அதிகம் பார்க்கப்படுவார். அதிகம் விமர்சனம் செய்யப்படுவார்.

சின்ன விடயத்துக்குக் கூட மற்றவர்கள் நம்மை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். சிலர் என்னிடம் கேட்பதுண்டு. 'ஃபாதர் நீங்க எந்த ஃபோன் வச்சிருக்கிறீங்க?' 'நாங்க எந்த ஃபோன் வாங்கலாம்?' 'நீங்க எங்க சட்டை தைப்பீங்க?' 'நாங்க உங்ககூட வரலாமா?'

நாம் மேலே செல்லச் செல்ல நாம் அடுத்தவர்மேல் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். அது ஆசிரியப் பணி, அருள்பணி, அரசியல் பணி என எந்தப் பணியாக இருந்தாலும்.

ஆனால், இதை நாம் மறந்துவிடும்போது குருட்டு வழிகாட்டிகள் ஆகிவிடுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு 'வெளிவேடக்காரரே, மறைநூல் அறிஞரே, பரிசேயரே' என சாடுகின்றார். 'குருட்டு வழிகாட்டிகளே,' 'குருடரே,' 'குருட்டு மடையரே' என்று அவர்களைச் சாடுகின்றார். சாதாரண அளவில் பார்த்தால் இயேசு ஒரு தச்சன். இவர்கள் இயேசுவின் சமகாலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். சட்டநூல்களைக் கற்றவர்கள். நிறைய விவாதம் செய்தவர்கள். ஏறக்குறைய இன்றைய ஹார்வர்ட், யேல், பிப்லிகும் போன்ற நிறுவனங்களில் படித்த படிப்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்கள் அறிவற்றவர்கள், தன்னறிவற்றவர்கள், தெளிவற்றவர்கள் என்கிறார் ஆண்டவர். இப்படி இருக்கும் ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டும்போது அவரும் பிறழ்வடைய வாய்ப்புண்டு.

இன்று நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த அழைத்தலில் இருந்தாலும் தன்னறிவு மிகவும் அவசியம். தன்னறிவு இல்லாமல் நாம் மற்றவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்த முயலும்போது அது மிகவும் பெரிய ஆபத்தில் போய் முடியும்.

தன்னறிவு, அறிவுத் தெளிவு - இவையே நாம் வேண்டும் வரமாகட்டும்.

1 comment:

  1. உண்மைதான்.... நாமிருக்கும் இடத்திற்குப் புதிதாக ஒருவர் வருகையில் அவர் அனைத்து முக்கியத்துவத்தை மட்டுமல்ல...நம் கவனத்தையும் ஈர்க்கிறார்...அவர் புதியவர் என்பதாலேயே. நம்மைவிட எல்லா விஷயங்களிலும் மேலானவராக இருப்பாரென்று நாமே நம்மைத் தாழ்த்திக்கொள்வதும் உண்டு.தந்தை சுட்டிக்காட்டுவது போல இது ஆசிரியப்பணி,அருள்பணி,அரசியல்பணித் தளங்களில் மிக சகஜம். சம்பந்தப்பட்டவர்கள் அந்த சூழ்நிலைக்குத் தங்கள் கண்களைத் திறந்தால் அவர்களுக்கு மட்டுமின்றி,அவரைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.தன்னைப்பற்றிய, மற்றும் சுற்றி இருப்பவர்களைப்பற்றிய தெளிவு இல்லையேல் ஒரு குருடன் அடுத்த குருடனுக்கு வழிகாட்டி, இருவருமே பாழும் குழியில் விழுந்த கதையாகிவிடும்.இதில் குறை சொல்லப்படவேண்டியவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் மட்டுமின்றி, தன்னைச்சுற்றியுள்ளவர்கள் புதியவர்கள் என்பதாலேயே அவர்கள் நம்மைவிட மேலானவர்களாக இருக்க வேண்டுமென நினைப்பவர்களும் தான்.இதில் நாம் யாராக இருப்பினும் தன்னறிவு,அறிவுத்தெளிவு இவை இரண்டுமே நாம் கேட்கும் வரங்களாக அமையட்டும் என அறிவுறுத்தும் தந்தைக்கு நன்றிகள். இந்த வாரம் அனைவருக்கும் இனிய வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete